பக்கங்கள்

சனி, 15 செப்டம்பர், 2007

அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்

ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக இரண்டு அறிவியலாளர்கள் இடைநீக்கம் செய்ய்ப்பட்டுள்ளர்கள். ராமாயணம் ஒரு புராணம். ஆனால், அது இந்திய மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட ஒரு விசயம். இவ்விசயம் குறித்து அறிவியல் அறிக்கை அளிக்கும் பொழுது, ராமர் என்ற 'அவ்வளவு பெரிய ஆகிருதி' வாழ்ந்து மறைந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதபட்சத்திலும், தொல்பொருள் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கவேண்டும்.

ராமர் பாலம் எனச் சொல்லப்படும் அந்தப்பகுதி ராமரால் கட்டப்பட்டது அல்ல மாறாக அது இயற்கையாய் அமைந்த ஒரு அமைப்பு என்று என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால்கூட, இவ்வளவுதூரம் பிரச்சனையாகியிருக்காது. (இந்துத்துவவாதிகள் அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம்). ஆனால் ராமரே வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறும்போது, பெரும்பான்மையான இந்துக்களுக்களின் உணர்வு மற்றும் சிறுபான்மை இந்துத்துவவாதிகளின் பிழைப்பின் அடிமடியிலேயே கைவைப்பதாகும். இதை அரசு தவிர்த்திருக்கலாம்.

இந்த அறிக்கை, அறிவியல் என்னும் உச்சாணிக்கொம்பிலிருப்பதாக நினைத்துக்கொன்டு, வெகு மக்கள் நம்பிக்கைகளிலிருந்து - அது தவறாகவேயிருந்தாலும், வெகுதூரம் சென்றுவிட்ட சில அறிவியலாளர்களின் முந்திரிக்கொட்டைத்தனத்தால் ஏற்பட விளைவு என்பதே என் எண்ணம். அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும்போது மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இதைத்தான் சொந்தச் செலவில் அரசே தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது என்பதோ?! (சூனியம் வைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலுங்கூட)

1 கருத்து:

  1. அறிவியல் அறிஞர்கள் என்று அறியப்படுவோர் அனைவரும் அறிவியலை ஒரு மூட நம்பிக்கைகள் நிறைந்த மதத்தைப் போல வழிபட ஆரம்பித்து விட்டனர்.

    அறிவியல் என்ற மத நம்பிக்கையின் முன் இவர்களது பகுத்தறிவு செயல்பட மறுக்கிறது.

    இது அதிக கேடுகளை விளைவிக்கும் இடம் வேளாண்மையும், மருத்துவமும்.

    கேட்கப்படாத கேள்விகளுக்கு பதில் அளிப்பது இத்தகைய விளைவையே ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு