பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2007

சு.ரா. - சில குறிப்புகள்

2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம் என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன்.

அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)

விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம்.



வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.

தொடர்வேன்....

குறிப்பு: இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

அறிஞர் சோதிப்பிரகாசம்

நேற்று திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.

திங்கள், 17 செப்டம்பர், 2007

ஞான ராசசேகரனின் பெரியார்...

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.

தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

சனி, 15 செப்டம்பர், 2007

அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்

ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக இரண்டு அறிவியலாளர்கள் இடைநீக்கம் செய்ய்ப்பட்டுள்ளர்கள். ராமாயணம் ஒரு புராணம். ஆனால், அது இந்திய மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட ஒரு விசயம். இவ்விசயம் குறித்து அறிவியல் அறிக்கை அளிக்கும் பொழுது, ராமர் என்ற 'அவ்வளவு பெரிய ஆகிருதி' வாழ்ந்து மறைந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதபட்சத்திலும், தொல்பொருள் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கவேண்டும்.

ராமர் பாலம் எனச் சொல்லப்படும் அந்தப்பகுதி ராமரால் கட்டப்பட்டது அல்ல மாறாக அது இயற்கையாய் அமைந்த ஒரு அமைப்பு என்று என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால்கூட, இவ்வளவுதூரம் பிரச்சனையாகியிருக்காது. (இந்துத்துவவாதிகள் அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம்). ஆனால் ராமரே வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறும்போது, பெரும்பான்மையான இந்துக்களுக்களின் உணர்வு மற்றும் சிறுபான்மை இந்துத்துவவாதிகளின் பிழைப்பின் அடிமடியிலேயே கைவைப்பதாகும். இதை அரசு தவிர்த்திருக்கலாம்.

இந்த அறிக்கை, அறிவியல் என்னும் உச்சாணிக்கொம்பிலிருப்பதாக நினைத்துக்கொன்டு, வெகு மக்கள் நம்பிக்கைகளிலிருந்து - அது தவறாகவேயிருந்தாலும், வெகுதூரம் சென்றுவிட்ட சில அறிவியலாளர்களின் முந்திரிக்கொட்டைத்தனத்தால் ஏற்பட விளைவு என்பதே என் எண்ணம். அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும்போது மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இதைத்தான் சொந்தச் செலவில் அரசே தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது என்பதோ?! (சூனியம் வைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலுங்கூட)

புதன், 12 செப்டம்பர், 2007

இரண்டு புகைப்படங்கள் - வெவ்வேறு செய்திகள்




முதலாவது இன்று காலை செய்தித்தாள்களில் (சென்னையில் வால்வோ பேருந்துகளை தமிழக அரசு இயக்க முடிவெடுத்துள்ளது குறித்து) வந்தது. இரண்டாவது இன்று மாலை நான் என் அலுவலகத்திற்கருகே கண்ட காட்சி.

புதன், 22 ஆகஸ்ட், 2007

திநகர் துணிக்கடைகள்


இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகின்றது. சென்னை மீதான எனது காதல் குறித்து விரிவான இடுகையிட எனக்கு இப்போது அவகாசமில்லையாதலால் நான் கடந்த ஞாயிறன்று திநகரில் எடுத்த சில புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் 2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வழக்கத்திற்கு மாறாக பெய்த மழையின் விளைவுகள் குறித்த எனது புகைப்படங்களைப் பார்க்க இப்பதிவின் வலப்புறமுள்ள ஃபிலிக்கர் (Flickr) படங்களை அழுத்தவும்.














வியாழன், 5 ஜூலை, 2007

அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இன்றைய நிலையை நான் எடுத்த கீழ்க்கண்ட புகைப்படங்கள் சொல்லும். சென்னையின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப காரிடார் என அழைக்கப்படும் அளவிற்கு (சென்னையின் GST சாலையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் போட்டியாளர்கள்) மிகப்பெரிய கட்டடங்கள் கணினி மென்பொருள் நிறுவனங்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன.













மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

வியாழன், 28 ஜூன், 2007

சென்னையில் சூல் கொண்ட மேகங்கள்

சென்னை மாநகரத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் பார்க்கவும்















புகைப்படங்கள் என்னுடைய அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. (மயிலை சிட்டி சென்டர் அருகே)


வெள்ளி, 22 ஜூன், 2007

அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்

அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். புனிதம் என்று புனையப்பட்டு சடங்குகளாக இறுகிப் போய்விட்ட பொதுப்புத்தியை தானே வளர்த்துக்கொண்ட தன் தனித்தன்மையாலும், அனுபவத்தாலும் மீறுபவர்களை நம் குமுகாயம் என்றுமே மதிப்பதில்லை. இந்திய குமுகாயத்தின் பொதுப்புத்தியில் எளிமை, சிக்கனம், பிரம்மச்சரியம், ஆன்மீக நாட்டம் போன்ற சில விசயங்கள் புனிதங்களாகக் கட்டமைக்கப்பட்டவை.

எனவே இவைகளைக் கைக்கொள்வதாக நம்பப்படும் கலாமும், ரஜினியும் பிரபலமாகயிருப்பதில் வியப்பேதுமில்லை. பொதுவாக நம் குமுகாயம் இன்னமும் வளர் இளம்பருவ (Adolescent mentality) நிலையைத் தாண்டி சிந்திப்பதேயில்லை.

கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். அவர் அறிவியலில் எந்த கருதுகோளையும் (Hypothesis) முன்வைக்ககவில்லை; எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருப்பதையே போலச் செய்தார். ஆனால் அவரை ஏதோ இந்திய அறிவியல் வரலாற்றில் வராதுவந்த மாமணியைப் போல் நம் ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அதற்கு அவரது தனிப்பட்ட குணநலன்களும், அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம். ஆனால் உண்மையான அறிவியலாளரான பேரண்டவியலாளர் (Cosmologist) ஜெயந்த் நார்லிகர் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?

கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantacy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை (காட்டாக - நதி நீரிணைப்பு).


இதே கருத்துக்கள் ரஜினிக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் கலாம், ரஜினியோடு ஒப்பிடும்போது, சமீபத்தில்தான் புகழடைந்ததால் அவர் மீது ரஜினி அளவிற்கு எதிர்மறை விமரிசனங்களில்லை. அறிவுமுதிர்ச்சியடையாத, சரியாகச் சொன்னால், அரசியல், அறிவியல், கலை போன்ற சகல துறைகளிலும் விழிப்புணர்ச்சியற்ற ஊடகங்களும், பெருவாரியான மக்களும் கொண்ட நம் குமுகாயத்தில் இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.

வியாழன், 7 ஜூன், 2007

தென்பாண்டிச் சீமையிலே...

எனக்கு மிகவும் பிடித்த பாடல். நாயகன் படத்தில் இடம்பெறும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. கடந்த 20 வருடங்களாக, இசை ஞான சூனியமான, என்னைக் கட்டிப்போடும் பாடல் இது என்றால் அது மிகையல்ல. இப்போது என் மகன் பிறந்தபின் இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்த பாடலாகிவிட்டது. ஏழு மாதமாகும் என் மகனை தாலாட்டி தூங்கவைக்க முயற்சிக்க நான் பாடும் பாடல் இதுதான்.


இன்று ஓசை தளத்திலிருந்து இப்பாடலை எனது கணினிக்கு இறக்கிக் கேட்டுக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன். இப்பாடலின் எல்லா அம்சங்களுமே (வரிகள், இசை, குரல், படத்தோடு இயல்பாகப் பொருந்துவது) அத்துணை சிறப்பாக உள்ளன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானல் கமலின் குரல். மூன்று முறை மூன்று விதமான முறைகளில் இப்பாடல் வருகிறது. முதலில் இளையராசாவின் கிராமத்து தாலாட்டு வடிவத்தில் பின்னணி இசையில்லாமல்; பின்னர் கமலின் குரலில் இரண்டுமுறை, பின்னணி இசையுடன். கமலின் குரலிலுள்ள அந்த ஏற்ற இறக்கங்கள் எத்தனைமுறை கேட்டாலும் சலிப்புத் தட்டாது. கமலுக்குப் பின்னும் சாகா வரம் பெற்ற பாடலாக தென்பாண்டிச் சீமையிலே திகழும் என்பது நிச்சயம். இது குறித்து முன்பு நான் ‘ராயல்’ ராமின் பதிவில் இட்ட பின்னூட்டம்.

வெள்ளி, 4 மே, 2007

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.

சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.

பின்னிணைப்பு: தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து காலச்சுவடு எழுதிய தலையங்கம். அதை ஆதரித்து எம். கே. குமாரும், மறுத்து ராம்கியும் 2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.

புதன், 25 ஏப்ரல், 2007

சிசேரியன் பிரசவங்கள் - ஒரு பார்வை

நீண்ட நாட்களாக எழுத நினைத்து, சோம்பேறித்தனத்தினால் இதுவரை எழுதாமல் இருக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று. நேற்று CNN IBN தொலைக்காட்சியில் சிசேரியன் பிரசவங்கள் குறித்த ஒரு தொகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்ததால் தூண்டப்பட்டு இவ்விடுகையை இடுகிறேன்.

உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதன்மையான காரணியாக பலரும், குமுகவியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும் பல காரணிகளும் இவ்விசயத்தில் தொழிற்படுகின்றன.

பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட மூன்று மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேஷன் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை அண்ணாநகரில் உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் பரவலாக உள்ளதாகத் தெரியவந்தது.

மேலும் சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).

இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.

இதுகுறித்து முழுமுற்றான அறிவியல் முறையிலமைந்த இடுகையொன்றை விரவில் எழுதலாமென்றிருக்கிறேன்.

இட ஒதுக்கீடு - அரசியல் சுயநலங்களும், குமுகாய நலன்களும்

இவ்விடயம் குறித்து தமிழ் வலையுலகில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டார்கள். குழலி இத்தகைய இடுகைகளின் தொகுப்பு ஒன்றை ஒரு தனி இடுகையாகவே இட்டிருக்கிறார். ஜெகத்தும் தன் பொல்லாச் சிறகை வழமைபோல் அருமையான இடுகையொன்றின் மூலம், இவ்விசயத்தில், விரித்துள்ளார்.

நேற்று CNN IBN தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் தனது கூட்டணிக்கட்சிகளிடமிருந்து இடஒதுக்கீடு விசயத்தில் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். தமிழக முதல்வரும் நேற்று பலகோடிப்பேரின் வாழ்க்கையை ஒரிருவர் தீர்மானிப்பது சரியானதல்ல என்ற ரீதியில் இடைக்கால்த் தடை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நாசுக்கான கருத்தைக் கூறியுள்ளார். பேராயக்கட்சியும், பிற கட்சிகளும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைப்பெற இடஓதுக்கீடு விசயத்தில் சுயநலமாகச் செயல்படுவதாக பலர் வாதிடலாம். எனினும், தற்போதைக்கு, இவ்விசயத்தில் அரசியல்வாதிகளின் சுயநலங்களும், குமுகாயத்தின் பொதுநலனில் முடிவது வரவேற்கத்தக்கதுதானே!?

செவ்வாய், 17 ஏப்ரல், 2007

இந்திராவின் வாரிசுகளும் ஏகபோக அரசுரிமையும்

நடந்துகொண்டிருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவாளர். ராகுல்காந்தி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்னவோ அவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்ற தொனியில் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்ன செய்ய!?, இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட சுட்டியைச் சொடுக்கவும். அவர் பேசியதின் முதன்மையான சில வரிகள் இங்கே.

"I belong to the family which has never moved backwards, which has never gone back on its words. You know that when any member of my family had decided to do anything, he does it. Be it the freedom struggle, the division of Pakistan or taking India to the 21st century,''

திங்கள், 2 ஏப்ரல், 2007

சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பு!!!

நண்பர் பாலபாரதியின் ஒருங்கிணைப்பில், சென்னையில் மீண்டுமொரு வலைப்பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று (ஞாயிற்றுக் கிழமை) சென்னை, தி. நகர் நடேசன் பூங்காவில் பிற்பகல் 3.30 முதல் மாலை: 7.30 வரை சந்திப்பு நடைபெறும். இது குறித்த அறிவிப்பொன்றை அவரது வலைப்பதிவில் காணலாம். தமிழ் வலையுலகின் முக்கியமான ஆளுமைகள் சிலர் கலந்துகொள்வார்கள் எனத்தெரிகிறது.

சென்னையில் வசிக்கும் வலையுலக நண்பர்களே நீங்களனைவரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். வெளியூர் நண்பர்களும் முடியுமானால் சந்திப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பாலபாரதியின் பதிவில் பின்னூட்டம் வழியாகவோ அல்லது அவரது கைத்தொலைபேசியில் (99400 45507) அழைத்தோ தங்கள் வருகையை உறுதி செய்யவும். என்னையும் தொடர்பு கொள்ளலாம். - 98413 90327.
நன்றி

வெள்ளி, 23 மார்ச், 2007

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு சந்திப்பு

இந்தமுறை எங்களூருக்குச் செல்லும்போது பதிவர் அரவிந்தன் நீலகண்டனைச் சந்திக்கவேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டேன். அவருடைய பதிவொன்றில் ஏற்கனவே என் விருப்பத்தைப் பின்னூட்டி, அவரும் அதற்குச் சரியென்றிருந்தார். எனவே கடந்த ஞாயிறு ஊருக்குச் சென்றிருந்தபோது, அவரைத் தொடர்புகொண்டு, நான் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் ஏதாவதொரு நாளில் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும், அவருக்கு வசதியான நேரத்தைச் சொன்னால் நாகர்கோவில் வந்து அவரைச் சந்திக்க ஆவலாயிருப்பதாகவும் சொன்னேன். அவர் திங்கள் மாலை 4.30 மணிக்குமேல் சந்திக்கலாம் எனக்கூறினார். எனக்கும் அதில் மிக்க சந்தோஷம். ஏனெனில், நான் விரும்பியதும் திங்கள் மாலையைத்தான். செவ்வாய் மாலை சென்னை செல்ல கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலைப் பிடிக்கவேண்டியதிருந்ததாலும், கிட்டத்தட்ட அய்ந்து மாதங்கள் பூட்டியிருந்த வீட்டைச் சுத்தம் செய்யவே ஒருநாள் ஆகும் என்பதால் ஞாயிற்றுக் கிழமையையும் தவிர்க்க விரும்பினேன். (என் பெற்றோரும், தங்கையும் சென்னையிலுள்ள என் வீட்டிற்கு வந்து ஐந்து மாதங்களாகிவிட்டன.)

தக்கலையிலிருக்கும் என் நண்பனுக்கு பிறந்திருக்கும் இரண்டாவது குழந்தையையும் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கிருந்ததால், திங்களன்று மதியம் 12 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினேன். எங்களூரான பணகுடியிலிருந்து நாகர்கோவில் 25 கி.மீ. (ஏகதேசமாக சென்னை செண்ட்ரலிருந்து தாம்பரம் தூரம்), அங்கிருந்து தக்கலை சுமார் 17 கி.மீ. தூரம்.

பணகுடியில் சென்னையைவிட வெயில் சுட்டெரித்தது. வழக்கமாக பங்குனி மாதத்திலும், சித்திரையின் முன்பாதியிலும் பணகுடியில் அவ்வளவாகக் காற்று வீசாது. மற்ற 10 மாதங்களில், பெரும்பாலும் தென்மேற்கிலிருந்து, பெரும்பாலான தமிழக ஊர்களைப் போன்றே எங்களூருக்கு மேற்குத் திசையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து, வீசும் தூய காற்றை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 'கடன் வாங்கிக் காத்தடிக்கும் கந்தன் பணகுடி' என ஒரு பழமொழியே எங்களூருக்கு உண்டு. எங்கள் ஊரைப் போன்றே காற்று வீசும் தமிழகத்தின் வேறு சில ஊர்கள்; கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முப்பந்தல், திருநெல்வேலி மாவட்டத்திலேயே உள்ள கயத்தாறு, கோவையிலுள்ள பல்லடம் மற்றும் ஈரோட்டிலுள்ள தாராபுரம். இந்த ஊர்களில் மட்டும் இவ்வாறு காற்று வீசுவதற்குக் காரணம் இப்பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் (கணவாய்கள்) அமைப்பே என நினைக்கிறேன். அதனால்தான் இவ்வூர்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு மிண்சாரம் தயாரிக்கப்படுகிறது.

எங்களூரில் நான் விரும்பும் மற்றொரு விசயம்; அங்கு வீடுகளில் சென்னையைப்போல் கருந்தூசிகள் படர்வது அரிது. சென்னையின் வாகனப் புகைகளினால் ஏற்படும் SPM (Suspended Particulate Matter) எனப்படும் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் அங்கு பெருமளவில் இல்லை. இதுபோதாதென்று, சென்னையில் நான் வசிக்கும் பகுதியின் அருகில் கொடுங்கையூர் குப்பை எரிக்கும் நிலையமுள்ளதால், வீட்டிற்குள் நடக்கும்போதே பாதங்கள் கரிபோன்று கருப்பாகிவிடும். இதெல்லாம் சென்னையைக் காதலிப்பதற்காக நான் கொடுகும் விலை. சரி, எங்களூர்ப் புராணம் போதும், விசயத்திற்கு வருகிறேன்.

மதியம் 1.30 மணிக்கு தக்கலை போய்ச் சேர்ந்த நான், அங்கு என்னுடன் கல்லூரியில் படித்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு, அதில் ஒரு நண்பனுடைய குழந்தையைப் பார்க்க தக்கலையருகிலுள்ள முத்தலக் குறிச்சியிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். தக்கலையில் இயற்கையாகவே பணகுடியைவிட பசுமை அதிகமாதலால், வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அரவிந்தன் அவர்களிடமிருந்து என் கைத்தொலைபேசியில் அழைப்பு - மாலை 4.30 மணிக்கு நான் நாகர்கோவில் வந்துவிடுவேனா என்பதை உறுதிசெய்ய. நான் பின்னர் என் நண்பன் வீட்டில் விடைபெற்றுக் கொண்டு, பேருந்து பிடித்து நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தை அடையும்போது மாலை 4.40 ஆகியிருந்தது. நாகர்கோவிலிருந்து தக்கலைக்கும், பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கும் கேரள அரசுப் பேருந்துகளில் பயணித்தேன். அந்த இரு பேருந்துகளிலும் நடத்துனர் டிக்கட் கொடுக்கும் முறை என்னைக் கவர்ந்தது. கிரெடிட் கார்டு ஸ்வைப் பண்ணும் கருவி போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு டிக்கெட்டை பிரிண்டவுட் எடுத்துக்கொடுக்கிறார்கள். இந்தமுறை நம்மூர் முறையைவிட எளிதாகவும், வேகமாகவும் தெரிகிறது. என் தந்தை சென்னையிலும் சில நிலைய நடத்துனர்கள் இம்முறையில் டிக்கெட் கொடுப்பதாகக் கூறினார்.

அரவிந்தனைக் கைத்தொலைபேசியில் அழைத்து பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஒரு வணிகவளாகத்தின் வாசலில் நான் நின்றுகொண்டிருப்பதாகவும் மேலும் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ள நான் அன்றணிந்திருந்த உடைகளின் நிறத்தையும் சொன்னேன்; அதே சமயம் அவர் அணிந்துவரும் உடையின் நிறத்தையும் கேட்டுக்கொண்டேன். 10 நிமிடங்களில் அங்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார். இதற்கிடையில் அவர் எப்படியிருப்பாரோ என்று மனம் நினைக்கத் தொடங்கியது. சிலரது எழுத்துக்கள் சார்ந்து நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் அவர்களைப் பற்றிய பிம்பம் நேரில் பார்க்கும்போது ஏமாற்றமளிக்கும். அவ்வேமாற்றத்தைத் தவிர்க்கவே முயன்றேன். ஆயினும், அவர் அணிந்து வருவதாகச் சொன்ன சிவப்பு நிற டி-சர்ட் கலரில் டி-சர்ட் அணிந்த இருவரைப் பார்த்து இவராக இருக்குமோ என மனம் நினைத்தது. திண்ணையில் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் எழுத்துக்களில் சிலவற்றைப் படித்து வந்திருந்தாலும், அவரது கருத்தியல் எனக்கு பெரும்பாலும் உவப்பானதாக இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளிலுள்ள அறிவியல் தேட்டம், அதில் விமரிசனங்கள் உண்டெனினும், எனக்கு உவப்பானது. அதுவே என்னை அவரைச் சந்திக்க தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால், அவரிடம் என்ன பேசுவது என்பதை நான் முன் தீர்மானித்துக் கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று கேள்விகளை முன்தீர்மானித்துக் கொண்டால் பதட்டத்தில் நான் சற்று சொதப்பிவிடுவேன் என்பது. மற்றொன்று இதுதான் எனக்கும் அவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு என்பதால், அவர் கருத்திற்கு பெரும்பாலும் எதிர்க் கருத்துடைய, நான் கேட்கும் கேள்விகள் இருவருக்குமே சற்று அசெளகரியமாக இருக்கும் என்பதாலும், இயல்பாக அவ்வப்போது தோன்றுவதை வைத்து உரையாடிக் கொள்ளலாம் என முடிவுசெய்து கொண்டேன்.

அவர் சொன்னபடியே 10 நிமிடங்களில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்துவிட்டார். அவரது தோற்றம் சார்ந்து எந்தவிதக் கற்பனையும் அந்த நிமிடம் வரை நான் கொண்டிருக்கவில்லையாதலால், அவரது தோற்றம் எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை. பெரும்பாலான என் தமிழ் வலைப்பதிவு நண்பர்களைப் போன்று 30 தைத் தாண்டிய இளைஞர் தான். பரஸ்பர அறிமுகக் கைகுலுக்கலுக்குப் பின்னர் அருகிலுள்ள கடையில், என் விருப்பத்திற்கிணங்கி, சர்பத் குடித்துக்கொண்டோம். வீட்டிற்குச் சென்றே பேசலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அமைதியான சூழலில் அமைந்த நடுத்தரவர்க்க வீடு அவருடையது. வீட்டிலிருந்த அவரது அப்பாவையும், மகனையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். நாங்கள் சென்ற நேரம் பேரனுக்குத் தாத்தா வழக்கமாகக் கதை சொல்லும் நேரமாம். தற்செயலாக, அன்றைக்கு அரவிந்தனின் அப்பா தனது பேரனுக்குச் சொல்லிக்கொண்டிருந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் வேலு என்பதாகும். அதைக்கேட்டவுடன் நாங்கள் சிரித்துக் கொண்டோம். பின்னர் தாத்தா-பேரனின் கதையார்வத்தைக் குலைக்கவிரும்பாது, நாங்களிருவரும் முதல்மாடிக்குச் சென்றோம்.

அரவிந்தன் தனது வீட்டிலுள்ள நூலகத்தை எனக்குக் காட்டினார். 1960 களிலிருந்து அவரது தந்தையும் பின்னர் அவரும் சேர்த்து வைத்திருக்கும் நூற்களும், முக்கியமான நாளிதழ் செய்திகளின் வெட்டித் தொகுத்து பைண்டிங் செய்யப்பட்ட அடுக்குகளும் அங்கிருந்தன. இதுதான் உங்களது ரிசோர்ஸா (Resource) என , எனக்கே உரித்தான, எள்ளலுடன் அவரிடம் கேட்டேன். பணகுடி அரசு நூலகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பார்த்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் அவரிடமிருந்தன. எல்லாவற்றையும் நீங்கள் படித்துவிட்டீர்களா என அடுத்த கேள்வி கேட்டேன். பின் இவ்விசயத்தில் எனது நிலையையும் நான் கூறினேன். பின்னர் சற்று அமர்ந்து பேசலானோம். இருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சிறிது நேரம் பேசிய பின்பு, இயல்பாகப் பேச்சு தீவிரமான விசயங்கள் குறித்துத் திரும்பியது.

நான் அவரது 'கடவுளும் 40 ஹெர்ட்சும்' புத்தகம் பற்றி பேசலானேன். அதிலுள்ள ராமர் பாலம் பற்றிய கட்டுரையின் கோணம் எனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும், கடவுளும் 40 ஹெர்ட்ஸும் என்ற கட்டுரையின் கருத்துக்கள் நான் இதுவரை கேள்விப்படாததாக உள்ளதால் தற்போதைக்கு என்னால் அதுபற்றி விமரிக்கமுடியாது என்று கூறியதாகவும் ஞாபகம். அதற்குள் அவரது மனைவியிடமிருந்து அவருக்குக் கைத்தொலைபேசியில் அழைப்பு வரவே 10 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லி எனக்கு சில புத்தகங்கள் கொடுத்து படித்துக்கொண்டிருக்குமாறு சொன்னார். ஆனால், தண்ணீர் அருந்துவதற்காக கீழே சென்ற நான் அவருடைய தந்தையிடம் அமர்ந்து பேசலானேன். அவர் எனக்கு தெற்குச் சீமையின் பிரபலமான கைமுறுக்கும், நேந்திரம் பழ சிப்ஸும் பரிமாறினார். அரவிந்தனின் தந்தை ஓய்வுபெற்ற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர். மேலும் அரவிந்தனது அம்மாவையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்; அவரும் ஒரு ஓய்வுபெற்ற கல்லூரி கல்லூரிப் பேராசிரியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தியதாக ஞாபகம்.

அரவிந்தனோடு பேச ஆரம்பித்தது போலல்லாமல், அவரது தந்தயினுடனான எனது உரையாடல், அச்சூழல் எனக்கு விரைவாகப் பரிச்சியம் ஆகிக்கொண்டிருந்தபடியால், எடுத்தவுடனே ஜெட் வேகத்தில் பறந்தது. எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் இதுவரையில் கருதிக்கொண்டிருக்கும் சுந்தர ராமசாமி குறித்து பேச்சு வந்தது. அவரது தந்தையும், சு. ரா வுடனான தனது நட்பையும், சு.ரா தன் வீட்டிற்கு வந்து அளவளாவிய நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆனால், சு. ரா மேல் தனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு என்றாலும், பிற்காலத்திய சு.ரா பலமுனைகளில் மேலும் சறுக்கிவிட்டார் என்று சில உதாரணங்கள் மூலம் விளக்கினார். அவற்றில் பல, ஏற்கனவே சு. ரா மீது பலரும் முன்வைத்த விமரிசனங்கள்தான். ஆயினும், சு. ரா கன்னியாகுமரி மாவட்டம் தந்த மூன்று முக்கியமான சிந்தனாவாதிகளிலொருவர் என்று தான் கருதுவதாகக் கூறினார். அவ்ரது எழுத்துகளில் தனக்குப்பிடித்தவையாக ஒரு புளியமரத்தின் கதை நாவலும், சிறுகதைகளில் சீதை மார்க் சீயக்காய்த்தூளும் என்றார். எனக்கும் இவையிரண்டும் மிகவும் பிடித்தமானவை. மேற்கொண்டு அரவிந்தனுக்கு தன்னைவிட சு. ரா வுடன் முரண்பாடுகள் அதிகம் என்றும் கூறினார். ஆயினும் அவர்களிருவரும் பலமணிநேரங்கள் விவாதிப்பதுண்டு என்றும், ஒருமுறை சு. ரா, அரவிந்தன் குறித்து வேறுயாரும் தன்னிடம் புகழாத அளவிற்கு புகழ்ந்து கூறியதாகவும் சொன்னார். இத்தகைய பண்புகள் சு. ராவிடம் எப்போதும் உண்டு என்றும் கூறினார். இவ்வாறு நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அரவிந்தன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த பின்னர், அரவிந்தன் சு.ரா குறித்த தனது விமரிசனங்களையும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவர் எழுத்திற்கும் இருந்த முரண்பாடுகள் சார்ந்து, முன்வைத்தார்.

பின்னர் பேச்சு கம்யூனிசம் குறித்தும், பெரியார் குறித்தும் திரும்பியது. கம்யூனிசம் மற்றும் பெரியாரிசம் குறித்து அரவிந்தனது தந்தை தனது விமரிசனங்களைக் கூறினார். அவரது விளக்கப்படி, நாராயண குரு, அய்யா வைகுண்டர், அய்யன் காளி போன்றோர் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதிகள், குறிப்பாக பெரியாரைவிட, என்றும் கூறினார். இந்த உரையாடலில் அரவிந்தன் அவ்வப்போது தனது கருத்துக்களைச் சொன்னது தவிர, பெரும்பாலும் மெளன சாட்சியாகவே இருந்தார். எங்களது உரையாடல் பெரும்பாலும் சு.ரா, கம்யூனிசம், பெரியார் போன்றவற்றைச் சுற்றியே இருந்தாலும், அவைகளின் ஊடாக மகாத்மா காந்தி, அப்சல், ஜெயமோகன், ஜெயகாந்தன், அண்ணா, கருணாநிதி, சாய்பாபா, தேசியம், விவேகானந்தர், காஞ்சிப் பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்று பல ஆளுமைகள், கருத்தியல்கள் குறித்துமான விமரிசனங்கள், மதிப்பீடுகள் சார்ந்தும் இருந்தது. மூவருக்கும் இவைகள் குறித்து தனித்துவமான சிந்தனைகள், கருத்துக்கள் இருந்தபோதிலும், யாரும் யாரையும் குறை கூறிக்கொள்ளவில்லை. சிற்சில சமயங்களில் அவரது தந்தையின் கருத்துக்கள் அவ்வாறான தொனியிலிருந்தாலும், எங்களைவிடவும் வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர் என்ற வகையிலே நாங்கள், குறிப்பாக நான், ஆட்சேபிக்கவில்லை. நான் அவதானித்த வகையில், அரவிந்தனுக்கும் அவரது தந்தைக்கும் இடையில் பெருமளவில் கருத்தொற்றுமை இருந்தாலும், அவர்களிருவரும் வேறுபடும் புள்ளிகளுமிருந்தன. என்னைக் கவர்ந்த விசயம், அவரது தந்தை ஏதேனும் ஒருபொருள் குறித்துப் பேசும்போது, அதுகுறித்து அரவிந்தனுக்கு மாற்றுக்கருத்து உண்டெனவும், அதைச் சொல்லுமாறும் அரவிந்தனைக் கேட்டுக்கொள்வார். ஒரு தந்தை- மகனிடையே காணப்பட்ட இத்தகைய உறவு எனக்கு மிகுந்த ஆரோக்கியமாகப்பட்டது.

இதற்குள் இரவு 8.30 ஆகிவிட்டபடியால் நான் ஊருக்குக் கிளம்பத் தயாரானேன். அரவிந்தனின் தந்தை எங்களிருவருக்குமிடையிலான உரையாடலை தான் கெடுத்துவிட்டதாக வருத்தப்பட்டுக்கொண்டார் மேலும் விவேகானந்தர் பற்றி நன்கு படிக்குமாறு சொன்னார். புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என நான் கேட்டபோது வேண்டாமே என அரவிந்தன் கேட்டுக்கொண்டதால், அதன் அர்த்தம் புரிந்துகொண்ட, நான் விட்டுவிட்டேன். ஆனால் நம் சந்திப்பு குறித்து பதிவு எழுதலாம் அல்லவா எனக் கேட்டுக்கொண்டேன். சிரித்துக்கொண்டே அதற்கு அரவிந்தன் உடன்பட்டார். அதன்பின்னர் அவர்கள் குடும்பத்தினரிடம் நான் விடைபெற்றுக்கொண்டேன். நான் வேண்டாமென்று சொல்லியும் கேட்க்காமல் அரவிந்தன் என்னை பேருந்து நிலையத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி என்னை அவரது டூ-வீலரில் அமர்த்திக்கொண்டார். எங்கள் உரையாடல் மேலும் தொடர்ந்தது.

அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட சிற்றுண்டி அருந்திவிட்டு ஊருக்குச் செல்லலாமே என்ற அவர் வேண்டுகோளுக்கிணங்கி அருகிலுள்ள ஒரு அழகான உணவகத்திற்குள் சென்று உரையாடலைத் தொடர்ந்தோம். சென்னையிலுள்ள, அவர் கருத்திற்கு மாற்றுக்கருத்துக்கள் கொண்ட, என் நண்பர்கள் குறித்து அவர் மேலதிக விபரங்கள் கேட்டறிந்தார். அவர் சென்னைக்கு வரும்போது எல்லோரையும் பார்க்கலாம் என நான் அவரை அழைத்தேன். ஒருவருக்கொருவர் நேரடிப் பரிச்சியம் ஏற்படும்போது அது பதிவுலக சூழலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி, இவ்விசயத்தில் என் சொந்த அனுபவத்தையும் கூறினேன். அவர் எழுத்துக்கள் பற்றிய என் அபிப்பிராயத்தைக் கேட்டார். அவர் கருத்தியலில் கிஞ்சித்தும் உடன்பாடில்லை என்று நான் அவர் கட்டுரை ஒன்றில் பின்னூட்டமிட்டிருந்த போதிலும், முகத்திற்கு நேராக சிலவற்றை சொல்ல தயக்கம் எனக்கு உண்டாதலால், அவரது சமீபகால கட்டுரை ஒன்றில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை எனக்கூறினேன். மற்றபடி சில விசயங்களில் அவரது அறிவியல் சார்ந்த கோணங்களில் எனக்கு உடன்பாடுண்டு என்று தெளிவுறுத்தினேன். நான் ஒன்றும் அவரைப் போல் (மேலும் பலரைப்போல்) பெரிதும் எழுதிக் கிழிக்கவில்லையாதலால் என் எழுத்துக்கள் பற்றிய அவரது கருத்துக்களைக் கேட்டறியத் தோன்றவில்லையோ என இப்போது உணர்கிறேன்.

மேற்கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளியில் அவருடன் படித்த நண்பரொருவர் எனக்குப் பாளையங்கோட்டைச் சித்தமருத்துவக் கல்லூரியில் 2 வருடங்கள் மூத்தவர், மேலும் எனக்கும் அவர் நண்பர் என்பதும் தெரியவந்தது. அரவிந்தனுடன் தற்போது வேலை செய்யும் நண்பரொருவர் மேற்சொன்ன அதே கல்லூரியில் எனக்கு நண்பராகவும், மேற்சொன்ன நண்பரைப்போலவே எனக்கு 2 ஆண்டுகள் மூத்தவர் என்பதும் இருவருக்கும் ஏற்கனவே தெரியும். (எங்களிருவருக்கும் தோழர்களான அவர்களிருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்) இதனால் எங்களிருவருக்குமிடையில் மேலும் ஒரு உறவுப்பாலம் (நட்புப்பாலம்!) அமைந்துவிட்டது.

அதற்குள் மணி இரவு 10 ஆகிவிட்டபடியால் நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு எங்களூர் வழியாக மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். பயணம் செய்யும்போது, நிகழ்ந்த சந்திப்பு குறித்து எவ்வாறு எழுதலாம் என அசை போட்டுக்கொண்டே வந்தேன். ஒற்றைவரியில் சொல்வதானால், பரஸ்பர மரியாதையும், புரிந்துணர்வும் மிகுந்த சந்திப்பு; சற்றேறக்குறைய 5 மணி நேரங்கள் மிகுந்த திருப்தியளித்த ஒரு உரையாடல். இந்தமுறை, நீண்ட நாட்கள் கழித்து, எனது பணகுடிப் பயணம் மிகுந்த நிறைவையளித்ததாக உணர்ந்தேன். 10.30 மணிக்கு என் வீட்டிற்குச் சென்றபோது, என் தந்தை இப்போதான் உனக்கு மணி 9 ஆகிறதா?! என வினவினார். என்னை 9 மணிக்குள் வந்துவிடுமாறு அவர் சொல்லியனுப்பியதால் அவ்வாறு கேட்டார். 9 மணி என்று சொன்னால்தான் 11 மணிக்குள்ளாக நான் வருவேன் என்பது அவருக்குத் தெரியும். பின்ன, 35 வருடங்களாக என்னைப் பார்த்துவருபராயிற்றே.

செவ்வாய், 6 மார்ச், 2007

பாலபாரதிக்கு விஷேசம்!!!!! - பா.க.ச பதிவு

இதனால் சகல பாகச உறுப்பினர்களுக்கும் அறிவிப்பது என்னவெண்றால், தமிழ் வலைப்பதிவுலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரும் (சிரிக்காதீங்க, நெசமாத்தான்), பா.க.ச வின் மூலவருமான 'தல' பாலபாரதிக்கு, மூக்காணாங்கயிறு கட்டப்படலாம் என்று நம்பப்படுகிறது...

மேற்படி வைபவத்தை ராமேஸ்வரத்தில் நடத்துவதா அல்லது சென்னையில் கொண்டாடுவதா என்பது குறித்து 'தல' இந்தவாரம் தன் ஊருக்குச் சென்று வந்தபின்பு முடிவெடுப்பார்.

மேலும், தன் வாழ்க்கையில் நடக்கப்போகும் இந்த முக்கியமான நிகழ்ச்சியைக் கருத்திற்கொண்டு, அனைத்து பாகச உறுப்பினர்களுக்கும் 'தல' சென்னையில் ' கொலசாமி படையல்' வைப்பதற்கும் முடிவெடுத்திருப்பதாகப் பட்சியொன்று என் காதில் ஓதிச் சென்றது.

குறிப்பு: விரைவில் 'தல' யின் இதுவரை வெளிவராத பராக்கிரமங்கள் குறித்த இடுகைகளைக் காண தொடர்ந்து புளியமரம வாருங்கள். (புளியமரம் - உசத்தி கண்ணா! உசத்தி!!)

பின் குறிப்பு: ‘தல’ ஊருக்கு இந்தவாரம் செல்கிறேன் என்று சாதாரணமாகச் சொன்னவுடன், ஆயிரம் வாட்ஸ் பிரகாசமான என் மூளை இதைவைத்து ஒரு பாகச பதிவு போட்டுவிடலாம் என எண்ணியதால் வந்தது இப்பதிவு. இது முற்றிலும் என் கற்பனையே.

நீங்கள் குடும்பத்துடன் இலவசமாக கோவா செல்லவேண்டுமா...!?

கடந்த சிலநாட்களுக்கு முன்பு என் இணையருக்கு (அதாங்க மனைவிக்கு) கைத்தொலைபேசியில் ஒரு அனானிமஸ் அழைப்பு. மறுமுனையில் பேசிய பெண் தங்கள் நிறுவனம் ஒரு survey செய்வதாகவும், அதற்காகச் சில கேள்விகளும் கேட்டிருக்கிறார். கேள்வி என்னவென்றால், அவருக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா, வயது என்ன, குடும்பத்தின் மாத வருமானம் என்பவைதான். என் துணைவியார் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியவுடன், நன்றி என்று கூறி மறுமுனையில் இணைப்பைத் துண்டித்துவிட்டனர். பிறகு மறுநாள் மீண்டும் அதே பெண்ணிடமிருந்து அழைப்பு. என் துணைவிக்கு சீட்டுக் குலுக்கலில் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசு என்னவென்றால் விபத்துக் காப்பீடு இலவசமாகத் தருவார்கள் என்பதே.

என் துணைவி யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னவுடன், மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் அதே பெண்ணிடமிருந்து அழைப்பு. அதற்குள் என் துணைவியார் என்னைத் தொடர்பு கொண்டு இந்த விசயம்பற்றி கூறியிருந்தார். இம்முறை அவர் என் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்து என்னிடம் விளக்கும்படி கூறிவிட்டார்.

பின்னர் என்னை அப்பெண் அழைத்ததும், நான் சில மேலதிக விளக்கங்கள் கேட்டேன். அதற்கு, இன்று மாலை குலுக்கலில் வெற்றிபெற்ற 20 பேருக்காக ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்தால் விளக்கங்கள் கிடைக்குமெனவும் கூறிவிட்டார். அவரிடம் அவர்களது இணையதள முகவரி கேட்டுப்பெற்று கொண்டேன். இனையத்தில் எனக்கு ஒன்றும் பெரிதாக விளக்கங்கள் இல்லை. அப்பெண் அவர்களது நிறுவனம் ICICI Prudential காப்பீட்டு நிறுவனத்தின் ஒரு அங்கம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இணையத்தில் அப்படியொன்றும் தகவல்கள் இல்லை.

காப்பீட்டுப் பாலிசியை இன்று மாலைக்குள் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறியிருந்தார்கள். எனக்கு இந்தமாதிரி இலவச பரிசுகளில் சுத்தமாக நம்பிக்கை இல்லாததாலும், சற்று கூட பிற மனிதர்களின் கருத்தை/நேரத்தை மதிக்காமல்/அறியாமல் தனது நிறுவன வியாபார வெற்றிக்காக அவர்கள் செய்யும் அறநெறியற்ற முறைக்காகவும் அக்கூட்டத்திற்குச் செல்லவில்லை.

பின்னர் இன்று காலை ING Vysya வங்கியிலிருந்து என் கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு. என்னவென்றால், என்னுடைய கைத்தொலைபேசி எண்ணிற்குப் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசு நான் குடும்பத்துடன் இரண்டு நாட்கள் கோவா செல்வதற்கு மேற்குறிப்பிட்ட வங்கி நல்கை (Sponsor) அளிப்பதாகவும் கூறினார்கள். நான் எப்படி என் எண்ணைப் பெற்றீர்கள் எனக் கேட்டபோது, Airtel, Hutch, Aircel போன்ற நிறுவனங்களின் எண்களை survey செய்து, அதில் ஒவ்வொரு நிறுவன எண்களிலும் தலா 20 எண்கள் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதில் உங்கள் எண்ணும் ஒன்று எனவும் கூறினார்கள். அந்த survey-ப்படி அந்த எண்ணுள்ள நபர் திருமணமாகியிருக்க வேண்டும், மாத வருமானம் ரூபாய் 12,000 ற்கு மேலிருக்க வேண்டும், வயது 25 முதல் 45 ற்குள் இருக்க வேண்டுமென்பதே மூன்று நிபந்தனைகள்.

என்னிடம் அவர்கள் முதல்நாள் survey ஏதும் செய்யவில்லை. என் மனைவி முன்பு கொடுத்த என் கைத்தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு அவர்கள் ஆசை காட்டுகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். இவ்வாறு எனது ஒப்புதல் இல்லாமலேயே எனது எண்ணை survey ல் சேர்த்ததாக அவர்கள் உட்டலாக்கடி விட்டதாலும், இத்தகைய இலவசங்களின் பின்னுள்ள பிற மோசடிகளாலும் நான் இதில் எனக்கு விருப்பமில்லை எனக் கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டேன். இப்பொழுது கொஞ்ச நாட்களாக, கிரெடிட் கார்டு போய் இந்தமாதிரி இலவச பரிசுத் திட்டங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவற்றை ஒழுங்கு செய்ய அரசாங்கம்தான் முன்வர வேண்டும்.

திங்கள், 5 மார்ச், 2007

தமிழக அரசியல் - ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து

தமிழக அரசியல், 1972 ற்குப் பிறகு, தனிமனித வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரசியல் தலைவரின் மீதான தனிப்பட்ட காழ்ப்பினை தனது அரசியல் ஆதாயத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டவர் மறைந்த எம். ஜி. ராமச்சந்திரன். இது அவரின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதாநாயகன் Vs. வில்லன் என்ற இரட்டை நிலையின் அரசியல் தளத்திலான விரிவாக்கம். திரைப்படங்களில் எம். ஜி. ஆருக்கு வெற்றியைக் கொடுத்த இக்கருத்தாக்கம், சரியாகச் சொன்னால் புனைவு, அரசியல் சூழலிலும் அவருக்குக் கைகொடுத்ததுதான் தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆகக் கொடுமையான ஒரு நிகழ்வு.

இப்புனைவை தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரை விடவும் பன்மடங்கு அதிகமாக தனது (அரசியல்) ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியை முன்வைத்து ஜெ செய்துவரும் அரசியல் ஆகக்கழிவானது. கடந்த சடமன்றத் தேர்தலின்போது 'கலைஞரின் கைமாறு' என்ற அபத்தமான கற்பனையைக்கொண்டு ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைவிடவும், ஆகக் கேவலமான நிகழ்ச்சியொன்றை நேற்றிரவு 10 மணிக்கு ஜெயா டிவி ஒளிபரப்பியது.

'சென்னை சங்கமம்' என்ற நிகழ்ச்சியை நடத்தியதில் கனிமொழியும், தமிழ் மையம்- ஜெகத் கஸ்பரும் எவ்வாறு அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் என்ற வகையில் ஆரம்பித்த அந்திகழ்ச்சி ராஜீவ்காந்தி படுகொலையில் வந்து முடிந்தது. மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதான் போலும். கனிமொழியும், ஜெகத் கஸ்பரும் முன்னின்று நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு அரசு இயந்திரம் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் (?) அதுகுறித்தான உண்மையான அக்கறையோடு ஜெயா டிவி இந்நிகழ்ச்சியை வழங்கியிருந்தால் ஒரு ஆக்கபூர்வமான பணியை அது செய்திருக்கும். அதுவல்ல ஜெயா டிவியின் (ஜெயலலிதாவின்) நோக்கம், ராஜீவ்காந்தி கொலையை மீண்டும் கிளறி அரசியல் குளிர்காய நினைப்பதே அவரின் உண்மையான நோக்கம். கருணாநிதியை ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாகக் (கனிமொழியை முன்னிறுத்துவது மற்றும் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்குக் கைமாறு!?) கூறிக்கொள்ளும் ஜெ, இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் சாதிக்க நினைப்பதுதான் அபத்தத்தின் உச்சகட்டம்.

தமிழக வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்ற ஒரு கருதுகோள் உண்டு; அது உண்மையோ இல்லையோ, ஆனால் நிகழ்கால தமிழக வரலாற்றில் ஜெயலலிதா ஒரு கரும்புள்ளி என்றால் அது மிகையல்ல.

புதன், 21 பிப்ரவரி, 2007

சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ்

நேற்று சென்னை புரசைவாக்கத்திலுள்ள ரிலையன்ஸ் சில்லரை விற்பனைக் கடைக்குச் சென்றிருந்தேன். வெளியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அட்டகாசமாகயிருந்தது. ஏதோ திருவிழா பார்க்க வந்ததுமாதிரி ஒரே கூட்டம் (அடியேனையும் சேர்த்துத்தான்); தள்ளூ முள்ளு நடக்காதகுறைதான். கடை மிகச் சிறியது. நம்ம ஸ்பென்ஸர், நீல்கிரீஸ், திரிநேத்ரா அளவுக்குக்கூட இல்லை. ஒருவேளை இத்துறையில் ஆழம் பார்த்தபின்பு கடையை விரிவாக்குவார்களோ என்னவோ?

நான் முதலில் இது காய்கறிகள் மட்டும் விற்கும் கடை என நினைத்தேன். பெயர்ப்பலகையும் அவ்வாறே நினைக்கத்தூண்டியது. (Relaince fresh) ஆயினும் பலசரக்குக் கடைமாதிரி மற்ற மளிகைச் சாமான்களும் இருந்த்தன. ஆனால் காய்கறிகள்தான் நிறைய இடங்களை அடைத்திருந்தன. தரம் ஒன்றும் நம்மூர் கோவை பழமுதிர் நிலையம் போல் இல்லை. (ஒரு வேளை நேற்று அவ்வாறில்லாமலிருந்திருக்கலாம்!) ஆனால் ஒருவிசயத்தில் நான் பெரிய வேறுபாட்டைப் பார்த்தேன். அது சில்லரை வணிகமும் தொழில்முறை நேர்த்தியுடன் (Professionalism) செய்யப்படலாம் என்பதே. ரிலையன்ஸ் மற்ற நிறுவனங்களைவிட இதில் சற்று நேர்த்தியுடன் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு சிறு உதாரணம்; பணம் கட்ட வரிசையில் நிற்பதற்கு ஏதோ விமான நிலையத்தில் immigration counter ல் நிற்பது போன்ற நேர்த்தியுடன் இருந்தது.

இனிமேல் சில்லரை வணிகமும் இந்தியாவில் பணம் கொழிக்கும் துறையாகவும், வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கும் துறையாகவும் இருக்கும் எனக் கூறுகிறார்கள். மேலும் உலகின் வேறு பல பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் இத்துறையில் கால்பதிக்க உள்ளார்கள் என்ற செய்தியும் அடிபடுகிறது. இத்தகைய பெரிய நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் (Contract farming) செய்யப்பட்டு மொத்தமாக அவை கொள்முதல் செய்யப்படும் என்று படித்திருக்கிறேன். இதனால் இடைத்தரகர் இல்லாமல் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆயினும் இந்திறுவனங்களின் காலகாலமாக இத்துறையிலுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இன்னும் பெரும்பான்மை இந்தியர்கள் தமக்குத் தெரிந்த சில்லரை வணிகர்களையே நாடுவர்கள் என நினைக்கிறேன்.

வியாழன், 15 பிப்ரவரி, 2007

மார்க்சியம், பின் நவீனத்துவம், திராவிடம், பிராமணீய எதிர்ப்பு, தயிர்சாதம் மற்றும் வரவனையாண்





நேற்று மதியம் சாப்பிட நான் மயிலாப்பூர் 'சைத்ரா' உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு இன்ப அதிர்ச்சியாக 'கொல சாமி' பால பாரதியையும், 'பின் நவீனத்துவ புகழ்' வரவனையாண் @ செந்திலையும் பார்த்தேன். வரவனையாண் தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுவும் இரண்டு பிளேட்.

இதைப் பார்த்தவுடன் எனது கு(சும்பு)று மதிக்கு ஒரு ஐடியா தோன்றியது. டக்கென்று பாலாவிடம் சொன்னேன். உடனே பாலாவும் அவரது கேமரா செல்பேசியில் படங்களைச் சுட்டுத் தள்ளினார். அந்தப் படங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள். என்னடா அதி தீவிர பிராமணீய எதிர்ப்பாளர், பிராமணியத்தின் குறியீடுகளில் ஒன்றாக பரவலாக நம்பப்படுகிற தயிர் சாதத்தைச் சாப்பிடுகிறாரே என்ற ஒரு சந்தேகம். மக்களே நீங்க கொஞ்சம் யோசிங்க.

கேட்டால் மனுஷன் எனக்கு GERD (Gastroesophageal reflux disorder) அதனால்தான் தயிர்சாதம் சாப்பிடுகிறேன் என ஜல்லியடிக்கிறார்.

கொசுறு தகவல்: புளித்த ஏப்பம், பசியின்மை, நெஞ்சு எரிச்சல், இரைப்பை மற்றும் முன்குடல் புண் போன்ற நோய்களுக்குத் தயிர்சாதம்தான் சிறந்தது எனப் பலர் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள், வரவையாணைப்போல்.

வியாழன், 8 பிப்ரவரி, 2007

ஜவுளிக்கடையும், பெண்களும்

எனக்குப் பெண்களிடம் பிடித்த விசயங்களில் ஒன்று அவர்களது முடிவெடுக்கும் திறன். ஒரு சராசரி ஆணைவிட சராசரிப் பெண் மிக விரைவாக முடிவெடுத்துவிடுவார். ஆயினும், அவர்கள் முடிவெடுப்பதில் திணறும் இடம் தங்களுக்கான துணியை (துணையை அல்ல) தெரிந்தெடுப்பதில்தான் உள்ளது. பெண்களுக்குப் பொதுவாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது டிரஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேலும் அவர்களுக்குத் தமக்குப்பிடித்த (அது கலர்களிலோ அல்லது டிசைன்களிலோ) துணிவகைகளைத் தேர்ந்தெடுப்பதில் சாய்ஸும் அதிகம். ஆண்களைப்போல் ஒரு 10 - 12 கலர் வகைகளோ அல்லது கட்டம், கோடு, பிளைன் என்றோ ஒரு வரம்பிற்குட்பட்ட சாய்ஸுகளோ அல்ல; பெண்களுக்கு இவ்விசயத்தில் எண்ணிலடங்கா சாய்ஸ் இருக்கிறது. ஆயினும் பெரும்பாலான பெண்கள் துணிவாங்க ஜவுளிக்கடைக்குப் போனால் அக்கடையையே ஒரு அலசு அலசி வந்துவிடுகிறார்கள். இதுகுறித்து ஆனந்த விகடன் போன்றவற்றில் அடிக்கடி ஜோக்ஸ் வருவதுண்டு. சென்னையில் நல்லி சில்க்ஸ் போன்ற சில கடைகளில் பெண்களுடன் வரும் சில துர்பாக்கியசாலி கணவன்மார்கள் (என்னையும் சேர்த்துத்தான்), அப்பாக்கள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கென்றே தனியாக இருக்கைகள் அமைத்துள்ளார்கள். மேலும் குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பராமரிப்பதற்கென்றே தனியாக கிரச்சும் வைக்கப்போவதாக காற்றுவாக்கில் செய்தி வந்தது.

எனக்கும், என் சகதர்மிணிக்கும் பொதுவாக ஊடல் நடைபெறுவதற்கு பின்ணனிக்காரணம் துணி தேர்ந்தெடுக்கும் விவகாரமாகவேயிருக்கும். நாங்களிருவரும் துணிவாங்கக் கடைக்குப் போனால், குறிப்பாக அவருக்குத் துணியெடுக்க, அன்று எங்களிருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே நான் பெரும்பாலும் அவர் துணி தேர்ந்தெடுக்கும்போது சற்று ஓரமாக ஒதுங்கிக் கொள்வேன். (சில சமயம் பிகர் பார்ப்பதும் உண்டு என்பது வேறு விசயம்)

அதேபோல்தான் என் அம்மாவும். சிறுவயதில் அவருடன் துணிக்கடைக்குச் சென்றால் அவர் எந்தச் சேலையைக் காண்பித்து இது நல்லாயிருக்காடா என்றாலும், நான் கண்ணை மூடிக்கொண்டு நல்லாயிருக்குதும்மா என்று சொல்வேன். பிற்பாடு என் இந்த உத்தியைக் கண்டுபிடித்துக் கொண்ட என் அம்மா அதன்பின்பு என்னை துணிக்கடைக்கு அழைத்துச் செல்வதேயில்லை.

பெரும்பாலான பெண்கள் இவ்விசயத்தில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைந்திடுவதில்லை என்பதே உண்மை. பாவம், பெண்கள் பகுதியில் வேலை பார்க்கும் கடை ஊழியர்கள். வேலை செய்பவர் ஒரு துணியை எடுத்துப் போடும்போதே அப்பெண்ணின் கவனம் அடுத்த ரேக்கிலுள்ள மற்றொரு சேலையிலிருக்கும். கொடுமை என்னவென்றால் அப்பெண்தான் முதலில் அச்சேலையை எடுத்துக்காண்பிக்குமாறு கேட்டிருப்பார். ஒரு மணித்துளியில் அப்பெண்ணின் மனம் கங்காருப் பாய்ச்சல் பாய்ந்திருக்கும்; அல்லது மற்றொரு பெண் தேர்ந்தெடுக்கும் சேலையில் அவரது கவனம் குவிந்திருக்கும்.

ஒருவழியாக சேலை தேர்ந்தெடுக்கும் படலம் முடிந்து அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே கடைக்காரன் பளிச்சுன்னு லைட்டப் போட்டு ஏமாத்திட்டான், அங்க பார்த்தப்போ வேறுமாதிரி கலர்ல தெரிஞ்சிது, இப்போ வேற கலர்மாதிரியில்ல இருக்கு என்றோ அல்லது இந்தக் கலர் புடவை என்கிட்ட ஏற்கனவேயிருக்கு என்றோ (பெரும்பாலான பெண்கள் நூற்றுக்கணக்கான புடவைகள் வைத்திருப்பர்; ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தன்னிடம் முந்நூற்றிற்கும் அதிகப் புடவைகள் இருப்பதாக ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.) சொல்லி நாளைக்கு இந்தச் சேலையை மாற்ற வேண்டும் என்பர்.
எனக்குத் தெரிந்த பெண்களிடம் (மனைவி, அம்மா, தமக்கைகள், தோழிகள் உட்பட), பெண்களின் இச்செயலுக்கு சரியான விளக்கம் தரத் தெரியவில்லை. ஆகவே பெண் வலைப்பதிவாளர்களே (ஆண் வலைப்பதிவர்களும் சொல்லலாங்கோய்) இதற்கான உளவியல் காரணம் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஹி.. ஹி... J J J

கொசுறு தகவல்: நேற்றுமாலை என் அம்மாவுடன் ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தேன்.

புதன், 7 பிப்ரவரி, 2007

என் நவீனத்துவ மனம்

சென்றவாரம் என் ஒன்றுவிட்ட அண்ணன் திருமணத்திற்காகத் திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு, அதற்கடுத்த நாள் நடைபெறும் என் நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி செல்ல திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அன்று திருமணநாள் என்பதால் பெருங்கூட்டமே வெவ்வேறு ஊர்களுக்கான பேருந்துகளை எதிர்நோக்கி காத்திருந்தது. அப்போது சிவகாசி மற்றும் இராசபாளையம் செல்லும் இரு பேருந்துகள் வந்தன.

அந்நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க இரு பெண்மணிகள் என்னிடம் வந்து கள்ளிக்குடி செல்ல எந்தப்பேருந்தில் ஏறனும்யா எனக்கேட்டார்கள். நான் ஒரு பஸ் சிவகாசிக்கும், இன்னொன்று ராசபாளையத்திற்கும் செல்கிறது, நீங்கள் எந்த ஊர் செல்லும் பஸ்ஸில் ஏறவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் இதில் எந்த பஸ் விருதுநகர் வழியாகச் செல்லுதையா எனக்கேட்டார்கள். சிவகாசி பஸ் போகும், ஆனால் அது உங்க ஊரில் நிற்குமா என எனக்குத் தெரியாது எனக் கூறினேன். இதற்குள் இரண்டு பேருந்துமே கிளம்புவதற்கு தயாராகி விட்டிருந்தன. அப்போது என் அருகில் நின்றிருந்த 25 வயதுள்ள லுங்கியணிந்த வாலிபர் ஒருவர் பஸ்ஸில் இருந்த ஒரு பயணியிடம் அண்ணே இந்த பஸ் கள்ளிக்குடியில் நிக்குமாண்ணே எனக்கேட்டார். அவர் ஆமாண்ணு சொன்னதுதான் தாமதம், புறப்பட்டுக்கொண்டிருந்த பஸ்ஸின் பக்கவாட்டில் கையால் பலமாகத் தட்டி பேருந்தை நிறுத்தச் சொன்னார். பேருந்து நிற்கும் சமிஞ்சைகள் தெரிந்ததும் அப்பெண்களைப் பார்த்து நீ ஏறுத்தா எனச் சொல்லி ஏற்றிவிட்டார்.

எனக்கு இச்சம்பவம் சில சிந்தனைகளை விதைத்துவிட்டது. நானும் அந்த வாலிபர் செய்தமாதிரி செய்திருக்கலாம்தான் ஆனால் எனது இயல்பான சோம்பேறித்தனதையும் மீறி என்னை அதைச்செய்யவிடாமல் தடுத்தது எனது நவீனத்துவ மோஸ்தர் முகம்தான் என்று உணர்கிறேன். பொதுவாகவே நான் கத்திப்பேசும் இயல்பினன் அல்ல. மேலும் பொது இடத்தில் சத்தமாகப் பேசுவதை ஒரு அநாகரிகமாகக் கருதுபவன். அந்த இளைஞன் செய்ததுமாதிரி சற்று உரக்கப்பேசி எல்லோர் கவனமும் ஒரு மணித்துளி என்மீது விழுவதை தவிர்க்கும் முகமாகவே அப்பெண்களுக்கு உதவாமல் வாளா நின்றிருந்தேன். அந்நேரத்தில் எனது நவீன மோஸ்தர் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு அப்பெண்களுக்கு உதவுவதுதான் மனிதநேயமாகயிருந்திருக்க முடியும். ஆனால் என் செய்வது, நவீனத்துவம் சில நேரங்களில் இவ்வாறு மனித நேயத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2007

அலட்சியம் + பொறுப்பின்மை + அராஜகம் = இருசக்கர வாகன ஓட்டிகள்

சென்னையில் (இந்தியா முழுதும் பரவலாக) தற்போது இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பன் மடங்கு அதிகமாகிவிட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதும்?!, உற்பத்தியாளர்களுக்கிடையிலான கடுமையான போட்டியும் அவர்கள் விளம்பரப்படுத்துவதில் காட்டும் தீவிரமும், வங்கிகள் கொடுக்கும் கடனும், இரு சக்கர வாகனங்களின் அதீதப் பெருக்கத்திற்குக் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.

அதனால் மற்றொரு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் இவ்விரு சக்கர வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையும், அலட்சியமும், அராஜகமும் மிகவும் அதிகமாகிக் கொண்டேவருகின்றன. சாலையில் வண்டியை ஓட்டும்போது மட்டுமல்ல, பார்க்கிங் பண்ணும்போதும் அவர்கள் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தானா பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.

என் புரிதலில் அவர்களே, ஆட்டோ, பேருந்து ஓட்டுனர்களைவிடவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல்லாதது, ஒரு வழிப்பாதையிலும் (ஓரமாக) செல்வது, ஒலிப்பானை தேவையில்லாமல் பயன்படுத்துவது, சிக்னல் விழுந்தபின்பும் கடப்பது, நிறுத்துக்கோட்டைத் தாண்டி நிறுத்துவது, சாலையின் வலது பக்கமாக வண்டியை ஓட்டிக்கொண்டு செல்வது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோன்றே கண்ட இடங்களிலும் பார்க்கிங் செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சகஜம். சிலர் கிட்டத்தட்ட சாலையின் நடுவிலேயே பார்க் செய்து நிறுத்துவர். நமக்கு முன்னால் நிறைய வண்டி இருக்கிறதே நாம் இப்படி நிறுத்தினால் பிறர் எப்படி வண்டியை எடுப்பார்கள் என்ற ஓர்மை இல்லாமலேயே தன் வண்டியை அடைத்துக்கொண்டு நிறுத்துவதும் பரவலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை பக்கவாட்டு ஸ்டாண்டு போடுவது அலட்சியம், சோம்பேறித்தனத்தின் மொத்தக் குறியீடு என்பேன். சில நேரங்களில் பக்கவாட்டு ஸ்டாண்டு ஏன் தான் வைக்கிறார்களோ என்று தோன்றுவதும் உண்டு.

நானும் சிலமுறை இவற்றில் சிலவற்றை இடையூறு என்று அறியாமலும் (சில சமயங்களில் அறிந்தும் - கும்பல் சைக்காலஜி) செய்திருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமென நடந்தால் பரவாயில்லை. இப்பிரச்சனைகள் ஒரு விதிவிலக்காக அன்றி விதியாகவே மாறிவரும் சூழல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அவலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் ஏற்படுத்துகின்றர் (ஏற்படுத்துகின்றோம்). ஆகவே மகா ஜனங்களே, (இதைப் படிக்கும் பெரும்பாலோர் இருசக்கர வாகனம் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும், கும்பல் சைக்காலஜியில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்திலும்,) இளைஞர்களாகிய நாம் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வோமாக

வெள்ளி, 26 ஜனவரி, 2007

தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை

முன்பொருமுறை, எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் மூத்த மருத்துவர் ஒருவருடன் நான் சாப்பிடும் ஹோட்டல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் அடிக்கடி ஹோட்டல்களை மாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அலுவலகம் ராயப்பேட்டையிலிருப்பதால் மதிய வேளைகளில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன். சில சமயங்களில் கீரீம்ஸ் ரோடு மற்றும் எழும்பூரிலுள்ள உலக பல்கலைக்கழக உணவகம் வரை சென்று கூட சாப்பிட்டதுண்டு. (அதெல்லாம் ஒரு பொற்காலம்!? - என்ன மழைக்காலங்களில் சற்று சிரமம்.) தொடர்ந்தாற்போல் மிக நீண்டகாலம் சாப்பிட்ட ஹோட்டல் ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சரவணபவன். அங்கு விரும்பிச் சாப்பிடுவது மினி மீல்ஸ் - அதில் பரிமாறப்படும் சர்க்கரைப் பொங்கலுக்காகவே அதை விரும்பிச் சாப்பிடுவதுண்டு.

மேற்குறிப்பிட்ட அந்த மருத்துவருடன் நான் ஏன் அடிக்கடி சாப்பிடுவதற்கு ஹோட்டல்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன் என விளக்கிக் கொண்டிருந்தபோது, (நான் அவருக்குக் குறிப்பிட்ட காரணங்களை பிறகு தனிப்பதிவாகப் போடுகிறேன் மகா ஜனங்களே!) அவர் கிண்டலாகச் சொன்னார், ‘தங்கவேலிற்கு பெண் பெயர் சூட்டியுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதுதான் மிகப் பிடிக்கும்’ என்று. ஏனெனில், நான் சாப்பிட்ட பெரும்பாலான ஹோட்டல் பெயர்கள் - சங்கீதா, கற்பகம், வசந்த பவன், ரத்னா கபே, ராஜேஸ்வரி பவன், அன்னபூர்ணா, அபிராமி, கல்பகா எனப் பெண்பாற் பெயர்களாகவேயிருந்தன; சரவண பவன் ஒரு விதிவிலக்கு. அவர் அவ்வாறு குறிப்பிட்டது எனக்கு ஒரு சிந்தனையத் தோற்றுவித்தது; பெரும்பாலான சைவ உணவகங்களின் பெயர்கள் ஏன் பெண்பாற் பெயர்களாகவும், அசைவ உணவகங்கள் ஆண்பாற் பெயர்களிலும் உள்ளன என்று.

சில உதாரணங்கள்; சைவ உணவகங்களின் பெயர்கள் மேற்குறிப்பிட்டவை தவிர, சுப்புலட்சுமி பவன், அலங்கார், அபூர்வா, பார்வதி பவன், வசந்தம், வசந்த விஹார், சந்திர விலாஸ், மீனாட்சி பவன், ஹோட்டல் மனோரமா, அம்பிகா எனப் பெண்பாற் பெயர்களாகவே உள்ளன. சரவண பவன், பாலாஜி பவன், ராஜ் பவன், அசோக் பவன் போன்றவை சில விதிவிலக்குகள். அதே சமயம் அசைவ உணவகங்கள் பெரும்பாலானவை ஆண்பாற் பெயர்களிலேயே உள்ளன. உ.தா. - பொன்னுச்சாமி ஹோட்டல், முனியாண்டி விலாஸ், அய்யனார், புஹாரி என்பன. விதிவிலக்காக அம்மா ரெஸ்ட்டாரெண்ட் போன்றவை. அதே சமயம் பால் வேறுபாடற்ற சைவ, அசைவ உணவகங்களும் சில உள்ளன; உ.தா. - உட்லேண்ட்ஸ், காளியாக்குடி, ஹாட் சிப்ஸ், காரைக்குடி, விருதுநகர் போன்றவை.

இப்பெயர்களை ஆராய்ந்ததில் எனக்கொரு விசயம் புலப்பட்டது. நம் சமூகத்தில் சைவ உணவு உண்பவர்கள் உயர்வாகவும், அசைவம் உண்பவர்கள் கீழாகவும் கருதும் வழக்கம் இருக்கிறது. மேலும் சைவம் மென்மையின், அதனால் பெண்மையின் குறியீடாகவும், அசைவம் வலிமையின், அதனால் ஆண்மையின் குறியீடாகவும் கருதப்படுகிறது. அதனால்தானோ என்னவோ சைவ உணவகங்கள் பெண்பாற் பெயரிலும், அசைவ உணவகங்கள் ஆண்பாற் பெயரிலும் உள்ளன. மற்றொரு முக்கியமான விசயம், பெரும்பாலான பெரிய சைவ உணவகங்கள், சரவண பவன் அண்ணாச்சி போன்றவர்கள் விதிவிலக்கு, உடுப்பி பிராமணர்களாலோ அல்லது திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி வட்டாரத்தைச் சார்ந்த மேல்சாதியினரான (மேல்சாதியென்பது இங்கு பிராமணீயத்தை தழுவியவர்கள் என்ற பொருளில் சுட்டப்படுகிறது) ரெட்டியார்களினாலோதான் நடத்தப்படுகிறது. அதனால்தானோ என்னவோ அதிகமும் சமஸ்கிருத மயமான பெயர்களே (ஆண், பெண்பாற் பெயர்கள்) பெரிதும் சைவ உணவகங்களுக்குச் சூட்டப்படுகிறது; உ.தா. மேற்குறிப்பிட்டவையே. இங்கு சரவண பவன் அண்ணாச்சியும் பிராமணியத்தைத் தழுவியவர் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஆனால், அசைவ உணவகங்கள் பெரும்பாலும் கீழ் சாதியினராகக் கருதப்படும் உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்ட சாதியினரால் நடத்தப்படுகிறது என நம்புகிறேன். (இவ்விசயத்தில் எனக்குச் சரியான தெளிவில்லை) எனவேதான் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களுக்கும் அவர்களது சாமியின் (சிறு தெய்வங்கள்) பெயர்களையோ (அய்யனார்), குடும்பப் பெயர்களையோ (பொன்னுச்சாமி) வைக்கின்றனர் என்பது என் யூகம்.இவ்விசயத்தில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைப் பின்னூட்டமிடவும்.

குறிப்பு:
இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது ஸ்டார் ஹோட்டல்கள், சாலையோர ஹோட்டல்கள் அல்லாத பிற நடுத்தர ஹோட்டல்களே.

பிராமணீயம் என்ற வார்த்தையை சமூக அறிவியல் பின்புலத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்; யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலல்ல. வேண்டுமெனில் பிராமணீயம் என்பதற்குப் பதில் பெருந்தெய்வ வழிபாடு என்ற பதத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.