பக்கங்கள்

சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2016

மணப்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையில் மீண்டும்...

சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ‘கவர்னர்’ சீனிவாசன் மணப்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர நடைப்பயிற்சியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அமுதனும், நானும் அங்கிருந்து சில செடிகளை எடுத்து வந்து வீட்டில் நட்டிருந்தோம். அவை இப்போது நன்றாக வந்துவிட்டன. 2 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் என் வீட்டில் வந்து தங்கியபோது ஒருநாள் காலை அங்கு நண்பர்களோடு நடை சென்றோம்.  அதன்பின் அங்கு செல்வது தடைபட்டு போய்விட்டது. ஆற்றங்கரையோரம் பொதுப்பணித்துறையால் மூங்கில், புங்கம், வேம்பு, நாவல் மரம் போன்றவை நடப்பட்டு இருசக்கர வாகனம் செல்ல ஏற்றமாதிரி கரைகள் செப்பனிடப்பட்டு அழகாக இருந்தது. இந்த வெள்ளம் வந்து சென்றபின் அப்பகுதியை பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன். நேற்றே அமுதனிடமும், ஆதிரனிடமும் சொல்லியிருந்தேன். பையன்கள் தினமும் காலை 6 மணிக்கே எழுந்து பள்ளி செல்ல ஆயத்தமாவதால் இன்று நன்றாகத் தூங்கட்டும் என்று விட்டுவிட்டோம்.  ஆதலால் காலை 11 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.









இப்பகுதிகளில் பலரும் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆற்றின் மேற்கு கரையோரம் மணப்பாக்கமும், கிழக்குக் கரையில் நந்தம்பாக்கமும் உள்ளன. இரண்டு பகுதிகளுமே டிசம்பர் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவை. அதன் அடையாளமாக நெகிழிக் குப்பைகள் மரங்களில் இன்னமும் சொருகிக் கிடந்தன. ஒரு இடத்தில் சற்றே பெரிய கொடுக்காய் புளி மரத்தின் உச்சிவரை நெகிழிகள் இருந்தன. குறைந்த பட்சம் கரையிலிருந்து 15 அடி உயரம் வரை தண்ணீர் சென்றிருந்திருக்கும். இவ்விடத்தில் ஆற்றின் அகலம் மிகவும் குறைவு. இங்கு கரைகளில் உடைப்பைத் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் வெள்ளம் அதைவிட பலமடங்கு உயரத்தில் சென்றிருக்கிறது. இங்கு நடப்பட்டிருந்த மரங்கள் சில வேரோடு போய்விட்டன. ஆச்சரியமாக சில மரங்கள் முக்கியமாக மூங்கில் இன்னும் கரைகளிலேயே உள்ளன. கரையில் போடப்பட்டிருந்த செம்மண் கப்பி கப்பி சாலை மட்டும் அரிக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நிலப்பரப்பு கிட்டத்தட்ட சமதளமாக இருப்பதால் வெள்ளம் அவ்வளவு உயரம் சென்றிருந்தாலும் நில அரிப்பு அவ்வளவாக இல்லை. இன்னும் சற்று தள்ளி தெற்கே நடந்தால் ஆறு மிக விரிவாக இருக்கும். மதுரை வைகை ஆற்றைவிட அகலமாகவே இவ்விடத்தில் அடையாறை  பார்க்கலாம். இந்த இடம்  பரங்கிமலை ராணுவ அலுவலர் பயிற்சிக் கல்லூரியிலிருந்து ராணுவத்தினர் மணப்பாக்கம் திடலுக்கு வருவதற்காக போடப்பட்டிருந்த இரும்பு பாலத்தை தாண்டி உள்ளது. இந்த இரும்புப் பாலமும் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஆனால் இங்கு கரை மேல் போடப்பட்ட சாலை அப்படியே உள்ளது. வேப்பமரங்கள் நன்றாக வளர்ந்து சோலையாக உள்ளன. இன்னும் சற்று தள்ளிப்போனால் மீண்டும் ஆறு குறுகலாகும். இவ்விடத்தில் ஆற்றின் கிழக்குப் பகுதியில் விமான நிலைய சுற்றுச் சுவர் ஆரம்பமாகிறது. விமான நிலையம் நீரில் மூழ்கியதில் ஆச்சரியமேதுமில்லை.






ஆகவே, இப்பகுதியானது பரங்கிமலை, மணப்பாக்கம் ராணுவ அலுவலர் பயிற்சிக் கல்லூரிக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். ராணுவ திடலின் சுற்றுச் சுவர் முடியுமிடத்தில் இன்னும் சில குறுங்காடுகளும், புதர்க்காடுகளும் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதி அதன் இயல்பு மாறாமல் இன்னமும் நீடிக்கின்றது. சில தனியார் பண்ணை வீடுகளும் இடிந்த நிலையில் இப்பகுதியில் உள்ளது. அதில் ஒன்று நடிகர் ரவிச்சந்திரனுடையது என்று ஒருவர் சொன்னார். அவர் அநேகமாக நில புரோக்கராக இருக்கலாம். இங்கெல்லாம் எப்போ சார் ரோடு போடுவாங்க, ஒரு கிரவுண்டு நிலம் எவ்வளவு . இருக்கும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்.









இந்தக் கரையோரப் பாதை வழி சென்றால் சென்னை விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட (அடையாற்றின் குறுக்கே வரும்) இரண்டாவது ஓடுபாதை வரை செல்லலாம். இப்பகுதியானது பல பறவைகள், பூச்சிகள், போன்றவற்றின் இயற்கை வாழிடமாக உள்ளது. அரசாங்கம் இங்கு வேறு ஏதும் குடியிருப்புத் திட்டங்களை நிறைவேற்றாமல் இந்த குறுங்காடுகளை பாதுகாத்து வருமானால் நல்லது. நாங்கள் உச்சி வெயிலில் சென்றபோதும் பல பறவைகளைப் பார்த்தோம். குறிப்பாக கொக்கு வகைகளில் குளத்துக் கொக்கு (Indian Pond Heron), உண்ணிக் கொக்கு (Indian Cattle Egret), சின்னக் கொக்கு (Little Egret),  போன்றவைகளையும் தைலாங் குருவி (Barn Swallow), சிறிய நீர்க்காகம் (Little Cormorant), பஞ்சுருட்டான் ( Green Bee Eater), கறுப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied Kingfisher), வெண்மார்பு மீன்கொத்தி (White Thorated Kingfisher), வல்லூறு (Shikra),  தேன் சிட்டு (Sunbird), செண்பகம் ( Greater Coucal), கொண்டைக் குருவி (Bulbul),  கழுகு (Eagle), கரிச்சான் (Black Drongo),  உள்ளான் (Sandpiper), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) போன்றவற்றைப் பார்த்தோம். ஒருவேளை காலையிலோ, மாலையிலோ சென்றிருந்தால் இன்னும் நிறைய பார்த்திருக்கலாம்.










திங்கள், 13 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில்...

இன்று மதியம் (12/01/2014) சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். நண்பர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே வந்திருந்தார்கள். பாஸ்டனிலிருந்து வந்திருக்கும் அர்விந்தை நான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். சீர்மை குறுநாவலின் புகழால் இப்போது ’சீர்மை அரவிந்த்’என அழைக்கப்படுகின்றார். சீனிவாசன் தம்பதியினர் தன்னுடய மகன்களோடு வந்திருந்தனர். அவர்களுடன் செந்தில், சுரேஷ்பாபு, சுனில்கிருஷ்ணன், வினோத் மற்றும் நான் இன்று புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். பின்னர் ஜாஜா, சாம்ராஜ், ஜடாயு, மணிகண்டன், எழுத்து பிரசுரம் அலெக்ஸ், அசோக்குமார், கவிஞர் இசை, விழியன் என ஏதேச்சையான பல சந்திப்புகள் அரங்கேறின. இதற்கிடையில் எனக்கு மட்டுமே தெரிந்த வேறு சில நண்பர்களையும் தற்செயலாக சந்தித்தேன். அவர்களுள் நிழல் திருநாவுக்கரசு அவர்களை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். இயல்பாகவே இலக்கியவட்டம் நாராயணன் குறித்தும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டோம். பின்னர் வெளியேறும் போது இலக்கியவட்டம் மூலம் அறிமுகமான கவிஞர் வெண்ணிலாவையும்  பார்த்தேன். தனது புத்தக வெளியீடு இன்று நடைபெறுவதால் அந்நிகழ்விற்கு வருமாறு அழைத்தார். நேரமாகிவிட்டதால் கலந்துகொள்ள இயலாது என மறுத்துவிட்டேன்.


படம் உதவி: ஜடாயு  

இந்தமுறை எனது தேர்வு பெரும்பாலும் தன் வரலாற்று நூல்கள். உ.வே.சா, நெ.து. சுந்தரவடிவேலு, பம்மல் சம்பந்த முதலியார், தி.சே.செள.ராஜன் போன்றவர்களின் சுயசரிதகளை வாங்கினேன். இவைகள் அனைத்துமே ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் சுந்தர ராமசாமி பரிந்துரைத்த நூல்களாக தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறேன். கு. அழகிரிசாமி கதைகள் சாகித்திய அகாடமியில் சகாய விலைக்குக் கிடைத்தது. வெண்முரசின் பாதிப்பினால் பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், ராஜாஜியின் வியாசர் விருந்து போன்றவற்றை வாங்கினேன். ஜடாயுவின் பரிந்துரையின் பேரில் சுவாமி விவேகானந்தரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் நூல் ஒன்றை ராமகிருஷ்ண மடம் புத்தக ஸ்டாலில் வாங்கிக்கொண்டேன். கிழக்கு பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னாவை பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாங்கிய ஜெயமோகனின் இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் நூலில் பக்கங்கள் விடுபட்டிருந்ததால் அதற்குப் பதிலாக வேறு புது புத்தகம் கொடுத்தார்.

கே.பி. வினோத்தின் 9 வயது பெண் சைதன்யாவிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். நாங்கள் சைதன்யாவின் ’மேனேஜர்’ வினோத்தை கிண்டலடித்துக்கொண்டோம். நண்பர்கள் அனைவரின் பேச்சும் சுற்றி சுற்றி ஜெயமோகனின் வெண்முரசைப் பற்றியே இருந்தது. எங்கள் எல்லோரையும் அது நேர்மறையாக அழுத்தமாக பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மணி ஆறு தாண்டியவுடன் அங்கிருந்து கிளம்பினேன். பவானிக்கு வாக்களித்தபடி 7 மணிக்குள் வீடு வந்தடைந்தேன். அமுதன் எனக்கு அமர்சித்திர கதாவின் மகாபாரதம் வாங்கினாயா என வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கேட்டான். அதற்கு தனியாக இன்னொருநாள் போகலாம்டா என்றேன். உன்மையில் இன்னும் குறைந்தது இரண்டுமுறையாவது புத்தகத் திருவிழாவிற்கு செல்லவேண்டும். இன்னும் தமிழினி, காலச்சுவடு, நற்றிணை போன்ற பிரபலமான ஸ்டால்களுக்குள் போகவேயில்லை. ஆதிரன் எல்லா புத்தகத்தையும் எடுத்து விரித்து வைத்துக்கொண்டு ‘படித்துப் பார்த்தான்’. பின்னர் அவனது போக்கில் கடாசினான்.

புத்தக அலமாரியில் புதிய புத்தகங்களை அடுக்கும்போது என்னிடம் புனைவுகளைவிட அபுனைவு நூல்களே அதிகமிருப்பதை கண்டேன். ஒரு இலக்கிய வாசகனாக நான் இன்னும் ஆரம்பப் படிகளையே தாண்டவில்லை என்ற யதார்த்தம் உரைக்கிறது. 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

அடையாற்றின் கரையில்...மீண்டும்

சென்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மணப்பாக்கம் அடையாறு கரையோரம் நடை செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். அமுதன் பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வர இயலவில்லை. சீனிவாசனை தொடர்புகொள்ள செல்பேசியைத் தேடினால் காணவில்லை. அது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கிடப்பதை பின்னர்தான் கண்டுபிடித்தேன். சின்னவன், ஆதிரனின் கைவண்ணம். எல்லாப் பொருட்களையும் கீழேவீசி விளையாடும் பருவத்தில் இப்போது உள்ளான் அவன். சீனிவாசன் முடிந்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டார். செடிகளை எடுத்துக்கொண்டு வர பாலீதீன் கவரில் சிறிது மண், ஒரு கொத்தங்கரண்டியும் எடுத்துக்கொண்டேன். இதற்குள் மணி ஏழாகிவிட்டது. ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பி சிறிது தூரம் செல்லும்போதே மழைத்தூறல் போட்டது. இப்பகுதியில் இந்த வருடம் இதுவரையில் அளவுக்கதிகமாகவே மழை பெய்துள்ளது.  ஜுலை மாதம் பிறந்ததிலிருந்து 20 நாட்களாக தினமும் மழை பெய்துவருகிறது. வெயிலே இல்லை. எப்போது பார்த்தாலும் மேகமூட்டமாகவேயுள்ளது. எங்கள் வீட்டு கிணற்றில் ஒன்றரையடி அளவுக்கு தண்ணீர் மட்டம் ஏறியுள்ளது. பொதுவாக ஆடி மாதம் தண்ணீர்ப்பஞ்சம் உக்கிரம் அடையும். ஆனால் இந்தவருடம் நேர்மாறாக உள்ளது. காலைத் தூறலில் மணப்பாக்கம் - கெருகம்பாக்கம் சாலையை அடுத்த பகுதிகள் ரம்மியமாக இருந்தன. சென்னை மாநகராட்சிக்குள் இப்பகுதிகள் இரண்டாண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சிலர் விடாப்பிடியாய்  முப்போகம் விளைவிக்கின்றனர். சில இடங்களில் திட்டுகளாக புதர்க்காடுகளும் உள்ளன. வண்டி ஓட்டும்போதே நாம் வீடுகட்டி வந்து இந்தச் சூழலைக் கெடுக்கிறோமே என்ற எண்ணம் தவிர்க்கமுடியாமல் வந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு சிறிது தூரம் கரையில் நடக்க ஆரம்பித்திருந்தேன். ஆற்றை ஒட்டிய கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீர் குட்டையிலிருந்து ஏதோ ஒன்று சட்டென்று அசைந்து அருகிலிருந்த புதருக்குள் சென்றது. அது ஒரு பறவை. செம்பொன் இறக்கைகளுடன் நீண்ட அலகுடன் இருந்தது. இன்று சற்று முன்பே வந்துவிட்டதால் போனவாரத்தை விட சற்றதிக ஆட்கள் தென்பட்டனர். மேலும் சிறிது தூரத்தில் நண்பர்கள் சுரேஷ் பாபுவும், சுவாமிநாதனும் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கொஞ்ச தூரத்தில் 20-30 மைனாக்கள் ஒரு இடத்தில் நிலத்தைக் கொத்தி எதையோ சாப்பிடுக்கொண்டிருந்தன. என் வருகையைப் பார்த்தும் அனைத்தும் ஒருசேர மேலெழும்பி பறந்தன. அப்போது பசுக்கூட்டம் ஒன்றும் கரையில் ஏற முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. அதில் தலைவி போலிருந்த பசு என்னை ஏறிட்டுப்பார்த்தது. பின்னர் என்ன நினைத்ததோ பின்னோக்கி வேகமாகத் திரும்பி ஓட்டமும் நடையுமாகச் சென்றது. அதைப் பின்தொடர்ந்து மற்ற பசுக்களும் திரும்பி வேகமாக நடந்தன. இந்த மைனாக்கள் ஏதும் சொல்லிவிட்டுச் சென்றனவோ என்னவோ?

எங்காவது சீந்தில் கொடி இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சிறிது தூரத்தில் வால்டர் தேவாரம் மாதிரி மீசை வைத்து தலைச் சாயம் பூசிய சற்றே வயதான மனிதரும் அவருடன் ஒரு நடுத்தர வயது மனிதர் மற்றும் 4 வயதுச் சிறுவன் ஒருவனும் எதிரில் வந்துகொண்டிருந்தனர். மீசைக்காரர் என்னையே உற்றுப் பார்த்தவண்ணம் வந்தார். அருகில் வந்ததும் "ஆர் யு கோயிங் ஃபார் வாக்கிங்? வாட் இஸ் இன்சைட் த பேக்?” என்றார். முதலில் நான், "எஸ், ஐ யம் கோயிங் ஃபார் வாக்கிங். ஐ வாண்ட் டு கலெக்ட் சம் பிளாண்ட்ஸ்” என்றேன். பின்னர் அனிச்சையாக பாலீதீன் கவரை விரித்து அவருக்குக் காண்பித்தேன். சட்டென்று ஏன் அவ்வாறு செய்தேன் என நினைத்து வெட்கப்பட்டேன். கேட்டவர் போலிஸ்காரராக இருக்கலாமோ என்ற அச்சம் என்னை அவ்வாறு செய்யவைத்திருக்கலாம். மேலும் நடக்கத்தொடங்கினேன். ஒரு கரிச்சான் பறவை ராக்கெட் மாதிரி செங்குத்தாக விர்ரென்று மேலெழும்பி சில அடிதூரம் சென்றுவிட்டு அதேமாதிரி மீண்டும் கீழே வந்தது. இவ்வாறே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தது. பின்னர் தான் கவனித்தேன், அருகிலிருந்த மரத்தில் வேறொரு கரிச்சான் உட்கார்ந்திருந்தது. ஒருவேளை அதன் இணையைக் கவர இது செய்யும் உத்தியோ என்னவோ! சில இளைஞர்கள் பைக்கில் சென்று யுவதிகள் முன்பு செய்யும் சாகசத்தை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டது.

தொடந்து நடந்து சென்றவாரம் சென்ற இடத்தைத் தாண்டினேன்.  சற்றுதூரத்தில் ஆற்றின் நடுவே தேங்கியிருந்த குட்டையில் வெண்ணிற அல்லி மலர்கள் பூத்திருந்ததன. மூன்று இளைஞர்கள் விலையுயர்ந்த புகைப்படக்கருவியை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அருகில் சென்றபோதுதான் பார்த்தேன் வித்தியாசமான பறவை ஒன்று அல்லிகளுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தது. வெண்மையான சிறகுகள், வால் நீண்டிருந்தது. சற்று நீண்ட கால்கள். பறவையின் பெயர் அவ்விளைஞர்களுக்கும் தெரியவில்லை. ஆற்றின் மறுகரையில் விமான நிலைய சுற்றுச்சுவரோடு அமைந்த வடிகால் வழியாக மழைத்தண்ணீர் அடையாற்றிற்கு வந்துகொண்டிருந்தது.
இப்போது மரங்கள் குறைந்து பொட்டல்வெளி ஆரம்பமாகிவிட்டது. பெரிய செங்கல் சூளை ஒன்று வந்தது. முன்பு இப்பகுதிகளில் நஞ்சை விவசாயம் செய்யப்பட்டிருக்கவேண்டும். அடையாற்றில் வரும் தண்ணீரை மடைமாற்றி கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு கொண்டுசெல்ல அமைப்புகள் இன்னும் உள்ளன. சிறிதுதூரம் நடந்தவுடன் விமானநிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஓடுதளம் அடையாற்றைத் தாண்டி மறுகரையில் கொளப்பாக்கம் கிராமம் வரை நீண்டிருந்தது.
இதற்குமேல் அடையாற்றின் கரையில் நடக்கமுடியாது. இப்பகுதியில் பலர் காலைகடன்களைக் கழித்துக்கொண்டிருந்தனர். கரையிலிருந்து மணப்பாக்கம் ஊருக்குள் செல்லும் வழித்தடத்தில் சிறிதுதூரம் சென்றேன். மழைபெய்து வழியெங்கும் நீர் தேங்கியிருந்தது. ஓடுதள பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட கான்கீரீட் மிச்சங்கள் அங்கங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதனோடு ஊர்க்கழிவுகளும். மாதேஸ்வரன் கோபுரம் தெரிந்தது. சிறிது தூரம் இன்னும் நடந்தால் எங்கள் வீட்டை அடைந்துவிடலாம்.

திரும்பி நடந்தேன். கழுகு ஒன்று வானத்தில் வட்டமிட்டதை கவனித்தேன். நான் கடைசியாக கழுகைப் பார்த்தது எப்போது என்று ஞாபகமில்லை. கண்டிப்பாக பலவருடங்களிருக்கும். சிட்டுக்குருவியைப் போன்றே இப்போது கழுகுகளும் அரிதாகிவிட்டன. டைக்ளோபினாக் மருந்து  கொடுக்கப்பட்ட இறந்துபோன மாடுகளை உண்ணும் கழுகுகள் விஷமேறி இறந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து நடக்கையில் அருகிலுள்ள கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீரில் எதோ அசைவுதெரிந்தது. முதலில் பார்த்த பறவையை போன்ற மற்றொரு பறவை வேகமாக அருகிலுள்ள புதருக்குள் சென்று ஒளிந்துகொண்டது. இம்முறை அதனை நன்றாகப் பார்க்கமுடிந்தது. கழுத்தற்ற உடல், அலகிலிருந்து வால் வரை இருமுனையிலும் கூரான பகுதிகள். குட்டைக்கால்கள். புதருக்குள் சென்று மறைந்தாலும் அதன் கால்கள் இப்போது நன்றாகத்தெரிந்தன. இம்முறை அருகிலேயே பறவையைக் கண்ணுற்றதால் காத்திருந்து அதை என் புகைப்படக்கருவியில் பதிவுசெய்ய நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு; ஜெயமோகன் முன்பு ஒரு கட்டுரையில் குருகு என்ற பறவை குறித்து அஜிதனுடன் உரையாடியதைப் பற்றி எழுதியிருப்பார். கொக்கை குருகு எனப் பொருள் மாற்றி படிக்கும்போது சங்கப்பாடலொன்று தரும் புதிய அர்த்தத்தை மிக அழகாக விளக்கியிருப்பார். ஏனெனில், குருகு ஆபூர்வமாகக் காணக்கிடைக்கும் ஒருபறவை. ஒருவேளை நான் பார்த்ததும் அப்பறவைதானோ என்ற ஐயம். எனவே புதரின் எதிர்புறமே குத்துக்காலிட்டு அமர்ந்து காத்துக்கொண்டிருந்தேன். பலவிதமான பறவையொலிகள். கீச் கீச் என்ற ஒலி கேட்டு மேலே பார்த்தால் சில சிட்டுக்குருவிகள்  பறந்து கொண்டிருந்தன. நான்கைந்து மாதங்களுக்கு முன்பு மேட்டுபாளையமருகிலுள்ள என் தங்கை வீடிருக்கும் பகுதியில் சிட்டுக்குருவிகளைப் பார்த்தபின் இப்போதுதான் அவைகளைப் பார்க்கிறேன்.
பறவை வெளிவருவதாயில்லை. இப்போது அதன் கால்களும் தெரியவில்லை. புதருக்குள் நன்கு சென்றுவிட்டது. ஆகவே இடம் மாற்றி சற்றுதள்ளிச் சென்றமர்ந்தேன். மணி ஒன்பதாகி விட்டிருந்தது. ஒரு அரைமணி நேரம் அப்பறவைக்காக செலவிடலாமென மனதுக்குள் தீர்மானம் பண்ணிக்கொண்டேன். பல்வேறு பறவையொலிகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. கரிச்சான்கள், மைனாக்கள், கிளிகள், குருவிகள், காக்கைகள் இன்னும் பெயர்தெரியாத பலவிதமான பறவையொலிகள், பின்னர் தவளைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம் என இனம்பிரித்து அறிந்துகொண்டேயிருந்த என் மனம் சட்டென்று என் காலடியில் குர் குர் என கேட்கும் ஒரு நுண்ணிய ஒலியில் சென்று அவதானித்தது. எறும்புகள், குட்டி வண்டுகள் போன்ற உயிரினங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஆனால் அந்த சத்தம் எந்த உயிரினத்திலிருந்து வருகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பூமிக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது. மிக நுண்ணிப்பாய் கவனித்தால் மட்டுமே அந்தச் சத்தம் கேட்கும். ஒருவகையில் அந்தக் கணம் தியானம் கைகூடுவது போலத்தான். மீன் பிடிப்பவர் ஒருவரும், மெல்லோட்டம் ஒடுபவர் ஒருவரும் என்னைக் கடந்து சென்றனர். இனி, அந்தப் பறவை புதரிலிருந்து வெளிவருவதற்கு வாய்ப்பில்லை.

நடக்க ஆரம்பித்தேன். இருபது கிலோமீட்டர் நீளமேயுடைய அடையாறு சில இடங்களில் மிக அகலமாக இருந்தது. தென் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் இதைவிட நீளமான ஆறுகள் பல கூட இவ்வளவு அகலமாக நான் பார்த்ததில்லை. மிக அதிகம் தண்ணீர் வந்தாலொழிய இவ்வளவு அகலமாக ஆறு மாறியிருக்காது.
சென்ற 2005 மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் நிறைந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. அப்போது செம்பரம்பாக்கம் கலங்கல் (மறுகால்) சென்று அந்த அரிய காட்சியை புகைப்படங்களாகப் பதிவுசெய்திருக்கிறேன். உண்மையில் சென்னையைச் சுற்றிய தொண்டை மண்டலத்தில் சராசரியாக வருடத்திற்கு 1400 மில்லி மீட்டர் மழைபெய்கிறது. இம்மழை நீரை நம் முன்னோர் ஏரி, தாங்கல், குளம், குட்டை எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்து வைத்திருக்கின்றனர். முப்போகம் விளைவித்திருக்கின்றனர். பசுமைப்புரட்சி சாதித்ததைவிட மிக அதிக நெல் விளைச்சலை எடுத்திருக்கின்றனர். ஆனால், நம்மைப்போல் மிக மோசமாக நீர் மேலாண்மை செய்யும் சமூகம் இன்று  வேறில்லை.

எனக்கு அடையாற்றின் மேலுள்ள காதலுக்கு வரலாற்றுப் பின்புலம் உண்டு. என் முப்பாட்டனாரின் பாட்டனார் காலத்தில் (1780 - 90 களில்), கிழக்கிந்திய கம்பெனியின் வரிக்கொடுமைக்கு அஞ்சி விவசாய நிலங்களை விட்டுவிட்டு,  மாங்காட்டிலிருந்து கடலூர் மஞ்சக் குப்பம் சென்று அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து குடியேறியிருக்கிறார்கள் எம்முன்னோர்கள். எனவே ஸ்ரீவியில் அவர்கள் குடியேறிய தெரு மஞ்சக்குப்பம் தெரு என்றானது. அது இப்போது மஞ்சப்பூ தெருவாக மருவிவிட்டது. தாங்கள் மாங்காட்டிலிருந்து  கொண்டுவந்த தங்கத்தை விற்று ஸ்ரீவியில் நிலங்களை வாங்கி விவசாயத்தை தொடர்ந்திருக்கின்றனர். இந்தத் தொடர்பு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக எங்கள் தாத்தா எல்லாத் திருமணப் பத்திரிக்கைகளிலும் மாங்காடு வித்துக்கிளார் கோத்திரம் என்றே அவரது பெயருக்குப் பின் போட்டுகொள்வார். சமீப காலம் வரை எங்கள் குடும்பதை மாங்காட்டார் குடும்பம் என்றே ஸ்ரீவியிலும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். சென்ற 2006-ல் முகலிவாக்கத்தில் வீட்டுமனை வாங்கும்போதே நம் முன்னோர் வாழ்ந்த இடத்திற்கே நாமும் வந்துவிட்டோம் என அப்பாவிடம் சொன்னேன். செம்பரம்பாக்க ஏரித்தண்ணீரில் இன்று விவசாயம் செய்யவில்லை எனினும் அந்த நீரையே நிலத்தடி நீர் மூலமாக நாங்கள் குடித்துக்கொண்டிருக்கிறோம்.

சில ரங்கூன் கொடிகளை எடுத்துக்கொண்டேன்.
வரும்வழியில் குயில்போன்ற சிறிய பறவை, ஆனால் சற்று பொன்னிறமும், சாம்பலும் கலந்த நிறத்தில், தலையில் ஒரு சிறிய கொண்டையுடன் என் குறுக்காக பறந்துசென்றது. வண்டியை அடையும்போது மணி பத்தாகி விட்டிருந்தது. பசிக்க ஆரம்பித்தது. ஐ ஏ எஸ் காலனிக்குச் சென்று சில பாதாம் மரக் கன்றுகளை எடுக்கலாம் என யோசிக்கும்போது செல்பேசி சிணுங்கியது. எதிர்பார்த்த மாதிரியே பவானியிடமிருந்து. சட்னிக்கு தேங்காய் வாங்கிவட்டு வராம இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க என சற்று எரிச்சலுடன் கேட்டார். பாதாமை விட்டுவிட்டு தேங்காய் வாங்க வீட்டிற்கு வண்டியை விட்டேன்.

குறிப்பு: நான் பார்த்தது குருகு தான். இந்த அபூர்வ பறவையை ஒரே நாளில் இரண்டுமுறை பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அடையாற்றின் கரையில்...

சென்னையில் மணப்பாக்கம் பகுதி அடையாற்றின் கரையோரம் நடைப்பயணம் செல்ல வருமாறு நண்பர் சீனிவாசன் கூப்பிட்டார். இன்று காலை நானும், அமுதனும் சென்றோம். இங்கு புதிதாக குடியிருப்புகள் வந்துள்ளன. பெரும்பாலும் இந்திய ஆட்சிப்பணி, காவல் பணியில் பெரும்பொறுப்பில் உள்ளவர்கள் அதிகம் வசிக்கின்றனர். நாங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும்போது இங்குள்ள வீடுகளை பார்வையிட வந்துள்ளேன். காலை கிளம்ப தாமதாகிவிட்டது. கிட்டத்தட்ட 8 மணிக்கு அடையாற்றை அடைந்தோம். ஸ்கூட்டைரை நிப்பாட்டிய இடத்தில் ஒரு பெரிய நத்தை ஊர்ந்துகொண்டிருந்தது. அப்பா, அது ரோட்டிற்குச் செல்கிறது. பைக் வந்தா செத்திடும், அதை எடுத்து இந்தப் பக்கம் விடு என்று அமுதம் சொன்னான். பரவாயில்லைடா,  போனா போகட்டும் எவ்வளவோ நத்தை ஊர்ந்து செல்லும், ஒவ்வொன்றையும் நம்மால் காப்பாத்த முடியாது என்றேன்.



சற்று நேரத்தில் சீனிவாசன் வந்தார். நடக்க ஆரம்பித்தோம். கரையை பலப்படுத்தி செம்மண் சாலை போட்டிருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். அப்போது இருபுறமும் உடை மரங்கள் வளர்ந்து மோசமான நிலையிலிருந்தது. பொதுப்பணித்துறை இப்போது செப்பனிட்டு இருமருங்கும் மரங்களை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரே மாதிரி இல்லாமல் பல்வகையான் மரங்கள் நட்டிருக்கிறார்கள். மூங்கில் மரங்கள் கூட பல நடப்பட்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் இப்பகுதி பசுமையாக செழிப்பாய் மாறிவிடும். வழியில் துத்திப் பூ போன்ற பூக்கள் குத்துச் செடிகளில் பூத்துக் குலுங்கின. அப்பூக்களில் நிறைய வண்டுகள் தேன் குடித்துக் கொண்டிருந்தன. அமுதனுக்கு அவற்றின் அருகில் சென்றால் கொட்டிவிடுமோ என்ற பயம்.

தேன் குடிக்கும் வண்டு




ஆற்றில் கரிய வாத்து போன்ற நீண்ட கழுத்து கொண்ட சிறிய பறவைகள் நீந்திக்கொண்டிருந்தன. அமுதன் ஸ்வான் என்றான். ஸ்வான் இல்லடா ஏதோ வாத்து போன்ற பறவை என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவை சட்டென்று எழும்பி பறந்து அப்பால் சென்று மீண்டும் நீந்த ஆரம்பித்தன. ஏதோ பொம்மை பறவை பறப்பது போலிருப்பதாக சீனிவாசன் சொன்னார். சட்டென்று வானத்தில் கருமேகங்கள் போல் ஊஊ என்று சத்தத்துடன் வண்டுகள்/தேனீக்கள் அடையாற்றின் மறுகரையிலிருந்து எங்களைக் கடந்து பறந்து சென்றன. இவ்வளவு அடத்தியாக இப்பூச்சியினங்கள் பறப்பதை ஆச்சரியடத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். மம்மி ரிட்டன்ஸ் படத்தில் வரும் காட்சி போலிருந்தது.
கரிய வாத்து போன்ற பறவைகள்

கொத்தாகப் பறக்கும் தேனீக்கள்


சற்று தூரம் சென்றதும் மேலும் இரண்டு நண்பர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். வேழவனம் சுரேஷ் பாபுவும், சுவாமிநாதனும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களும் மதனந்தபுரத்தில்தான் இருக்கிறார்களாம். அடையாற்றின் இந்தப்பகுதி ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி இடத்தை ஊடறுத்துச் செல்கிறது. உண்மையில் அடையாற்றின் கரை மட்டுமே தமிழக பொத்துப்பணித்துறைக்குச் சொந்தம். ஆற்றின் இரு மருங்கும் ராணுவ அதிகார்களின் பயிற்சி மைதானமும், அலுவலகம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. ஆற்றைக் கடந்து செல்ல ஒரு இருப்புப் பாலம் அமைத்துள்ளார்கள். அமுதனுக்கு அதன் மேல் நடந்து செல்ல ஆசை. தயக்கத்துடனேயே சென்றோம். அதற்குள் இருவர் இங்கு சிவிலியன்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி எங்களைப் போகச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் ராணுவத்தின் கையிலிருப்பதால் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பல்லாவரம் பகுதிகளை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் இன்னும் காங்கீரீட் காடாக மாறாமல் உள்ளது. அடையாறு முகத்துவாரமும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்திருக்கும்.




சங்குப் பூ கொடி புடுங்குகிறார்கள்


மேலும் தொடர்ந்து நடந்தோம். இரும்புப் பாலத்தை அடுத்த அடையாற்றின் கரையில் இப்போது வேம்ப மரங்கள் மட்டுமே இருந்தன. இப்பகுதி சற்று முன்னரே செம்மைப்படுத்த பட்டிருக்கவேண்டும். மரங்கள் ஐந்தாறு வருட வயதானவையாக இருந்தன. முன்பகுதியில் உள்ள வெவ்வேறு வகையான மரங்கள் சென்ற இரண்டு மாதங்களில் நடப்பட்டவை. கரைகளில் ஊதா வண்ண சங்குப் பூக்கள் பூத்திருந்தன. விதைகள் இன்னும் முற்றியிருக்கவில்லை. ஆகையினால் அடுத்தமுறை வரும்போது விதகைளைச் சேகரிக்கலாம் என நினைத்தேன். சுரேஷ் ஒரு கொடியை வேரோடு புடுங்கிக் கொடுத்தார். சற்றுதூரம் நடந்ததும் விமான நிலையத்தின் சுற்றுச் சுவர் வந்துவிட்டது. நாங்கள் சென்ற பாதையிலேயே இன்னும் சென்றால் கொளப்பாக்கம் கிராமம் வந்துவிடும், உங்கள் ஸ்கூல் வந்துவிடும் என்று அமுதனிடம் சொன்னேன். போகலாம்பா என்றான். ஆனால் இப்போது அதுமுடியாது. ஏனெனில், இரண்டாவது ஓடுபாதையை நீட்டிப்பதற்காக அடையாற்றின் குறுக்கே பாலம் கட்டிவிட்டதால் இன்னும் சிறிது தூரத்தில் விமான நிலைய சுற்றுச்சுவர் தடுத்துவிடும். உண்மையில் எங்கள் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஓடுபாதை வந்துவிடும்.

வழியில் ஒரு பண்ணை வீட்டைப் பார்த்தோம். பாழடைந்து கிடந்தது. அப்பண்னையின் வேலிகளில் ரங்கூன் கொடிகள் படர்ந்து பூத்திருந்தன. நீண்ட நாட்களாக ஒரு ரங்கூன் கொடியை எங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். கொடிகளைப் பிடுங்க அவை முடிவிலா வேர்களைக் கொண்டு அப்பகுதியையே நிறைத்திருந்தன. சில கொடிகளைப் பிடுங்கிக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தோம். வழியில் மேலும் சங்குப் பூ கொடிகளை அமுதன் எடுத்துக்கொண்டான். 10 மணிக்கு ஸ்கூட்டர் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். நத்தையை ஏதோவாகனம் ஏற்றி கூழாக்கியிருந்தது. உங்கிட்ட அப்பவே சொன்னேன்ல, அதை நீதான் காப்பாத்தாம விட்டுட்ட என்று அமுதன் என்னைக் கடிந்தான். வீட்டிற்கு வந்து முதல் வேலையாக செடிகளை மண்ணில் ஊன்றி நீர்விட்டோம்.


ஆங்கில ஹிண்டு பத்திரிக்கையில் 2019-ல் வந்த கட்டுரை

புதன், 22 ஆகஸ்ட், 2007

திநகர் துணிக்கடைகள்


இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகின்றது. சென்னை மீதான எனது காதல் குறித்து விரிவான இடுகையிட எனக்கு இப்போது அவகாசமில்லையாதலால் நான் கடந்த ஞாயிறன்று திநகரில் எடுத்த சில புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் 2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வழக்கத்திற்கு மாறாக பெய்த மழையின் விளைவுகள் குறித்த எனது புகைப்படங்களைப் பார்க்க இப்பதிவின் வலப்புறமுள்ள ஃபிலிக்கர் (Flickr) படங்களை அழுத்தவும்.