பக்கங்கள்

சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அங்காடித்தெரு அமெரிக்காவை முன்வைத்து

அமெரிக்கா வந்து இந்த இரண்டரை மாதங்களில், தவிர்க்கவே முடியாமல், இந்த நாட்டை நான் தினம் தினம் இந்தியாவுடன் ஒப்புமைப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இந்தச் சூழலில் கடந்த ஞாயிறு அங்காடித்தெரு படம் பார்த்தேன். ஏற்கனவே அங்காடித்தெரு குறித்த தமிழ்ப் பதிவுகள் பலவற்றை படித்து படம் குறித்த ஒரு முன் தீர்மானத்தோடுதான் போனேன். ஆயினும் படம் என்னை உலுக்கிவிட்டது. படத்திலுள்ள சில குறைகளையும் (ஏற்கனவே பலரும் சுட்டிக்காட்டியதுதான்) மீறி இப்படம் குறிப்பாலுணர்த்தும் கடையிலும் அதைப் போன்ற மற்ற கடைகளிலும் படத்தில் காட்டுவதுபோல் நிகழ்வுகள் நடப்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளதான யதார்த்தம் முகத்தில் அறைகிறது. படத்தின் அத்தனை செயற்கையான காட்சியமைப்புகள், அபத்தங்களையும் மீறி படம் பார்த்த அனைவரையுமே பாதித்திருக்கிறது. ஆயினும் இது திரைப்பட விமரிசனம் அல்ல. படத்தின் கரு ஏற்படுத்திய அதிர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிப்பதே என் நோக்கம்.

ஏன் இப்படி நடக்கிறது? இதைத் தடுக்க முடியாதா என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன. இவ்வாறான காட்சிகளை நேரிலேயே நாம் பார்த்திருந்தாலும், அனுபவித்திருந்தாலும், காட்சி ஊடகங்களில் பார்க்கும்போது அது வேறுவிதமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. அமெரிக்கா வந்து இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை, அமெரிக்க வெள்ளை இன மக்களைத் தவிர்த்து, ஊடகங்கள் வழியாக அறியும்போது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றன. எனக்கு இது குறித்து தெளிவான கருத்துக்கள் ஏதும் இன்னும் உருவாகவில்லை.

நான் தற்போது இருக்கும் கலிபோர்னியா மாநிலம் பெர்க்லியில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சார்ந்த ரெட்டிகாரு ஒருவர் நாற்பது வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் உடன் உணவகமும் நடத்துகிறார். இந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரது உணவகத்தில் வேலை செய்ய ஆந்திராவிலுள்ள அவரது பூர்வீக கிராமத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏழைச் சிறுமிகளை கொண்டுவந்து வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். வேலை நேரமும் அமெரிக்கச் சட்டத்திற்குப் புறம்பாக மிக அதிகமானதோடு இல்லாமல் அவர்களின் தங்குமிடம், உணவு போன்றவையும் இந்த நாட்டின் குறைந்த பட்ச தரத்தைவிடவும் குறைவு. இதையெல்லாம் விட கொடுமையானதாக அச் சிறுமிகளை தன் பாலியல் இச்சைகளை துய்க்கவும் பயன்படுத்தியிருக்கிறார். இவை எல்லாம் தெரிய வந்தது, அவ்வாறு அழைத்து வரப்பட்ட சிறுமிகளில் ஒருத்தி தான் தங்கவைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைடு வாயுக் கசிவால் உயிரிழந்த சோகம் நடைபெற்ற பின்புதான். இவை நடந்து தற்போது பத்து வருடங்களாகிவிட்டன. ரெட்டிகாருவும் எட்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது வெளிவந்து விட்டார்.

இதை போன்று பதிவர் வாஞ்சூர் அவர்கள் அமெரிக்கச் சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள் என்ற ஒரு இடுகை இட்டுள்ளார். அதன் மூலம் எப்படி சீனா மற்றும் தென்கிழக்காசிய ஏழைத் தொழிலாளர்கள் வால்மார்ட், கே மார்ட் போன்ற நிறுவனங்களால் அங்காடித்தெரு படத்தில் காட்டப்படுள்ளதைப் போன்று கசக்கிப் பிழியப்படுகிறார்கள்; மேலும் அவ்வாறு ஏழைத் தொழிலாளர்களை அழைத்து வருபவர்கள் அவர்களது சொந்த நாட்டு 'அண்ணாச்சிகளான' ஏஜண்டுகள் என்றும் தெரிய வருகிறது. அமெரிக்காவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச கூலி இவ்வளவு என்று கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் இதைவிடக் குறைவான சம்பளத்திற்கும் இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மெக்சிகோவிலிருந்து கலிபோர்னியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் மிகக் குறைந்த கூலிக்கும் வேலைக்கு வர சம்மதிக்கிரார்கள், அவர்களை இங்குள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

நம்ம ஊர் மென்பொருள் நிறுவனங்களும் இதில் சேர்த்தி. என்ன, மேலதிகாரிகளிடம் அங்காடித்தெரு பணியாளர்கள் மாதிரி அடியுதை வாங்குவது இல்லை என்பது தான் ஒரே வேறுபாடு. மற்றபடி வேலையில் கசக்கிப் பிழிவது, நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் குறைவாகக் கொடுப்பது, இரண்டுபேர் எனக் கணக்குக் காட்டி ஒருவரை வைத்தே வேலை வாங்குவது என அடுக்கிக் கொண்டே போகலாம். நம்நாட்டின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்கள் இதைபோன்ற காரியங்களை அமெரிக்காவிலும் செய்துவருகின்றன. ஆனால், பொதுவாக அமெரிக்கர்களினால் நடத்தப்படும் கம்பெனிகள் இவ்வாறு இல்லை எனச் சொல்லப்படுகிறது.

அதைப்போன்றே, என் துறையிலும், இந்தியாவில் ஆராய்ச்சி உதவியாளர்களாக சேர்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஒருவரையே இரண்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துதல் போன்ற எல்லா புறம்பான காரியங்களும் நடக்கின்றன. இது நல்கை வழங்குபவர்களுக்கும் தெரியும். ஆயினும் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள், ஏனெனில் அவர்களும் அப்படித்தான். கடந்த பத்து வருடங்களாக நான் வாங்கும் சம்பளமும் என் படிப்புக்கேற்ற சம்பளத்தைவிட கம்மிதான். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக நான், குறை சொல்லிக்கொண்டே, தொடர்கிறேன். அமெரிக்காவில் அத்தைகைய மோசடிகள் என் துறையில் எனக்குத் தெரிந்து இல்லை. இவற்றைவிட, நம்ம வீட்டில் வேலைக்கு வரும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் இருப்பதிலேயே குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு சம்மதிக்கும் ஆட்களைத்தான் நாம் சேர்க்கிறோம். அவர்கள் அதில் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நாம் பொதுவாக நினைத்துப் பார்ப்பதே கிடையாது. இதன் பிரம்மாண்டமான வடிவம்தான் அங்காடித்தெரு அண்ணாச்சிகள்.

தற்போதைய என் அறை நண்பனுடன் முன்னொரு சந்தர்ப்பத்தில் இந்தியாவில் ஏன் இத்தகைய அத்து மீறல்கள் நடக்கிறது என உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார், நம் நாட்டில் ஒரே வேலைக்கு நூறு பேர் போட்டிபோடுகிறார்கள்; அதனால் இது சகஜம் என்று. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தும். அங்காடித்தெரு அண்ணாச்சி சொல்லும் 'எச்சிக் கையை உதறினால் ஆயிரம் பேர் வருவார்கள்' என்ற யதார்த்தம். இது இனம், நாடு, மொழி, உறவு போன்ற அனைத்தையும் தாண்டியது. இயல்பான மனித ஆசை. ஏன் அமெரிக்கர்கள், எனக்குத் தெரிந்தவரை, பெரும்பாலும் இவ்வாறான உரிமை மீறல்களை (தற்போது) செய்வதில்லை. அவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. வெள்ளையின அமெரிக்கர்களும் அவர்களது மூதாதையர்களான ஐரோப்பியர்களுமே வரலாற்றில் அதிக மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியவர்களாக இருப்பர். அம்மனித சுரண்டல்கள் மற்றும் புதிய தேசமான அமெரிக்காவில் அவர்களுக்கு கிடைத்த எல்லையற்ற இயற்கை வளம் போன்றவை அவர்களை பொருளாதார வளர்ச்சியுறச் செய்தது. நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெற்றது. அடிப்படைத்தேவைகள் பூர்த்தியானதால் போட்டி குறைந்தது. எனவே அடிமட்டக் கூலி போன்ற மனித உரிமை மீறல்கள் அமெரிக்கர்களால் தன் சக நாட்டவர்களுக்கு நிகழ்த்தப்படுவது இன்று பெருமளவில் இல்லை. ஏனெனில் சக நாட்டவர் எவரும் அத்தைகைய வேலைக்கு வருவதில்லை. மேலும் மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட திட்டங்கள் கடுமையானதால் ஒருவகையான பயம் சராசரி அமெரிக்கனிடம் இருக்கலாம். ஆனால் நம்மவர்களுக்கு சட்டத்தை மீறுதல் ஒரு சாதாரண விஷயம். அதை அமெரிக்காவிலும் சென்று சிலர் செய்கின்றனர், மாட்டிக்கொள்ளாதவரை பிரச்சனை இல்லை என்ற வகையில்.

எல்லா நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் இத்தகைய அவலங்கள் நடக்காது என அனுமானிக்க முடியுமா? இது முதலாளித்துவ பொருளாதாரத்தின் பக்க விளைவா? மார்க்சியம் இதற்குத் தீர்வா? இவற்றை என்றாவது மனித சமூகத்திலிருந்து அகற்ற முடியுமா? தெரியவில்லை. காந்திய பொருளாதாரமும், காந்திய அறிவியல் தொழில் நுட்பமும் ஓரளவிற்காவது இத்தகைய அவலங்களை குறைக்கும் என்பது என்னுடைய எண்ணம். மனிதன் ஆசையை ஒழித்தால் இவற்றையும் வென்றெடுக்கலாம். ஆயினும் அது நடைமுறைச் சாத்தியமா?!

இவ்வகையிலேனும் சிந்திக்க வைத்த அங்காடித் தெருவிற்கு நன்றி.

வியாழன், 1 ஏப்ரல், 2010

சுப்ரமணிய பாரதியும் சில பழக்க வழக்கங்களும்

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையத்தில் தான் எடுத்த பாரதியைப் பற்றிய விவரணப் படத்தை திரு. அம்ஷன் குமார் திரையிட்டார். அதில் அவர் பாரதியாருடன் பழகியவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து பாரதியார் குறித்த அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர் அந்த ஆவணப்படத்தை எடுத்தபோது அப்பெரியவர்கள் தொண்ணூறு வயதைத்தாண்டி விட்டிருந்தார்கள். ஆனால் பாரதியுடன் பழகும்போது அப்பெரியவர்களுக்கு பதினைந்து வயதிற்குள் தான் இருந்திருக்கிறது. அவ்விவரணப் படத்தை எடுத்த விபரம் பற்றியும் குறிப்பாக அவ்விரு பெரியவர்களைச் சந்தித்தது பற்றியும் அம்ஷன் குமார் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை அழியாச் சுடர்கள் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

நான் அப்படத்தை பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இக்கட்டுரையை வாசித்ததும் படக் காட்சிகள் என் கண் முன் விரிகின்றன. நவீன தமிழின் ஆகப் பெரும் கவியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் சிலவற்றை குறித்து அறிய அம்ஷன் குமாரின் விவரணப் படமும், இக்கட்டுரையும் சிறந்த சான்றாகும். கட்டுரையை வெளியிட்ட காலச் சுவடு இதழுக்கும் அதை மறுபிரசுரம் செய்த அழியாச் சுடர்கள் வலைத் தளத்திற்கும் நன்றி. பாரதியின் போதை பழக்கங்கள் ஏற்கனவே அறிந்தவைதான் எனினும் அதை பார்த்தவர்களின் நேரடிச் சாட்சியம் ஒரு மிகச் சிறந்த சான்றாதாரம் தானே. அதை ஆவணப்படுத்தாவிடில் பிற்காலத்தில் பாரதியார் ஒரு தெய்வப் பிறவியாகச் சித்தரிக்கப் படுவார். அதை உறுதிப்படுத்துவதுபோல் அவ்விவரணப் படம் முடிந்தவுடன் பாரதிய ஜனதாக் கட்சியின் இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் சென்று பாரதியின் போதைப் பழக்கவழக்கங்கள் குறித்த காட்சிகளை நீக்கிவிடுமாறு சொன்னார். அவரது வாதம், பாரதி போன்ற ஆளுமைகளின் தவறான பழக்க வழக்கங்களை குறிப்பிடுவதின் மூலம் அவர்களைச் சிறுமைப் படுத்துகிறோம் என்பதும், மேலும் பாரதி குறித்து எதிர்மறை விமரிசனம் வைப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆதாரத்தை அளிக்கிறோம் என்பதுமாகும். அம்ஷன் குமார் அதை ஆதரிக்கவில்லை. நானும் அம்ஷன் குமாரிடம் இப்படத்தைப் பார்த்தபின் எனக்கு பாரதியின் மேலுள்ள மதிப்பு அதிகமாகி உள்ளதே தவிர குறையவில்லை என்று சொன்னேன். இக்கட்டுரையில் அம்ஷன் குமார் அவருக்கு பலரிடம் இருந்தும் பாரதியின் போதை பழக்க வழக்கக் காட்சிகளை நீக்கிவிடும்படி வேண்டுகோள் வந்ததைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் ஞான ராஜசேகரன் எடுத்த பாரதி திரைப்படத்தைவிட (இளையராஜாவின் இசையைத் தவிர்த்து) அம்ஷன் குமாரின் விவரணப் படம் மிகுந்த வீச்சுடையது. விவரணப் படத்தையும், திரைப்படத்தையும் ஒப்பிடக் கூடாதுதான், ஆயினும் பாரதி போன்ற ஆளுமைக்கு அத்திரைப்படத்தைவிட விவரணப் படமே பெருமை சேர்க்கிறது என்பது என் புரிதல். இதன் குறுந்தகடுகளை அம்ஷன் குமார் அந்நிகழ்வில் பலருக்கும் நுறு ரூபாய்க்கு விற்றார். என் முறை வரும்போது காலியாகிவிட்டது. பணத்தைக் கொடுத்துவிட்டு நானே அவர் வீட்டில் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு எதற்கு சிரமம் என்ற நல்லாசையில்தான். என் சோம்பேறித்தனத்தால் போகவேயில்லை. அவரும் ஒருமுறையோ இருமுறையோ என்னை தொடர்புகொண்டார். தபாலில் அனுப்பட்டுமா எனக் கேட்டார். இல்லை நானே வருகிறேன் என்று சொன்னேன். பின்னர் அவரும் அழைக்கவில்லை, நானும் அதை மறந்தேபோய்விட்டேன். வேறு எங்காவது கிடைத்தால் வாங்கிவைக்க வேண்டும்.

இதை எழுதும்போது, எண்பதுகளில் எனது பெரியப்பா வீட்டிற்கு கடையம் சென்றபோது அவரது வீட்டிற்கு நேர் எதிரே தபால் அலுவலகமாக இயங்கிக் கொண்டிருந்த வீடுதான் பாரதியார் வீடு என்று எனது பெரியப்பா சொல்லி அவ்வீட்டை அதிசயமாகப் பார்த்திருக்கிறேன். அப்போது என் கையில் புகைப்படக் கருவி இல்லையே என இப்போது நினைக்கையில் வருத்தமாக உள்ளது. அன்று நான் கடையம் ஜம்பு நதி மணல் பரப்பில் ஏகாந்தமாக நடந்ததும் கூடவே நினைவிற்கு வருகிறது.

செவ்வாய், 9 மார்ச், 2010

தேவர் மகன் - சில நினைவு மீட்டல்கள்

மிகச் சமீபத்தில் தேவர் மகன் படத்தின் இந்த காணொளிக் காட்சித் துண்டை யுடியுப்பில் பார்த்தேன். இதன் இறுதிப் பகுதியில் வரும் அந்த வசனங்களைக் கேட்டபோது என்னால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் என் காதலியைக் கைப்பிடிக்க என் அப்பாவிடம் இதே போன்று என் சாதியையும் அவர்களின் சாதியையும் ஒப்பிட்டு நமக்கு நிகரானவர்கள் என்று பேசியிருக்கிறேன். சிவாஜி கடைசியில் கேட்பது போலவே என் அப்பாவும் 'என் கிட்ட இப்ப நீ அனுமதி கேட்கிறாயா இல்ல தகவல் சொல்றியா' என்ற ரீதியில் கேட்டிருக்கிறார். ஆனால், பெரிய தேவர் சற்று விசால மனம் படைத்தவராக இப்படத்தில் காட்டப்பட்டிருப்பார். என் அப்பா யதார்த்தத்தில் சற்று குறுகிய மனம் படைத்தவர். அவர் அவ்வாறு இருப்பதற்கான சூழ்நிலையை நல்லவேளையாக நான் புரிந்துகொண்டு பொறுமை காத்ததினால் எங்கள திருமணம் பின்னர் இனிதே நடந்தது.

இப்படம் நான் திருநெல்வேலியில் படிக்கும்போது வெளிவந்தது. எங்கள் அறையில் இருந்த அறுவரில் நாங்கள் மூவர் கமலின் ரசிகர்கள். இரண்டு பேர் ரஜினி ரசிகர்கள். ஒருவன் இதில் எதிலும் அவ்வளவு நாட்டமில்லாதவன், ஆனால் அவனுக்குக் கமலைப் பிடிக்கும். பொதுவாக இப்படி அமைவது அபூர்வம். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் ரஜினி ரசிகர்களே அதிகமிருப்பர். நான் ஆறாங் கிளாஸ் படிக்கும்போது ஒருமுறை ப்ரெண்ட்ஸ் க்குப் பயந்து ரஜினி ரசிகராகக் கூட மாறியிருக்கிறேன். அப்பொழுது 'எனக்குள் ஒருவனும்', 'தங்கமகனும்' வெளியாகியிருந்த நேரம். என்னுடைய இந்த பச்சோந்தித்தனம் குறித்து பிற்பாடு நிறைய வருடங்களுக்கு எனக்கு என்மேலேயே வருத்தம் இருந்து வந்தது.

தேவர் மகனுக்கு ஒரு வருடம் முன்பு குணா வந்தது. வந்த சில நாட்களிலேயே ரத்னா தியேட்டரிலிருந்து அதைத் தூக்கிவிட்டார்கள். குணா வந்த ஆறாவது நாள் நாங்கள் படம் பார்க்கப் போனோம். ரத்னா தியேட்டர் வாசல் காவலாளி, 'கமல் இன்டெர்வலுக்குப் பிறகு காட்டில கிடந்து கத்துதான்' இதப் போய் பாக்க வந்துட்டேளே என்று சொல்லி வெறுப்பேற்றினார். ரூமிலிருந்த தேவர் சாதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான நண்பனோ ரத்னா தியேட்டரில் டிக்கெட்டோட வடையும் சேர்த்துத் தருகிறார்கள் என்று கடுப்பை கிளப்பிட்டிருந்தான். அதனால் நாங்கள் தேவர் மகனை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். அப்போ பாண்டியனும் வெளியாகவிருந்தது. தினமலரில் இருவரது ப்ளோவப் போட்டிருந்தார்கள். எங்கள் அறையில் இரண்டையும் ஒட்டி வைத்திருந்தோம்.

படம் பார்ப்பதிற்கு முன்னாடியே ஒருநாள் 'பழையது ஒதுங்குது புதியது பிறந்தது ஹர ஹர பரமசிவமே' எனத் தொடங்கும் பாடலை கேட்டு கமலைப் புழுதி வாரித் தூற்றிக்கொண்டிருந்தோம் - இவனுக்கு அறிவே கிடையாது. பணம் சம்பாதிக்கவேத் தெரியவில்லை. ரஜினியப் பாரு எப்படி இருக்கான் என்ற ரீதியில் எங்களது விமரிசனம் சென்று கொண்டிருந்தது. பின்னர் படமும், அப்பாடல் படத்தோடு ஒன்றியிருந்த விதமும் எங்களுக்குப் பிடித்திருந்தது. தேவர் ஜாதியைச் சேர்ந்த, ரஜினி ரசிகனுக்கும் அப்படம் மிகவும் பிடித்து விட்டது. எங்க ஐயாவும் நல்லா இருக்கு என்று சொன்னதாக அவன் கூறினான்.

இரண்டாவது முறையாகச் சென்ட்ரல் தியேட்டரில் படம் பார்க்கும் போது எங்கள் பின்வரிசையிலிருந்த ஒரு ஆள் திடிரென்று எழுந்து 'ஏல இது தேவமார் படம்ல, பிள்ளமார்லாம் இதப் பார்க்ககூடாது' என்று கத்திக்கொண்டே வெளியே போய்விட்டார். மூன்றாவது முறையாக திருச்சி மாரிஸ் திரையரங்கில் இப்படத்தை இரண்டாவது ஆட்டத்தில் பார்த்தேன். அப்போது ஒரு கருத்தரங்கிற்காக திருச்சி சென்றிருந்த நான் ஜமால் முகம்மது கல்லூரியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊர் நண்பருடன் சேர்ந்து பார்த்தேன். மாரிஸ் தியேட்டரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கு ஒரு காரணம். அப்பல்லாம் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இத்தனைக்கும் நான் அதிகம் படம் பார்க்கமாட்டேன். படத்தின் பாதியிலேயே மிகு களைப்பால் தூங்கிவிட்டேன். பின்னர் சே எவ்வளவு அருமையான படம் இப்படித் தூங்கிவிட்டோமே என்ற எண்ணம் வந்தது.

அப்போவெல்லாம் கமல் வழியாகவே எனக்கு சிவாஜியைப் பிடிக்கும். என் அறையிலிருந்த அந்த மூன்றாவது வகையைச் சேர்ந்த நண்பனும் கமல் போய் சிவாஜியை மிகப் பெரிய நடிகர் என்று சொல்கிறானே என்ற ரீதியில் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் தான் நடிப்பில் ஈடு இணையற்றவன் என்பதைச் சிவாஜி இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். நடிப்பென்றே தெரியாத அளவிற்கு மிக யதார்த்தமாக இருக்கும். சிவாஜியுடன் ஒப்பிடும்போது கமலின் நடிப்பு இப்படத்தில் குறைவுதான். பல இடங்களில் சிவாஜியுடன் நடிக்கிறோம் என்ற பயத்தினாலோ அல்லது மரியாதையின் பொருட்டோ இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளில் சற்று மிகைப்படுத்தி கமல் நடித்திருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.

பி.சி. ஸ்ரீராம் சற்று மிகையாகவே கேமிராவைக் கையாண்டிருப்பதாகத் தோன்றும். பல காட்சிகளில் தேவர் வீட்டைக் காண்பிக்கும் போது ஒருவிதமான மஞ்சள் வெளிச்சம் பின்புறம் வருவது படத்தின் அழகியலுக்கு வேண்டுமென்றால்
பயன்பட்டிருக்கலாம், ஆனால் யதார்த்தமாகவில்லை என்பது என் எண்ணம். பாரதி ராஜாவின் படங்களிலேயே தேவர்களின் வீடுகள் யதார்த்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். மற்றபடி கமலின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகவே இன்றும் இப்படம் திகழ்கிறது. எனக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். இப்படம் சொல்லும் சேதி தெளிவானது, அது வன்முறையைத் தேவரினம் கைவிட வேண்டுமெனச் சொல்லாமல் சொல்கிறது. இது குறித்து அ. ராமசாமி அவர்கள் தெளிவாகவே அப்பொழுது ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் தேவர் மகன் படமே தொன்னூறுகளின் இறுதியில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கியமான காரணம் என்ற ரீதியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதில் உண்மையில்லை என்பதே என் எண்ணம்.

திங்கள், 17 செப்டம்பர், 2007

ஞான ராசசேகரனின் பெரியார்...

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.

தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.