பக்கங்கள்

அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

அஞ்சலி - மருத்துவர் தெய்வநாயகம்


என் மூத்த சித்தமருத்துவ நண்பர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களால் தொடங்கப்பெற்று இன்றுவரை வெற்றிகரமாக நடத்தப்படும் கற்ப அவிழ்தம் இதழ் 1992 - ஆம் ஆண்டில் ஆஸ்த்துமா சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதில் அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நெஞ்சக நோய் துறைப் பேராசிரியராக இருந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் ஒரு நீண்ட நேர்காணல் அளித்திருந்தார். அப்போது நான் பாளை சித்தமருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். ஒரு ஆங்கில மருத்துவர், அதுவும் சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவ்வாறு சித்த மருத்துவத்தின்பால் நம்பிக்கை கொண்டிருந்தது எங்கெளுக்கெல்லாம் மகிழ்ச்சியளித்தது. அதன்பின் 1995 இறுதியில் நான் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்காக வந்தபோது என் நண்பர் மருத்துவர் சிவராமன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆஸ்த்துமாவிற்கு சித்த மூலிகைகள் என்ற கருதுகோளை ஆராய்ந்துகொண்டிருந்தார். அவருக்கு மருத்துவர் தெய்வநாயகம் தான் வ்ழிகாட்டுநர். அவ்வாராய்ச்சி இழுத்துக்கொண்டே சென்றது. சிவராமன் தெய்வநாயகத்தைப் பார்ப்பதற்கே அஞ்சி நடுங்கிய காலமது. சிவராமன் மூலம் நான் தெய்வநாயகம் அவர்களின் குணநலன்களை அறிந்திருந்தேன்.

இதற்கிடையில் தெய்வநாயகம் அவர்கள் தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றத்தொடங்கினார். அங்கு காசநோய் கண்ட நோயாளிகள் மட்டுமல்லாது, தேய்வு நோய் (AIDS) கண்ட நோயாளிகளையும் அனுமதித்து சிகிழ்ச்சையளித்து வந்தார். அக்காலங்களில் உலகிலேயே தேய்வு நோய்க்கு மிக அதிகமானோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிழ்ச்சை பெற்று வரும் மையங்களில் ஒன்றாக தாம்பரம் சானடோரியம் திகழ்ந்தது. அங்கு தேய்வு நோய்க்கு பெரும்பாலும் சித்த மருந்துகளையே அவர் பரிந்துரைத்து வந்தார். தேய்வு நோய் கண்டவர்கள் சித்தமருத்துகள் சாப்பிட்டபின் நன்றாக தேறிவருவதாகவும், அந்நோயினைச் சித்த மருந்துகள் பெருமளவில் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தமிருந்தன. இப்போது டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் எப்படியோ, அப்போது தேய்வு நோய்க்கு ரசகந்தி மெழுகு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் நோய்ப்பரவியல் துறையில் முதுகலை பயின்று கொண்டிருந்தேன். வார இறுதிகளில் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், சிவராமனும் மற்ற நண்பர்களும் தெய்வநாயகம் அவர்களின் இம்முயற்சி குறித்து அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு. சிவராமனும் அவருடன் ஓரளவு நெருக்கமாகிவிட்டார். தெய்வநாயகம் நோயாளிகளிடம் கனிவாகவும், தன் வேலையச் சரிவரச் செய்யாத மருத்துவமனை ஊழியர்களை மிகக் கண்டிப்பாகவும் நடத்தும் விதம் குறித்து சிவராமன் சொல்வதுண்டு.  என்னுடைய இரண்டாமாண்டு முதுகலைப் படிப்பு பகுதிநேரமென்பதால் 1998-ல் ஆற்காடு அருகில் இசையனூர் கிராமத்தில் பாரதியம்மாள் வைத்திய சேவா கேந்திரத்தில் சித்த மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது இலவச மருத்துவமனை என்பதாலும், என் மேல் ஒரு நல்லபிப்பிராயம்  ஏற்பட்டதாலும் பல ஊர்களிலிருந்தும் பெருமளவு நோயாளிகள் அங்கு வருவர். அவற்றுள் தாம்பரத்திற்குச் சென்று தெய்வநாயகத்திடம் சிகிழ்ச்சை பெற்று பின்னர் அங்கு தொடர்ச்சியாக செல்லமுடியாமல் இசையனூர் வரும் நோயாளிகள் சிலர் உண்டு. தெய்வநாயகத்தை அவர்கள் மிகவும் சிலாகித்துச் சொல்வதுண்டு. அதில் ஒருவர் ஒருமுறை நோயாளிக்கு சரிவர மருத்துவம் பார்க்காத மருத்துவரை தெய்வநாயகம்  எங்கள் முன்பே அறைந்துவிட்டார் என்றார்.

பின்னர் 1999-ல் சவேரா ஹோட்டலில் நடைபெற்ற தேய்வுநோய்க் கருத்தரங்கு ஒன்றில் தெய்வநாயகம் சானடோரிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கட்டுரை வாசித்தார். எனக்கு அவர் அதில் இன்னும் சற்று சிறப்பாக அறிவியல் முறைமைகளை கையாண்டிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் சிவராமன் மூலம் அவருக்கு புள்ளியியல் முறைமைகளில் அதிக ஆர்வமில்லை எனத்தெரிந்து கொண்டேன். ஓய்வு பெற்றபின் எழும்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் மருத்துவ சேவை செய்துவந்தார். அதற்கு அய்ந்து ரூபாய்கள் தான் கட்டணம். சிவராமன் மற்றும் எனது வேறு சில நண்பர்களும் அவருடன் இணைந்து பணியாற்றினர். சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் செய்து வந்தனர். ஆங்கில, சித்த மருத்துவ முறைகளை இணைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் புரிந்தனர். நண்பர் சிவராமனின் மருத்துவத்தொழிலில் அது ஒரு திருப்புமுனையாகும். தெய்வநாயகம் அவர்களது நோய்க்கணிப்பு உத்திகளை சிவராமன் வியந்தோதாத நாட்களே அக்காலங்களில் இல்லை. தனது மருத்துவத் தொழிலுக்கு குருவாக தெய்வநாயகத்தை சிவராமன் ஏற்றுகொண்ட காலமது. எனது உறவினர்கள் சிலர் அக்காலங்களில் அவரிடம் சிகிழ்ச்சைக்குச் சென்றிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள். ஆயினும் அவரது சிகிழ்ச்சையால் அவர்கள் முழுமையாகக் குணம் அடைந்திருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் அவரது பேச்சுகளைக் கேட்டுவிட்டு என் அப்பா அவரது ரசிகராகவே ஆகிவிட்டார். அவரது அதிரடிப் பாணியும் அப்பாவிற்குப் புரிந்துகொண்டது.

என் பெரிய தங்கை மீனாட்சிக்கு காச நோய் தாக்கியபோது நாங்கள் அவரைத் தான் அணுகினோம். நான், அப்பா, அம்மா, மீனா நால்வரும் அவரது தி. நகர் வீட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். எங்கள் முறை வந்தபோது மீனா, அம்மாவுடன் அப்பாவும் செல்ல எத்தனித்தார். தெய்வநாயகம் நீங்கள் வெளியே போங்க என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார். பின்னர் மீனாவிடம்  உனக்கு என்னம்மா செய்கிறது என்றிருக்கிறார். அம்மா, அவளுக்கு மூளை வளர்ச்சி பூரணமாக இல்லை, அவளால் சொல்லமுடியாது என்றிருக்கிறார்கள். நீங்க சும்மா இருங்கம்மா, அவள் சொல்லுவாள் என்ற அவர், நீ சொல்லு குழந்தை உனக்கு என்ன செய்கிறது என்று மிக அன்பாகக் கேட்டிருக்கிறார். இதுவரை அவளிடம் எந்த மருத்துவரும் அவ்வாறு கனிவுடன் பேசியதில்லை. மனநல மருத்துவர்கள் உட்பட. அம்மா குறுக்கிட்டபோதெல்லாம், நீங்க வெளியபோங்க என்று அதட்டி இருக்கிறார்.

நோய்க்கணிப்பில் மன்னர் அவர். நோயாளிகளிடம் முழுமையாகப் பேசி அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் கொண்டே நோய்க்கணிப்பு செய்பவர். தேவையற்ற பரிசோதனைளைச் செய்யமாட்டார். ஒருமுறை சிவராமனின் அம்மா மெலிந்துகொண்டே வந்தார்கள். பல்வேறு நிபுணர்கள், எம்.ஆர். ஐ போன்ற பலவிதமான சோதனைகளைச் செய்து அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருக்குமோ என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள். ஆனால் தெய்வநாயகம், அவரது குறிகுணங்களை வைத்தே அவருக்கு வயிற்றுத்தமனி சுருங்கிவிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கணித்தார். பின்னர் அப்பகுதியில் எம். ஆ. ஐ ஸ்கேன் செய்ததில் அவரது கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அவருக்கு தமிழ் மேலும், சித்த மருத்துவதின் மேலும் அளவுகடந்த பற்றுண்டு. இதன் காரணமாக பல நேரங்களில் அவர் எல்லை மீறிப் போய்விடுவதுமுண்டு. மிகுந்த பிடிவாதக்காரர். சட்டென்று பிறர் மனம் புண்படும்படி பேசிவிடுவார். ஒருமுறை சிவராமனின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் முனைவர் SP. தியாகராஜன் தலைமை விருந்தினாராகக் கலந்துகொண்டார். தெய்வநாயகமும் மேடையிலிருந்தார். SP. தியாகராஜன் தனது உரையில் எதையோ சொல்லும்போது குறுக்கிட்ட தெய்வநாயகம், தியாகராஜன் நீங்கள் சொல்வது தவறு. போய் உட்காருங்கள் என்று கூட்டத்தினர் முன்னிலையில் சொல்லிவிட்டார். என்னதான் சித்த மருத்துவத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், சித்தமருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் அவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவரது அதிரடி பாணி காரணமாயிருக்கலாம். ஒருமுறை எனக்கும் அவருக்கும் வாத, பித்த, கபம் குறித்து காரசாரமான ஒரு வாக்குவாதம் நடந்தது. அதன் முடிவில் நான் அவரிடம் இன்னும் உங்களிடம் நிறையச் சண்டையிட வேண்டும், சரிங்களா என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சரி என்றார்.

அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்று சிவராமன் மூலம் எனக்கு ஏற்கனவே தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றி சிவராமனிடம் கேட்கவேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவர் நேற்று மாலை இறந்துவிட்டார். அவரது மரணத்தை மிகுந்த தைரியத்துடன், ஆர்ப்பாட்டமில்லாமல் எதிர்கொண்டார் என்பதை அறிந்தேன். வணிகமயமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் அவரைப் போன்ற இன்னொருவரைப் பார்ப்பது அரிது. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும். 

திங்கள், 19 நவம்பர், 2012

இலக்கியவட்டம் நாராயணன்

1992-ல் என் கல்லூரித் தோழி சுகன்யாவின் தந்தையாக இலக்கியவட்டம் நாராயணன் எனக்கு அறிமுகமானார். அப்போது நாங்கள் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தோம். வேட்டி சட்டை, தோளில் ஒரு ஜோல்னாப் பை, ஒட்டவெட்டப்பட்டத் தலைமுடியுடன் அவர் எனக்கு அறிமுகமானபோது மனதிற்குள் ஒரு நக்கலுடன்தான் நான் அவரை எதிர்கொண்டேன். தோற்றத்தை வைத்து ஆளுமையை எடைபோடும் வயதது. இன்னும் அந்தத் தவறான முன்முடிவுகள் என்னிடமுண்டு. ஆனால், அவரோ எந்தவித அசூசையுமின்றி என்னிடமும், ஜோசப்பிடமும் மிக எளிதில் பழக ஆரம்பித்துவிட்டார். விருதுநகர், கோவில்பட்டி. போன்ற ஊர்கள் எல்லாம் இருபது வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்துவிட்டன என அவரது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்துவிட்டார். எப்போதும் எங்கேயும் அந்த வெண்கலக் குரலெடுத்துத்தான் அவர் பேசுவார். எல்லாவற்றைக் குறித்தும் பேசுவார், அதிரடியாகக் கருத்துச் சொல்வார். அப்பா அப்படித்தான் அடிச்சு விடுவார் என சுகன்யா சொல்வாள்.

அதற்கடுத்த வருடம் எனது கல்லூரி மூத்த நண்பர்களோடு திருப்பதி சென்றுவிட்டு என் நெடுநாள் கனவான, எங்கள் சமூகத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஊரான, காஞ்சிபுரத்திற்கு முதன்முறையாகச் சென்று அவர் வீட்டில் தங்கினேன். அப்போது அவர் வைகுண்டப் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்தார். மறுநாள் காலை என்னை அக்கோவிலுக்குக் கூட்டிச் சென்று அந்தச் சிற்பங்களை விளக்கினார். பின்னர் அங்கிருந்து ஏகாம்பரேசுவரர், காமாட்சியம்மன், சங்கர மடம், தொண்டைமண்டல ஆதினம்,  கைலாசநாதர் ஆலயம், சின்ன காஞ்சிபுரம் போன்ற எல்லாவற்றையும் அவர் சொன்ன வழியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அதன்பின் பலமுறை காஞ்சிபுரம் சென்று அவரது வீட்டில் தங்கி அவர்களது பிள்ளை போலவே ஆகிவிட்டேன். ஆனால் அதுவரை அவர் நடத்தி வந்த இலக்கியவட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அவரும் அப்படி ஒன்றை தான் நடத்துவது குறித்து எனக்குச் சொன்னதுமில்லை. சுகன்யாதான் சொல்லியிருக்கிறாள். எனக்கு அப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் குறித்து ஒன்றும் மதிப்பு இல்லை. காரணம் என் பள்ளி, கல்லூரிகளில் நான் பார்த்த தரமற்ற இத்தகைய கூடுகைகள்.

1997ம் வருடம் அப்படி ஒருநாள் அவரது வீட்டில் தங்கியிருந்தபோது அவர் ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் நான்கைந்து அட்டைப்பெட்டிகளை வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார். இலக்கியக் கூட்டத்திற்குப் போகிறேன் வருகிறாயா என்றார். சும்மா வீட்டிலிருப்பதற்குப் போய்வரலாமே என்று எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அவருடன் கிளம்பினேன். ஆனால் அதன்பின் எனக்கு ஒரு புது உலகம் அறிமுகமானது. தமிழ் இலக்கியம், அறிவுலகம் குறித்த என்னுடைய எண்ணங்களைத் தகர்த்தெறிந்தது அது. அதுவரைத் தமிழ்ப்புத்தகங்கள் என்றால் உள்ளடக்கத்திலோ, அமைப்பிலோ  எந்தப் படைப்பூக்கமும் இல்லாத வெகுஜன பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களையே பார்த்துச் சலிப்புற்றிருந்த எனக்கு செம்பதிப்பு என்ற அடையாளத்துடன் அந்தக் காலகட்டத்தில் காலச்சுவடும், கிரியாவும் வெளியிட்ட புத்தகங்கள் கவர்ந்தன. புத்தகத்தின் தலைப்புகளும், அவற்றின் அட்டை வடிவமைப்புகளும் படிக்கத்தூண்டின. காலச்சுவடின் லோகோ என்னைக் கவர்ந்திழுத்த காலமது. அப்படி நான் படிக்க ஆரம்பித்த புத்தகங்களில் ஒன்றுதான் ‘விரிவும் ஆழமும் தேடி’. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது, அதன் முன்னட்டையில் கோட்டோவியமாகத் தீட்டப்பெற்றிருந்த  உருவம்தான் அதன் ஆசிரியராக இருக்கவேண்டுமென யூகித்திருந்தேன். அந்த கோட்டோவிய முகத்திற்குச் சொந்தக்காரனான சுந்தர ராமசாமியை நேரில் பார்த்து அதை உறுதிசெய்துகொள்ள வேண்டுமெனத் துடித்தேன். அப்புத்தகமும், காற்றில் கலந்த பேரோசையும் என்னை ஆட்கொண்டிருந்த காலமது. பின்னர் சு.ராவை மழித்த முகத்துடன்  அவ்விலக்கியவட்டக் கூட்டமொன்றில் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது தனிக்கதை.

வெ. நாராயணன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று இலக்கியக் கூட்டம் நடத்துவார். அந்த அமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர் எல்லாம் அவர் ஒருவரே. பிற நண்பர்கள், குறிப்பாக எக்பர்ட் சச்சிதானந்தம், அமுத கீதன், தரும ரத்தினக்குமார், காமராஜ், சேதுராமன் போன்றவர்கள் அவ்வப்போது உதவினாலும் நாராயணன் எனும் தேர்தான் இலக்கியவட்டத்தை இழுத்துச் சென்றது. இலக்கிய வட்டக் கூட்டங்களை பெரும்பாலும் காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் PTVS வன்னியர் உயர்நிலைப் பள்ளியில்தான் ஏற்பாடு செய்வார். அந்நாட்களில் காலை 7 மணிக்கே அப்பள்ளிக்குச் சென்று டெஸ்க்குகளை தூக்கி சுவர் ஒரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, பெஞ்சுகளை வரிசையாக வைத்துவிடுவார். டெஸ்க்குகள் புத்தகக் கண்காட்சிக்கும், பெஞ்சுகள் ஆட்கள் உட்கார்வதற்கும் ஏதுவாக அவ்வாறு செய்வார். இவையனைத்தையும் தனியொருவராக அவரே செய்வார். சில நாட்களில் நான் உதவி செய்திருக்கிறேன். 20 வயது  இளைஞனான எனக்கு சில டெஸ்க்குகளுக்கு மேல் தூக்கிவைப்பதற்குள் மூச்சு வாங்கிவிடும். இவற்றைச் செய்துமுடிக்கும்போது அவர் வியர்வையில் குளித்திருப்பார். பின்னர் இலக்கியவட்ட பேனரை பள்ளிக்கு வெளியில் கட்டி வைத்துவிட்டு, கரும்பலகை ஒன்றில் அன்று நடக்கப்போகும்  நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை அவரது மணியான கையெழுத்தில் எழுதிவைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவார். குளித்துவிட்டு, காலை உணவருந்தியபின், ஐந்தாறு பெரிய அட்டைப்பெட்டிகளில் தன்னிடமுள்ள  புத்தகங்களை ஒரு ரிக்‌ஷா வண்டியில் ஏற்றிக்கொண்டு மீண்டும் PTVS பள்ளிக்குச் செல்வார். பின்னர் புத்தகங்களை வரிசையாக டெஸ்க்குகளில் கண்காட்சிகளில் வைத்துவிடுவார்.  இந்தப் புத்தகங்களை பதிப்பகங்களிலிருந்து 25% தள்ளுபடிக்குப் பெற்று அதே விலைக்கே இலக்கிய வாசகர்களுக்கு விற்பார். மேலும் வாசகர்கள் அப்பணத்தை உடனே செலுத்த வேண்டாம். மூன்று தவணைகளில் செலுத்தினால் போதும். அவ்வாசகர் ஏற்கனவே தெரிந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. முதல் தடவையாக அக்கூட்டத்திற்கு வருபராக இருக்கலாம்; அவருக்கு நாராயணனையோ அல்லது பிற நண்பர்கள் யாரையுமோ தெரியாமலிருக்கலாம். அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இலக்கியப் புத்தகம் வாங்கும் ஆவலிருக்கிறதென்றால் அவரை ஊக்குவிக்கவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். பலமுறை அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஆயினும் அவரது எண்ணத்தில் மாற்றமில்லை.

அதுபோல் ஒருமுறை இலக்கிய வட்டக் கூட்டத்திற்கு ஒருவர் வந்துவிட்டு தன் முகவரியைப் பதிவு செய்துவிட்டால் போதும்.  அதன்பின் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு அந்நபருக்கு அழைப்பிதழ் வரும். அஞ்சலட்டை ஒன்றில் நாராயணனே அம்மூன்று அழைப்பிதழ்களையும் அவர் கைப்பட எழுதி அனுப்புவார். அம்மூன்று நிகழ்வுகளில் ஒன்றில் கூட அந்நபர் கலந்துகொள்ளவில்லை எனில் அதன்பின் அழைப்பிதழ் வருவது நின்றுவிடும். எனக்கே ஒருமுறை அவ்வாறு நடந்திருக்கிறது. அதுபோன்றே புத்தகத்தைக் கடனாக வாங்கிச் செல்பவர்களுக்கும் மூன்று நினைவூட்டல் கடிதங்கள் அஞ்சலட்டைகளில் அனுப்புவார். அதற்குப் பதிலோ, பணமோ வரவில்லையெனில் கவலைப்படமாட்டார்; அப்புத்தகத்திற்கான பணம் அவரது பாக்கெட்டிலிருந்து செல்லும். அவர் அவரது முகவரிக்கு ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து வைத்திருந்தார். அதில் முகவரி இவ்வாறு தலைகீழாக இருக்கும்.

631502
காஞ்சிபுரம்
39C, காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெரு
இலக்கிய வட்டம்
வெ. நாராயணன்

உண்மையில் வெ. நாராயணன், இலக்கிய வட்டம், காஞ்சிபுரம் என்று முகவரியிட்டு தமிழ்நாட்டில் எந்த மூலையிலிருந்து அஞ்சல் அனுப்பினாலும் தவறாமல் அது அவர் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.

இலக்கிய வட்டம் என்றிருந்தாலும் அதில் இலக்கியம் தவிர பிறவற்றிற்கும் இடமிருந்தது. ஒருமுறை நாகசுர வித்வான்கள் வந்து வாசித்தார்கள். ம்ற்றொருமுறை சோடச அவதானி ஒருவர் வந்து அவர் திறமைகளை வெளிக்காட்டினார். நாட்டுப்புறக் கலைஞர்கள் வந்திருக்கிறார்கள். அதுபோன்றே பிற அமைப்புகளுடன் சேர்த்தும் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சாரு நிவேதிதாவை அழைத்து ஜீரோ டிகிரி குறித்த விமரிசனக் கூட்டமொன்றை தமுஎசவுடன் இணைந்து வேடந்தாங்கலில் ஏற்பாடு செய்திருந்தார். அவர் பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களில் பேசுவதில்லை. படைப்பாளி அல்லது விமரிசனம் செய்யப்படும் படைப்பு பற்றி ஒரு சிறு அறிமுகத்துடன் நிறுத்திக்கொள்வார். பிற நண்பர்கள்தான் பேசுவார்கள், விவாதிப்பார்கள். எப்போதாவது அவர் பேசுவதுண்டு.

அதுவரை ஜெயகாந்தன் தவிர வேறு நவீன இலக்கிய ஆளுமைகளை அறிந்திராத எனக்கு இலக்கியவட்டத்தின் மூலம் சு.ரா, அசோகமித்திரன் போன்ற படைப்பாளுமைகளை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அசோகமித்திரன் வந்திருந்தபோது மிகுந்த எரிச்சலுடன் காணப்பட்டார். கூட்டம் முடியுமுன்பே நாராயணன் நான் கிளம்புகிறேன் என்றார். அவரை வழியனுப்பும் பொறுப்பு எனக்கு வாயத்தது. பேருந்து நிலையத்திற்கு அவரை கூட்டிக்கொண்டு சென்று நிலையத்திலிருந்து சென்னைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அவரை ஏற்றிவிட்டேன். ஏறி உட்கார்ந்து ஒரு நன்றிகூட சொல்ல மனமில்லாமல் சென்றுவிட்டார். வரும்வழியிலோ, பேருந்தில் ஏறியபின்போ சம்பிரதாயத்திற்குக் கூட ஒரு முகமன் கூட கூறாத, எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் இருக்கும், நபர் என்ன பெரிய படைப்பாளி என்று நினைத்து பல வருடஙகள் அ.மியின் ஒரு கதை கூட வாசிக்காமல் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாகத்தான் ஜெயமோகன் மூலம் அ.மியின் மேல் ஏற்பட்ட அந்த கசப்பு நீங்கியது. இலக்கிய வட்டத்தின் விமரிசனங்கள் ஏதோ சண்டை போட்டுக்கொள்வது போலிருக்கும். நான் கலந்துகொண்ட கூட்டங்களில் சு.ரா வந்தபோது அமுதகீதன், தரும இரத்தினக்குமார் போன்றவர்கள் அவர் மேலும், காலச்சுவடின் மேலும் காரசாரமான விமரிசனங்களை வைத்துப்பேசியதே மிகவும் சூடான கூடுகையாகவிருந்தது.

தொடரும்...

இலக்கியவட்டம் நாராயணன் அவரது 60 ஆம் கல்யாணத்தன்று.
நாளை இரண்டாம் பாகத்தை வெளியிடுவேன்..


வியாழன், 29 டிசம்பர், 2011

மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே...


மாருதி ஆம்னி திருச்சி-சென்னை புறவழிச் சாலையிலிருந்து மேற்கில் பிரியும் சாலையில் காலை ஒன்பது மணியளவில் நுழைந்தது. அச்சாலை காவிரியின் தென்கரையை தொட்டுக்கொண்டு சென்றது. சாலையின் ஓரத்தில் திருச்சி நகர குப்பைகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆம்னி வேன் மேலும் செல்ல செல்ல ஊதா நிற மின்மயானக் கட்டடம் தெரிய ஆரம்பித்தது. எங்கள் வேன் மின்மாயானத்திற்கு வடபுறமுள்ள தகரக் கூரை வேய்ந்த பழைய மயானத்தை அடைந்தது. ஓயாமாரி மயானம் என்பது அதன் பெயர். ஓயாமல் மழை பெய்வதுபோல் அங்கு ஒருகாலத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அப்பெயர் வந்ததாக வெட்டியான் சின்னையா சொன்னார். தென்மேற்கில் மலைக்கோட்டை கம்பீரமாக நின்றிருந்தது. வடக்கில் காவிரி இருகரைகளையும் தொட்டுக்கொண்டு சுழித்துச் சென்றுகொண்டிருந்தது. மயான மரங்களிலிருந்து பறவைகளின் ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது. இதமான மார்கழி மாத பனி. நாங்கள் வருவதற்கு முன்பே வரட்டிகள் அடுக்கப்பட்டு மூன்றடி நீள சிதை தயாராக இருந்தது. பெரிய அத்தானின் நண்பர் ரவீந்திரன் அதிகாலையிலேயே அங்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

சிதையில் கோமதி பாப்பாவின் சடலத்தை சிலர் கிடத்தினர். பாப்பாவின் முகத்தில் அவள் கடந்த 5 வருடங்களாக அனுபவித்த வேதனையின் சுவடுகள் ஏதும் தெரியவில்லை. அன்றலர்ந்த மலர் போலிருந்தாள். முகத்தில் ஒரு சிறிய புன்னகை காணப்பட்டது போல் தோன்றியது. என்னிடம் செல்லையா ஒரு கருவேல முள்ளைக் கொடுத்து பாப்பாவின் காது மடல்களில் துளையிடுவது போல் பாவனை செய்யச் சொன்னார். தாய்மாமனான என்மடியில் வைத்து அவளுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என நாங்கள் நினைத்த போதெல்லாம் அவளுக்கு உடம்பிற்கு முடியாமல் போய்விடும். கோமதி என்னுடன் எசலும் போதெல்லாம் என் தங்கை, ஏட்டி!, அவம் ஒந் தாய்மாமண்டி, ரொம்ப எசலுனேன்னா அப்புறம் ஒங் காதிற்கு தங்கத்தோடு போடமாட்டான்எனச் சொல்லுவாள். முள்ளால் காது மடல்களில் துளையிடுவதாக பாவனை செய்யும் இந்தச் சம்பிரதாயத்தை நான் செய்தபோது மனதிற்குள் ”மானூத்து மந்தையிலே மான் குட்டி பெத்த மயிலே, பொட்ட பிள்ள பிறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே... தாய்மாமன் சீர் சுமந்து வாராறாண்டி, அவன் தங்கக் கொலுசுகொண்டு வராண்டி... என்ற வைரமுத்துவின் பாடலை நான் பாடிக்கொண்டிருந்தேன். இதை சட்டென்று பின்னர் உணர்ந்தேன். அதே கணத்தில் நீண்டநெடிய தமிழ்ப் பண்பாட்டின் மேலும் ஒரு கண்ணிதான் நான் என்பதை இத்தகைய சடங்குகள் எனக்கு உணர்த்துவதை உணரவும் செய்தேன். இந்த எண்ணங்கள் அந்த நேரத்திலும் என்னுள் ஒரு பரவச மனநிலையை ஏற்படுத்தின.

பாப்பாவின் உடம்பை, முகம் தவிர்த்து, வரட்டிகளைக் கொண்டு மூடிவிட்டிருந்தார்கள். சின்னையாவின் உதவியாளர் செல்லையா சிதையை மூடுவதற்கு கொட்டகைக்கு அருகிலேயே களிமண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தார். வாய்க்கரிசி போடுவதற்கு சின்னையா மீண்டும் என்னை முதலில் அழைத்தார். பின்னர் கோமதியின் பெரியப்பாக்கள், தாய்வழித் தாத்தாவான என் அப்பா, மற்ற உறவினர்கள், அத்தானின் நண்பர்கள் என வரிசையாக இட்டபின் கடைசியாக அத்தானை வாய்க்கரிசி இடச் சொன்னார்கள். ஏனைய சடங்குகள் முடிந்தபின் கடைசியாக எல்லோரும் ஒருமுறை முகத்தைப் பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். நான் இறுதியாக ஒருமுறை பாப்பாவின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டேன். பின்னர் முகம் மூடப்பட்டபின், ஒரு சிறிய எருத்துண்டில் நெருப்பைப் பற்றவைத்து அத்தானை அவர் மகளுக்குக் கொள்ளியிடுமாறு சின்னையா பணித்தார். அந்த கணத்தில் கிட்டத்தட்ட அனைவருமே விசும்பினார்கள். என்னுள் உயிருள்ள கோமதியின் நினைவுகள் அலைமோதின. அந்த நினைவுகள் என்னை அழ வைத்தன. பிறருக்கும் அப்படித்தானிருந்திருக்கும். பின்னர் எல்லோரும் காவிரியை நோக்கி நடக்கலானோம். உறவினர் ஒருவர் “கங்கையின் மேலான காவிரி தீர்த்தம், மங்கல நீராட முன்வினை தீரும்எனப் பாடிக்கொண்டுவந்தார். காவிரியில் கால் வைத்ததும் எனக்கு ஜெயமோகனின் நதி சிறுகதை மனதிற்குள் ஓடியது.  


 

கோமதி என்ற சாய் ஜெய்ஸ்ரீ, என் மகன் அமுதன் பிறந்து கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் கழித்து 2007 ஆம் வருடம் ஜனவரி 12 ஆம் நாள் பிறந்தாள். பிறப்பதற்கு முன்பே அவளுக்குச் சில குறைபாடுகள், குறிப்பாக சிறுநீரக அமைப்பின் கீழ்ப்பகுதிகளில், இருக்க வாய்ப்பிருப்பதாக அவளை உண்டாகியிருக்கும்போது என் தங்கைக்குச் செய்யபட்ட மீயொலி பரிசோதனைகள் தெரியப்படுத்தின. ஆனால் பிறந்த உடன் அவள் சிறுநீர் கழித்துவிட்டதால் அவ்வுறுப்புகளில் குறையிருப்பதற்கான வாய்ப்புகளில்லை என்பது தெளிவானது. ஆயினும், அவள் சிறுநீர் கழிப்பதில் அவ்வப்போது சிக்கல்கள் இருந்தன. வளர வளர அது சரியாகும் என குழந்தை சிறுநீரகத்துறை மருத்துவர் சொன்னார். இதற்கிடையில் ஐந்தாவது மாதத்தில் கோமதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். அப்போது அதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் அவளுக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் தமனியின் இரத்த அழுத்தம் இயல்பைவிட மிக அதிகமாக இருப்பதாகவும், அதனால்தான் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டது. ஆயினும் அக்குழு மருத்துவர்களுக்கிடையே அதற்கான தீர்வை அளிப்பதில் ஏற்பட்ட முரண்பாடுகளால் சென்னையில் மருத்துவர் செரியன் நடத்தும் மருத்துவமனையை அணுகச் சொன்னார்கள்.



பின்னர் அங்குதான் இந்நோய் சரிப்படுத்தமுடியாத முதன்மை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம் (Primary Pulmonary Artery Hypertension) எனக்கண்டறியப்பட்டது. இதற்கிடையில் கோமதிக்கு சிலமுறைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவையில் உள்ள கோவை மெடிக்கல் செண்டரிலும், பின்னர் பி. எஸ். ஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். இக்காலங்களில் அவளுக்கு வீட்டிலும் தினமும் பிராணவாயு செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படது. அதனால் வீட்டிலேயே எப்பொதும் ஒரு பிராணவாயு உருளை தயாராக இருக்கும். ஆனால், தேவைப்பட்ட காலங்களில் சட்டென்று அவ்வுருளையை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களினால் போனவருடம்தான் பிராணவாயுவை காற்றிலிருந்து பிரித்துக் கொடுக்கும் உபகரணம் ஒன்றை வாங்கினோம். ஆயினும் அவளுக்கு லேசாக சளி பிடித்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் அனுமதிக்கவேண்டும். இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு மிகவும் குறைந்துவிடும், ஊதா நிறமாகிவிடுவாள். குறைந்தது 10 நாட்கள் ஜீவ மரணப் போராட்டத்திற்குப் பிறகு அவள் பலமுறை அவ்வாறு தப்பிப் பிழைத்துள்ளாள். இந்த 5 வருடங்களில் கடந்த ஒருவருடம் மட்டும்தான் இம்மாதிரி அவளுக்கு ஏதும் ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த வருடத்தில் மட்டும் மூன்றுமுறை கோவை பி.எஸ். ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கடந்த செப்டம்பரிலேயே அவளுக்கு மிகக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படது. அப்போதே இதயமும் மிகவும் பழுதடைந்துவிட்டது. சென்றவாரம் மீண்டும் மூச்சுத்திணறலும், சிறுநீர் சரிவரப் பிரியாததால் உடல்வீக்கமும் ஏற்பட்டு பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4 நாட்கள் கழித்து மருத்துவமனையிலேயே உயிரைவிட்டாள். பின்னர் அங்கிருந்து அத்தானின் சொந்த ஊரான திருச்சிக்குச் சென்று எல்லாச் சடங்குகளையும் முடித்தோம்.



ஆனால் அவளது மூளை மிகுந்த துடிப்பானது. மற்ற அவயங்களில் இருந்த குறைகளை தனது மூளையின் மூலம் அவள் சமனப்படுத்திக் கொண்டாள். உடல்நிலை நன்றாயிருக்கும் காலங்களில் மிகுந்த கிண்டலும், கேலியுமாக இருப்பாள். வாயாடி வள்ளியம்மை, பரட்டை, தொப்புள் குடைஞ்சாள் என பல பெயர்களை நான் அவளுக்குச் சூட்டியிருந்தேன். பல நேரங்களில் யாராவது அவளது பெயரைக் கேட்டால் நான் சூட்டிய பெயர்களில் ஒன்றை வேண்டுமென்றே கிண்டலாகக் கூறுவாள். கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியாது. சென்ற மேமாதம் சென்னையில் என் வீட்டில் ஒருமாதம் வந்து இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக என்னுடன் கோபப்பட்டுக்கொண்டு எனக்கு அத்தைதான் பிடிக்கும் எனச் சொன்னாள். என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்பதற்காக பிற்பாடு நான் எப்போது கேட்டாலும் அவ்வாறே சொல்லுவாள். இறப்பதற்கு இரண்டுநாட்கள் முன்னர் தீவிர சிகிழ்ச்சைப் பிரிவில் இருக்கும்போது கூட உனக்கு மாமாவைப் பிடிக்குமா, அத்தையைப் பிடிக்குமா என நான் கேட்டதற்கு, எனக்கு பவானி அத்தையைத்தான் பிடிக்கும் என ஒரு நக்கல் சிரிப்புடன் சொன்னாள்.

ஒரு குழந்தையைப் பறிகொடுத்துவிடுவோம் என்று தெரிந்துகொண்டே வளர்ப்பது பிறரால் உணர்ந்துகொள்ளமுடியாத அளவிற்கு மன உளைச்சலைக் கொடுப்பது. அதற்கு மிகுந்த மனவலிமையும், பொறுமையும் வேண்டும். என் தங்கை இவ்வகையில் பாராட்டப் படவேண்டியவள். அவளுக்கு இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்க என் வாழ்த்துக்கள்.   

சனி, 12 பிப்ரவரி, 2011

காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன்


ஜெயமோகனின் சோற்றுக் கணக்கு சிறுகதை படித்தவுடன் எனக்கு நான் தந்தை போன்று மதித்த காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன் அவர்கள்தான் ஞாபகத்திற்கு வந்தார். அதுகுறித்து நான் ஜெ க்கு எழுதிய கடிதத்திற்கு அவரது பதில் இன்று ஜெயமோகன்.இன் ல் இன்று வந்துள்ளது. அதை கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிப் படித்துக் கொள்ளலாம்.

வெ.நாராயணன் -ஒரு கடிதம்

காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக நடத்தப்படும் வலைப்பூவை இந்த இணைப்பில் படித்துக்கொள்ளலாம்.

திங்கள், 15 அக்டோபர், 2007

சு.ரா. - சில குறிப்புகள்

2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம் என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன்.

அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)

விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம்.



வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.

தொடர்வேன்....

குறிப்பு: இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

அறிஞர் சோதிப்பிரகாசம்

நேற்று திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.