திங்கள், 13 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில்...

இன்று மதியம் (12/01/2014) சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். நண்பர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே வந்திருந்தார்கள். பாஸ்டனிலிருந்து வந்திருக்கும் அர்விந்தை நான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். சீர்மை குறுநாவலின் புகழால் இப்போது ’சீர்மை அரவிந்த்’என அழைக்கப்படுகின்றார். சீனிவாசன் தம்பதியினர் தன்னுடய மகன்களோடு வந்திருந்தனர். அவர்களுடன் செந்தில், சுரேஷ்பாபு, சுனில்கிருஷ்ணன், வினோத் மற்றும் நான் இன்று புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். பின்னர் ஜாஜா, சாம்ராஜ், ஜடாயு, மணிகண்டன், எழுத்து பிரசுரம் அலெக்ஸ், அசோக்குமார், கவிஞர் இசை, விழியன் என ஏதேச்சையான பல சந்திப்புகள் அரங்கேறின. இதற்கிடையில் எனக்கு மட்டுமே தெரிந்த வேறு சில நண்பர்களையும் தற்செயலாக சந்தித்தேன். அவர்களுள் நிழல் திருநாவுக்கரசு அவர்களை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். இயல்பாகவே இலக்கியவட்டம் நாராயணன் குறித்தும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டோம். பின்னர் வெளியேறும் போது இலக்கியவட்டம் மூலம் அறிமுகமான கவிஞர் வெண்ணிலாவையும்  பார்த்தேன். தனது புத்தக வெளியீடு இன்று நடைபெறுவதால் அந்நிகழ்விற்கு வருமாறு அழைத்தார். நேரமாகிவிட்டதால் கலந்துகொள்ள இயலாது என மறுத்துவிட்டேன்.


படம் உதவி: ஜடாயு  

இந்தமுறை எனது தேர்வு பெரும்பாலும் தன் வரலாற்று நூல்கள். உ.வே.சா, நெ.து. சுந்தரவடிவேலு, பம்மல் சம்பந்த முதலியார், தி.சே.செள.ராஜன் போன்றவர்களின் சுயசரிதகளை வாங்கினேன். இவைகள் அனைத்துமே ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் சுந்தர ராமசாமி பரிந்துரைத்த நூல்களாக தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறேன். கு. அழகிரிசாமி கதைகள் சாகித்திய அகாடமியில் சகாய விலைக்குக் கிடைத்தது. வெண்முரசின் பாதிப்பினால் பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், ராஜாஜியின் வியாசர் விருந்து போன்றவற்றை வாங்கினேன். ஜடாயுவின் பரிந்துரையின் பேரில் சுவாமி விவேகானந்தரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் நூல் ஒன்றை ராமகிருஷ்ண மடம் புத்தக ஸ்டாலில் வாங்கிக்கொண்டேன். கிழக்கு பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னாவை பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாங்கிய ஜெயமோகனின் இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் நூலில் பக்கங்கள் விடுபட்டிருந்ததால் அதற்குப் பதிலாக வேறு புது புத்தகம் கொடுத்தார்.

கே.பி. வினோத்தின் 9 வயது பெண் சைதன்யாவிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். நாங்கள் சைதன்யாவின் ’மேனேஜர்’ வினோத்தை கிண்டலடித்துக்கொண்டோம். நண்பர்கள் அனைவரின் பேச்சும் சுற்றி சுற்றி ஜெயமோகனின் வெண்முரசைப் பற்றியே இருந்தது. எங்கள் எல்லோரையும் அது நேர்மறையாக அழுத்தமாக பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மணி ஆறு தாண்டியவுடன் அங்கிருந்து கிளம்பினேன். பவானிக்கு வாக்களித்தபடி 7 மணிக்குள் வீடு வந்தடைந்தேன். அமுதன் எனக்கு அமர்சித்திர கதாவின் மகாபாரதம் வாங்கினாயா என வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கேட்டான். அதற்கு தனியாக இன்னொருநாள் போகலாம்டா என்றேன். உன்மையில் இன்னும் குறைந்தது இரண்டுமுறையாவது புத்தகத் திருவிழாவிற்கு செல்லவேண்டும். இன்னும் தமிழினி, காலச்சுவடு, நற்றிணை போன்ற பிரபலமான ஸ்டால்களுக்குள் போகவேயில்லை. ஆதிரன் எல்லா புத்தகத்தையும் எடுத்து விரித்து வைத்துக்கொண்டு ‘படித்துப் பார்த்தான்’. பின்னர் அவனது போக்கில் கடாசினான்.

புத்தக அலமாரியில் புதிய புத்தகங்களை அடுக்கும்போது என்னிடம் புனைவுகளைவிட அபுனைவு நூல்களே அதிகமிருப்பதை கண்டேன். ஒரு இலக்கிய வாசகனாக நான் இன்னும் ஆரம்பப் படிகளையே தாண்டவில்லை என்ற யதார்த்தம் உரைக்கிறது. 

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டில்...

இன்று எனது இயல்புக்கு மாறான புத்தாண்டு. நான் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஏனெனில் நான் புத்தாண்டு கொண்டாடத்தை அருவெருப்பவன். ஆகையினால் புத்தாண்டு நாட்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு எதிர்வினையாக வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட ஒரு எதிர்மறை உணர்வில் இருப்பேன். அதனால் முந்தைய புத்தாண்டுகளில் இவ்வளவு உற்சாசமாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் புத்தாண்டை பலரும் கொண்டாடும் வழக்கமான பாணியில் கொண்டாடவில்லை. நேற்றிரவு 12 மணிக்கு முன்பே தூங்கப் போய்விட்டேன். ஆனால், நேற்று மாலை நானும் பவானியும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் செய்யவேண்டியன குறித்து பேசிக்கொண்டோம். இதில் எங்கள் இருவரின் தொழிலில் செய்யவேண்டியன குறித்த இலட்சியங்களும் அடங்கும். எங்களுக்கு டிசம்பர் 31 புத்தாண்டைவிட முக்கியமான நாளும் கூட. ஏனெனில், 13 ஆண்டுகளுக்கு முந்தைய டிசம்பர் 31 அன்றுதான் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது குறித்த முடிவை எடுத்தோம்.

இன்று காலை எழுந்தவுடன் நேற்று பேசியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். 41 வயதைக் கடந்துவிட்டேன். இன்னும் எனது இலட்சியங்களில் பெரும்பாலனவற்றை நான் அடையவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் நான் அவற்றை அடையவில்லையென்றால் மீதியிருக்கும் எனது வாழ்நாள் மிக துன்பகரமாக இருக்கும் என்றே உணருகிறேன். ஏனெனில் எனது கனவுகளை நான் அடையாதது குறித்த கவலைகள் என்னை அப்போது தினமும் வருத்தும். அவற்றை அடைவதற்கான உடல் வலுவோ, மனத்திடமோ அப்போது இராது. மேலும் 10 ஆண்டுகளில் இரண்டு மகன்களும் வளர்ந்துவிடுவார்கள். ஆகவே இந்த 10 ஆண்டுகளே எனக்கான இலட்சியங்களை அடைய தகுந்தவை. இந்த மனநிலை கடந்த சில மாதங்களாகவே இருந்தாலும் நேற்று பவானியுடன் பேசியபின் தான் திட்டவட்ட வடிவை அடைந்தன. ஆகவே எனது இலட்சியங்களை அடைய புத்தாண்டு என்பது ஒரு உத்தேச தொடக்கம் மட்டும்தான்.

உண்மையில் 1988 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் ஒரு மழைநாளில்தான் நான் எனது திறமைகளை உணர்ந்தநாள். அப்போது நான் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். முந்தைய 10 ஆம் வகுப்பு பரீட்சையில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். மாநிலத்தில் முதல் நாற்பது மாணவர்களில் ஒருவன். இதற்காக நான் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சொல்லப்போனால் பரீட்சை நாட்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நன்றாக ஞாபகமிருக்கிறது, அன்று பெருமழை பெய்து பணகுடி அனுமன் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்தை ஆற்றின் கரையில் நடந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தபோது நான் மட்டும் முயற்சி செய்திருந்தால் மாநிலத்தில் எளிதாக முதல் மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. பிளஸ் டூவில் அத்தகைய முயற்சியை எடுக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். செய்யவில்லை. ஆயினும் பள்ளியின் முதல் மாணவன். இதுபோல் எத்தனையோ முறைகள் இலட்சியங்களை வளர்த்து அவற்றை தெரிந்தே தவற விட்டிருக்கிறேன்.

இதற்கு எனது அவநம்பிக்கையும் அதனால் விளையும் தயக்கம், சோம்பேறித்தனம், செயல்களை ஒத்திப்போடும் மனப்பாங்கு போன்றவை தான் காரணம் என உணர்ந்தே இருக்கிறேன். இவை எனது குடும்பச் சொத்தாகும். எனவே இந்த உணர்வுகளை வென்றால்தான் என்னால் சாதிக்கமுடியும். இந்தமுறை வென்றுவிடுவேன் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகன். அவரது எழுத்துக்கள் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது நண்பர்களில் ஒருவனாகும் பாக்கியம் பெற்றதால் அவரை அருகிருந்து அறியும் பேறும் பெற்றிருக்கிறேன். அவரே இன்றிலிருந்து ஒரு பெரிய செயலில் இறங்கியிருக்கிறார். எனது நல்லூழ், அந்த செயலும் 10 ஆண்டுகள் தொடரப்போகிறது. எனது தேடல்கள், கேள்விகளுக்கு அவரது இந்த முயற்சியின் வழியாக பதில்களைக் கண்டடைவேன் என நம்புகிறேன். எனவே, எனது குருவைப் பற்றிக்கொண்டு இந்தப் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிடுவேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)