அறிவியலும் சித்த மருத்துவமும் என்ற தலைப்பில் இவ்வலைத்தளத்திலுள்ள கட்டுரைகள் 2008 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் எழுதியவை. என் சித்தமருத்துவ நண்பர்கள் சிலர் அவர்கள் ஆரம்பிக்கவிருந்த ஒரு இதழிற்காக என்னிடம் கட்டுரை ஒன்று கேட்டிருந்தார்கள். பெரும்பாலும் சித்தமருத்துவர்களையும், சித்தமருத்துவத்தின் பால் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்ட சிலரையும் சார்ந்தே அவ்விதழ் ஆரம்பிக்கப்படவிருந்தது. என் நல்லூழா தீயூழா எனத் தெரியவில்லை அவ்விதழ் ஆரம்பிக்கப்படவேயில்லை.
எனக்கு, இப்போதிருப்பதைவிடவும், அறிவியலின் மேல் மிகுந்த நம்பிக்கை அப்போது இருந்தது. மேலும் என் கல்லூரி நண்பர்களில் சிலர் சித்த மருத்துவத்தின் மேல் மிகுந்த வெறியும், அறிவியலின் மேல் ஒருவிதமான இளக்காரமும் கொண்டிருந்தனர். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சித்தமருத்துவ வலைக்குழுமமொன்றில் நான் எழுதிய சில கருத்துக்கள் மற்றும் அதற்கு முந்திய சில சித்த மருத்துவ கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் நான் சொல்லியவற்றிற்கு எதிரான நண்பர்களின் உரையாடல் ஆகியவற்றைத் தொடந்தே இக்கட்டுரையை எழுதினேன் என நினைக்கிறேன். எனவே இக்கட்டுரைகளிலுள்ள தொணி அவர்களை முன்னிலைப்படுத்தியே இருக்கும். ஆனால் பலரும் வாசிக்கும் இவ்வலைத் தளத்திற்கென்று சில மாற்றங்களைச் செய்து பதிப்பிக்க நினைத்தேன். சோம்பலினால் அவ்வாறு செய்யாமலேயே முதல் மூன்று பகுதிகளை வெளியிட்டு விட்டேன். வெளியிடும்போதே சில கருத்துக்கள் குறித்து முரண்கள் தோன்றியதால் மேற்கொண்டு வெளியிடவில்லை. இப்போது வெளிவிடுவதற்கான காரணம் - இவை என் கருத்துக்கள், இக்கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு இப்போது முழுமையாக உடன்பாடில்லை எனினும் இவை என் அறிவின் பரிமாணத்தை வெளிப்படுத்தும் என்பதனால் வெளியிடத் துணிந்தேன்.
முந்தைய பாகங்கள்:
ஒன்று, இரண்டு, மூன்று.
இனி நான்காவதும் இறுதியுமான பாகம் சித்த மருத்துவம் நவீன மருத்துவத்திற்கு மாற்றாகுமா?
அண்மையில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குச் சென்றிருந்தேன். 1000 வருடங்களுக்கு முன்னரே, இன்றைய அறிவியல்-தொழிற்நுட்ப வளர்ச்சிகள் இல்லாதபோதும், சுற்றுவட்டாரத்தில் 40 மைல் தொலைவில் எங்கும் கற்பாறைகள் இல்லாத இடத்தில் அவ்வளவு பிரம்மாண்டமான கற்கோவிலைக் கட்டிய நம் முன்னோர்தம் செயலை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அக்கோவிலைப் பார்க்கும் யாருக்கும் நமது பண்பாடும், கலாச்சாரமும், அறிவியலும் அன்று எவ்வளவு உச்சத்தில் (மற்ற நாடுகளை ஒப்பிடும்போது) இருந்தன என்ற நினைப்பு வராமல் போகாது. மருத்துவமும் நமது பண்பாட்டின் ஒருபகுதிதானே; அதனால் சித்த மருத்துவமும் அக்காலத்தில் ஒரு உயர்ந்த அறிவியலாக இருந்திருக்கவேண்டும். அதற்காக தஞ்சைப் பெரியகோவில் போன்ற ஒரு பிரம்மாண்டத்தை தற்போது கட்டவேண்டுமானால், நாம், நம் முன்னோர் பயன்படுத்திய தொழிற்நுட்பத்தைவிட, தற்போதைய தொழில்நுட்பத்தையே நாடுவோம் என்பதே யதார்த்தம். அது மருத்துவத்திற்கும் பொருந்தும்.
சித்த மருத்துவமும் இன்றைய அறிவியலும்
நம்மிடையே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது சித்தர்கள் (முன்னோர்கள்) சொன்னது முழுமுற்றான உண்மை என கண்மூடித்தனமாக நம்புவது. இவ்வாறு நம்புபவர்களில் இருவகையினர் உண்டு. முதல் பிரிவினர் சித்தர்கள் மெய்ஞானம் அடைந்தவர்கள், எனவே அவர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்னவற்றை, லெளகீகத்தில் புரண்டுகொண்டிருக்கும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது; நாம் என்று அவர்களைப்போல் ஆன்ம சாதனையை பெறுகிறோமோ அன்று எல்லாம் நமக்கு விளங்கும், அதற்கு அறிவியல் தேவையில்லை அல்லது சித்த மருத்துவம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று நம்பும் கூட்டத்தினர். மற்றொரு சாரார், சித்தர்கள்/முன்னோர் உரைத்ததை இன்றைய அறிவியல் கொண்டு விளக்கமுடியும் என நம்புகிறவர்கள். அவர்களும் சித்தர்கள் சொன்னவற்றை முற்றிலும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டுமே தவறானது எனினும், முதல் பிரிவினர் குறித்து அதிகக் கவலையில்லை; இரண்டாவது பிரிவினர் அதிக ஆபத்தானவர்கள்.
ஏனெனில், முதல் பிரிவினரின் நம்பிக்கைகள் பெரும்பாலும் அவர்களுடனேயே இருந்து விடுகின்றன. பொதுவாக அவர்கள் அரசியல் அதிகாரம் கொண்டிராத ஒரு சிறுபான்மையினர்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் இத்தகைய குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், அறிவியலின் தீர்க்கமான வாதங்களினால் அவர்களின் மொன்னையான நம்பிக்கைகள் காயடிக்கப்பட்டுவிடும். காட்டாக அறிவார்ந்த வடிவமைப்பு (Inteligent design) எனும் குருட்டு நம்பிக்கை அண்மையில் அமெரிக்காவில் முறியடிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துகொள்ளலாம். ஆனால், இரண்டாம் வகையினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர்; இவர்கள் பெரும்பாலும் மேலோட்டமான அறிவியல் அறிவு உள்ளவர்கள். அதனால் நமது பண்பாட்டுத் தொன்மங்களுக்கு அறிவியல் முலாம் பூசி அவ்வெற்று நம்பிக்கைகளை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதாக கட்டமைக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி அறிவியல் மொழி போன்ற மயக்கம் தருவதால், இவர்களுக்கு ஆராய்ச்சி நல்கைகள் (Research funding) கிடைக்கின்றன; ஆட்சியதிகாரமும் செவிசாய்ப்பதால் பெரும்பொருட்செலவிலான ஆராய்ச்சித் திட்டங்களும், நிறுவனங்களும் இவர்களால் தொடங்கப்படுகின்றன. ஆகவே தான் இவர்கள் ஆபத்தானவர்கள். இத்தகையவர்களின் வாதம், நம் முன்னோர் சொன்னது அனைத்தும் முழுமுற்றான உண்மை; மறைபொருளில் அவர்கள் சொன்னதை நாம்தான் கண்டறியவேண்டும் - அதைக் கண்டறிய முயற்சிக்காமலேயே அவை பொய் எனக் கூறக்கூடாது (உங்களுக்கு நாடிபிடித்து மருத்துவம் செய்யத் தெரியவில்லை எனில் பிரச்சனை உங்களிடம்தானே தவிர நாடியைக் குறை சொல்லக்கூடாது) என்ற மட்டையடியாகவே இருக்கும். இவர்கள் செய்துவருவது என்னவெனில், இறுகிக் கட்டிதட்டிப்போன வெற்று நம்பிக்கைகளை தொடர்ந்து அறிவியல் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டு அவற்றிற்கு புத்துருவாக்கம் அளிப்பதாகும்.
இந்த இரண்டாம் பிரிவினர் வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களை முன்பு அசிட்டைல் கோலைன், ஹிஸ்டமின் போன்ற நரம்பு வேதியல் கடத்திகளுடன் (Neuro chemical transmitters) ஒப்பிட்டனர் (K. N. Uduppa). பின்னர் குவாண்டம் இயற்பியல் அவர்களுக்குச் சற்று எடுப்பாகத் தெரியவே அதைக் கையாண்டு முக்குற்றங்களை விளக்கினர் (சிறந்த எடுத்துக்காட்டு - தீபக் சோப்ரா). ஆனால் இன்று அவர்களது மோகம் நானோ தொழிற் நுட்பத்திற்கு தாவிவிட்டது போல் தெரிகிறது; நாளை வேறொன்றிற்குத் தாவும். இதன் நீட்சிதான் பீனியல் சுரப்பியை சிவனின் மூன்றாவது கண்ணோடு ஒப்பிடுதல், நடராஜரின் நடனத்தை பெரும் ஊழிக்காலத்தை குறிப்பாலுணர்த்துவதாக (கால் தூக்கி ஆடும் நடராசர் எனக்குப் பிடித்த கலைவடிவம்) வியாக்கியானம் செய்வது போன்ற அபத்தங்கள். என்னைப் பொறுத்தவரை இப்படி நம்புவது படுகுழியில் விழுவதற்கு ஒப்பாகும்; விழுந்தால் மேலே வருவது கடினம்.
வாத, பித்த, கபம் என்பது ஒரு கருதுகோள். கருத்து முதல்வாதம் கோலோச்சிய காலத்தில் நம் முன்னோர்கள் அவர்தம் தொடர் சிந்தனையின் விளைவாக கண்டடைந்த ஒரு தேற்றமே (Concept), இம்முக்குற்ற சமநிலை குலைவே நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ற புரிதல். முன்பே சொன்னது போல் அக்காலத்தில் இத்தேற்றத்திற்கு அவர்கள் வந்தடைந்தது அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாகும். நோய்களை விளங்கிக் கொள்வதில் இம்முறை, அக்காலத்தில், கண்டிப்பாகப் பயனளித்திருக்கும். அதற்காக அதை இன்னும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய நம் அறிவின் வீச்சோடு ஒப்பிட்டால் வாத, பித்த, கபமானது மிகவும் மேலோட்டமானது. எப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக வெவ்வேறு காலகட்டங்களில் புழக்கத்திலிருந்த பழக்க வழக்கங்கள் பிற்காலத்தில் வெற்றுச் சடங்காக இறுகி கட்டித்தன்மையடைந்ததோ அவ்வாறே வாத, பித்த கபமும் ஒரு சடங்காகவே இன்று செய்யப்படுகிறது. அவைகளைப் பார்க்காமலேயே மருத்துவம் செய்யலாம். மருந்துகளும் வேலை செய்யும். ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலோ பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் பலரும் ஒரு நல்ல காரியத்தைச் செய்துவருகிறார்கள். அது, நவீன அறிவியல் துணைகொண்டு நோய்க்கணிப்பு செய்து சித்த மருந்துகளை நோயருக்குப் பரிந்துரைப்பது.
வளி, அழல், அய்யத்தை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவம் நம்பிக்கை சார்ந்தது. எப்படி சோதிடத்தை நம்பினால் பலன் இருப்பது போல் தோன்றுகிறதோ அப்படி. ஆகவே இம்முக்குற்றத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவம் பார்ப்பவர்கள் எல்லாம் சோதிடர்கள் போன்றவர்கள். அவர்கள் சொல்லும் குறிகுணங்களில் 10 க்கு 5 எல்லாருக்கும் இருக்கும். சென்னையில் நாடி பிடித்து மிகத் துல்லியமாக நோய்க்கணிப்பு செய்து வருபர் என்று பிரபலமாக அறியப்பட்ட மருத்துவர் ஒருவரிடம் சென்றுவந்த நோயர் ஒருவர் என்னிடம் சொன்னார் - சார், அவர் என்னனுடைய நோயை மிகச் சரியாக கண்டுபிடித்துச் சொல்லிவிட்டார் என. தாது நட்டம் தான் அவர் நாடிபிடித்துச் சொன்ன அந்த நோய். பின்னே ‘விந்து கழிதல்’ தானே எல்லா நோய்களுக்கும் அடிப்படை?! இந்த ஒன்றைச் சொல்லியே கிட்டத்தட்ட எல்லா ஆண்களையும் ஒரு சித்த மருத்துவர் தமது மருத்துவத்தை நிலைநாட்டி விடலாம். அதன் வீச்சு அத்தகையது. அதனால்தானே சொப்பன ஸ்கலிதம் என்ற ஒன்றை வைத்தே கோடிஸ்வரனாகிய பல சித்த மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்கள் கையாளும் வேறு சில வார்த்தைகள் - உங்களுக்கு உடல் சூடு அதிகம், இரத்தம் சுத்திகரிப்புச் செய்யவேண்டும், சக்தி (Energy) குறைவாக உள்ளது போன்ற பொருளற்ற அபத்தமான சொற்கள்; சற்று நவீன அறிவியல் தொடர்பிருந்தால், (பித்த)சூடு அதிகம் அதனால் உங்களுக்கு gastritis வந்திருக்கிறது என்று ஜல்லியடிக்கலாம். ஏற்கனவே சூடு, குளிர்ச்சி போன்ற சொல்லாடல்கள் நோயாளிக்கு நன்கு பரிச்சியம், ஆதலால் நமது மட்டையடிகளை அப்படியே நம்பிவிடுவார்.
உடனே முக்குற்றத்தில் எத்தனை ஆராய்ச்சிகள் நடந்துள்ளன, எத்தனை ‘ஆய்வுக் கட்டுரைகள்’ வெளிவந்திருக்கின்றன என்ற கேள்வி எழும். ஒரு கட்டுரை ஒரு ஆய்விதழில் வெளிவந்திருக்கிறது என்றால் மட்டுமே அது அறிவியலாகிவிடாது. இவற்றை நான் நம்பாததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று, எத்தகைய குப்பையையும் ஒரு ‘மருத்துவ ஆய்விதழில்’ பிரசுரித்துவிட முடிவதற்கான சாத்தியக்கூறுகள் இன்று அதிகம்; இரண்டாவது காரணம் - கிட்டத்தட்ட வாத, பித்த, கபம் குறித்த எல்லா ஆய்வுகளும் அவை கண்டிப்பாக உண்மையாக இருக்கும் எனும் ஒரு முன் தீர்மானத்தின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. அதற்குச் சாதகமான சான்றுகள் திரட்டப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. வேறு வகையில் சொல்வதானால் ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் முன்னரே முடிவுகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகின்றன; அதற்கேற்றவாறு அவ்வாராய்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இதன் பெயர் அறிவியல் அல்ல; பித்தலாட்டம். உடனே அவை உண்மையில்லை என்று நம்புவது மட்டும் முன்தீர்மானமாகாதா என்ற கேள்வி எழும். இதற்கான பதில் இக்கட்டுரையின் முந்திய பகுதிகளிலேயே விளக்கப்பட்டுவிட்டது.
முக்குற்றத்தின் காலப் பொருத்தமின்மை
இப்போது மருத்துவத்தை எளிமைப் படுத்தவேண்டும்; அதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என பல இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மருத்துவம் புரிவது மருத்துவர் - நோயரிடையே ஒருவழிப் பாதையாக இல்லாமல், இருவரும் சேர்ந்து பங்கேற்கும் ஒரு ஒருமித்த நிகழ்வாக இருக்கவேண்டும் என்ற எண்ணங்கள் வலுப்பட்டு வருகின்றன. இத்தகைய சுதந்திரச் சிந்தனைகளோடு ஒப்புநோக்குகையில் முக்குற்ற அடிப்படையிலான சித்த மருத்துவம் ஆதிக்கச் சிந்தனையுடையது; அது நமது நிலப்பிரபுத்துவ சிந்தனையின் ஒரு எச்சமாகவே இன்னும் தொடர்கிறது. இன்றுகூட சில நோயாளிகள், நாம், உங்களுக்கு உடம்பிற்கு என்ன எனக்கேட்டால், உடனே நீங்கதான் நாடிபிடித்துச் சொல்லவேண்டும் எனக்கூறுவர். இச்சிந்தனை மருத்துவரை ஒரு பீடத்தில் வைத்து பூஜிக்கும் முறை. இம்முறையில் மருத்துவரே முதன்மையானவர்; அவருக்கே நோயருக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கும் முழு அதிகாரமும் உண்டு. மேலும் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்றால் அவர் உடல் சுத்தம், மனச் சுத்தம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் (கிட்டத்தட்ட சாமியாராக வேண்டும்), அப்போதுதான் அவருக்கு நாடி பரிசோதனை கைகூடும் என்றும் சொல்வதால் இம்முறை காலப் பொருத்தமற்றது.
சித்த மருத்துவத்தில் தத்துவ நீக்கம் செய்தல்
முக்குற்றமே பயனற்றது என்றாகிப்போனால் சித்த மருத்தும் என்ற முறையே அழிந்துபோகிவிடுமே என்ற அய்யம் வரும். அது உண்மைதான். வளி, அழல், அய்யம் மற்றும் அவற்றோடு தொடர்புடைய தத்துவங்களை (தொன்மங்களை) நீக்கிவிட்டால் சித்த மருத்துவம் என்ற ஒன்றை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. எஞ்சியிருப்பது நோயணுகாவிதி போன்ற சில குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளின் கருத்தியல்கள்; இவைகள் பிற்சேர்க்கைகள் - பட்டம் படிக்கும் சித்த மருத்துவர்களின் அவலம், இத்தகைய குப்பைகளையும், சகுனம் பார்த்தல், வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகளையும் படித்து வெளிவருவது. (மேலும், இதிலும் ஒரு மாணவனை தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக தேர்வில் தோல்வியுறச் செய்யும் பேராசிரியர்கள்!?) தத்துவங்களையும், கோட்பாடுகளையும் நீக்கிவிட்டால் சித்தமருத்துவம் எனச் சொல்லப்படவேண்டியது அதன் மருந்துகள் மட்டுமே. பல நீண்டகாலங்களுக்கு சித்தமருத்துவம் வாழ்ந்து வருவதற்குக் காரணமாக நான் கருதுவது அதன் தத்துவப் பின்னணியல்ல, மாறாக அதன் மருந்துகளே. பொதுவாக சித்த மருத்துவத்தை வெளிப்படையாகத் தெரியும் குறிகுணங்களுக்கு ஏற்ப மட்டுமே மருந்தளிக்கும் ஒரு முறையாக மட்டுமே (புறவயமான மருத்துவம்) கருதும் பார்வையுமுண்டு. அதற்காக இன்று பயன்பாட்டிலுள்ள எல்லாச் சித்த மருந்துகளும் நன்மை பயப்பவை என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சித்த மருந்துகளையும் நம் கலாச்சாரத்தோடு இணைத்தே புரிந்துகொள்ளவேண்டும். விந்துவைக் கெட்டிப்படுத்த தங்கம், காண்டாமிருகக் கொம்பு ஆண்மையைக் கொடுக்கும் போன்ற முட்டாள்தனமான நம்பிக்கை சார்ந்த மருந்துகளைப் புறந்தள்ளவிட்டு மற்ற மருந்துகளை அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும். இன்று உலகம் முழுதும் புதிதாக மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கு பெருந்தொகை செலவிடப்படுகிறது; அது பெரும் முதலீடுகளைக் கோருகின்ற தொழில். ஆனால், சித்த மருத்துகளில் 10 ல் ஒன்று உண்மையிலேயே பயனளிக்கக்கூடியது என்று அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டாலே அது மொத்த சமூகத்திற்கும் பயனளிக்கக்கூடும்; அது சாத்தியம்தான். இவ்வாறு ஆய்வு செய்வதற்கு ‘முன்முடிவற்ற இரட்டைக்குருடு ஒப்பாய்வு’ (Randomised double-blind controlled clinical trial) முறை மிகவும் உகந்தது. ஏற்கனவே இதுபோன்ற ஆய்வுகள் சீனப் பாரம்பரிய மருந்துகளில் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிவரும் சித்த மருந்து கண்டிப்பாக நவீன மருத்துவத்திற்குள் உள்ளிளுக்கப்பட்டு அது ஒரு நவீன மருத்துவ மருந்தாகவே மாற்றப்பெறும். அல்லது அம்மருந்தின் செயல்வினை மூலங்கள் (Active principles) கண்டறியப்பட்டு அவைகளிலிருந்து ஒரு புது ஆங்கில மருந்து உண்டாக்கப்படும். இதை நம்மால் ஜீரணிப்பது கடினம் தான். என்ன அவற்றின் மூலங்கள் சித்தமருத்துவத்திலிருந்து பெறப்பட்டது என மார்தட்டிக் கொள்ளமுடியும் (நான் அறிவுச்சொத்துடைமை (Intellectual property rights) குறித்து எல்லாம் இங்குபேச முயலவில்லை). சொல்லுவதற்கு இது எளிது; எனினும் இத்தகைய மாற்றம் (தத்துவ நீக்கம் செய்யப்பட்ட சித்தமருத்துவம்) என்றாவது நடக்குமா என்பதில் எனக்கு சற்று சந்தேகம் தான்.
சித்த மருத்துவம் இயற்கையானதா?
இயற்கைக்குத் திரும்புவோம் என்ற கோஷம் இப்போதெல்லாம் அடிக்கடிக் கேட்கிறது. சித்த மருத்துவம் செய்வது இயற்கைக்குத் திரும்புவது என்று யாராவது சொன்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பரிணாம இயங்கியலின் ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்த அற்புதம் மனித மூளை. ஹோமோ சாப்பியன்களாக நாம் உருமாற்றம் பெற்ற கணத்திலிருந்து நமது மூளை சிந்தித்து வருகிறது. அப்போதிருந்தே இயற்கையை நாம் புரிந்துகொள்ளவும், அடக்கவும் முயன்று கொண்டிருக்கிறோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் எப்போது நாம் ஆடையணிய ஆரம்பித்தோமோ, எப்போது சமைத்து உண்ண ஆரம்பித்தோமோ, எப்போது விவசாயம் பண்ண ஆரம்பித்தோமோ, அப்போதே இயற்கையிலிருந்து நாம் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டோம். சிலர் சொல்லலாம் கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் நாம் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம்பமுடியாத முன்னேற்றங்கள் அடைந்து நம் பூவுலகைச் சீரழித்து விட்டோம் என. நான் கருதுவது என்னவெனில், எப்படி கடந்த சில நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு குவாண்டம் தாவலோ (Quantum leap), அதுபோன்றே ஹோமோ சாப்பியன்கள் விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டதும், ஆடையணியக் கற்றுக் கொண்டதும், சக்கரத்தைக் கண்டுபிடித்ததும். இவை அக்காலங்களில் மிகப்பெரிய குவாண்டம் பாய்ச்சலாக இருந்திருக்க வேண்டும். அவை அக்காலத்தில் நிலவிய இயற்கைச் சமநிலையை, சுற்றுச்சூழலைக் கண்டிப்பாக பாதித்திருக்கவேண்டும். அப்படியே ஒரு பேச்சுக்கு இன்றைய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் துறந்துவிட்டு காட்டுமிராண்டிகளாக மாறினாலும் நமது கேடுகெட்ட மூளை சும்மாயிருக்காது, தொடர்ந்து சிந்திக்கும்; ஏனெனில் அதுதான் அதன் இயற்கை. வளர்ச்சி எப்படி முதன்மையானதோ அதுபோன்றே சுற்றுச் சூழலும்; ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதும் அறிவியல் பூர்வமானதாகவேயிருக்க முடியுமேயன்றி பகுத்தறிவுக்கு மாற்றான வெற்று நம்பிக்கைகளாக இருக்க முடியாது.
சித்த மருத்துவம் இயற்கையானது என்று கூறும்போதே அதில் பின் விளைவுகளோ (அ) பக்க விளைவுகளோ இல்லை என்று எளிதாக பிறரை நம்பவைக்க முடிகிறது; ஆனால், அது உண்மையா என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது. சித்த மருந்துகளில் நஞ்சுத் தன்மையுள்ளதா எனவறிய முன் கூறிய அறிவியல் அய்வுகளுக்கு அவை உட்படுத்தப் படவேண்டும்.
சித்த மருத்துவர்களது பிரச்சனைகள்
பொதுவாக சித்த மருத்துவம் பயின்றவர்களிடம் காணப்படும் ஒரு மனப்பான்மை, நம் மருத்துவத்தில் எல்லாம் இருக்கிறது; நாம் தான் அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது. இன்னொருவிதமான மனப்பான்மை சித்த மருத்துவத்தை பிற அறிவுப்புலத்தைச் சேர்ந்த யாரும் கேள்விக்குட்படுத்துவதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது. அதிலும் குறிப்பாக அவர் நவீனமுறை மருத்துவராக இருந்துவிட்டால் நம் எதிர்ப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், அதே சமயம் சில நவீன மருத்துவர்கள் சித்த மருத்துவத்தைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டால் போதும், உடனே அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டியது. இது எங்குகொண்டுபோய் விடுகிறது என்றால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே வானியல், பேரண்டவியல், குவாண்டம் இயற்பியல், புவி வேதியியல் (Geochemistry), நானோ தொழிற்நுட்பம் போன்ற இன்னபிற நவீன அறிவியல் துறைகளையும் சேர்க்கவேண்டுமாம்; அப்போதுதான் இவற்றைப் படித்து வெளிவரும் சித்த மருத்துவன் நம் மருத்துவத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகளை!? வெளிக்கொண்டு வரமுடியுமாம். இத்துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு சித்த மருத்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாததால் அவர்கள் நம் மருத்துவத்தைக் குறை சொல்லிவிடுகிறார்களாம். இந்த எண்ணம் குருட்டு நம்பிக்கை சார்ந்தது. மனிதனின் அறிவு வளர்ந்தது நம்பிக்கைகளினால் அல்ல, மாறாக அவற்றை கேள்விக்குட்படுத்துவதில்தான். கண்மூடித்தனமாக ஒன்றை நம்புவது நம்மை தேக்கமடையச் செய்துவிடும். இத்தகைய சுயவிமரிசனமற்ற கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மதம் சார்ந்தது; ஆகவே, நாமும் மதவாதிகளைப் போன்றே செயல்படுகின்றோம். ஆனால், தலாய்லாமா போன்ற மதத் தலைவர்கள் கூட அறிவியலுக்கேற்ற மாதிரி புத்த மதத்தைப் புணரமைக்க வேண்டும் எனக் கூறத்தொடங்கியுள்ளார்கள். (“If scientific analysis were conclusively to demonstrate certain claims in Buddhism to be false, then we must accept the findings of science and abandon those claims." - Dalai Lama)
சித்த மருத்துவத்தை / மாற்றுமுறை மருத்துவத்தை பொதுமக்கள் நாடுவதற்கு நவீன மருத்துவம் குறித்த எதிர்மறை எண்ணங்களே முக்கியப் பங்காற்றுகின்றன என்பதே என் எண்ணம். நேர்மறை எண்ணங்களோடு சித்த மருத்துவதை நாடுபவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே இருக்கலாம். நவீன மருத்துவம் குறித்த எதிர்மறை எண்ணங்களில் மிக முதன்மையான காரணமாக நான் நினைப்பது நோய்களுக்கான முழுமையான தீர்வுகள் அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது; அதுபோன்றே நவீன மருத்துவர்களிடையே பொதுவாக நோயாளிகளை அணுகுவதில் காணப்படும் அலட்சியம்/அராஜகம், தேவையற்ற அறுவை மருத்துவங்கள், மேலும் தேவையற்ற ஆய்வுக்கூட பரிசோதனைகள் - அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் அதிகப்படியான வரும்படிகள், இன்று நவீன மருத்துவம் செய்துகொள்வதினால் ஏற்படும் பொருளிழப்பு போன்ற சில காரணிகளும் இவ்வெண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் மாற்றம் பெறும்போது, (இந்த மாற்றம் அறிவியல் ரீதியாகவே இருக்க முடியும்; ஏற்கனவே இதற்கான குரல்கள் நவீன மருத்துவர்களிடையேயும், சில சிந்தனையாளர்களிடையேயும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன) சித்த மருத்துவத்தை நாடுபவர்கள் (இது நடப்பதற்கு பல்லாண்டுகள் ஆகுமெனினும்) குறைந்துபோவார்கள். இந்த யதார்த்தத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதற்காக சித்த மருத்துவமே வேண்டாம் எனச் சொல்ல வரவில்லை. எல்லா நோய்களுக்கும் முழுமையான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும்வரை எல்லா முறை மருத்துவங்களும் வழக்கில் இருக்கும்; இருக்க வேண்டும். எப்படி பல்வேறு மதங்களும், சோதிட முறைகளும் இன்றும் வழக்கிலிருக்கின்றனவோ அவ்வாறே. ஆனால், எப்படி மதமும், சோதிடமும் அறிவியலாகாதோ அப்படியே முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட சித்த மருத்துவமும் அறிவியலாகாது. முக்குற்றம் போன்றவற்றை அறிவியலோடு ஒப்புமைப்படுத்தி பேசுவது சித்த மருத்துவத்தையும், அறிவியலையும் கேவலப்படுத்துவதற்குச் சமமாகும். இது எப்படியெனில் இராமர் பாலம் என்றழைக்கப்படும் மணல்திட்டுகளை இராமர் கட்டியது என்று காட்டுவதற்குச் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இராமாயணம் எனும் பெரும் இதிகாசத்தையும், அறிவியலையும் இழிவுபடுத்துகிறோமோ அப்படியே. இராமாயணமும், சிலப்பதிகாரமும், சித்தமருத்துவமும் நம் பண்பாட்டின் தடங்கள்; நாம் கடந்து வந்த பாதை; ஏறி வந்த ஏணி. அவ்வாறு நாம் கடந்துவரும் பாதையில், காலந்தோறும் பல அனுபவங்களைப் பெறுகின்றோம்; அவற்றால் வளர்கின்றோம். இன்றைய நம் அனுபவங்களைக் கொண்டு பின்னோக்கிப் பார்க்கும்போது நம்முன்னோர் செய்த பல முட்டாள்தனங்கள் நமக்குத் தெரிகின்றன; ஆனால், அன்று, அவை மிகுந்த புத்திசாலித்தனம் ஆனவையாக நம முன்னோர்க்குத் தெரிந்திருக்கும். அவ்வாறு புத்திசாலித்தனமானவையாக நம் முன்னோர்க்குத் தெரிந்திருக்கக்கூடிய வழிமுறைகளில் ஒன்றாக நான் கருதுவது மீப்பொருண்மைத் தன்மைகொண்ட (Metaphysical), அகவயமான (Subjective), ஆன்மீக வழிமுறையையே. அன்று நம் முன்னோர் பயணத்தின் இடையில் தவறவிட்ட பாதை, இதற்கு மாற்றான அறிவியல்பாதை. எனவே இனியாவது அப்பாதையை நாம் தேர்ந்தெடுப்போம்.
துணை நூற்பட்டியல்
இக்கட்டுரையை, நான் இதுவரையிலும் படித்த புத்தகங்கள் / இணையப் பக்கங்கள், கேட்ட செய்திகள், இணையதள விவாதங்கள், நேர்ப்பேச்சில் விவாதித்த பல நபர்கள் என பலவற்றிலும், நான் பெற்ற அனுபவத்தை வைத்தே எழுதியுள்ளேன். எனினும் என் சிந்தனையில் சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களைத் தோற்றுவித்த சில புத்தகங்களையும், கட்டுரைகளையும் கீழே கொடுத்துள்ளேன்.
- Mayr E. What evolution is? Basic Books, New York, 2001.
- Rothman K, Greenland S. Modern epidemiology. 2nd ed. Lippincott Williams & Wilkins, Philadelphia, PA, 1998.
- Nanda M. Postmodernism and religious fundamentalism: a scientific rebuttal to hindu science. Navayana, New Delhi, 2003 (இணையத்தில் படிக்கக் கிடைக்கும் இந்த ஆசிரியரது மேலும் சில கட்டுரைகள்)
- Varma D R. From whitchcraft to allopathy uninterrupted journey of medical science. EPW 2006; August 19: August 19: 3605-11.
- ஜெயமோகன். பண்பாட்டு மானுடவியலும் தமிழகமும். http://jeyamohan.in/?p=12.