திங்கள், 30 அக்டோபர், 2006

சென்னை மழை எனது அனுபவங்கள்

கடந்த சனியன்று இரவு பெய்த மழை, சென்றவருடம் அக்டோபர் 26ஆம் தேதி பெய்த மழையை நினைவூட்டியது. சனிக்கிழமை இரவு 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த ஒரு மணி நேரத்தில், இடி மின்னலுடன், காற்றும் சுழன்றடித்தது. எங்கள் வீட்டில் ஈரக்கசிவால் சுவிட்சுகளில் மின்சாரக்கசிவு இருந்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது. மேலும் என் துணைவியாரும் பிரசவத்திற்காக அவரது தந்தை வீட்டிற்குச் சென்றிருப்பதால் இந்த நேரத்தில் எனக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று அச்சமாகவும் இருந்தது. நவம்பர் 1ஆம் தேதிதான், பிரசவம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் கூறியிருந்த போதிலும், அன்று காலையில்தான் பிரசவ வலி ஏற்படுவதற்கு முன்னர் ஏற்படும் பொதுவான குறிகுணங்கள் தனக்கு ஏற்பட்டதாகத் துணைவியார் கூறியிருந்தார். துணைவியார் வீடிருக்கும் வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகர் மழையால் சென்னையில் மோசமாகப் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று என்பதால் கவலை சற்று அதிகமாகயிருந்தது. ஏனெனில் அங்கிருந்து நாங்கள் பார்க்கும் மருத்துவமனைக்குச் செல்வது என்பது அன்றைய நிலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான சவால்களையொத்தது. நல்லவேளயாக அவ்விதம் ஏதும் நடக்கவில்லை.

நான் குடியிருக்கும் ஆழ்வார்ப்பேட்டை சீத்தாம்மாள் காலனிப் பகுதியிலோ இரண்டடி உயரத்திற்கும்மேல் மழைநீர் சூழ்ந்திருந்தது. பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. மழை நின்று 12 மணி நேரமாகியும் வெள்ள நீர் வடிந்தபாடில்லை. இத்தனைக்கும் இப்பகுதியில் சென்றமாதம் தான் வெள்ள நீர் வடிகால்களை நன்கு தூர்வாரியிருந்தனர். குறிப்பாக டி.டி.கே ரோடு, திருவள்ளுவர் சாலை, கவிஞர் பாரதிதாசன் சாலை, எல்டாம்ஸ் ரோடு ஆகிய நான்கு சாலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருந்தது. டி.டி.கே ரோடு ஒன்றுதான் இவற்றில் குறைவாகப் பாதிக்கப்பட்ட இடம். எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள கமல்ஹாசனின் அலுவலகத்திற்குள்ளும், தண்ணீர் புகாமலிருக்க அடுக்கப்பட்டிருந்த மணல்மூட்டைகளையும் மீறி, தண்ணீர் புகுந்து விட்டது. சீதாம்மாள் காலனிப்பகுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக. அனைத்துப் படங்களும் மழை நின்று பலமணி நேரம் கழித்து எடுக்கப்பட்டவை. சென்னையில் சென்ற வருடம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்.