புதன், 21 பிப்ரவரி, 2007

சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ்

நேற்று சென்னை புரசைவாக்கத்திலுள்ள ரிலையன்ஸ் சில்லரை விற்பனைக் கடைக்குச் சென்றிருந்தேன். வெளியில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அட்டகாசமாகயிருந்தது. ஏதோ திருவிழா பார்க்க வந்ததுமாதிரி ஒரே கூட்டம் (அடியேனையும் சேர்த்துத்தான்); தள்ளூ முள்ளு நடக்காதகுறைதான். கடை மிகச் சிறியது. நம்ம ஸ்பென்ஸர், நீல்கிரீஸ், திரிநேத்ரா அளவுக்குக்கூட இல்லை. ஒருவேளை இத்துறையில் ஆழம் பார்த்தபின்பு கடையை விரிவாக்குவார்களோ என்னவோ?

நான் முதலில் இது காய்கறிகள் மட்டும் விற்கும் கடை என நினைத்தேன். பெயர்ப்பலகையும் அவ்வாறே நினைக்கத்தூண்டியது. (Relaince fresh) ஆயினும் பலசரக்குக் கடைமாதிரி மற்ற மளிகைச் சாமான்களும் இருந்த்தன. ஆனால் காய்கறிகள்தான் நிறைய இடங்களை அடைத்திருந்தன. தரம் ஒன்றும் நம்மூர் கோவை பழமுதிர் நிலையம் போல் இல்லை. (ஒரு வேளை நேற்று அவ்வாறில்லாமலிருந்திருக்கலாம்!) ஆனால் ஒருவிசயத்தில் நான் பெரிய வேறுபாட்டைப் பார்த்தேன். அது சில்லரை வணிகமும் தொழில்முறை நேர்த்தியுடன் (Professionalism) செய்யப்படலாம் என்பதே. ரிலையன்ஸ் மற்ற நிறுவனங்களைவிட இதில் சற்று நேர்த்தியுடன் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு சிறு உதாரணம்; பணம் கட்ட வரிசையில் நிற்பதற்கு ஏதோ விமான நிலையத்தில் immigration counter ல் நிற்பது போன்ற நேர்த்தியுடன் இருந்தது.

இனிமேல் சில்லரை வணிகமும் இந்தியாவில் பணம் கொழிக்கும் துறையாகவும், வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கும் துறையாகவும் இருக்கும் எனக் கூறுகிறார்கள். மேலும் உலகின் வேறு பல பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் இத்துறையில் கால்பதிக்க உள்ளார்கள் என்ற செய்தியும் அடிபடுகிறது. இத்தகைய பெரிய நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் (Contract farming) செய்யப்பட்டு மொத்தமாக அவை கொள்முதல் செய்யப்படும் என்று படித்திருக்கிறேன். இதனால் இடைத்தரகர் இல்லாமல் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆயினும் இந்திறுவனங்களின் காலகாலமாக இத்துறையிலுள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இன்னும் பெரும்பான்மை இந்தியர்கள் தமக்குத் தெரிந்த சில்லரை வணிகர்களையே நாடுவர்கள் என நினைக்கிறேன்.

வியாழன், 15 பிப்ரவரி, 2007

மார்க்சியம், பின் நவீனத்துவம், திராவிடம், பிராமணீய எதிர்ப்பு, தயிர்சாதம் மற்றும் வரவனையாண்

நேற்று மதியம் சாப்பிட நான் மயிலாப்பூர் 'சைத்ரா' உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு இன்ப அதிர்ச்சியாக 'கொல சாமி' பால பாரதியையும், 'பின் நவீனத்துவ புகழ்' வரவனையாண் @ செந்திலையும் பார்த்தேன். வரவனையாண் தயிர்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுவும் இரண்டு பிளேட்.

இதைப் பார்த்தவுடன் எனது கு(சும்பு)று மதிக்கு ஒரு ஐடியா தோன்றியது. டக்கென்று பாலாவிடம் சொன்னேன். உடனே பாலாவும் அவரது கேமரா செல்பேசியில் படங்களைச் சுட்டுத் தள்ளினார். அந்தப் படங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள். என்னடா அதி தீவிர பிராமணீய எதிர்ப்பாளர், பிராமணியத்தின் குறியீடுகளில் ஒன்றாக பரவலாக நம்பப்படுகிற தயிர் சாதத்தைச் சாப்பிடுகிறாரே என்ற ஒரு சந்தேகம். மக்களே நீங்க கொஞ்சம் யோசிங்க.

கேட்டால் மனுஷன் எனக்கு GERD (Gastroesophageal reflux disorder) அதனால்தான் தயிர்சாதம் சாப்பிடுகிறேன் என ஜல்லியடிக்கிறார்.

கொசுறு தகவல்: புளித்த ஏப்பம், பசியின்மை, நெஞ்சு எரிச்சல், இரைப்பை மற்றும் முன்குடல் புண் போன்ற நோய்களுக்குத் தயிர்சாதம்தான் சிறந்தது எனப் பலர் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள், வரவையாணைப்போல்.

வியாழன், 8 பிப்ரவரி, 2007

ஜவுளிக்கடையும், பெண்களும்

எனக்குப் பெண்களிடம் பிடித்த விசயங்களில் ஒன்று அவர்களது முடிவெடுக்கும் திறன். ஒரு சராசரி ஆணைவிட சராசரிப் பெண் மிக விரைவாக முடிவெடுத்துவிடுவார். ஆயினும், அவர்கள் முடிவெடுப்பதில் திணறும் இடம் தங்களுக்கான துணியை (துணையை அல்ல) தெரிந்தெடுப்பதில்தான் உள்ளது. பெண்களுக்குப் பொதுவாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது டிரஸ்ஸிங் சென்ஸ் அதிகம். மேலும் அவர்களுக்குத் தமக்குப்பிடித்த (அது கலர்களிலோ அல்லது டிசைன்களிலோ) துணிவகைகளைத் தேர்ந்தெடுப்பதில் சாய்ஸும் அதிகம். ஆண்களைப்போல் ஒரு 10 - 12 கலர் வகைகளோ அல்லது கட்டம், கோடு, பிளைன் என்றோ ஒரு வரம்பிற்குட்பட்ட சாய்ஸுகளோ அல்ல; பெண்களுக்கு இவ்விசயத்தில் எண்ணிலடங்கா சாய்ஸ் இருக்கிறது. ஆயினும் பெரும்பாலான பெண்கள் துணிவாங்க ஜவுளிக்கடைக்குப் போனால் அக்கடையையே ஒரு அலசு அலசி வந்துவிடுகிறார்கள். இதுகுறித்து ஆனந்த விகடன் போன்றவற்றில் அடிக்கடி ஜோக்ஸ் வருவதுண்டு. சென்னையில் நல்லி சில்க்ஸ் போன்ற சில கடைகளில் பெண்களுடன் வரும் சில துர்பாக்கியசாலி கணவன்மார்கள் (என்னையும் சேர்த்துத்தான்), அப்பாக்கள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கென்றே தனியாக இருக்கைகள் அமைத்துள்ளார்கள். மேலும் குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பராமரிப்பதற்கென்றே தனியாக கிரச்சும் வைக்கப்போவதாக காற்றுவாக்கில் செய்தி வந்தது.

எனக்கும், என் சகதர்மிணிக்கும் பொதுவாக ஊடல் நடைபெறுவதற்கு பின்ணனிக்காரணம் துணி தேர்ந்தெடுக்கும் விவகாரமாகவேயிருக்கும். நாங்களிருவரும் துணிவாங்கக் கடைக்குப் போனால், குறிப்பாக அவருக்குத் துணியெடுக்க, அன்று எங்களிருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே நான் பெரும்பாலும் அவர் துணி தேர்ந்தெடுக்கும்போது சற்று ஓரமாக ஒதுங்கிக் கொள்வேன். (சில சமயம் பிகர் பார்ப்பதும் உண்டு என்பது வேறு விசயம்)

அதேபோல்தான் என் அம்மாவும். சிறுவயதில் அவருடன் துணிக்கடைக்குச் சென்றால் அவர் எந்தச் சேலையைக் காண்பித்து இது நல்லாயிருக்காடா என்றாலும், நான் கண்ணை மூடிக்கொண்டு நல்லாயிருக்குதும்மா என்று சொல்வேன். பிற்பாடு என் இந்த உத்தியைக் கண்டுபிடித்துக் கொண்ட என் அம்மா அதன்பின்பு என்னை துணிக்கடைக்கு அழைத்துச் செல்வதேயில்லை.

பெரும்பாலான பெண்கள் இவ்விசயத்தில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைந்திடுவதில்லை என்பதே உண்மை. பாவம், பெண்கள் பகுதியில் வேலை பார்க்கும் கடை ஊழியர்கள். வேலை செய்பவர் ஒரு துணியை எடுத்துப் போடும்போதே அப்பெண்ணின் கவனம் அடுத்த ரேக்கிலுள்ள மற்றொரு சேலையிலிருக்கும். கொடுமை என்னவென்றால் அப்பெண்தான் முதலில் அச்சேலையை எடுத்துக்காண்பிக்குமாறு கேட்டிருப்பார். ஒரு மணித்துளியில் அப்பெண்ணின் மனம் கங்காருப் பாய்ச்சல் பாய்ந்திருக்கும்; அல்லது மற்றொரு பெண் தேர்ந்தெடுக்கும் சேலையில் அவரது கவனம் குவிந்திருக்கும்.

ஒருவழியாக சேலை தேர்ந்தெடுக்கும் படலம் முடிந்து அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே கடைக்காரன் பளிச்சுன்னு லைட்டப் போட்டு ஏமாத்திட்டான், அங்க பார்த்தப்போ வேறுமாதிரி கலர்ல தெரிஞ்சிது, இப்போ வேற கலர்மாதிரியில்ல இருக்கு என்றோ அல்லது இந்தக் கலர் புடவை என்கிட்ட ஏற்கனவேயிருக்கு என்றோ (பெரும்பாலான பெண்கள் நூற்றுக்கணக்கான புடவைகள் வைத்திருப்பர்; ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தன்னிடம் முந்நூற்றிற்கும் அதிகப் புடவைகள் இருப்பதாக ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.) சொல்லி நாளைக்கு இந்தச் சேலையை மாற்ற வேண்டும் என்பர்.
எனக்குத் தெரிந்த பெண்களிடம் (மனைவி, அம்மா, தமக்கைகள், தோழிகள் உட்பட), பெண்களின் இச்செயலுக்கு சரியான விளக்கம் தரத் தெரியவில்லை. ஆகவே பெண் வலைப்பதிவாளர்களே (ஆண் வலைப்பதிவர்களும் சொல்லலாங்கோய்) இதற்கான உளவியல் காரணம் ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஹி.. ஹி... J J J

கொசுறு தகவல்: நேற்றுமாலை என் அம்மாவுடன் ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தேன்.

புதன், 7 பிப்ரவரி, 2007

என் நவீனத்துவ மனம்

சென்றவாரம் என் ஒன்றுவிட்ட அண்ணன் திருமணத்திற்காகத் திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு, அதற்கடுத்த நாள் நடைபெறும் என் நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி செல்ல திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அன்று திருமணநாள் என்பதால் பெருங்கூட்டமே வெவ்வேறு ஊர்களுக்கான பேருந்துகளை எதிர்நோக்கி காத்திருந்தது. அப்போது சிவகாசி மற்றும் இராசபாளையம் செல்லும் இரு பேருந்துகள் வந்தன.

அந்நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க இரு பெண்மணிகள் என்னிடம் வந்து கள்ளிக்குடி செல்ல எந்தப்பேருந்தில் ஏறனும்யா எனக்கேட்டார்கள். நான் ஒரு பஸ் சிவகாசிக்கும், இன்னொன்று ராசபாளையத்திற்கும் செல்கிறது, நீங்கள் எந்த ஊர் செல்லும் பஸ்ஸில் ஏறவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் இதில் எந்த பஸ் விருதுநகர் வழியாகச் செல்லுதையா எனக்கேட்டார்கள். சிவகாசி பஸ் போகும், ஆனால் அது உங்க ஊரில் நிற்குமா என எனக்குத் தெரியாது எனக் கூறினேன். இதற்குள் இரண்டு பேருந்துமே கிளம்புவதற்கு தயாராகி விட்டிருந்தன. அப்போது என் அருகில் நின்றிருந்த 25 வயதுள்ள லுங்கியணிந்த வாலிபர் ஒருவர் பஸ்ஸில் இருந்த ஒரு பயணியிடம் அண்ணே இந்த பஸ் கள்ளிக்குடியில் நிக்குமாண்ணே எனக்கேட்டார். அவர் ஆமாண்ணு சொன்னதுதான் தாமதம், புறப்பட்டுக்கொண்டிருந்த பஸ்ஸின் பக்கவாட்டில் கையால் பலமாகத் தட்டி பேருந்தை நிறுத்தச் சொன்னார். பேருந்து நிற்கும் சமிஞ்சைகள் தெரிந்ததும் அப்பெண்களைப் பார்த்து நீ ஏறுத்தா எனச் சொல்லி ஏற்றிவிட்டார்.

எனக்கு இச்சம்பவம் சில சிந்தனைகளை விதைத்துவிட்டது. நானும் அந்த வாலிபர் செய்தமாதிரி செய்திருக்கலாம்தான் ஆனால் எனது இயல்பான சோம்பேறித்தனதையும் மீறி என்னை அதைச்செய்யவிடாமல் தடுத்தது எனது நவீனத்துவ மோஸ்தர் முகம்தான் என்று உணர்கிறேன். பொதுவாகவே நான் கத்திப்பேசும் இயல்பினன் அல்ல. மேலும் பொது இடத்தில் சத்தமாகப் பேசுவதை ஒரு அநாகரிகமாகக் கருதுபவன். அந்த இளைஞன் செய்ததுமாதிரி சற்று உரக்கப்பேசி எல்லோர் கவனமும் ஒரு மணித்துளி என்மீது விழுவதை தவிர்க்கும் முகமாகவே அப்பெண்களுக்கு உதவாமல் வாளா நின்றிருந்தேன். அந்நேரத்தில் எனது நவீன மோஸ்தர் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு அப்பெண்களுக்கு உதவுவதுதான் மனிதநேயமாகயிருந்திருக்க முடியும். ஆனால் என் செய்வது, நவீனத்துவம் சில நேரங்களில் இவ்வாறு மனித நேயத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2007

அலட்சியம் + பொறுப்பின்மை + அராஜகம் = இருசக்கர வாகன ஓட்டிகள்

சென்னையில் (இந்தியா முழுதும் பரவலாக) தற்போது இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பன் மடங்கு அதிகமாகிவிட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதும்?!, உற்பத்தியாளர்களுக்கிடையிலான கடுமையான போட்டியும் அவர்கள் விளம்பரப்படுத்துவதில் காட்டும் தீவிரமும், வங்கிகள் கொடுக்கும் கடனும், இரு சக்கர வாகனங்களின் அதீதப் பெருக்கத்திற்குக் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.

அதனால் மற்றொரு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் இவ்விரு சக்கர வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையும், அலட்சியமும், அராஜகமும் மிகவும் அதிகமாகிக் கொண்டேவருகின்றன. சாலையில் வண்டியை ஓட்டும்போது மட்டுமல்ல, பார்க்கிங் பண்ணும்போதும் அவர்கள் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தானா பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.

என் புரிதலில் அவர்களே, ஆட்டோ, பேருந்து ஓட்டுனர்களைவிடவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல்லாதது, ஒரு வழிப்பாதையிலும் (ஓரமாக) செல்வது, ஒலிப்பானை தேவையில்லாமல் பயன்படுத்துவது, சிக்னல் விழுந்தபின்பும் கடப்பது, நிறுத்துக்கோட்டைத் தாண்டி நிறுத்துவது, சாலையின் வலது பக்கமாக வண்டியை ஓட்டிக்கொண்டு செல்வது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோன்றே கண்ட இடங்களிலும் பார்க்கிங் செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சகஜம். சிலர் கிட்டத்தட்ட சாலையின் நடுவிலேயே பார்க் செய்து நிறுத்துவர். நமக்கு முன்னால் நிறைய வண்டி இருக்கிறதே நாம் இப்படி நிறுத்தினால் பிறர் எப்படி வண்டியை எடுப்பார்கள் என்ற ஓர்மை இல்லாமலேயே தன் வண்டியை அடைத்துக்கொண்டு நிறுத்துவதும் பரவலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை பக்கவாட்டு ஸ்டாண்டு போடுவது அலட்சியம், சோம்பேறித்தனத்தின் மொத்தக் குறியீடு என்பேன். சில நேரங்களில் பக்கவாட்டு ஸ்டாண்டு ஏன் தான் வைக்கிறார்களோ என்று தோன்றுவதும் உண்டு.

நானும் சிலமுறை இவற்றில் சிலவற்றை இடையூறு என்று அறியாமலும் (சில சமயங்களில் அறிந்தும் - கும்பல் சைக்காலஜி) செய்திருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமென நடந்தால் பரவாயில்லை. இப்பிரச்சனைகள் ஒரு விதிவிலக்காக அன்றி விதியாகவே மாறிவரும் சூழல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அவலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் ஏற்படுத்துகின்றர் (ஏற்படுத்துகின்றோம்). ஆகவே மகா ஜனங்களே, (இதைப் படிக்கும் பெரும்பாலோர் இருசக்கர வாகனம் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும், கும்பல் சைக்காலஜியில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்திலும்,) இளைஞர்களாகிய நாம் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வோமாக