பக்கங்கள்

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

சீனாவின் கருத்துச் சுதந்திரம் - பெய்ஜிங்கில் திபெத்தியருடனான என் நேரடியனுபவம்

2005 செப்டம்பரில் ஒரு மருத்துவ அறிவியல் கருத்தரங்கிற்காக நான் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தேன். முதல் வெளிநாட்டுப் பயணம், குறிப்பாக முதல் விமானப் பயணம் என்பதாலும், மேலும் முதல்முறையாக தனியாக வெளிநாடு செல்லும்போதே ஆங்கிலம் அதிகம் புழங்காத (எனக்கு ஆங்கிலம் ததிகினத்தான் என்பது வேறுவிசயம்) தெரியாத நாட்டிற்குச் செல்வதும், சீனர்களின் உணவுமுறை குறித்து பல்வேறு நபர்கள் தெரிவித்த கருத்துக்களும் சற்று பயத்தைக் கொடுத்தன. எனினும் நம்மைப்போன்றே கலாச்சாரப் பழமையையும், அதிவேக பொருளாதார வளர்ச்சியையும் (பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் பார்த்த வானளாவிய கட்டிடங்கள், உள் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தபிறகு அது ஏதோ வளர்ந்த நாடாகவே எனக்குத் தெரிந்தது) கொண்ட நாட்டைக் காணப்போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் அவ்வளவாக பயம் தெரியவில்லை.

கருத்தரங்க சுவரொட்டிகள் (Conference poster session) பார்வைப் பிரிவில் ஒரு திபெத்திய பெண் மகப்பேறு மருத்துவரும், சாலமோன் என்ற சமூகநல ஊழியருமிணைந்து அவர்களது சுவரொட்டியையும் பார்வைக்கு வைத்திருந்தனர். அப்போதுதான் தலாய் லாமா அறிவியலுக்கு ஏற்றமாதிரி புத்தமதத்திலும் மாற்றம்கொண்டு வருவதை தான் வரவேற்பதாக கருத்துத் தெரிவித்திருந்தார். அதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தலாய் லாமா என்ற பெயரை நான் உச்சரித்த உடனேயே சாலமோன் சற்று பின்வாங்கினார். பின்னர் எங்கள் அறைக்குச் செல்லும் வழியில் என்னைத் தனியாக அழைத்து தலாய் லாமா குறித்து தன்னிடம் பேசவேண்டாம் எனவும், வேண்டுமெனில் Mr. D என்ற சங்கேதக் குறியீட்டைப் பயன்படுத்தி அவர் குறித்து பேசலாம் எனச் சற்று பதட்டத்துடன் கூறினார். அதற்குக் காரணமாக அவர் சொன்னது நீங்கள் ஒரு இந்தியன், நான் ஒரு திபெத்தியன் -அதனால் நம்மிருவரையும் சில சீன அதிகாரிகள் கண்காணிக்கக் கூடும், அதனால் நாம் தலாய்லாமா குறித்துப் பேசுவது தேவையற்ற சிக்கல்களை இருவருக்கும் உண்டாக்குமெனக் கூறினார். இந்தியனான எனக்கு இதைப் புரிந்துகொள்ளவோ, நம்பவோ முடியவில்லை. சாலமோன் தேவையில்லாமல் பயப்படுகிறாரோ என்று நினைத்தேன். பின்னர் Mr. D குறித்து அவரிடம் பேசுவதை நானும் தவிர்த்துவிட்டேன்.

பின்னர் இருவரும் அந்த 4 நாட்களுக்குள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாயினர். பெண் மருத்துவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது. சாலமோன்தான் எங்களிருவருக்குமிடையே துபாஷி. அவர்கள் இருவருக்கும் ஒரு இந்தியன் என்பதால் என்னை மிகவும் பிடித்துவிட்டது. திபெத்தியர்களுக்கு இந்தியர்கள் மேல் எப்போதும் பாசமதிகம் என்று இருவரும் சொன்னார்கள். அந்தப் பெண் சொன்னார் நான் அவருடைய சகோதரனைப் போல் இருப்பதாக. அதிகம் என்னுடன் அவரால் உரையாட முடியாவிட்டாலும் அவரது கண்ணில் தெரிந்த அன்பை என்னால் உணர முடிந்தது. கடைசி நாளன்று இருவரும் என் அறைக்கு வந்து எனக்கு அங்கவஸ்திரம் போன்ற ஒரு சில்க் துணியை எனக்கு அணிவித்து (அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறையாம்), வாழ்த்திச் சென்றனர்.




திபெத் குறித்த தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது சாலமோன் அன்று பயப்பட்டதன் அர்த்தம் எனக்கு நன்கு விளங்குகிறது.