புதன், 7 பிப்ரவரி, 2007

என் நவீனத்துவ மனம்

சென்றவாரம் என் ஒன்றுவிட்ட அண்ணன் திருமணத்திற்காகத் திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு, அதற்கடுத்த நாள் நடைபெறும் என் நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி செல்ல திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அன்று திருமணநாள் என்பதால் பெருங்கூட்டமே வெவ்வேறு ஊர்களுக்கான பேருந்துகளை எதிர்நோக்கி காத்திருந்தது. அப்போது சிவகாசி மற்றும் இராசபாளையம் செல்லும் இரு பேருந்துகள் வந்தன.

அந்நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க இரு பெண்மணிகள் என்னிடம் வந்து கள்ளிக்குடி செல்ல எந்தப்பேருந்தில் ஏறனும்யா எனக்கேட்டார்கள். நான் ஒரு பஸ் சிவகாசிக்கும், இன்னொன்று ராசபாளையத்திற்கும் செல்கிறது, நீங்கள் எந்த ஊர் செல்லும் பஸ்ஸில் ஏறவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் இதில் எந்த பஸ் விருதுநகர் வழியாகச் செல்லுதையா எனக்கேட்டார்கள். சிவகாசி பஸ் போகும், ஆனால் அது உங்க ஊரில் நிற்குமா என எனக்குத் தெரியாது எனக் கூறினேன். இதற்குள் இரண்டு பேருந்துமே கிளம்புவதற்கு தயாராகி விட்டிருந்தன. அப்போது என் அருகில் நின்றிருந்த 25 வயதுள்ள லுங்கியணிந்த வாலிபர் ஒருவர் பஸ்ஸில் இருந்த ஒரு பயணியிடம் அண்ணே இந்த பஸ் கள்ளிக்குடியில் நிக்குமாண்ணே எனக்கேட்டார். அவர் ஆமாண்ணு சொன்னதுதான் தாமதம், புறப்பட்டுக்கொண்டிருந்த பஸ்ஸின் பக்கவாட்டில் கையால் பலமாகத் தட்டி பேருந்தை நிறுத்தச் சொன்னார். பேருந்து நிற்கும் சமிஞ்சைகள் தெரிந்ததும் அப்பெண்களைப் பார்த்து நீ ஏறுத்தா எனச் சொல்லி ஏற்றிவிட்டார்.

எனக்கு இச்சம்பவம் சில சிந்தனைகளை விதைத்துவிட்டது. நானும் அந்த வாலிபர் செய்தமாதிரி செய்திருக்கலாம்தான் ஆனால் எனது இயல்பான சோம்பேறித்தனதையும் மீறி என்னை அதைச்செய்யவிடாமல் தடுத்தது எனது நவீனத்துவ மோஸ்தர் முகம்தான் என்று உணர்கிறேன். பொதுவாகவே நான் கத்திப்பேசும் இயல்பினன் அல்ல. மேலும் பொது இடத்தில் சத்தமாகப் பேசுவதை ஒரு அநாகரிகமாகக் கருதுபவன். அந்த இளைஞன் செய்ததுமாதிரி சற்று உரக்கப்பேசி எல்லோர் கவனமும் ஒரு மணித்துளி என்மீது விழுவதை தவிர்க்கும் முகமாகவே அப்பெண்களுக்கு உதவாமல் வாளா நின்றிருந்தேன். அந்நேரத்தில் எனது நவீன மோஸ்தர் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு அப்பெண்களுக்கு உதவுவதுதான் மனிதநேயமாகயிருந்திருக்க முடியும். ஆனால் என் செய்வது, நவீனத்துவம் சில நேரங்களில் இவ்வாறு மனித நேயத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.