ஞாயிறு, 16 அக்டோபர், 2016

பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வனை கடந்த சில  வருடங்களாகப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  ஆயினும் தள்ளிப்போய்க்கொண்டேயிருந்தது. பலமுறை புத்தகத் திருவிழாக்களில் வாங்கவேண்டும் என்று கையிலெடுத்து பின்னர் வேண்டாம் என்று வைத்திருக்கிறேன்.  மலிவு விலைப்பதிப்பில் கூட வாங்கவேண்டாம் என்று விட்டுவிட்டேன்.  கிட்டத்தட்ட  20 வருடங்களாக நவீன தமிழலக்கிய வாசகன் என்பதால் பொன்னியின் செல்வனை வாசிக்கவே கூடாது என்று சங்கல்பம் எல்லாம் செய்துவைத்திருந்த காலங்கள் உண்டு. ஆயினும் கடந்த சில வருடங்களில் இவ்வெண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்து வந்தது. என்ன இருந்தாலும் வெகுஜன திமிழின் முதன்மையான வரலாற்றுப் புதினம் என்பதால் படித்துத்தான் பார்ப்போமே என்ற எண்ணம் கருக்கொண்டு வலுத்ததே  இம்மாற்றத்திற்குக் காரணம். ஆகவே சில மாதங்களுக்கு முன்பு என் திறன் செல்பேசியில் மிகச் சொற்ப விலைக்கு நாவலின் ஐந்து பாகங்களையும் தரவிறக்கி வைத்திருந்தேன். அதை கடந்த சரஸ்வதி பூஜை விடுமுறையில் படித்து முடித்தேன்.

இது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்கதையாக  வெகுசன வாசகர்களுக்காக எழுதபட்டது என்ற எண்ணத்துடனேயே படிக்கத் தொடங்கினேன். ஆயினும் வரலாற்றில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவன் ஆதலால் விரைவிலேயே நாவல் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.   கிட்டத்தட்ட 2000 பக்கங்கள் கொண்ட மொத்த நாவலின் கதை நடைபெறும் காலமே வெறும் 10 மாதங்களுக்குள்தான். வந்தியத்தேவன் வீராணம் ஏரியின் கரையில் குதிரையில் ஆடிப்பெருக்கன்று பிரவேசிப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிற்காலச் சோழர்களில் இரண்டாம் பராந்தகர் என்ற சுந்தர சோழனின் இறுதிக்காலத்தில் நடப்பதாக புனையப்பட்ட கதை. அவரது  மூத்தமகன் ஆதித்த  கரிகாலன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துபோவது, கரிகாலனின் சித்தப்பா மதுராந்தகன் எனும் உத்தம சோழன், பொன்னியின் செல்வன் என்ற அருண்மொழித்தேவர் அரசுரிமையை விட்டுக்கொடுத்ததால் (!?), இளவரசுப் பட்டம் ஏற்றுக்கொள்வது வரை உள்ள காலப்பகுதியே நாவலின் கதைக்களம். பிற்காலச் சோழ வரலாற்றில் இக்காலகட்டம் இன்னும் தெளிவில்லாதகவே உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். ஆகவே கல்கி இக்காலகட்டத்தையே தனது புனைவுக்கு எடுத்துக்கொண்டதில் அவரது மேதைமை உள்ளது. ஆயினும் அதை அவர் எவ்வளவு தூரம் படைப்பூக்கத்துடன் (வெகுஜன நோக்கில்) புனைவாக்கியிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

நாவலின் முதல்பகுதி மிகுந்த சுவராசியமாக செல்கிறது. ஏற்கனவே சற்று அவநம்பிக்கையுடன் தொடங்கியதால் ஒருவேளை நவீன தமிழிலக்கியவாதிகள் பொன்னியின் செல்வனை இலக்கியமாக அங்கீகரிக்க மறுத்து தவறு செய்கிறார்களோ என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. அதற்கான தடயங்கள் சில முதல் பகுதியில் ஆங்காங்கே தென்பட்டன. பழுவேட்டரையரின் படைவீரர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களும், வேளக்காரப் படையினர் எளிய மக்களிடம் வம்புகள் புரிவதாக புனையப்பட்டுள்ள பகுதிகளும் இன்னும் சில இடங்களிலும் நவீன தமிழிலக்கியத்தின் தடங்களை ஆசிரியர் நினைவுறுத்துகிறார். ஆயினும் போகப்போக ஆசிரியரின் படைப்பூக்கம் வெறும் கேளிக்கை எழுத்தாகப் பல்லிளிக்கிறது. நாவலின் அய்ந்தாம் பாகம் மிகவும் அற்பத்தனமாக உள்ளது. ஒருவகையில் இன்றைய தொலைக்காட்சி நெடுந்தொடர்களின்  மூலவித்து பொன்னியின் செல்வன் நாவல் என்றால் அது மிகையில்லை. நாவலை எப்பாடுபட்டாகிலும் இழுக்கவேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணத்தால் அருவெறுப்பின் உச்சத்துக்கே செல்கிறார் கல்கி. சில நேரங்களில் சினிமா பார்க்க திரையரங்கு சென்று வேறுவழியில்லாமல் அவலமான சினிமாவின் கடைசி பாகம் வரை இருந்து பார்த்துவிட்டு வருவோமே அதுபோல் எப்படித்தான் இந்நாவலை முடிக்கிறார் கல்கி என்ற தவறான ஆர்வத்துடனே இந்நாவலை படித்து முடித்தேன்.

வெகுஜன வரலாற்று புனைவுகளுக்கும் ஒரு தரம் வேண்டும் அல்லவா. பொன்னியின் செல்வன் அத்தரத்தை பல இடங்களில் தவறவிடுகிறது. ஒருவேளை தொடர்கதையாக இல்லாமல் ஒரு முழுமையான நாவலாக கல்கி இதை எழுதியிருந்தால் அத்தரம் கூடிவந்திருக்கலாம்.