ஞாயிறு, 18 டிசம்பர், 2005

தமிழகத்தை அலைக்கழிக்கும் ஊடகப் புயல்கள்

வங்கக் கடலில் தொடர்ச்சியாக ஏற்படும் புயல் சின்னங்களால், தமிழகம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இயற்கையின் இந்தப் பேரழிவை, எப்படியாவது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதி, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளால் நடத்தப்படும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் பற்றி வெளியிடும் செய்திகள் சகிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இன்று அதிகாலை சென்னை எம்ஜியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் 42 உயிர்கள் பலியான சம்பவத்தை இவ்விரு ஊடகங்களும், அதன் பின்னணியிலுள்ள தலைவர்களும் பயன்படுத்திக்கொள்ளும் முறை அவைகளின் அசிங்கமான செயல்பாட்டிற்கு உச்சகட்ட உதாரணம்.


சென்ற திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில், தாம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற ஒரே காரண்த்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டது ஜெயா தொலைக்காட்சி. அதுபோன்றே தினபூமி என்ற நாளிதழும் அதிமுகவிற்கு ஆதரவாக அப்போது தொடர்ந்து செய்திகளை தயாரித்து வழங்கியது. அதுபோன்றதொரு வேலையையே, இப்போது சன் தொலைக்காட்சியும், தமிழ் முரசு மாலையிதழும் செய்துவருகின்றன. மத்திய அரசு வழங்கும் வெள்ள நிவாரண உதவித்தொகையை, அதிமுக அரசு வரப்போகும் அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் பெறுவதற்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என கருணாநிதி சன் தொலைக்காட்சியில் சொல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, இன்றைய அசம்பாவிதம் யாரோ சில விஷமிகளின் பொய்ப்பிரச்சாரத்தினால் தூண்டப்பட்டது என ஜெயா தொலைக்காட்சியில் கூறுகிறார். அதிகாரப் போட்டியிலுள்ளவர்கள் இவ்வாறு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு உலகம் தழுவியது என்றாலும், தமிழகத்தில் இன்று நடப்பது கடைந்தெடுத்த கேவலம். இவ்விரண்டு கட்சிகளும், அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் செய்யும் சீரழிவிற்கு என்றுதான் சாவுமணி அடிக்கப்படுமோ?

செவ்வாய், 6 டிசம்பர், 2005

அறிவியலின் வெற்றி

அமெரிக்க நீதிமன்றமொன்று அமெரிக்கப் பள்ளிகளில் அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent design) என்ற மத நம்பிக்கை அடிப்படையிலான கோட்பாட்டை, பரிணாமக் கோட்பாட்டிற்கு மாற்றாக பாடமாக வைப்பதைத் தடைசெய்துள்ளது. இது ஒரு முக்கியமான தீர்ப்பாகும்.

பரிணாமக் கோட்பாடு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் பரிணாமத்தால் உருவானவையே என்பதற்கு நம் கண்முன்பு பல்வேறுவிதமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அதனால் இன்னும் சில விளக்கமுடியாத பகுதிகள் உள்ளன. உதாரணமாகச் சடப்பொருள்களிலிருந்து முதல் உயிர் எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் இன்னும் தெளிவாக விளக்கமுடியவில்லை. அதாவது டார்வினின் கூற்றுபடி, தகுந்த சூழ்நிலைகள் உருவானபோது (A warm little pond ...) இவ்வுலகில் முதல் உயிரி தோன்றியிருக்கலாம் என நம்மால் யூகிக்கமுடிகிறதே ஒழிய, அறிவியலாளர்களால் இன்னும் சோதனைச்சாலையில் ஒரு உயிரை உருவாக்கிக் காண்பிக்கமுடியவில்லை. இதத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மத நம்பிக்கைவாதிகள், இவ்வுலகமும், அதிலுள்ள உயிர்களும், மனிதனால் அறியவேமுடியாத அதி அறிவுகொண்ட ஒருவரால் படைக்கப்பட்டது எனக்கூற ஆரம்பித்தனர். அதற்கு அறிவார்ந்த வடிவமைப்பு எனவும் பெயரிட்டனர். மேலும், அக்கோட்பாட்டை பரிணாமக் கோட்பாட்டிற்கு மாற்றாக பள்ளிகளில் போதிக்கவேண்டும் எனவும் வாதிட்டும் வந்தனர். (நம்மூர் வேதிக் மேத்தமேடிக்ஸ் மாதிரி) அமெரிக்க பென்சில்வேனிய மாகாணத்தில் தங்களால் நடத்தப்பட்டுவரும் ஒரு பள்ளியில் இதைப்புகுத்தவும் செய்தனர். அவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு சாட்டையடி. இத்தீர்ப்பளித்த நீதிபதியின் கூற்று மிகவும் சிந்திக்கக்கூடியவகையில் அமைந்துள்ளது. அதாவது, பரிணாமம் பற்றிய அறிவியல் கோட்பாடு முழுமையடையவில்லை என்பதற்காக 'அறிவார்ந்த வடிவமைப்பை' அறிவியலுக்கு மாற்றாகக் கருதமுடியாது என்பதுதான் அவரது தீர்ப்பின் சாராம்சம். இது பற்றி மேலும் விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்.

வெள்ளி, 2 டிசம்பர், 2005

சச்சின் டெண்டுல்கரும் அவதூறும்?!

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சச்சின் மேல் ஒரு ஆதங்கம் / கோபம் உண்டு. அதாவது, அவர் இந்தியா இக்கட்டான நேரங்களில் இருக்கும் போது சரியாக விளையாடுவதில்லை. ஒருதின ஆட்டங்களிலும், டெஸ்ட் போட்டிகளிலும், நம் அணி சேஸ் செய்யும்போது விரைவில் ஆட்டமிழந்து விடுவார். நாம் முதலில் மட்டை பிடிக்கும் போதோ அல்லது டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் மட்டுமே அதிக ரன் சேர்ப்பார்; நெருக்கடி நேரங்களில் கைவிட்டு விடுவார். ஆனால் மற்ற வீரர்கள் லாரா, காலிஸ், இன்சமாம், திராவிட் ஆகியோர் நெருக்கடி நேரங்களிலேயே நன்றாக விளையாடுகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உண்டு. சில நாட்களுக்கு முன்பு தமிழ்மணத்திலேயே ஒருவர் இத்தகைய பதிவினை எழுதியிமிருக்கிறார். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை? இன்றைய cricinfo வலைத்தளத்தில் இது குறித்து புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள். ஆனால் கட்டுரையாளர் ஏன் 2002 லிருந்து இன்று வரை நடைபெற்ற ஆட்டங்களை மட்டுமே தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ளார் என்பதுதான் தெரியவில்லை.

செவ்வாய், 22 நவம்பர், 2005

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அலட்சியம் / அறிவீனம்

இன்று (22/11/2005) சென்னையில் நடைபெறவிருந்த இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவ மழைக்காலம்; இம்மாதங்களில் எந்த நாளிலும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் தொடர்ந்து கடந்த மூன்று முறைகளாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, அது பின்னர் மழையால் ரத்து செய்யப்படுவது கேலிக்கூத்து. எத்தனையோ ஆட்டங்கள் சென்னயைத்தவிர இந்தியாவின் பிற நகரங்களில் மற்ற 10 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றையேனும் சென்னையில் நடத்தாமல் மிகச் சரியாக இந்த இரு மாதங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்வது வாரியத்தின் அலட்சியமா அல்லது அறிவீனமா. (நல்ல பட்டிமன்ற தலைப்பு!!!)

சனி, 19 நவம்பர், 2005

இது என் முதல் தமிழ் வலைப் பதிவு

வணக்கம்! வாழிய நலம் சூழி!

தமிழில் வலைப்பூ ஆரம்பிக்கவேண்டும் என்ற என் நெடுநாளைய கனவு இப்போதுதான் நனவாகிறது. (வலைப்பூ / வலைப்பதிவு இரண்டில் எது சரி?) அதற்காக வீட்டில் ஒரு கணிணியும், இணையத் தொடர்பிற்கு ஒரு தொலைபேசி இணைப்பும் வாங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்போதுதான் நான் சோம்பேறித்தனம் என்னும் போர்வையை விலக்கி துயில் எழுந்துள்ளேன். இதுவரை நான் படித்த நாவல்களிலேயே எனக்குப் பிடித்த நாவலின் பெயரான 'ஒரு புளியமரத்தின் கதை'யையே என் வலைப்பதிவிற்கும் பெயராக வைத்துள்ளேன். அந்த நாவல் மட்டுமல்ல, அதை எழுதிய சுந்தர ராமசாமியையும் (சு.ரா) ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாது ஒரு சிந்தனாவாதியாகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது.

முதலில் இந்த வலைப்பதிவை ஆங்கிலத்தில் தான் ஆரம்பித்தேன். (இதைத் தமிழில் ஆரம்பிப்பதற்கு நண்பர் பகுத்தறிவாளர் உதவி புரிந்தார்) அதில் சு.ரா வின் மரணம் குறித்து (அ) அவருக்கு நடைபெறும் அஞ்சலிக் கூட்டங்கள் குறித்து அறிவித்த வலைப்பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தேன். அவைகளை மீண்டும் இங்கு தருகிறேன்.

இந்த வலைப்பதிவில் எனக்கு அவ்வப்போது தோன்றுவதையும், படித்ததையும் பற்றி எழுதலாமெனயிருக்கிறேன். அவ்வப்போது எனக்குப்பிடித்த சு.ரா.வின் மேற்கோள்களையும் இடுவேன். இதை ஆரோக்கியமான ஒரு விவாதக் களமாக்கவும் ஆசையுண்டு. வாருங்கள் விவாதச் சமர் புரிவோம்.

பேரன்புடன்
தங்கவேல்

உயிர்மை: சுராவின் மறைவும் இருப்பும்