சனி, 16 டிசம்பர், 2006

சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் தேவையா?

நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த விசயம், இன்று என் வீட்டருகில் நடந்த நிகழ்வால் உடனே எழுதும்படி தூண்டப்பட்டேன். இன்று காலை ஏழு மணியிலிருந்து என் வீட்டருகில் தீடிரென்று ஒரே சரணம் ஐயப்பா கோஷம். ஏதோ பெரிய இன்னிசை மழைக் கச்சேரியில் (ஸ்பீக்கர்களை அலற வைத்து மக்களை குலை நடுங்க வைக்கும் ஒரு செயலை இன்னிசை மழை என அழைப்பது ஒரு நகை முரண்) வைப்பதுபோல் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து எங்கள் தெருவையே அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டில் ஒருவருக்கொருவர் மிகவும் சத்தமாகப் பேசிக்கொள்ளவேண்டியிருந்தது, அப்போதுதான் ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியும். நியூஸ் கேட்கமுடியவில்லை. தொலைபேசியில் பேச முடியவில்லை. சின்ன வயதில் எனக்கும் ஸ்பீக்கர்கள், அப்பொதெல்லாம் குழாய் ஸ்பீக்கர்கள், அலருவது பிடிக்கும். பின்னர் அதுவே காட்டுமிராண்டித்தனமாகப் புரிய ஆரம்பித்தது.

விசயம் இதுதான், எங்கள் தெருவில் சிலர் சபரிமலைக்குச் செல்கிறார்கள், அதற்குத்தான் இந்த அலப்பரை. என்னதான் இவ்வாறு ஸ்பீக்கர்கள் அலருவது பலருக்கும் இடைஞ்சலாக இருந்தாலும், யாரும் இதை நிறுத்தச் சொல்லவில்லை. இத்தனைக்கும் அருகிலேயே ஒரு பள்ளிவாசல் உள்ளது, முஸ்லீம்களின் வீடுகளும் உள்ளன. அவர்களும் இதைப் பொருட்படுத்தியது மாதிரித் தெரியவில்லை. அப்படியே பொருட்படுத்தியிருந்தாலும் அதைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் தைரியம் அவர்களில் யாருக்கும் (ஏன், எனக்கே கூட இல்லை) இருந்திருக்காது. ஏனெனில் அப்பகுதியில் அவர்கள் மதச் சிறுபான்மையினர்தானே. சற்று கூர்ந்து கவனித்தோமானால் பெரும்பான்மையினரால், சிறுபான்மையினரின் உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படாமலோ, புரிந்து கொண்டாலும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமலோ பல நிகழ்ச்சிகள் இதுமாதிரி தினந்தோறும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

உதாரணத்திற்குச் சில;

1. நீங்கள் பஸ்ஸில் பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள், தீடிரென்று ஒரு கூட்டம் பஸ்ஸை வழிமறித்து தாங்கள் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுக்க நேர்ந்திருப்பதாகவும் அதற்கு நன்கொடை அளிக்குமாறும் உண்டியல் குலுக்குகிறது.
2. அநேகமாக எல்லா அரசு அலுவலகங்களிலும் ஒரு பிள்ளையார் கோவிலிருக்கும், விநாயக சதுர்த்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள்.
3. அதேபோன்று, ஆயுத பூஜையை அலுவலகத்திலேயே கொண்டாடுவார்கள்.

மேற்கண்ட மாதிரி, ஒரு முஸ்லீமோ, கிருத்துவரோ தாங்கள் ஹஜ் செல்வதற்கு நன்கொடை வேண்டியோ, அல்லது புனித மேரிக்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ என பஸ்ஸை மறிக்கமுடியுமா? அரசு அலுவலகங்களில் ஒரு மசூதியோ, சர்ச்சோ கட்டமுடியுமா? ரம்ஜானையோ, கிறிஸ்துமஸ்ஸையோ கொண்டாடுகிறேன் பேர்வழி என்று ஸ்பீக்கர்களை அலறவைக்க முடியுமா?

முடியாது, ஏனெனில், பெரும்பான்மை மதத்தினரான இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கலாம். நாங்கள் கூட கல்லூரியில் எங்களுடன் படித்த ஒரு முஸ்லீம் நண்பருக்காக ரம்ஜான் நோன்புக் கஞ்சி ஊற்ற நன்கொடை வசூலித்திருக்கிறோம். ஆனால், பொதுவாக இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தில் இவை அனுமதிக்கப்படுவதில்லை. அதேவேளையில் முஸ்லீம்களோ, கிருத்துவர்களோ பெரும்பான்மையாக உள்ள ஊரில், சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமைகளும், உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படாமலிருக்கலாம். இது மனிதனின் இயற்கைகுணம். இதை மனதில் கொண்டே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் வகையில் அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறுபான்மையினருக்குச் சிறப்புச் சலுகைகள் தேவைதான் என்பது என் எண்ணம். இதுபற்றிய பிறரது கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

குறிப்பு: மத அடிப்படைவாத கருத்துக்கள் மட்டுறுத்தப்படும்.

புதன், 6 டிசம்பர், 2006

சன் டிவியின் தங்கவேட்டை

சன் தொலைகாட்சியில் சனி, ஞாயிறு இரவுகளில் ஒளிபரப்பப்படும் தங்கவேட்டை நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பதிலடியாக ராதிகாவின் ராடான் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்னர் இடையில் நடிகை ஊர்வசி தொகுத்து வழங்கினார். ஊர்வசியைப் பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. சுரத்தே இல்லாமல் அவர் நிகழ்ச்சியை நடத்தியவிதம் நன்றாக இல்லை. முன்பு, ராஜ் டிவியில் அவரே பல வேடங்களில் தோன்றி நடத்திய நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருக்கிறேன். அப்படியிருந்த அவரா இப்படி! எனும் அளவிற்கு ஊர்வசி நிகழ்ச்சியை நடத்தியவிதம் இருந்தது.

பின் சிறிது காலத்திற்குள்ளேயே ஊர்வசி மாற்றப்பட்டு நடிகை கனிகா (பைவ் ஸ்டார்) அமர்த்தப்பட்டார். கனிகாவின் வரவிற்குப் பிறகு தங்கவேட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு தொழில்முறை தொகுப்பாளினியைவிட கனிகா நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். ரம்யா, குஷ்புவைப்போல் தேவையில்லாமல் கத்திப்பேசாமல் அதேசமயம், மற்ற பெரும்பாலான (ஆண், பெண்) தொழில்முறை தொகுப்பாளர்களைப் போலல்லாது தேவையற்ற உடல் அசைவுகளை விடுத்து, மிகுந்த யதார்த்தத்துடனும், உயிர்ப்புடனும் நிகழ்ச்சியை நடத்துகிறார். எனக்கு இத்தைகைய நிகழ்ச்சிகளில் பொதுவாக விருப்பம் இல்லாவிடினும், கனிகா நடத்தும் அழகிற்காக இந்நிகழ்ச்சியை சிலமுறைகள் முழுவதும் பார்த்திருக்கிறேன். அவரது தமிழும், சிறு குழந்தையைப்போல் அனைவருடனும் பேசும் பாங்கும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், அவர் பேசும்போது அவரது அழகு இன்னும் அதிகமாகப் பரிமளிக்கிறது.

வெள்ளி, 24 நவம்பர், 2006

வலைப்பதிவர் சந்திப்பு நடத்திய பாலபாரதிக்குக் கண்டனங்கள்

சென்னையில் கடந்த ஞாயிரன்று வலைப்பதிவர் சந்திப்பை, சென்னைப்பட்டிண நண்பர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தி நொந்து நூலாகி, அந்து அவலாகியிருக்கும் பாலபாரதியின் மேல் எனக்கு ஒரு வருத்தம். என்னடா ஏற்கனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறானே என நினைக்கிறீர்களா? அப்புறம் என்னுடய கோபத்தையும் (நியாயமான?!) பதிவு செய்யவேண்டாமா?

சரி சரி மேட்டருக்கு வாடான்னு நீங்க சொல்றது என் காதில் விழுகிறது. விசயம் இதுதான்; வலைப்பதிவர் சந்திப்பு முடிந்ததும், ஒரு சிறு குழு மட்டும் (வேற வேலை வெட்டி இல்லாத பசங்க - என்னையும் சேர்த்துத்தான்) ஏதாவது ஒரு உணவகத்திற்குச் (நன்றாகக் கவனிக்கவும் - உணவகம்) சென்று சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் எனத்தீர்மானிதோம். எங்கே செல்லலாம் என நடு ரோட்டில் விவாதம் நடைபெற்றது. எழும்பூர் தவிர வேறு எங்கு கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன் எனக் குழந்தை பாலபாரதி மட்டும் அடம்பிடித்தது. அப்பதான் எனக்குப் புரிந்தது, அவருக்கு ஏன் குழந்தை பட்டம் சூட்டினார்கள் என்று. ஆனால், அக்குழுவில் பெரும்பாலோர், என்னையும் பாலபாரதியையும் தவிர, தென் சென்னைகாரர்களாக இருந்ததால், தி. நகரிலுள்ள ஏதாவது ஒரு உணவகத்திற்குச் செல்லலாம் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நாங்களெல்லாம் எந்த உணவகம் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு பக்கம் என ஆராய்ந்து கொண்டிருந்தால், முத்து தமிழினி மட்டும் ஹாயாக இருந்தார். என்னன்னு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது; லக்கியார், முத்துவை அவரது வீட்டில் டிராப் பண்ணப்போகிறார் என்ற விசயமே.

ஒருவழியாக உணவகம் போய்ச்சேரும்போதே இரவு மணி எட்டாகிவிட்டது. நான், அன்று சவேரா ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கவிதைப் புத்தக வெளியீட்டுவிழாவை, எனக்கு அழைப்பிதழ் இருந்தும், இவ்வலைப் பதிவர் சந்திப்பினால் தவிர்த்துவிட்டேன். ஏற்கனவே அந்தக் கடுப்பில் இருந்த என்னை, மேலும் கடுப்பேற்றும் விதமாக பாலபாரதி, நான் வீட்டிற்குப் போகும் வழியில் தன்னையும் இறக்கிவிட்டுவிட வேண்டுமென கண்டிப்புடன் கூறிவிட்டார். என்னால் முடியாது எனக்கூறவும் தர்மசங்கடமாகிவிட்டது. ஏனெனில் அன்று எனக்குப் பிறந்தநாள் வேறு, அதை உளறித் தொலைத்துவிட்டால் மொத்த பில்லையும் நம் தலைமேல் கட்டிவிடுவார்களே என்ற பயம்தான்? ஏற்கனவே ஓகை வேறு, உங்களுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளதால் நீங்கள்தான் பார்ட்டி கொடுக்கிறீர்களா எனக் கேட்டிருந்தார். நல்லவேளையாக அவர் கேட்டது வரவணையான் காதில் விழவில்லை (அவர்தானே பார்ட்டிக்கு எல்லாரையும் கூப்பிட்டது). ஒருமணி நேரத்தில் கிளம்பி விடலாம் என பாலபாரதி சொன்னதை நம்பி அங்கு வந்தது எவ்வளவு தப்பு என்பது போகப்போகத்தான் தெரிந்தது. ஒன்பது, ஒன்பதரை ஆகி இரவு பத்தும் ஆகிவிட்டது.

ஆனால் ஒருவரும் கிளம்புவது மாதிரி தெரியவில்லை. அதற்குள் என் துணைவியாரிடமிருந்து செல்பேசியில் அழைப்புகள் வரத்தொடங்கியிருந்தன. எங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு எனக்கு வரும் முதல் பிறந்தநாள் அல்லவா, மூன்று பேரும் செர்ந்து கொண்டாடலாம் என துணைவியார் திட்டம் போட்டிருந்தார். நானோ எட்டு மணிக்கெல்லாம் அங்கு வந்துவிடுகிறேன் எனக்கூறிவிட்டு, அவ்வளவு நேரமாகியும் வராததால் அவரும் பொறுமையிழந்து, உங்களுக்கு பொண்டாட்டி புள்ளையைவிட உங்கள் நண்பர்கள்தான் முக்கியம் எனத் திட்ட ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் என் அப்பாவிடமிருந்து வேறு எப்போ வர்ற என அழைப்புகள். நான் மறுநாள் அதிகாலை பூனா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு நான் அதுவரை என் துணிமணிகள் எதையும் எடுத்து வைத்திருக்கவில்லை. அதற்குத்தான் அவர் என்னை செல்பேசியில் அழைத்து, உனக்கு எப்பவும் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்வதே வாடிக்கையாகிவிட்டது என திட்டிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் சாமாளித்து ஒரு வழியாகக் கிளம்பலாம் என நினைக்கையில், பாலபாரதியின் (திருமணம் ஆகாதவர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது) செல் செல்லமாகச் சிணுங்கியது. அந்த ரிங் டோனைக் கேட்டதும், பாலபாரதி ஓரமாக ஒதுங்கி ஏதோ குசு குசுவென்று பேசினார். இதைக் கவனித்துவிட்ட முத்து தமிழினி, வரவனையானிடம் ஏதோ சைகை செய்தார். உடனே வரவனையான், பாலபாரதி அருகில் செல்ல முயற்சிக்க, பாலா அவரை விரட்டிவிட்டார். ஒருவழியாக அவர் பேசிமுடித்ததும், அவரை இழுத்து நேரமாகிவிட்டது என உணர்த்தினேன். அதற்குள் மணி 10.45 ஆகிவிட்டிருந்தது. பின்பு நானும், அவரும் மட்டும் கிளம்பி வீட்டிற்குச் சென்றோம். பாலபாரதியை கெல்லீஸ் சிக்னலில் இறக்கிவிட்டு விட்டு நான் வீடு போய்ச் சேரும்போது 11.30 ஆகிவிட்டது. என் மனைவிக்கு, நான் மறுநாள் காலை பூனா செல்லும்முன்பு அவரையும், குழந்தையையும் பார்க்க வருகிறேன் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன். தொலைபேசினால், திட்டுவாங்கனுமே அதான். (என் மனைவி, தற்போதுதான் குழந்தை பிறந்துள்ளதால், அவரது அம்மா வீட்டில் உள்ளார்) பின்பு என் வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் திட்டுவாங்கிக் கொண்டே துணிமணிகளை சூட்கேசில் அடுக்கினேன்.

இவ்வாறு, அன்று வலைப்பதிவர் சந்திப்பு நடத்தியதன் மூலம் என்னை பல்வேறு தர்ம சங்கடங்களுக்கு ஆளாக்கியதற்காக பாலபாரதியைக் கண்டித்து ஒரு பதிவு போடாவிட்டால் நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன். எனவே தான் இந்தப் பதிவு.

குறிப்பு: என்னதான் என் மனைவியிடமும், அப்பாவிடமும் நான் திட்டுவாங்கி இருந்தாலும், (வழக்கமாக வாங்குவதுதான், ஹி! ஹி!) அவ்வலைப் பதிவர் சந்திப்பின் மூலம் அதுவரை முகம் தெரியாத பல நல்ல நண்பர்களை நேரில் சந்திக்க முடிந்தது. அதுவே நான் வாங்கிய திட்டையெல்லாம் மறக்கச் செய்துவிட்டது. அதற்கு வழிவகை செய்த பாலபாரதிக்கும், ஏனைய சென்னைப் பட்டிண நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

வியாழன், 16 நவம்பர், 2006

நான் தந்தையானபோது...

கடந்த ஒன்றாம் தேதி (01/11/2006) எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அன்று என் மனைவிக்கும் பிறந்த நாள் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. நவம்பர் ஒன்றுதான் டுஎ டடெ என ஏற்கனவே எங்களுக்கு தெரியும். ஆயினும் அக்டோபர் 24ம் தேதியே குழந்தை பிறந்துவிட்டால் நல்லது என நினைத்தோம். ஏனெனில் அன்று எங்களுக்குத் திருமணநாள். ஆனால் மகப்பேறு மருத்துவர், அதற்கு முந்தைய பரிசோதனையன்று கண்டிப்பாக குழந்தை 24ஆம் தேதியன்று பிறக்காது என்றும், நவம்பர் 1ஆம் தேதி தாண்டினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை எனவும் கூறிவிட்டார். ஆதனால் நவம்பர் ஒன்று அன்று ஒரு ஸ்கேன் செய்துவிட்டு ஆஸ்பிட்டலில் வந்து சேர்ந்துகொள்ளும்படியும் கூறிவிட்டார். என் மனைவிக்கு இரத்தத்தில் சிறிது சர்க்கரை அளவு கூடுதலாகயிருந்ததால் (Gestational diabetes) நவம்பர் 1ஆம் தேதியே பிரசவ வலியை வரவழைத்து, குழந்தைக்கு ஏதும் பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பொருட்டு, குழந்தையை பிரசவித்துவிடலாம் எனச் சொல்லியிருந்தார். ஆனால், நல்லவேளையாக நவம்பர் 1ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்கே வலி ஏற்பட்டு என் மனைவியை ஆஸ்பிட்டலில் சேர்த்து விட்டோம். பிரசவ வலி விட்டு விட்டு வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வலி தெரியாமல் இருக்க என் மனைவிக்கு பெத்தடின் ஊசி போட்டிருந்தார்கள். அதையும் மீறி அவர் வலியால் துடிப்பதைப் பார்க்க பாவமாக இருந்தது. பெண்களால் மட்டும்தான் அதை உணர முடியும். மாலை 3 மணியாகியும் குழந்தை பிறக்கவில்லை. Cardiotocography - CTG என்ற கருவியைக் கொண்டு தொடர்ந்து கருப்பை சுருங்கி விரிதலையும், கருவின் இதயத்துடிப்பையும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். 4.30 மணிக்குள் பிறந்துவிடும் என மருத்துவர் கூறியிருந்தார்.

3.30 மணிவரை பிரசவ அறையிலேயே என் மனைவியுடன் இருந்தேன். எனக்கு தலைவலி அதிகமாக இருந்ததால் சற்று தூரம் நடந்து சென்று ஒரு காபி அருந்தினால் நன்றாகயிருக்கும் என்றெண்ணி சற்று வெளியில் வந்தேன். 4.30 மணிக்குத்தானே இன்னும் நேரமிருக்கிறதே என்றெண்ணி சாலையின் மறுபுறம் கடந்து சற்றுதொலைவு சென்றிருப்பேன், திடீரென்று ஆஸ்பிட்டலில் இருந்த எனது உறவினரிடமிருந்து எனக்கு செல்பேசியில் அழைப்பு. உடனே வரும்படியும் குழந்தைக்கு ஆபத்து என்பதால் அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும் கூறினார். ஆஸ்பிட்டல் அமைந்திருந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையின் எதிர்புறம் செல்வதற்குள் இரண்டுமுறைகள் செல்பேசியில் அழைப்பு; விரைந்து வரும்படியும் என் மனைவியை ஆப்பரேசன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்வதாகவும் அவசரப்படுத்தினார். எனக்கோ சாலையைக் கடக்கும்போது, மனித வாழ்க்கையின் இந்த அருமையான தருணத்தில், எனக்கேதேனும் விபத்து நடந்து விடக்கூடாதே என்ற பயம் வேறு சேர்ந்துகொண்டது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாய் 3வது மாடியிலிருந்த பிரசவ அறையை அடையும் போது என் மனைவியை கிட்டத்தட்ட அறுவை சிகிச்சை அறைக்குள் கூட்டிச் சென்றிருந்தார்கள். கிட்டத்தட்ட மயக்க நிலையிலிருந்த என்மனைவியைப் பார்க்க கவலையாக இருந்தது. என்னால் அந்தநிலையை ஜீரணிக்கவே முடியவில்லை. ஏனெனில், கண்டிப்பாக அறுவை சிகிச்சை கூடாது என்பதில் நாங்கள் மிக உறுதியுடன் இருந்தோம். எங்கள் மகப்பேறு மருத்துவரும், என் மனைவிக்கு சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதாகவே கூறியிருந்தார். மேலும், ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் என்றவகையிலும் எனக்கு உலகம் முழுதும் நடைபெறும் 'தேவையற்ற' பிரசவ அறுவை சிகிச்சைகளின் மீது ஒரு வெறுப்பு உண்டு. ஆனால், என் மனைவிக்கோ பிரசவத்தின் இறுதிப்பகுதியில் தீடிரென்று கருவின் இதயத்துடிப்பு குறையத் தொடங்கிவிட்டது. அது ஒரு நிமிடத்திற்கு 70 - 80 (சராசரியாக 120 - 140 இருக்கும்) துடிப்புகளென மிக அதிகமாகக் குறையத்தொடங்கியதால் குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு, வேறுவழியின்றி அறுவை சிகிச்சை செய்யவெண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக, மருத்துவர் அறுவை சிகிச்சை கூடத்திற்குச் செல்லும் வழியில் என்னிடம் கூறிச் சென்றார். ஆயினும், சுகப்பிரசவம்தான் என்ற ஒருவகையான obession ல் இருந்த என்னால் அச்சமயத்தில் அதை ஜீரணிக்கமுடியவில்லை.


மேலும், குழந்தை பிறக்கும்போது உடனிருந்து அக்குழந்தையின் முதல் அழுகையைப் பார்க்க வேண்டும் என்றுநினைத்திருந்தேன். எங்கள் மருத்துவரும் ஒத்துக்கொண்டிருந்தார். கடைசியில் அறுவை சிகிச்சை என்று சொன்னவுடன் எனக்கு சகலமும் மறந்து, என் ஆசையை அந்த மருத்துவரிடம் (எங்கள் மருத்துவர் அப்போது அருகில் இல்லாததால், வேறு மருத்துவர் பிரசவம் பார்த்தார்) வெளிப்படுத்தாமலே இருந்துவிட்டேன். சிறிது நேரத்தில், ஒரு செவிலியர் என்னை அழைத்து பிறந்த குழந்தையை எனக்குக் காண்பித்தார்கள். குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் என்னிடம் பெரிதாக உணர்ச்சி ஏதும் வெளிப்படவில்லை. அப்போதைய மனநிலை அப்படியிருந்தது. குழந்தை பிறந்து இரண்டு வாரங்களாகியும் அவனது முதல் அழுகையைப் பார்க்கமுடியவிலையே என்ற வருத்தம் எனக்கு இன்னும் இருக்கிறது. நாங்கள் நினைத்ததற்கு மாறாக மூன்றே நாட்களில் தாயையும், சேயையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இப்போது தாயும், சேயும் நல்ல நலமுடன் உள்ளார்கள்.

திங்கள், 30 அக்டோபர், 2006

சென்னை மழை எனது அனுபவங்கள்

கடந்த சனியன்று இரவு பெய்த மழை, சென்றவருடம் அக்டோபர் 26ஆம் தேதி பெய்த மழையை நினைவூட்டியது. சனிக்கிழமை இரவு 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஒரு மணி நேரத்தில், இடி மின்னலுடன், காற்றும் சுழன்றடித்தது. எங்கள் வீட்டில் ஈரக்கசிவால் சுவிட்சுகளில் மின்சாரக்கசிவு இருந்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது. மேலும் என் துணைவியாரும் பிரசவத்திற்காக அவரது தந்தை வீட்டிற்குச் சென்றிருப்பதால் இந்த நேரத்தில் எனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று அச்சமாகவும் இருந்தது. நவம்பர் 1ஆம் தேதிதான், பிரசவம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் கூறியிருந்த போதிலும், அன்று காலையில்தான் பிரசவ வலி ஏற்படுவதற்கு முன்னர் ஏற்படும் பொதுவான குறிகுணங்கள் தனக்கு ஏற்பட்டதாகத் துணைவியார் கூறியிருந்தார். துணைவியார் வீடிருக்கும் வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகர் மழையால் சென்னையில் மோசமாகப் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று என்பதால் கவலை சற்று அதிகமாகயிருந்தது. ஏனெனில் அங்கிருந்து நாங்கள் பார்க்கும் மருத்துவமனைக்குச் செல்வது என்பது அன்றைய நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான சவால்களையொத்தது. நல்லவேளயாக அவ்விதம் ஏதும் நடக்கவில்லை.

நான் குடியிருக்கும் ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் காலனிப் பகுதியிலோ இரண்டடி உயரத்திற்கும்மேல் மழைநீர் சூழ்ந்திருந்தது. பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. மழை நின்று 12 மணி நேரமாகியும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை. இத்தனைக்கும் இப்பகுதியில் சென்றமாதம் தான் வெள்ள நீர் வடிகால்களை நன்கு தூர்வாரியிருந்தனர். குறிப்பாக டி.டி.கே ரோடு, திருவள்ளுவர் சாலை, கவிஞர் பாரதிதாசன் சாலை, எல்டாம்ஸ் ரோடு ஆகிய நான்கு சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தது. டி.டி.கே ரோடு ஒன்றுதான் இவற்றில் குறைவாகப் பாதிக்கப்பட்ட இடம். எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள கமல்ஹாசனின் அலுவலகத்திற்குள்ளும், தண்ணீர் புகாமலிருக்க அடுக்கப்பட்டிருந்த மணல்மூட்டைகளையும் மீறி, தண்ணீர் புகுந்து விட்டது. சீதாம்மாள் காலனிப்பகுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக. அனைத்துப் படங்களும் மழை நின்று பலமணி நேரம் கழித்து எடுக்கப்பட்டவை. சென்னையில் சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

வெள்ளி, 27 அக்டோபர், 2006

பெரியோர் என வியத்தலும் இலமே...

"பெரியோர் என வியத்தலும் இலமே, சிறியோர் என இகழ்தலும் இலமே" - என்ன அருமையான வரிகள். இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் எனக்கொரு சம்பவம் நடந்தது. என் துறை சார்ந்த ஒரு சிறிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நான் ஒழுங்கு செய்யவேண்டியிருந்தது. எம் துறை சார்ந்த பிற துறைகளில் வல்லுநர்களான சிலரை அதற்கு அழைத்திருந்தோம். 10 நாட்கள் இடைவெளியில் நடத்தவேண்டியிருந்ததால் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். மேலும், தொலைபேசி வழியாகவும் கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தை இரண்டு நாட்கள் முன்பே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், கூட்டத்திற்கு இருவரைத்தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். வராத இருவரும் சென்னையில் தத்தமது துறைகளில் பெரும் புகழுடன் விளங்குபவர்கள். அவர்களிருவரின் மேல் எனக்கு பயம் கலந்த மரியாதையுண்டு.
ஏன் வரவில்லையென அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் வரமுடியாது என்பதைத் தன்னுடய காரியதரிசி மூலம் எனக்குத் தெரியப்படுத்திவிட்டதாக ஒருவர் கதையளந்தார்; மற்றொருவரோ தன்னுடைய காரியதரிசி கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தைத் தனக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும், நாங்கள் அனுப்பிய கடிதம் அவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது எனவும் கூறினார். அவரது காரியதரிசியிடம் கேட்டபோது, இது உண்மையில்லை எனத் தெரியவந்தது. இவ்விருவர் வராததற்கும் வேறு உண்மையான காரணம் இருந்திருக்கலாம்; ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் அவ்வாறு பூசி மழுப்பியது எனக்கு மிகுந்த வருத்தத்தையளித்தது. இதில் இவர்களுக்கு தத்தமது துறைகளில் அறநெறியில் ஒழுகுபவர்கள் என்ற நற்பெயர்வேறு உண்டு. இந்நிகழ்ச்சி எனக்கு கணியன் பூங்குன்றனாரின் மேற்சொன்ன கவிதை வரிகளை ஞாபகப்படுத்திற்று.

புதன், 18 அக்டோபர், 2006

நான் புரட்சித்தலைவி ஜெயலலிதாவைச் சந்தித்தபோது!...

நேற்று காலை அ.இ.அ.தி.மு.க. வின் 35 ஆம் ஆண்டு தொடக்கவிழாவைத் தொடங்கி வைக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா அக்கட்சி தலைமை அலுவலகம் வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் அலுவலகமும் அதே சாலையில் அமைந்திருப்பதால், சில சமயங்களில் அவரை எதேச்சையாக பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அவர் அங்கு வரும்போதெல்லாம் அவரது அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் பகுதி வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும். ரத்தத்தின் ரத்தங்கள் அப்பகுதி முழுவதும் நிறைந்(த்)திருப்பார்கள். தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள் முழங்கும். அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். போலீஸ் கெடுபிடிகள் வேறு அதிகமாக இருக்கும். பல நேரஙகளில் வண்டியை ஓரம் கட்டிவிட்டு, நடந்து அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்கள் அலுவலகக் காவலாளி முன்னெச்சரிக்கையாக பிரதான வாயில் கதவைச் சாத்திவிடுவார். இல்லையெனில், ரத்தத்தின் ரத்தங்கள் தங்களது வாகனங்களை எங்கள் அலுவலக வளாகத்திற்குள் வந்து நிறுத்திவிடுவர். 'அம்மாவை' வரவேற்க அவரது நற்குணங்களையும்!? வீரதீர பராக்கிரமங்களையும்?! பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்படும். போட்டி போட்டுக்கொண்டு அம்மாவின் அணுக்கத்தொண்டர்கள் அவருக்கு பட்டம் சூட்டியிருப்பார்கள். தாயே, தமிழே, தவமே என்றும், கலைத்தாய் என்றும், காவிரித்தாய் என்றும், சமூகநீதி காத்த வீராங்கனை என்றும் பலவகைத்தான அம்மாவின் புகழ் பாடும் நாமகரணங்கள் அவர் வரும் வழியில், அவரின் கடைக்கண் பார்வையில்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சும்மாவா, அம்மாவிற்கு பெயர் பிடித்துவிட்டது என்றால், அப்பெயர் சூட்டியவரை அழைத்து பெரும் பதவிகள் கொடுப்பாரே. இப்படித்தான் அவரை 'பெண் பெரியார்' எனப் புகழும் (பெரியாரை இகழும்) போஸ்டரை ஒட்டியவரை அழைத்து போனமுறை மந்திரி பதவி கொடுத்ததாக தமிழின் புலனாய்வு?! வார இதழொன்றில் படித்த ஞாபகம். அம்மாவின் கார் தெருமுனையில் நுழைந்ததுமே, வாழ்க கோஷங்கள் விண்ணைப்பிளக்கும். எனக்குத்தெரிந்து தமிழகத்தில் வேறு எந்தத் தலைவருக்கும் தனது கட்சி அலுவலகம் வரும்போது இந்தளவு வரவேற்புக் கொடுக்கப்படுவதில்லை. அம்மா, அத்தி பூத்தாற்போலத்தானே கட்சியலுவலகத்திற்கு வருகிறார், அதனால்தானோ என்னவோ? நேற்றும் இதுபோன்ற அலங்(கோல)காரக் காட்சிகள் நடந்தேறின. இக்காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு 12 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியொன்று ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

1994 ஆம் வருடம் என்று நினைக்கிறேன், நான் அப்போது பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த அம்மா, பாளையங்கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையமொன்றை திறப்பதிற்காக வருகை புரிந்திருந்தார். திருநெல்வேலியே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. என் அறைத் தோழர்களில் ஒருவர், அப்போதைய பாளையங்கோட்டை எம் எல் ஏவாக இருந்த தர்மலிங்கம் என்பவரைப் பார்த்து (இப்போது அவர் எங்கே எனத் தெரிந்தவர் சொல்லுங்கள்) அம்மாவிடம் (அப்போது மிகப் பிரபலமாக இருந்த நாமகரணம் – புரட்(டு)சித்தலைவி) சித்தமருத்துவ முன்னேற்றத்திற்காக ஓரிரு கோரிக்கைகள் வைக்கவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதற்குத்தான் வழியேற்படுத்திக் கொடுப்பததாக உறுதியாகச் சொன்ன அந்த எம். எல். ஏ, உங்கள் கல்லூரித்தோழர்களை அழைத்து வாருங்கள், சித்த மருத்துவ பட்டதாரி மாணவர் அணியொன்று அமைத்து புரட்சித் தலைவிக்கு வரவேற்புக் கொடுங்கள், பு. த. மனம் மகிழ்ந்து உங்கள் கோரிக்கையை ஏற்று உறுதியாக நடவடிக்கையெடுப்பார் எனச் சொன்னார். நாங்களும், எங்கள் துறையைப் பீடித்திருக்கும் அவலங்களை முதலமைச்சர் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு சந்தர்ப்பம் கிட்டுகிறதேயென்றெண்ணி, சரியென்று சொன்னோம். அதன்படி எங்களில் ஒரு 20 பேரைத் தேர்ந்தெடுத்து பு.தலைவிக்கு வரவேற்பு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. எம்.எல்.ஏ செலவில் (ஊரார் வரிப்பணத்தில்) எங்களுக்கெல்லாம் ஒரு சிவப்புக் கலர்த் தொப்பியும் (ஆளவந்தானில் கமல் அணிந்திருப்பாரே அதுபோன்று), வெள்ளை canvas சூவும் வழங்கப்பட்டது. அதைப்பெறுவதற்காக, நாங்கள் எம் எல் ஏ தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றோம். அன்று தான் முதன்முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சூட் அறையைப் பார்த்தேன். எங்களுக்கு வழங்குவதற்காக இருந்த தொப்பியையும், காலணியையும் பெறுவதற்கு எம் எல் ஏவின் தொண்டரடிப் பொடிகளும் (குண்டாந்தடிகளும்?) போட்டிபோட்டதால் அந்த இடமே ஒரே அதகளமாக இருந்தது. இந்த லட்சணத்தில் எனது நண்பர்கள் மூவர், அவர்களுக்கும் சேர்த்து காலணியையும், தொப்பியையும் எடுத்துவருமாறு கேட்டிருந்தனர். எப்படியோ 3 சோடி காலணிகள் என் கைக்கு வந்து சேர்ந்தன. ஆனால் அவற்றில் ஒரு சோடி காலணி மட்டும் ஒரே காலுக்குறியதாக அமைந்துவிட்டது. பின்னர் நாங்கனைவரும் வெள்ளைச் சீருடை, வெள்ளைக் காலணி, சிவப்புத்தொப்பியும் அணிந்து, புரட்(டு)சித் தலவியை வரவேற்க, அவர் திறந்து வைக்க இருக்கிற மகளிர் காவல் நிலைய வாசலில் காத்து நின்றோம். முதலில் நாங்களும், பின்னர் சீருடையணிந்த அதிமுகவினரும், அதன்பின் மற்ற ரத்தத்தின் ரத்தங்களும் அணிவகுத்து நின்றோம். (நாங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களாயிற்றே!) இதற்கிடையில் என் நண்பன் மாணவியர் அணியொன்றையும் தாயார் செய்து அவர்களை எங்கள் கல்லூரி வாசலில் நிற்கவைத்திருந்தான். அவ்வழியேதான் பு. த வரவேண்டும்.

நண்பகல் 12 மணியிருக்குமென நினைக்கிறேன், டாடா சியரா காரில் புரட்டுத்தலைவி, சாரி புரட்சித்தலைவி வந்தார். கீ கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல் ரரக்கள் விண்ணதிர வாழ்க கோஷங்கள் எழுப்பினர். பு.தலைவி காரை விட்டிறங்கினார் (உடன் உடன்பிறவா தோழி வந்தாரா என ஞாபகமில்லை). அவரது பார்வை எங்கள் மீது படும்முன்பு உயர்போலீஸ் அதிகாரிகள், அவரை திறப்புவிழாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. ஏமாற்றத்துடன் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாட்டையாவது சாப்பிடலாம் என அவ்விடத்திற்குச் சென்றோம். அங்கு அதற்கு முன்பே அதிமுக மகளிரணியினர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களோடு போட்டி போட நம்மால் முடியாது என நினத்து, நாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மெஸ்ஸைப் பார்த்து நடையைக்கட்டினோம். ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு முன்பு, எங்கள் தோழிகள் பு.தலைவியிடம் நாங்கள் சொல்லநினைத்திருந்த கோரிக்கைகளை முறையிட்டிருந்தனர். எப்படியெனில், சாலையோரம் அணிவகுத்து நின்ற மாணவியரைப் பார்த்ததும், தனது காரை சிறிது நிறுத்தச் சொல்லி அவர்களை புரட்சித்தலைவி அழைத்திருக்கிறார். பு.தலைவியிடம் பேசியதில் என் தோழி ஒருவர் 'பெறுதற்கரிய பேறு' பெற்றதாக எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். எங்களுக்கோ, நம்முயற்சி வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி. ஆனால் அதற்குப்பிறகு எங்கள் கோரிக்கை என்னவானது என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
இந்நிகழ்ச்சியப் பற்றி நினைத்தால் முன்பெல்லாம் அவமானமாக இருக்கும். ஆனால் இப்போது சிரிப்புத்தான் வருகிறது. அதுசரி, நான் எங்கே 'அம்மாவை' சந்தித்தேன் என்று கேட்கிறீர்களா. அப்படியெல்லாம் தலைப்பு வைத்தால்தானே எல்லோரும் படிப்பீர்கள், ஹி! ஹி! அதுதான்.

வியாழன், 5 அக்டோபர், 2006

திருவாளர் கமல்ஹாசன் குறித்து எனது ஆதங்கம்

சர்ச்சைக்குரியவராக இருப்பது ஒன்றும் திருவாளர் கமல்ஹாசனுக்குப் புதிதல்ல. மூடத்தனங்களும், கட்டுப்பெட்டித்தனங்களும் நிறைந்த ஒரு சமூகத்தில், தன்னுடைய கருத்துக்களாலும், செயல்பாடுகளாலும் நல்ல சலனங்களை ஏற்படுத்தமுனையும் கலைஞனை சராசரி வெகுசன மனோபாவம் சர்ச்சைக்குரியவராகவே கருதும். ஆயினும், 'வேட்டையாடு விளையாடு' ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை அவ்வகைத்தானதல்ல. அப்படத்தில் கமல் ஏற்றிருக்கும் ராகவன் எனும் பாத்திரம் ஒரு காட்சியில் பேசும் வசனம், ஒருபாலின ஈர்ப்புடையோரை, இச்சமூகம் அவர்களைப்பற்றி ஏற்கனவே கொண்டிருக்கும் தவறான (அப்படித்தான் அறிவியல் சொல்கிறது) கருத்தாங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் வரும் வசனம் ராகவன் எனும் பாத்திரம் பேசும் வசனமாக எடுத்துக்கொள்ளப்படாமல் கமல்ஹாசனின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பேயதிகம். அக்குறிப்பிட்ட வசனத்திற்கு கிடைக்கும் கைதட்டலே இதற்குச் சான்று. ராகவன் பாத்திரத்தை வேறொரு நடிகர் ஏற்று நடித்திருந்தால் அவ்வசனம் இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்திருக்காது. ஏனெனில், மற்றைய நடிகர்களைப் போல் கமல் சமூகத்தை ஒற்றைபரிமாணக்கோணத்தில் பார்ப்பவரல்ல. அவரது திரைப்படங்களில், குறிப்பாக அவரது சொந்தத் தாயாரிப்பில் வெளிவருபவற்றில் இதனை அவதானிக்கலாம். சமூக ஓர்மையுள்ள கமல் எவ்வாறு இவ்வசனம் பேசி நடிக்க சம்மதித்தார் என்பது எனக்கு ஆச்சிரியமாகவேயுள்ளது. முன்பொருமுறை செவ்வியொன்றில், திரைப்படப் படப்பிடிப்புக் காட்சியொன்றில் நடிகைகளக் குறித்து அவதூறாகப் பேசிய பார்வையாளர் ஒருவரை தான் அடித்துவிட்டதால், தனக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்த மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதுபோன்றே, சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்த தென்மாவட்ட சாதிக்கலவரங்களுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது 'தேவர் மகன்' திரைப்படமும் ஒரு காரணம் என்பதையுணர்ந்து, தான் இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கமல், வே-வி படத்தில் அப்படியொரு வசனத்தை பேசி நடித்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. திருவாளர் கமல்ஹாசனை எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் கொண்டிருந்தாலும், அவரது இச்செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையேயளிக்கிறது.

வியாழன், 6 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம் - 2

இந்தப் பதிவு நான் செல்வன் அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு எதிர்வினைகள் வந்தபோது, அவற்றிற்குப் பதிலாக இட்டது. பின்னூட்டம் நீண்டுவிட்டதால், தனிப் பதிவாகவும் இங்கு இடுகிறேன். திரு. செல்வனின் பதிவிற்குச் செல்ல இங்கு சொடுக்கவும்.

பெண்களின் மாத விலக்கு நாட்களைக் கருத்தில் கொண்டே அதாவது பெண்களின் நலனை முன்வைத்தே?!, அக்காலப் பெரியோர், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கு கடும் விரதமிருந்து, 18 படியேறி வருதல் இயலாது எனும் காரணாத்தாலேயே, மாதவிலக்கு நிற்காத பெண்கள் பின்வழியாகச் செல்லுதல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது ஒரு பம்மாத்து என்பது என் கருத்து.

ஐயா, பின்பக்கம் வழியாகச் சென்று தரிசிப்பது, என்பதே கடந்த சில வருடங்களில் (வலிந்து) ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம் என நினைக்கிறேன். அதாவது, கோவில் நிர்வாகம் விதிகளைச் சற்று தளர்த்தியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். என் யூகம் தவறாகவுமிருக்கலாம்; அதாவது ஆதி காலம் முதற்கொண்டே, சபரி மலையில் பின்வழி தரிசனம் வழக்கத்திலிருந்து வந்திருக்கலாம்.

ஆனால், அதுவல்ல என் வாதம். உண்மையிலேயே, பெண்கள் மீது கரிசனமிருந்திருந்தால், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கென்று, தனியாக அரை மண்டலம் (20 அ 24 நாட்கள்) விரதமிருக்க வைத்து, பெருவழிப் பாதைப் பயணம், 18 படியேற்றம் போன்றவற்றை அனுமதித்திருக்காலாமே. பெண்களை அனுமதித்தால் தீட்டுப் பட்டுவிடும் என்ற காலாவதியாகிப்போன நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை இன்னும் பெருவழிப்பாதை, 18 படி ஆகியவற்றை பயன்படுத்தவிடாது தடுப்பது தவறானது என்பது என் வாதம்.

மாதவிலக்கு என்பது பெண்களுக்கு மட்டுமே, பிரத்யேகமாக நடைபெறும் ஒரு உடலியக்க நிகழ்ச்சி. எப்படி நாமெல்லாரும், மல, ஜலம் கழிக்கிறோமோ அதுபோன்றே பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது ஒரு இயற்கை நிகழ்வு. என்ன, பொதுவாக பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சற்று சோர்வாக இருப்பார்கள். அந்த நாட்களில் பெண்கள் சோர்வடைவார்கள் என அறிந்திருந்த பெரியோர்கள் அதற்கேற்றவாறு அரைமண்டல விரதமிருக்க பெண்களை அனுமதித்திருக்கலாமே. அதைவிடுத்து தீட்டு என்று, இன்று முட்டாள் தனமாகத் தெரியும், ஒரு கருத்தாக்கத்தைக்கொண்டு பெண்களைத் தள்ளி வைப்பது மிகவும் தவறான செயல். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடு. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள் அறிவியல் விளக்கங்களையளித்து வக்காலத்து வாங்குவதும் தவறு.

ஏதோ, அந்தக்காலத்தில் நிலவிய கலாச்சார சூழலில், அவர்களுக்கிருந்த அறிவு வளர்ச்சியைக் கொண்டு சில விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதை இன்னும் பிடித்துக்கொண்டு தொங்குவது தான் தவறானது என்பதே என் வாதம். (அப்படியாயின், மல, ஜலம் கழிப்பதும் ஒரு தீட்டுதானே, 40 நாட்களும் மல, ஜலம் கழிக்காதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றிருந்தால் என்னவாகும்) அதைத்தான், என் முந்தைய பின்னூட்டத்திலும் 'மாற்றத்தால் ஆகியதே உலகம்' என்வே சபரி மையிலும் காலத்திற்கேற்ப மாற்றம் நிகழ வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியிருந்தேன்.
கடும் விரதம் அனுஷ்டித்துத்தான் ஐய்யப்பனை தரிசிக்கவேண்டும் என இருந்ததால் தான், அக்கோவில் மேல் பலருக்கும் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு, அக்கோவில் மிகவும் பிரபலமடைந்தது. (30 - 40 ஆண்டுகளுக்குள் தான் இது நடந்தது என நினைக்கிறேன்) மேலும் 'மகரஜோதி?!' போன்ற அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளும் கோவிலின் பிரபலத்திற்கு ஒரு காரணம். பல பழம்பெருங் கோவில்களைப் பின்னுக்குத்தள்ளி விட்டு ஐய்யப்பன் தனது 'மார்க்கெட்டிங் உத்தியால்' பிரபலமடைந்தது இங்ஙனமே. அதைத் தக்கவைத்துக் கொள்ளவே பின்வழி தரிசனமுறை போன்று விதிமுறைகளில் சில 'தள்ளுபடிகள்' செய்யப்பட்டிருக்கலாம். அது போன்றே மாதவிலக்கான பெண்களுக்கும் விதிமுறைகளில் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே என் அவா. மாற்றத்திற்குட்படாத எவையும் காலத்தால் அடித்துச் செல்லப்படும். இது மதம், ஆன்மீகம், அறிவியல், கலை, சினிமா, மருத்துவம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் பொருந்தும். மேலும் மக்களுக்குத்தான் கடவுளே தவிர, கடவுளுக்காக மக்களில்லை. ஒரு பொம்மலாட்டக்காரன் போல் மக்களை ஆட்டுவிக்கும் கடவுள் எனக்குத்தேவையில்லை என்பது என் கருத்து. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள், காலத்திற்குதவாத வழிமுறைகளை தூக்கிப்பிடிப்பதற்காக, அறிவியல் முலாம் பூசிய புதிய விளக்கங்களையளிப்பது தவறு என்கிறேன்.

எஸ். கே அவர்கள், கட்டுப்பெட்டித்தனங்களை தான் அப்படியே நம்புகிறேன், அவற்றை இன்றைய அறிவு கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருப்பாராயின் அவருடன் வாதம் புரிய வேண்டிய அவசியமெனக்கில்லை. ஆனால், அவர் கடவுளர் மேலிருக்கும் தீவிரப் பற்றுதலினால், காலாவதியாக வேண்டிய கருத்தாக்கங்களை தூக்கிப்பிடிக்கிறார் என நான் நம்புவதால் இப்பின்னூட்டம். 'Old habits die hard' தானே. எனக்கும், நான் நம்பும் சில விடயங்களில், பகுத்தறிவிற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான வழக்கங்களிருக்கலாம் (இருக்காது என நம்பினாலும்). சற்று கார சாராமாக இவ்விடயத்தை கையாண்டிருப்பதின் நோக்கம், சபரிமலையில் நடைபெறும் ஜனநாயகத் தன்மையற்ற போக்கைக் கண்டிக்கும் விததில்தானே தவிர, யாரையும் தனிப்பட்டமுறையில் புண்படுத்தும் நோக்கத்திலல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், நண்பர். திரு. வஜ்ரா சங்கர் அவர்கள் காரல் மார்க்ஸ் ஒரு Plagirist என போகிறபோக்கில் அவதூற்றை வீசிச் செல்கிறார். மாற்றமே உலகில் நிலையானது எனக் கீதையிலும் சொல்லியிருக்கலாம். மார்க்ஸ் கீதையையும் வாசித்திருந்திருக்கலாம், (எனக்குத் தெரியாது) அதனால் பாதிப்புமடைந்திருக்கலாம். அதற்காக அவர் காப்பியடித்தார் என்று அவதூறு சொல்லக்கூடாது. நான் கீதைக்கோ, மார்க்சுக்கோ காவடி தூக்கவில்லை. ஆயினும் திரு. சங்கர் அவர்கள் ஆதாரங்களைக் காட்டமுடியுமா? யாரும் இங்கு சுயம்பு இல்லை. இது கீதாசிரியருக்கும், மார்க்சுக்கும், ஏன் எனக்கும், உங்களுக்கும் பொருந்தும். நம்முடைய இன்றைய அறிவு, எண்ணங்கள் எல்லாம் நம்மூதாதையரிடமிருந்து வந்ததே. அதற்காக அவற்றையே பிடித்து தொங்கிக்கொண்டிராமல், அவற்றை மேம்படுத்த வேண்டுமெயன்றி, அவர்கள் சொன்னதே வேதம், (இங்கு வேதம் என்பதை கேள்வி கேட்காமல் நம்புவது என்ற பொருளில் கையாண்டுள்ளேன்) முக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை என நம்பக்கூடாது என்பதே என் கருத்து. அதுவே உண்மையான தத்துவ விசாரம். உண்மையான அறிவியலும், ஆன்மீகமும் போதிப்பது அதையே. நண்பர்கள் என்னைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கருத்தை வலியுறுத்தும் வேளையில், யார் மனத்தையவது நான் புண்படுத்தியிருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்.

Conflict of interest: எனக்கு கடவுள் நம்பிக்கையின் மேல் தற்போதைக்கு நம்பிக்கையில்லை.

குறிப்பு: அதற்காக யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம் என எச்சரிக்க வேண்டாம். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு போடும் எண்ணமுள்ளது.

சனி, 1 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம்

கடந்த சில நாட்களாக சபரிமலை ஐய்யப்பன் விக்கிரகத்தைத் தொட்டு நடிகை ஜெயமாலா வணங்கினார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. கோவிலில் 'பிரசன்னம்' பார்த்த பணிக்கர் (முழுப்பெயர் தெரியவில்லை), இதனால் ஐயப்பன் கோபமடைந்துள்ளதாகவும், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஒருபோதும் நடக்கவில்லையெனவும், பணிக்கர்தான் நடிகையுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்கிறார் எனவும் கோவில் நிர்வாகம் சொல்கிறது. இல்லை, கோவில் பூசாரிகள் தான் என்னை கர்ப்பக்கிருகத்திற்குள் அழைத்துச் சென்று ஐயப்ப விக்கிரகத்தைத் தொட்டு வணங்குவதற்கு அனுமதியளித்தார்கள் என நடிகையும் தெரிவித்துள்ளார்கள்.
இச்சர்ச்சையிலுள்ள பெரிய கூத்து என்னவெனில், இந்நிகழ்ச்சி ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது என பணிக்கர் தனது 'பிரசன்னத்தின்'(!?) மூலம் தற்போது கண்டுபிடித்துள்ளார். 1987-ல், தான் கருவறைக்குள் நுழைந்ததாக ஜெயமாலாவும் தெரிவித்துள்ளார். அப்படியாயின், பணிக்கரின் 'பிரசன்னத்தின்' படி, கோபமடைந்துள்ள ஐய்யப்பன் கடந்த 15 வருடங்களாக ஏன் தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை என்ற கேள்வியெழுகிறது (ஒருவேளை தவணை முறையில் வெளிக்காட்டுகிறாரோ - என் மனைவியின் பதில்) இந்நிகழ்ச்சி உண்மையில் நடந்ததோ நடக்கவில்லயோ அதுவல்ல நமது ஆதங்கம்; இச்சர்ச்சையின் மூலம் நம் சமூகத்தில் சில விரும்பத்தகாத மற்றும் விரும்பத்தகுந்த விளைவுகள் ஏற்படலாம். முதலில் விரும்பத்தகாத விளைவுகள் என்னவென்று பார்க்கலாம்.
இச்சர்ச்சையை, பரபரபிற்காக ஊடகங்கள் வெளியிடுவதால் மக்களுக்கு சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளில் மேலும் நம்பிக்கை பெருக வாய்ப்புள்ளது. இதனால் சோதிடர்களுக்கு, குறிப்பாக மலையாள சோதிடர்களுக்கு, அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், அதிகாரிகள் மற்றும் சாமானியர்கள் மூலம் செல்வம் கொழிக்கும். (தமிழன் மூலம் மலையாளிகளுக்கு செல்வம் சேர்வதை ஒரு தமிழனாக இருந்துகொண்டு நாம் எதிர்க்காமல் இருப்பதா?)
மேலும், பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைவது குறித்து கடுமையான சட்டதிட்டங்களை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும் என்கின்ற ரீதியில் பொதுவுடைமையாளர்கள் ஆட்சி செய்யும் கேரள மாநில அமைச்சரொருவர் பேசியுள்ளதால், ஏற்கனவே கட்டுப்பெட்டித்தனங்கள் நிறைந்த சபரிமலையில், மேலும் பல, காலத்திற்கு ஒவ்வாத, பெண்களுக்கெதிரான வழிமுறைகள் பின்பற்றப்படவும் வாய்ப்புண்டு.
சாதகமான விளைவு என்னவாகயிருக்கலாம் எனில், கர்நாடக சட்டசபையில் (ஒரு கன்னடப் பெண்ணை முன்வைத்து) நடைபெற்றுள்ள விவாதத்தைச் சொல்லலாம். இதன் எதிரொலியாக (அரசியல் நெருக்கடிகளால்), திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களும் நுழையலாம் என்று விதிமுறைகளைத் தளர்த்தவும் வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, சபரிமலை ஐய்யப்பன் கோவில் குறித்து பல மர்மங்கள் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன. அவையே இக்கோவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் எனில் அது மிகையன்று. 'மகர ஜோதி' போன்ற புதிர்கள் அவிழ்க்கப்பட்டாலும், ஐய்யப்பன் தொடர்ந்து தனது பிரபலத்தைத் தக்கவைத்துக் கொண்டுதானிருக்கிறார். பெண்களும் தனது கோவிலுக்குள் நுழையலாம் எனத் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்தாலும், மணிகண்டன் கோபப்படமாட்டார். மாறாக, சமூகத்தில் சரிபாதியுள்ள ஒரு இனம் தன்னைத் தரிசிப்பது குறித்து மகிழ்ச்சியடைவார்.