புதன், 18 அக்டோபர், 2006

நான் புரட்சித்தலைவி ஜெயலலிதாவைச் சந்தித்தபோது!...

நேற்று காலை அ.இ.அ.தி.மு.க. வின் 35 ஆம் ஆண்டு தொடக்கவிழாவைத் தொடங்கி வைக்க அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா அக்கட்சி தலைமை அலுவலகம் வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் அலுவலகமும் அதே சாலையில் அமைந்திருப்பதால், சில சமயங்களில் அவரை எதேச்சையாக பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். அவர் அங்கு வரும்போதெல்லாம் அவரது அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் பகுதி வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும். ரத்தத்தின் ரத்தங்கள் அப்பகுதி முழுவதும் நிறைந்(த்)திருப்பார்கள். தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள் முழங்கும். அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். போலீஸ் கெடுபிடிகள் வேறு அதிகமாக இருக்கும். பல நேரஙகளில் வண்டியை ஓரம் கட்டிவிட்டு, நடந்து அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்கள் அலுவலகக் காவலாளி முன்னெச்சரிக்கையாக பிரதான வாயில் கதவைச் சாத்திவிடுவார். இல்லையெனில், ரத்தத்தின் ரத்தங்கள் தங்களது வாகனங்களை எங்கள் அலுவலக வளாகத்திற்குள் வந்து நிறுத்திவிடுவர். 'அம்மாவை' வரவேற்க அவரது நற்குணங்களையும்!? வீரதீர பராக்கிரமங்களையும்?! பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்படும். போட்டி போட்டுக்கொண்டு அம்மாவின் அணுக்கத்தொண்டர்கள் அவருக்கு பட்டம் சூட்டியிருப்பார்கள். தாயே, தமிழே, தவமே என்றும், கலைத்தாய் என்றும், காவிரித்தாய் என்றும், சமூகநீதி காத்த வீராங்கனை என்றும் பலவகைத்தான அம்மாவின் புகழ் பாடும் நாமகரணங்கள் அவர் வரும் வழியில், அவரின் கடைக்கண் பார்வையில்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சும்மாவா, அம்மாவிற்கு பெயர் பிடித்துவிட்டது என்றால், அப்பெயர் சூட்டியவரை அழைத்து பெரும் பதவிகள் கொடுப்பாரே. இப்படித்தான் அவரை 'பெண் பெரியார்' எனப் புகழும் (பெரியாரை இகழும்) போஸ்டரை ஒட்டியவரை அழைத்து போனமுறை மந்திரி பதவி கொடுத்ததாக தமிழின் புலனாய்வு?! வார இதழொன்றில் படித்த ஞாபகம். அம்மாவின் கார் தெருமுனையில் நுழைந்ததுமே, வாழ்க கோஷங்கள் விண்ணைப்பிளக்கும். எனக்குத்தெரிந்து தமிழகத்தில் வேறு எந்தத் தலைவருக்கும் தனது கட்சி அலுவலகம் வரும்போது இந்தளவு வரவேற்புக் கொடுக்கப்படுவதில்லை. அம்மா, அத்தி பூத்தாற்போலத்தானே கட்சியலுவலகத்திற்கு வருகிறார், அதனால்தானோ என்னவோ? நேற்றும் இதுபோன்ற அலங்(கோல)காரக் காட்சிகள் நடந்தேறின. இக்காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு 12 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியொன்று ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

1994 ஆம் வருடம் என்று நினைக்கிறேன், நான் அப்போது பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த அம்மா, பாளையங்கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையமொன்றை திறப்பதிற்காக வருகை புரிந்திருந்தார். திருநெல்வேலியே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. என் அறைத் தோழர்களில் ஒருவர், அப்போதைய பாளையங்கோட்டை எம் எல் ஏவாக இருந்த தர்மலிங்கம் என்பவரைப் பார்த்து (இப்போது அவர் எங்கே எனத் தெரிந்தவர் சொல்லுங்கள்) அம்மாவிடம் (அப்போது மிகப் பிரபலமாக இருந்த நாமகரணம் – புரட்(டு)சித்தலைவி) சித்தமருத்துவ முன்னேற்றத்திற்காக ஓரிரு கோரிக்கைகள் வைக்கவேண்டும் எனக் கேட்டிருந்தார். அதற்குத்தான் வழியேற்படுத்திக் கொடுப்பததாக உறுதியாகச் சொன்ன அந்த எம். எல். ஏ, உங்கள் கல்லூரித்தோழர்களை அழைத்து வாருங்கள், சித்த மருத்துவ பட்டதாரி மாணவர் அணியொன்று அமைத்து புரட்சித் தலைவிக்கு வரவேற்புக் கொடுங்கள், பு. த. மனம் மகிழ்ந்து உங்கள் கோரிக்கையை ஏற்று உறுதியாக நடவடிக்கையெடுப்பார் எனச் சொன்னார். நாங்களும், எங்கள் துறையைப் பீடித்திருக்கும் அவலங்களை முதலமைச்சர் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு சந்தர்ப்பம் கிட்டுகிறதேயென்றெண்ணி, சரியென்று சொன்னோம். அதன்படி எங்களில் ஒரு 20 பேரைத் தேர்ந்தெடுத்து பு.தலைவிக்கு வரவேற்பு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. எம்.எல்.ஏ செலவில் (ஊரார் வரிப்பணத்தில்) எங்களுக்கெல்லாம் ஒரு சிவப்புக் கலர்த் தொப்பியும் (ஆளவந்தானில் கமல் அணிந்திருப்பாரே அதுபோன்று), வெள்ளை canvas சூவும் வழங்கப்பட்டது. அதைப்பெறுவதற்காக, நாங்கள் எம் எல் ஏ தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்றோம். அன்று தான் முதன்முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சூட் அறையைப் பார்த்தேன். எங்களுக்கு வழங்குவதற்காக இருந்த தொப்பியையும், காலணியையும் பெறுவதற்கு எம் எல் ஏவின் தொண்டரடிப் பொடிகளும் (குண்டாந்தடிகளும்?) போட்டிபோட்டதால் அந்த இடமே ஒரே அதகளமாக இருந்தது. இந்த லட்சணத்தில் எனது நண்பர்கள் மூவர், அவர்களுக்கும் சேர்த்து காலணியையும், தொப்பியையும் எடுத்துவருமாறு கேட்டிருந்தனர். எப்படியோ 3 சோடி காலணிகள் என் கைக்கு வந்து சேர்ந்தன. ஆனால் அவற்றில் ஒரு சோடி காலணி மட்டும் ஒரே காலுக்குறியதாக அமைந்துவிட்டது. பின்னர் நாங்கனைவரும் வெள்ளைச் சீருடை, வெள்ளைக் காலணி, சிவப்புத்தொப்பியும் அணிந்து, புரட்(டு)சித் தலவியை வரவேற்க, அவர் திறந்து வைக்க இருக்கிற மகளிர் காவல் நிலைய வாசலில் காத்து நின்றோம். முதலில் நாங்களும், பின்னர் சீருடையணிந்த அதிமுகவினரும், அதன்பின் மற்ற ரத்தத்தின் ரத்தங்களும் அணிவகுத்து நின்றோம். (நாங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களாயிற்றே!) இதற்கிடையில் என் நண்பன் மாணவியர் அணியொன்றையும் தாயார் செய்து அவர்களை எங்கள் கல்லூரி வாசலில் நிற்கவைத்திருந்தான். அவ்வழியேதான் பு. த வரவேண்டும்.

நண்பகல் 12 மணியிருக்குமென நினைக்கிறேன், டாடா சியரா காரில் புரட்டுத்தலைவி, சாரி புரட்சித்தலைவி வந்தார். கீ கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல் ரரக்கள் விண்ணதிர வாழ்க கோஷங்கள் எழுப்பினர். பு.தலைவி காரை விட்டிறங்கினார் (உடன் உடன்பிறவா தோழி வந்தாரா என ஞாபகமில்லை). அவரது பார்வை எங்கள் மீது படும்முன்பு உயர்போலீஸ் அதிகாரிகள், அவரை திறப்புவிழாவிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. ஏமாற்றத்துடன் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாட்டையாவது சாப்பிடலாம் என அவ்விடத்திற்குச் சென்றோம். அங்கு அதற்கு முன்பே அதிமுக மகளிரணியினர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்களோடு போட்டி போட நம்மால் முடியாது என நினத்து, நாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் மெஸ்ஸைப் பார்த்து நடையைக்கட்டினோம். ஆனால் இதெல்லாம் நடப்பதற்கு முன்பு, எங்கள் தோழிகள் பு.தலைவியிடம் நாங்கள் சொல்லநினைத்திருந்த கோரிக்கைகளை முறையிட்டிருந்தனர். எப்படியெனில், சாலையோரம் அணிவகுத்து நின்ற மாணவியரைப் பார்த்ததும், தனது காரை சிறிது நிறுத்தச் சொல்லி அவர்களை புரட்சித்தலைவி அழைத்திருக்கிறார். பு.தலைவியிடம் பேசியதில் என் தோழி ஒருவர் 'பெறுதற்கரிய பேறு' பெற்றதாக எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். எங்களுக்கோ, நம்முயற்சி வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி. ஆனால் அதற்குப்பிறகு எங்கள் கோரிக்கை என்னவானது என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
இந்நிகழ்ச்சியப் பற்றி நினைத்தால் முன்பெல்லாம் அவமானமாக இருக்கும். ஆனால் இப்போது சிரிப்புத்தான் வருகிறது. அதுசரி, நான் எங்கே 'அம்மாவை' சந்தித்தேன் என்று கேட்கிறீர்களா. அப்படியெல்லாம் தலைப்பு வைத்தால்தானே எல்லோரும் படிப்பீர்கள், ஹி! ஹி! அதுதான்.