வியாழன், 5 அக்டோபர், 2006

திருவாளர் கமல்ஹாசன் குறித்து எனது ஆதங்கம்

சர்ச்சைக்குரியவராக இருப்பது ஒன்றும் திருவாளர் கமல்ஹாசனுக்குப் புதிதல்ல. மூடத்தனங்களும், கட்டுப்பெட்டித்தனங்களும் நிறைந்த ஒரு சமூகத்தில், தன்னுடைய கருத்துக்களாலும், செயல்பாடுகளாலும் நல்ல சலனங்களை ஏற்படுத்தமுனையும் கலைஞனை சராசரி வெகுசன மனோபாவம் சர்ச்சைக்குரியவராகவே கருதும். ஆயினும், 'வேட்டையாடு விளையாடு' ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை அவ்வகைத்தானதல்ல. அப்படத்தில் கமல் ஏற்றிருக்கும் ராகவன் எனும் பாத்திரம் ஒரு காட்சியில் பேசும் வசனம், ஒருபாலின ஈர்ப்புடையோரை, இச்சமூகம் அவர்களைப்பற்றி ஏற்கனவே கொண்டிருக்கும் தவறான (அப்படித்தான் அறிவியல் சொல்கிறது) கருத்தாங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் வரும் வசனம் ராகவன் எனும் பாத்திரம் பேசும் வசனமாக எடுத்துக்கொள்ளப்படாமல் கமல்ஹாசனின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பேயதிகம். அக்குறிப்பிட்ட வசனத்திற்கு கிடைக்கும் கைதட்டலே இதற்குச் சான்று. ராகவன் பாத்திரத்தை வேறொரு நடிகர் ஏற்று நடித்திருந்தால் அவ்வசனம் இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்திருக்காது. ஏனெனில், மற்றைய நடிகர்களைப் போல் கமல் சமூகத்தை ஒற்றைபரிமாணக்கோணத்தில் பார்ப்பவரல்ல. அவரது திரைப்படங்களில், குறிப்பாக அவரது சொந்தத் தாயாரிப்பில் வெளிவருபவற்றில் இதனை அவதானிக்கலாம். சமூக ஓர்மையுள்ள கமல் எவ்வாறு இவ்வசனம் பேசி நடிக்க சம்மதித்தார் என்பது எனக்கு ஆச்சிரியமாகவேயுள்ளது. முன்பொருமுறை செவ்வியொன்றில், திரைப்படப் படப்பிடிப்புக் காட்சியொன்றில் நடிகைகளக் குறித்து அவதூறாகப் பேசிய பார்வையாளர் ஒருவரை தான் அடித்துவிட்டதால், தனக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்த மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதுபோன்றே, சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்த தென்மாவட்ட சாதிக்கலவரங்களுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது 'தேவர் மகன்' திரைப்படமும் ஒரு காரணம் என்பதையுணர்ந்து, தான் இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கமல், வே-வி படத்தில் அப்படியொரு வசனத்தை பேசி நடித்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. திருவாளர் கமல்ஹாசனை எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் கொண்டிருந்தாலும், அவரது இச்செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையேயளிக்கிறது.