செவ்வாய், 14 அக்டோபர், 2008

அறிவியலும் சித்த மருத்துவமும் - 2

அறிவியலும் சித்த மருத்துவமும் - 1

மருத்துவம் - அறிவியலா?! கலையா?!

உண்மையில் மருத்துவம் அறிவியலா அல்லது கலையா என்பது இன்றும் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்படும் விடயம். வேறு எந்தத் துறையிலும் இந்தளவு சர்ச்சைகளுக்கு இடமில்லை. உயிரியலின் சிக்கலான அமைப்புதான் (Complexity) இந்த சர்ச்சைகளுக்குக் காரணம். இதே காரணத்தால்தான் நவீன மருத்துவமான ஆங்கில மருத்துவத்திற்கிணையாக மரபு மருத்துவ முறைகளும் இன்னும் பயன்பாட்டிலுள்ளன என்றால் அது மிகையாகாது. இதைப் பின்னர் பார்க்கலாம். பொதுவாக மருத்துவம் கற்பதை அறிவியலாகவும், பயன்படுத்துவதைக் கலையாகவும் கருதுவது நடைமுறை உண்மை (Medicine is a science to learn and an art to practice). ஒரு மருத்துவர் கைராசியான மருத்துவர் எனப் பெயர் வாங்குவதற்கு அவர் நோயாளியிடம் காட்டும் பரிவு உட்பட மேலும் பல மனித மனத்தோடு தொடர்புடைய காரணிகள் தொழிற்படுகின்றன. (உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி மருத்துவத்தைக் கலையாகக் கையாள்வதில் மாற்று முறை மருத்துவர்கள் சிறந்தவர்கள்).

ஆயினும், தரவு சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற ஒருமுறை இப்போதெல்லாம் பரவலாக பயன்பாட்டிற்கு, குறிப்பாக மேலைநாடுகளில், வந்துகொண்டிருக்கிறது. இம்முறையானது மருத்துவம் குறித்த நமது புரிதல்களை அதிகப்படுத்தியுள்ளது; வேறுவகையில் சொன்னால், நோய்கள், அதற்கான காரணீகள், சிகிச்சைமுறைகள் குறித்து நாம் இதுகாறும் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைக் கட்டுடைக்கின்றது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்வதானால், வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைப்பதின் அவசியமின்மையை இம்முறை தெளிவுறுத்தியதைக் குறிப்பிடலாம். தரவு சார்ந்த மருத்துவத்தின் முதன்மையான குறிக்கோளே மிகவும் சிக்கலான, நிச்சயத்தன்மையற்ற சூழ்நிலைகளில் முடிந்த அளவிற்கு புறவயமான முடிவுகளை மருத்துவர்கள் எடுப்பதற்கு உறுதுணை புரிவதேயாகும். இம்முறையானது மருத்துவம் செய்வதிலுள்ள கலை அம்சத்தை, குறிப்பாக மருத்துவரது சொந்த முன்தீர்மானங்களைக், குறைத்துவிட்டு அவ்விடத்தில் அறிவியலைப் புகுத்துகின்றது. எனவே இனிவரும் காலங்களில் மருத்துவம் புரிவது மிகுதியும் அறிவியற் சார்ந்ததாகவே இருக்குமேயன்றி கலையாக இராது.

ஏன் இத்தனை மருத்துவ முறைகள்?

சின்ன வயதில் ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப் பலகைகளைக் காணும்போதெல்லாம் அதென்ன ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என நான் வியப்புற்றிருக்கிறேன். இதற்கான விளக்கம் அநேகமாக நான் சித்த மருத்துவக் கல்லாரியில் சேர்ந்த பிற்பாடுதான் கிடைத்திருக்குமென நினைக்கிறேன். அப்போதுதான் நாட்டு மருந்துக்கடை என்ற ஒன்றிருக்கிறது என்பதே எனக்குத் தெரியவந்தது. இப்போதெல்லாம் ‘இங்கிலீஸ்’ மருந்துக் கடைகளிலேயே அம்மருந்துகளைப் போன்றே பொதி செய்யப்பட்டு நாட்டு மருந்துகளும் கிடைக்கின்றன. ஆங்கில மருந்துக்கடைகளின் பெயர்ப் பலகைகளிலேயே இங்கு சித்தா, ஆயுர்வேத மருந்துகளும் கிடைக்கும் என எழுதப்பட்டுள்ளன. எனவே ‘இங்கிலீஸ்’ மருந்துக்கடை என்ற பெயர்ப்பலகைகளைத் தற்போதெல்லாம் அரிதாகவே காணமுடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக நன்றாக உள்ளதால், இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த நிறுவனப் பங்கிலும் கண்ணைமூடிக் கொண்டு முதலீடு செய்தாலும் அது 'நீண்டகால அடிப்படையில்' உறுதியாகப் பலன் தரும் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே எம்மருந்தை எந்நோயாளிக்குக் கொடுத்தாலும் பெரும்பாலான நேரங்களில் அந்நோய் குணமாகிவிடும் அல்லது கட்டுப்படுத்தப்படும்; இது அம்மருந்தின் உண்மையான வீரியத்தால் அல்ல, மாறாக பெரும்பாலான நோய்கள் தன்னியல்பாகவே குணமாகிவிடுதலாலோ/குறைந்துவிடுவதாலோ அல்லது மனிதமூளை அம்மருந்தை அந்நோய்க்குறியதாகப் பாவித்துக்கொள்வதால் ஏற்படும் விளைவினாலோ இருக்கலாம். இவ்விளைவை மருந்துப்போலி விளைவு (Placebo effect) என்பர். புதிய மருந்துகளின் வீரியமறிய நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் (Randomised double blind controlled clinical trials) இப்போலிகள் (Placebo) இன்றியமையாத பங்காற்றுகின்றன. மருந்தறிவியலின்படி (Pharmacology) ஒவ்வொரு மருந்திற்கும் நோயைக் குணப்படுத்தவேண்டிய வீரியமிருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக போலிவிளைவும், பக்கவிளைவும் எல்லா மருந்துகளுக்கும் உண்டு.

சீன இயற்பியல் என்றோ அல்லது அரபு வேதியல், ஜெர்மானிய வானியல், இந்திய விலங்கியல் என்றோ அறிவியலில் பிரிவுகள் இல்லை. ஆனால் மருத்துவ முறைகளில் மட்டும் ஏன் இத்தனை பிரிவுகள்? (ஆனால், இப்போது நம்நாட்டில் வேத கணிதம் (Vethic mathematics), வேத வானியல் என்று சொல்லி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது ஒரு முரண்) இதற்கு, முன்பே விளக்கியது போல, உயிரியலின் இயல்பான சிக்கல்தன்மையும் அதனால் நம் அறிதலில் உள்ள நிலையற்றதன்மையுமேயாகும். உயிரியியல் செயல்கள், வேதியியலிலோ இயற்பியலிலோ பொருள்களுக்கிடையே நடைபெறும் ஒற்றை பரிமாண தன்மையுடைய வினைகளைப் போலல்லாது, பல பரிமாணத் தன்மையுடையவை. விளக்கமாகச் சொன்னால் தண்ணீரை சூடுபடுத்தும்போது 100c செல்ஷியஸில் அது கொதிநிலையை அடைகிறது. இங்கு தண்ணீருக்கும், வெப்பத்திற்குமிடையேயான உறவைக் குலைக்கும் ஒரே காரணி ஆக்சிஜன் அடர்த்தி மட்டுமே. (ஆக்சிஜனின் அடர்த்தி கடல்மட்டத்திலிருந்து ஒரு இடத்தின் உயரத்தினைப் பொறுத்து மாறுபடும்) அதைச் சீராக வைத்துக்கொண்டால் உலகின் எந்தப்பகுதியிலும், எந்த நேரத்திலும் 100 C வெப்பத்தில் தண்ணீர் கொதிநிலையை அடைகிறது. ஆனால் நோய்கள் ஏற்படும்விதம், அவற்றிற்கான மருந்துகள் செயல்படும்விதம் போன்றவை முன்பே குறிப்பிட்டதுபோல் பல பரிமாணத்தன்மையுடையவை. அவற்றை இயற்பியல், வேதியியல் போன்றவற்றை மாதிரிகளாகக் கொண்டு, உயிரியலானது இயற்பியல், வேதியியலின் குறுக்கப்பட்ட வடிவாக இருந்தாலும், மட்டுமே புரிந்துகொள்ள இயலாது.

நோய்களைக் குணப்படுத்துவதைப் பொறுத்தவரை நாம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இயல்புள்ளவர்கள். இன்று பெரும்பாலானோர் முதலில் நாடுவது அலோபதி, திருப்தியளிக்காவிட்டால் சித்தா, ஹோமியோபதி. இவற்றிலும் திருப்தியடையாவிட்டால் மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்வது, பில்லி சூனியம் எடுப்பது என்றளவில் நமது செயல்பாடுகள் இருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படுவது போல் தோன்றுவது முன்னர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். எங்களூர்ப் பகுதிகளில் பார்வை பார்த்தல் என்ற ஒரு ‘மருத்துவம்’ உண்டு. தீராத தோல்நோய்கள், குறிப்பாக கரப்பான், போன்றவற்றிற்கு ‘மருத்துவர்’ ஒரு குச்சியால் நோய்கண்ட இடத்தில் சில மந்திரங்களை முனுமுனுத்துக்கொண்டே தடவுவார். வேறு ஏதும் மருந்துகள் கொடுப்பதில்லை. சென்னையில் சில இடங்களில் சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு மசூதிக்குச் சென்று மந்திரித்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதுபோன்று பல்வேறு பகுத்தறிவிற்கு முரணான, எந்தக் குறிப்பிட்ட முருத்துவ முறையையும் சாராத, பழக்கவழக்கங்கள் எல்லாக் குமூகங்களிலும் உண்டு. அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் இத்தனை முறைகளும் புழக்கத்திலிருப்பது, உயிரியலில், பிற அறிவியல் துறைகளோடு ஒப்பிடும்போது, மனிதனுக்கிருக்கும் அறிதல் குறைபாடுதான் (Gaps in knowledge).

தொடர்வேன்...