திங்கள், 17 செப்டம்பர், 2007

ஞான ராசசேகரனின் பெரியார்...

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.

தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.