பக்கங்கள்

பிற்காலச் சோழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற்காலச் சோழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

பொன்னியின் செல்வன்



பொன்னியின் செல்வனை கடந்த சில  வருடங்களாகப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  ஆயினும் தள்ளிப்போய்க்கொண்டேயிருந்தது. பலமுறை புத்தகத் திருவிழாக்களில் வாங்கவேண்டும் என்று கையிலெடுத்து பின்னர் வேண்டாம் என்று வைத்திருக்கிறேன்.  மலிவு விலைப்பதிப்பில் கூட வாங்கவேண்டாம் என்று விட்டுவிட்டேன்.  கிட்டத்தட்ட  20 வருடங்களாக நவீன தமிழலக்கிய வாசகன் என்பதால் பொன்னியின் செல்வனை வாசிக்கவே கூடாது என்று சங்கல்பம் எல்லாம் செய்துவைத்திருந்த காலங்கள் உண்டு. ஆயினும் கடந்த சில வருடங்களில் இவ்வெண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்து வந்தது. என்ன இருந்தாலும் வெகுஜன திமிழின் முதன்மையான வரலாற்றுப் புதினம் என்பதால் படித்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணம் கருக்கொண்டு வலுத்ததே  இம்மாற்றத்திற்குக் காரணம். ஆகவே சில மாதங்களுக்கு முன்பு என் திறன் செல்பேசியில் மிகச் சொற்ப விலைக்கு நாவலின் ஐந்து பாகங்களையும் தரவிறக்கி வைத்திருந்தேன். அதை கடந்த சரஸ்வதி பூஜை விடுமுறையில் படித்து முடித்தேன்.

இது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கதையாக  வெகுசன வாசகர்களுக்காக எழுதபட்டது என்ற எண்ணத்துடனேயே படிக்கத் தொடங்கினேன். ஆயினும் வரலாற்றில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவன் ஆதலால் விரைவிலேயே நாவல் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.   கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் கொண்ட மொத்த நாவலின் கதை நடைபெறும் காலமே வெறும் 10 மாதங்களுக்குள்தான். வந்தியத்தேவன் வீராணம் ஏரியின் கரையில் குதிரையில் ஆடிப்பெருக்கன்று பிரவேசிப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிற்காலச் சோழர்களில் இரண்டாம் பராந்தகர் என்ற சுந்தர சோழனின் இறுதிக்காலத்தில் நடப்பதாக புனையப்பட்ட கதை. அவரது  மூத்தமகன் ஆதித்த  கரிகாலன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோவது, கரிகாலனின் சித்தப்பா மதுராந்தகன் எனும் உத்தம சோழன், பொன்னியின் செல்வன் என்ற அருண்மொழித்தேவர் அரசுரிமையை விட்டுக்கொடுத்ததால் (!?), இளவரசுப் பட்டம் ஏற்றுக்கொள்வது வரை உள்ள காலப்பகுதியே நாவலின் கதைக்களம். பிற்காலச் சோழ வரலாற்றில் இக்காலகட்டம் இன்னும் தெளிவில்லாதகவே உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆகவே கல்கி இக்காலகட்டத்தையே தனது புனைவுக்கு எடுத்துக்கொண்டதில் அவரது மேதைமை உள்ளது. ஆயினும் அதை அவர் எவ்வளவு தூரம் படைப்பூக்கத்துடன் (வெகுஜன நோக்கில்) புனைவாக்கியிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

நாவலின் முதல்பகுதி மிகுந்த சுவராசியமாக செல்கிறது. ஏற்கனவே சற்று அவநம்பிக்கையுடன் தொடங்கியதால் ஒருவேளை நவீன தமிழிலக்கியவாதிகள் பொன்னியின் செல்வனை இலக்கியமாக அங்கீகரிக்க மறுத்து தவறு செய்கிறார்களோ என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. அதற்கான தடயங்கள் சில முதல் பகுதியில் ஆங்காங்கே தென்பட்டன. பழுவேட்டரையரின் படைவீரர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களும், வேளக்காரப் படையினர் எளிய மக்களிடம் வம்புகள் புரிவதாக புனையப்பட்டுள்ள பகுதிகளும் இன்னும் சில இடங்களிலும் நவீன தமிழிலக்கியத்தின் தடங்களை ஆசிரியர் நினைவுறுத்துகிறார். ஆயினும் போகப்போக ஆசிரியரின் படைப்பூக்கம் வெறும் கேளிக்கை எழுத்தாகப் பல்லிளிக்கிறது. நாவலின் அய்ந்தாம் பாகம் மிகவும் அற்பத்தனமாக உள்ளது. ஒருவகையில் இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்களின்  மூலவித்து பொன்னியின் செல்வன் நாவல் என்றால் அது மிகையில்லை. நாவலை எப்பாடுபட்டாகிலும் இழுக்கவேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணத்தால் அருவெறுப்பின் உச்சத்துக்கே செல்கிறார் கல்கி. சில நேரங்களில் சினிமா பார்க்க திரையரங்கு சென்று வேறுவழியில்லாமல் அவலமான சினிமாவின் கடைசி பாகம் வரை இருந்து பார்த்துவிட்டு வருவோமே அதுபோல் எப்படித்தான் இந்நாவலை முடிக்கிறார் கல்கி என்ற தவறான ஆர்வத்துடனே இந்நாவலை படித்து முடித்தேன்.

வெகுஜன வரலாற்று புனைவுகளுக்கும் ஒரு தரம் வேண்டும் அல்லவா. பொன்னியின் செல்வன் அத்தரத்தை பல இடங்களில் தவறவிடுகிறது. ஒருவேளை தொடர்கதையாக இல்லாமல் ஒரு முழுமையான நாவலாக கல்கி இதை எழுதியிருந்தால் அத்தரம் கூடிவந்திருக்கலாம். 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்


பிற்காலச் சோழர்களின் மூன்று பெருங் கலைக்கோயில்களில் ஒன்றான தாராசுரம் கோயிலை நேற்று ஒருவழியாக பார்த்தேவிட்டேன். தஞ்சைப் பெரியகோவிலையும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலையும் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. இது மட்டும் தட்டிப்போய்க்கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் காரைக்காலில் அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு கும்பகோணம் வரும்வழியில் என் புதிய திறன்பேசியை தொலைத்துவிட்டேன். அது தொலைந்ததைவிட அதில் ஏற்றப்பட்டிருந்த தகவல்களின் பாதுக்காப்பு என்னை நிம்மதி இழக்கச் செய்ததால் தாரசுரம் செல்லாமலேயே சென்னை வந்துவிட்டேன். இவ்வாண்டு நேற்று மீண்டும் காரைக்கால் சென்றிருந்தேன். அங்கிருந்து மதியம் பேருந்து ஏறி கும்பகோணம் வரும்போது அந்திசாயும் நேரமாகிவிட்டது. நான் ஏறிய பேருந்து 60 கி. மீட்டருக்கு இரண்டரை மணிநேரம் எடுத்துக்கொண்டது. சென்ற ஆண்டும் இவ்வாறே ஆனது. இதற்கு நான் மயிலாடுதுறை வழியாகவே கும்பகோணம் சென்றிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் காரைக்கால் – கும்பகோணம் வழித்தடத்தில் பேருந்துகளும் குறைவு. புதுச்சேரி யூனியன், நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் இறுதியாக தஞ்சை மாவட்டம் என நான்கு அரச நிர்வாக பகுதிகளை கடந்து வரவேண்டியதாகிவிட்டது. அரசாலாறு, நாட்டாறு மேலும் அவற்றின் கால்வாய்களில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. பல இடங்களில் நெல் வயல்கள் செழிப்புற்றிருந்தன. பனங்காடை (Indian Roller), பஞ்சுருட்டான் (Green Bee eater), கழுகு என பறவைகள் பலவற்றை வழியில் பார்க்க நேர்ந்தது. ஆயினும் மனம் தாராசுரத்திலேயே லயித்திருந்ததாலும், தொடர்ந்த பயணங்களால் தூக்கம் தொலைந்த சோர்வாலும் மனம் இவற்றில் ஈடுபடவில்லை. ஒருவழியாக கும்பகோனத்தை மாலை 6 மணிக்கு பேருந்து அடைந்தது. ஓட்டமும் நடையுமாக  எதிரிலிருக்கும் நகரப் பேருந்து நிலையத்தை அடைந்து கிளம்பத் தயாரக இருந்த தாராசுரம் பேருந்தை பிடித்தேன். தாராசுரத்தை அடையும் போது மாலை 6.15. நடத்துனர் என்னை கோயிலினருகிலேயே இறக்கிவிட்டார். 






முதல்பார்வையில் கோயில் என்னை ஈர்க்கவில்லை. தஞ்சை, மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நிகரான பிரம்மாண்ட விமானம் தாராசுர ஐராவதீஸ்வரருக்கு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பிரம்மாண்டம் நம்மை முதல் பார்வையிலேயே கட்டிப்போட்டுவிடும். எனது முதல் DSLR கேமராவில் நான் படம் எடுக்கும் முதல் பழங்கால கோயில் இதுவே. நமது வரலாற்றுத் தொண்மை வாய்ந்த கோயில்களை புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதும் நான் DSLR வாங்க முதன்மையான காரனங்களில் ஒன்று. கேமாராவை வெளியில் எடுக்கும்போது கிட்டத்தட்ட இரவாகிவிட்டது. மஞ்சள் ஒளி விளக்குகளால் கோயில் அதன் அழகின் வேறொரு பரிமாணத்தை காட்டியது. கோனார்க் சூரியன் கோயிலைவிட சிறிய அளவிலான தேர்ச்சக்கரங்கள் கொண்ட முகப்பு மண்டபம். தேரை கிழக்கு மேற்கு பகுதிகளில் யானைகளும், வடபுறம் குதிரைகளும் இழுக்கும்படியான சிற்ப வேலைப்பாடுகள். குதிரைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. முகப்பு மண்டபத்தின் தூண்களின் அடிப்பகுதிகளில் யாளிகள் உள்ளன. ஒருவகையில் யாளிகளே தூண்களான மண்டபம். மற்ற கோயில்களில் யாளிகள் தூண்களின் மேற்புறத்தில் தனியாக நீட்டிக்கொண்டிருக்குமாறு செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு யாளிகளின் தலைப்படுதியே தூண்களாக மாற்றப்படிருக்கிறது. எந்த ஒரு குறிக்கோளுமில்லாமல் பார்க்கும் சிற்பங்களையெல்லாம் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எந்தச் சிற்பத்தையும் உற்று நோக்கி அறிய முற்படும் முன் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையே மேலோங்கி இருந்தது. இரவாகிவிட்டதும், கோயில் நடை சாத்திவிடுவார்களே என்ற அச்சமும், அவற்றை எல்லாம் விட இந்த சிற்பங்களை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது என்பதும் இதற்குக் காரணம். இந்த நுண்ணிய சிற்பங்களே இந்தக்கோயிலை தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரக் கோயில்களிலிருந்து வேறுபடுத்துகிண்றன. இவ்வாளவு நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட தூண்கள் மற்ற இரு புகழ்பெற்ற பிற்கால சோழர்களின் கலைப்படப்புகளில் இல்லை என்றே நினைக்கிறேன். 




கோயிலின் வெளிப்புறகாரத்தில் பாவப்பட்டுள்ள கருங்கற்களில் பல உடைந்த சிற்ப வேலைப்பாடு கொண்ட தூண்களின் பகுதிகளாக உள்ளன. இந்தக் கோயிலை சமீபகாலத்தில் சீரமைத்தபோது பொருத்தமுடியாத தூண்களை இவ்வாறு பாவுகற்களாக பயன்படுத்திக் கொண்டனர் போலும். கோயிலின் ஈசான மூலையில் பூட்டப்படிருந்தஒரு மண்டபம் உள்ளது. அருகிலிருந்த காவலாளி இதில் ஓவியங்கள் உள்ளன பார்க்கிறீர்களா என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டார். சரி என்றவுடன் திறந்து உள்ளே கூட்டிப்போனார். டார்ச் வெளிச்சத்தில் கோயிலின் சிதிலமைடைந்த சிற்பங்களை காட்டி கோயில் வரலாற்றை அவரது ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்கினார். தமிழிலேயே சொல்லுங்கள் என்றதும், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தாராசுரத்திலிருந்து டெல்லி என அதிகாரம் மாறியது என ஏதேதோ முன்னுக்குப் பின் முரணாக அவரது ஆங்கிலத்திலேயே பேசினார். அந்தக்கால தமிழர்கள் இவ்வாறு ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றார். இப்போது இந்த இடம் பவர் சோப்புக்காரகளுக்கு பட்டா போட்டுவிடப்பட்டுள்ளது, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது என்று உளற ஆரம்பித்துவிட்டார். அவரிடமிருந்து தப்பித்துவர பெரும்பாடாகிவிட்டது. பாவம் என்ன மனக்கோளாறோ அவருக்கு. பேச்சின் நடுவே லட்சுமணன் என்று அடிக்கடி சொன்னார். அவரது பெயரோ என்னமோ!











கோயிலின் அர்த்த மண்டபம்(?) மிகச்சாதாரணமாக இருக்கிறது. முகப்பு மண்டபதிலுள்ள தூண் சிற்பங்கள் இங்கு இல்லை. கேமாராவுடன் தயங்கி நின்ற என்னை உள்ளே வாங்க என்று குருக்கள் அழைத்தார். லிங்கத்தை கர்ப்பக்கிருகம் அருகில் சென்று பார்க்கலாம். லிங்கம் கங்கை கொண்ட சோழபுரத்தை விட சிறியதுதானே என்றதற்கு இது நான்காவது பெரிய ஆவுடை என்று குருக்கள் சொன்னார். முதலில் கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாவது தஞ்சை பெரியகோயில், மூன்றாவது ஏதோ ஒரு கோயில் பெயர் சொன்னார் மறந்துவிட்டேன். ஆவுடைக்கு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கினார். அவரது மன திருப்திக்காக நெற்றியில் இட்டுக்கொண்டேன். சென்னை போரூர் பகுதியிலிருந்து வருகிறேன் என்றதும் தன் சித்தப்பா மற்றும் பல உறவினர்கள் அங்கு இருப்பதாகச் சொன்னார். பெண் எடுத்தது மாங்காடு என்றார். 250 வருடங்களுக்கு முன்பு எங்களது பூர்வீகமும் மாங்காடுதான் என்றேன் அவரிடம். 30 களில் இருக்கும் அழகிய குருக்கள். வெளியே தெற்கு பார்த்தவாறு பெரிய நாயகி அம்மன் கருவறை. அங்கிருந்த குருக்களிடம் மூன்று பிற்கால சோழ்ர்கால கோயில்களிலும் அம்மன் பெயரும் பெரியநாயகிதானே என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கருவறை மூடியிருந்தாலும் கோயிலின் பிறபகுதிகளை நீங்கள் எப்போது வந்தாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றார். கோயிலை விட்டு வெளிவந்ததும் வடபுறம் மற்றொரு தனிக்கோயில் இருக்கக் கண்டு அங்குசென்றேன். அதற்குள் கோயில் குருக்களும், காவலாளியும் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தனர். இது அம்மன் கோயில் என்றும், அம்மன் பெயர் தெய்வநாயகி என்றும், இதுவே பிரதான அம்மன் என்றும் சொன்னார்.