பக்கங்கள்

செவ்வாய், 9 மார்ச், 2010

தேவர் மகன் - சில நினைவு மீட்டல்கள்

மிகச் சமீபத்தில் தேவர் மகன் படத்தின் இந்த காணொளிக் காட்சித் துண்டை யுடியுப்பில் பார்த்தேன். இதன் இறுதிப் பகுதியில் வரும் அந்த வசனங்களைக் கேட்டபோது என்னால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் என் காதலியைக் கைப்பிடிக்க என் அப்பாவிடம் இதே போன்று என் சாதியையும் அவர்களின் சாதியையும் ஒப்பிட்டு நமக்கு நிகரானவர்கள் என்று பேசியிருக்கிறேன். சிவாஜி கடைசியில் கேட்பது போலவே என் அப்பாவும் 'என் கிட்ட இப்ப நீ அனுமதி கேட்கிறாயா இல்ல தகவல் சொல்றியா' என்ற ரீதியில் கேட்டிருக்கிறார். ஆனால், பெரிய தேவர் சற்று விசால மனம் படைத்தவராக இப்படத்தில் காட்டப்பட்டிருப்பார். என் அப்பா யதார்த்தத்தில் சற்று குறுகிய மனம் படைத்தவர். அவர் அவ்வாறு இருப்பதற்கான சூழ்நிலையை நல்லவேளையாக நான் புரிந்துகொண்டு பொறுமை காத்ததினால் எங்கள திருமணம் பின்னர் இனிதே நடந்தது.

இப்படம் நான் திருநெல்வேலியில் படிக்கும்போது வெளிவந்தது. எங்கள் அறையில் இருந்த அறுவரில் நாங்கள் மூவர் கமலின் ரசிகர்கள். இரண்டு பேர் ரஜினி ரசிகர்கள். ஒருவன் இதில் எதிலும் அவ்வளவு நாட்டமில்லாதவன், ஆனால் அவனுக்குக் கமலைப் பிடிக்கும். பொதுவாக இப்படி அமைவது அபூர்வம். பெரும்பாலும் எல்லா இடங்களிலும் ரஜினி ரசிகர்களே அதிகமிருப்பர். நான் ஆறாங் கிளாஸ் படிக்கும்போது ஒருமுறை ப்ரெண்ட்ஸ் க்குப் பயந்து ரஜினி ரசிகராகக் கூட மாறியிருக்கிறேன். அப்பொழுது 'எனக்குள் ஒருவனும்', 'தங்கமகனும்' வெளியாகியிருந்த நேரம். என்னுடைய இந்த பச்சோந்தித்தனம் குறித்து பிற்பாடு நிறைய வருடங்களுக்கு எனக்கு என்மேலேயே வருத்தம் இருந்து வந்தது.

தேவர் மகனுக்கு ஒரு வருடம் முன்பு குணா வந்தது. வந்த சில நாட்களிலேயே ரத்னா தியேட்டரிலிருந்து அதைத் தூக்கிவிட்டார்கள். குணா வந்த ஆறாவது நாள் நாங்கள் படம் பார்க்கப் போனோம். ரத்னா தியேட்டர் வாசல் காவலாளி, 'கமல் இன்டெர்வலுக்குப் பிறகு காட்டில கிடந்து கத்துதான்' இதப் போய் பாக்க வந்துட்டேளே என்று சொல்லி வெறுப்பேற்றினார். ரூமிலிருந்த தேவர் சாதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான நண்பனோ ரத்னா தியேட்டரில் டிக்கெட்டோட வடையும் சேர்த்துத் தருகிறார்கள் என்று கடுப்பை கிளப்பிட்டிருந்தான். அதனால் நாங்கள் தேவர் மகனை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். அப்போ பாண்டியனும் வெளியாகவிருந்தது. தினமலரில் இருவரது ப்ளோவப் போட்டிருந்தார்கள். எங்கள் அறையில் இரண்டையும் ஒட்டி வைத்திருந்தோம்.

படம் பார்ப்பதிற்கு முன்னாடியே ஒருநாள் 'பழையது ஒதுங்குது புதியது பிறந்தது ஹர ஹர பரமசிவமே' எனத் தொடங்கும் பாடலை கேட்டு கமலைப் புழுதி வாரித் தூற்றிக்கொண்டிருந்தோம் - இவனுக்கு அறிவே கிடையாது. பணம் சம்பாதிக்கவேத் தெரியவில்லை. ரஜினியப் பாரு எப்படி இருக்கான் என்ற ரீதியில் எங்களது விமரிசனம் சென்று கொண்டிருந்தது. பின்னர் படமும், அப்பாடல் படத்தோடு ஒன்றியிருந்த விதமும் எங்களுக்குப் பிடித்திருந்தது. தேவர் ஜாதியைச் சேர்ந்த, ரஜினி ரசிகனுக்கும் அப்படம் மிகவும் பிடித்து விட்டது. எங்க ஐயாவும் நல்லா இருக்கு என்று சொன்னதாக அவன் கூறினான்.

இரண்டாவது முறையாகச் சென்ட்ரல் தியேட்டரில் படம் பார்க்கும் போது எங்கள் பின்வரிசையிலிருந்த ஒரு ஆள் திடிரென்று எழுந்து 'ஏல இது தேவமார் படம்ல, பிள்ளமார்லாம் இதப் பார்க்ககூடாது' என்று கத்திக்கொண்டே வெளியே போய்விட்டார். மூன்றாவது முறையாக திருச்சி மாரிஸ் திரையரங்கில் இப்படத்தை இரண்டாவது ஆட்டத்தில் பார்த்தேன். அப்போது ஒரு கருத்தரங்கிற்காக திருச்சி சென்றிருந்த நான் ஜமால் முகம்மது கல்லூரியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊர் நண்பருடன் சேர்ந்து பார்த்தேன். மாரிஸ் தியேட்டரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அதற்கு ஒரு காரணம். அப்பல்லாம் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இத்தனைக்கும் நான் அதிகம் படம் பார்க்கமாட்டேன். படத்தின் பாதியிலேயே மிகு களைப்பால் தூங்கிவிட்டேன். பின்னர் சே எவ்வளவு அருமையான படம் இப்படித் தூங்கிவிட்டோமே என்ற எண்ணம் வந்தது.

அப்போவெல்லாம் கமல் வழியாகவே எனக்கு சிவாஜியைப் பிடிக்கும். என் அறையிலிருந்த அந்த மூன்றாவது வகையைச் சேர்ந்த நண்பனும் கமல் போய் சிவாஜியை மிகப் பெரிய நடிகர் என்று சொல்கிறானே என்ற ரீதியில் என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் தான் நடிப்பில் ஈடு இணையற்றவன் என்பதைச் சிவாஜி இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார். நடிப்பென்றே தெரியாத அளவிற்கு மிக யதார்த்தமாக இருக்கும். சிவாஜியுடன் ஒப்பிடும்போது கமலின் நடிப்பு இப்படத்தில் குறைவுதான். பல இடங்களில் சிவாஜியுடன் நடிக்கிறோம் என்ற பயத்தினாலோ அல்லது மரியாதையின் பொருட்டோ இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளில் சற்று மிகைப்படுத்தி கமல் நடித்திருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.

பி.சி. ஸ்ரீராம் சற்று மிகையாகவே கேமிராவைக் கையாண்டிருப்பதாகத் தோன்றும். பல காட்சிகளில் தேவர் வீட்டைக் காண்பிக்கும் போது ஒருவிதமான மஞ்சள் வெளிச்சம் பின்புறம் வருவது படத்தின் அழகியலுக்கு வேண்டுமென்றால்
பயன்பட்டிருக்கலாம், ஆனால் யதார்த்தமாகவில்லை என்பது என் எண்ணம். பாரதி ராஜாவின் படங்களிலேயே தேவர்களின் வீடுகள் யதார்த்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். மற்றபடி கமலின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகவே இன்றும் இப்படம் திகழ்கிறது. எனக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். இப்படம் சொல்லும் சேதி தெளிவானது, அது வன்முறையைத் தேவரினம் கைவிட வேண்டுமெனச் சொல்லாமல் சொல்கிறது. இது குறித்து அ. ராமசாமி அவர்கள் தெளிவாகவே அப்பொழுது ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் தேவர் மகன் படமே தொன்னூறுகளின் இறுதியில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களுக்கு முக்கியமான காரணம் என்ற ரீதியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அதில் உண்மையில்லை என்பதே என் எண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக