அறிவியலும் சித்த மருத்துவமும் - 1
அறிவியலும் சித்த மருத்துவமும் - 2
நம்மிடையே அறிவியல் குறித்த சரிதான புரிதல் இல்லை என்பதே என் எண்ணம். ஆன்மீகம் என்பது புலன் இன்பத்தைக் கடந்த ‘பேரின்பத்தைத்’ தரவல்லது, ஆகவே அது மேலானது. ஆனால் அறிவியல் வெறும் புலன் இன்பம் தரக்கூடியது, ஆகவே அது ஆன்மீகத்தைவிட ஒருபடி கீழானது என்றே நமது பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது எப்படியெனின் கணினிகளுக்கான கட்டளைகளை எப்படி நிரலிகளைக் (Codes) கொண்டு கட்டமைக்கிறார்களோ (Programmed), அப்படியே அறிவியல் என்றவுடன் அது லெளகீக இன்பம் தரக்கூடியது, ஆகவே அது மெய்ப்பொருள் காண்பதற்கு எதிரானது என்ற எண்ணத்தை நமக்கு பல (ஆன்மீகக்) கட்டுக்கதைகளினால் ஆன நிரலிகள் மூலம் கட்டமைத்துள்ளார்கள் நம் இடைக்கால முன்னோர்கள். அதனால் அறிவியல் என்ற பொத்தானை அழுத்தியவுடன், மூளை என்னும் நமது கணினியில் அது லெளகீக இன்பம் தரக்கூடியது என்ற பதில் ஆயத்தமாக வருகிறது. ஆனால் நமது பாரம்பரியத்தில் ஒருகாலத்தில் இன்றைய அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியான உலகாயுதம் எனப்படும் பொருள் முதல்வாத தத்துவமே மேலோங்கியிருந்தது. மெய்யியல் என்றால் உண்மையை அறிய முயல்தல் எனப்பொருள்படும். உண்மையையறிதல் என்பது, நாம் யார்? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? இறந்த பின் நம் சிந்தனைகள் என்ன ஆகின்றன? என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு விடையறிய முயல்தல் ஆகும். இந்த உண்மைகளை அறிவதற்கு ஆன்மீகம் என்ற கருத்து முதல்வாதமும், அறிவியல் என்ற பொருள்முதல்வாதமும் இரண்டு வழிமுறைகள். உயிரும், சிந்தனைகளும் பொருண்மைத்தன்மை வாய்ந்தவையாகவே இருக்கமுடியும் என்ற முடிவிற்கு அறிவியல் வந்துவிட்டபோதே ஆன்மிகப் பாதை தவறாகிவிடுகிறது. இதுபுரியாமல் நாம் இன்னமும் ஆன்மீகமே உண்மை மெய்ஞானம் அடைவதற்கான ஒரேவழி எனத் தொடர்ந்து அபத்தமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். நம் நவீன கால ஆன்மீக வியாபாரிகளும், பாபாக்களும், மாதாக்களும் இந்த அபத்தத்தைத் (அவர்கள் பிழைப்பிற்காகத்) தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இச்சிந்தனை சித்த மருத்துவர்களிடம் மட்டுமல்ல நம் குமுகாயம் முழுவதுமே புரையோடிப் போயிருக்கிறது. நாம் அறிவியல் எனப் புரிந்துகொள்வது அதன் பயனுறு விளைவான தொழில் நுட்ப வளர்ச்சியின் நீட்சியான அலைபேசி, தொலைக்காட்சி போன்ற இன்னபிற உபகரணங்களையே. என்னே ஒரு அறிவீனம்!!
சித்த மருத்துவம் சில மாற்றுச் சிந்தனைகள்
சித்த மருத்துவம் என்ற பெயர் மிகச் சமீபகாலத்தியதொன்றாகவே இருக்கவேண்டும் என்றே நான் நம்புகிறேன். அதாவது சித்தர்கள் என்று குறிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்ததாகக் கருதப்படும் 13-14 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடுதான் இச்சொல் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இம்மருத்துவ முறை கண்டிப்பாக காலத்தால் மிகவும் முந்தியது; தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று தோன்றியதோ அன்றே இம்மருத்துவமும் தோன்றியிருக்கவேண்டும். சித்தமருத்துவம் என்று நாம் இப்போது படிப்பது, குறிப்பாக கல்லூரியில், பல்வேறு வகைகளைத் தொகுத்து அவ்வகைகளை சித்த மருத்துவம் என்ற ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றியதின் வெளிப்பாடே என்பது என் எண்ணம்; எப்படி இந்துமதம் என்று ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே. இத்தகைய தொகுப்பு எப்போது நடந்திருக்க வேண்டும் என்பது குறித்து என்னால் ஊகிக்கமுடியவில்லை. ஆனால் இம்முயற்சி ஒருவராலோ அல்லது பலராலோ வெவ்வேறு கால கட்டங்களில் நடந்திருக்க வேண்டுமென நான் நம்புகிறேன். காரணம்: சித்தமருத்துவத்தின் அடிப்படைகளாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளிலுள்ள முரண்பாடே.
நான் இன்றைய சித்த மருத்துவத்தை பொருண்மைத் தன்மை வாய்ந்த புறவயமான அடிப்படையைக் கொண்ட ஒருபகுதியாகவும், அரூபமான, குறிப்பாக மீப்பொருண்மைத் தன்மை வாய்ந்ததான, அதனால் அகவயமான மற்றொரு பகுதியாகவும் பிரிப்பேன். தமிழர் பண்பாட்டிலும், சங்க இலக்கியங்களிலும் அவர்கள் பெரிதும் புறவயமான, இன்றைய மொழியில் சொல்வதானால் லெளகீக, வாழ்க்கையையே வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் லெளகீகம் என்பதையே ஒரு கெட்டவார்த்தையாக இன்றைய பெரும்பான்மையான தமிழர்கள் கருதுவது ஒரு நகைமுரண்; இதைப் பின்னர் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இன்று சித்தமருத்துவம் என்று வழங்கப்படுவது பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் கலந்தளிக்கும் ஒரு காக்டெயில்தான்.
மனிதன் தோன்றியபோதே அவனுக்கான நோய்களும் தோன்றிவிட்டன. நோய்களும் இயற்கையின் ஒரு அம்சம்தானே. மனிதனைப் போன்றே எல்லா உயிரிகளுக்கும், குறிப்பாகக் கிருமிகளுக்கும் இப்பூவுலகில் வாழ அனைத்து உரிமையுமுண்டு. ஆனால் இயற்கையின் ‘உன்னதப் படைப்பான’ மனிதமூளை தன்னியல்பிலேயே பேராசை கொண்டது. அது தான் தோன்றியது முதல், தன் உடலை வருத்தியும், மரித்தும் போக வைக்கும் நோய்களைப் புரிந்துகொள்வதின் மூலம் அவற்றை வெல்லத் துடித்துக் கொண்டிருக்கிறது. இச்சிந்தனையின் தொடக்க காலகட்டங்களில், அதாவது, வரலாற்றுக் காலத்திற்கு முன்பு, நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் துர் தேவதைகள், பில்லி சூனியங்கள், செய்வினை என்ற நம்பிக்கை எல்லாச் சமூகங்களிலும் பலமாக இருந்திருக்கவேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள். இவற்றின் எச்சங்கள் இன்னும் எல்லாச் சமூகங்களிலும் உண்டு. இப்படியான நம்பிக்கைகளிலிருந்து விலகி, நோய்கள் உண்டாவது குறித்து இருவேறு விதமான பெரும் சிந்தனைப் போக்குகள் அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் நிலவியிருந்திருக்க வேண்டும். முதலாவது, பொருள் முதல்வாத அணுகுமுறையான அய்ந்திணைக் கோட்பாடு; இரண்டாவது, கருத்து முதல்வாத அணுகுமுறையான முக்குற்ற சமநிலை குலைதல். இவ்வாறான புரிதலுக்கு நம்முன்னோர் வந்தடைந்தது, அதுவரையிலும் நம்பப்பட்ட பில்லி, சூனிய அடிப்படையையே முற்றிலும் தகர்த்த (Paradigm Shift) நிகழ்வாகும். இவ்வாறே சீனர்களின் யின், யாங் கோட்பாடுகள் போன்றவையும் மனிதர்களின் சிந்தனையில் ஏற்பட்ட குறிப்பிடத் தகுந்த மாற்றங்களாகும்.
தமிழர்களின் அய்ந்திணைக் கோட்பாடு, நானறிந்தவரை, மிகுந்த தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் வேறெந்த இனத்திலும் இவ்வளவுதூரம் நிலம், பொழுது ஆகியவற்றையும், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற மற்ற உயிரினங்களையும் புறவயமாக (Objective) வகைப்பாடு செய்யும் முறையில்லை. இவ்வகைப்பாடு ஒருவகையில் இன்றைய அறிவியல் சிந்தனைகளுக்கு ஒரு முன்னோடி. இன்றைய அறிவியலில், பூமியின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில குறிப்பிட்ட நோய்கள் எல்லாக் காலத்திலுமிருக்கும் (Endemic), அதுபோன்றே சில குறிப்பிட்ட பருவகாலங்களில் சில குறிப்பிட்ட நோய்கள், குறிப்பாக கிருமிகளால் பரவும் நோய்கள், அவற்றின் இயல்பான அளவிலிருந்து அதிகரித்துக் காணப்படும் (Epidemic) என்ற புரிதல் உண்டு. இதை அன்றே குறிஞ்சி தொடங்கி அய்வகை நிலங்களில் வாழ்பவர்களுக்கு இன்னின்ன நோய்கள் வரும் என்றும், அதேபோல் கார்காலம் போன்ற வெவ்வேறு பெரும்பொழுதுகளில் இன்னின்ன நோய்கள் பரவும் என நம்முன்னோர் புரிந்து வைத்திருந்தது, இன்றைய அறிவியலின் நோய்விபரவியல் (Epidemiology) சொல்லும் கருத்துக்களோடு ஒப்புநோக்கத்தக்கது. ஆனால், இம்முறை வளர்த்தெடுக்கப்படவில்லை.
நோய்கள் ஏற்படுவதற்கு வாதம், பித்தம், கபம் ஆகிய முக்குற்றங்களின் சமநிலை குலைவதுதான் என்றும் அவைகளை நாடிபிடித்து பார்ப்பதின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் என்ற புரிதலை கருத்து முதல் வாதக் கோட்பாட்டுடன் பொருத்திக்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியான முக்குணங்கள், ஆறு ஆதாரங்கள், ஐந்து கோசங்கள், வர்மப் புள்ளிகள் போன்றவற்றையும் இவ்வகையிலேயே அடக்கலாம். வேறுவகையில் சொல்வதானால் கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன; பதில்களும் புதிதாக வந்துகொண்டேயிருக்கின்றன. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் அதிகரிக்கும்போது நமது பதிலிலும் அதிகத் தெளிவு ஏற்படுகிறது. கேள்விகள் அதேதான், பதில்கள் தான் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றன. ஆகவே நோய்கள் குறித்த இன்றைய நமது புரிதல் நாளை மாறலாம். அதற்காகச் சிலர் நினைப்பதுபோல் ‘சித்தர்கள் ஞான திருட்டியில் கண்டு சொன்ன பதில்கள்’ நாளை மீண்டும் உறுதிப்படுத்தப்படமாட்டாது. இயற்கையைப் பற்றிய நமது புரிதல் என்பது ஏணிப்படி போன்றது, அதன் உச்சம் மெய்ஞானமடைதல். அதை என்றாவது அடைவோமா என்பதை, இன்றைய நிலையில், கணிக்க முடியாது என்பதே உண்மை. ஆனால், நாம் வாதம், பித்தம், கபம் என்பவை உண்மை என இன்றும் நம்புவது, ஏணியில் பாதிதூரம் ஏறிவிட்டு அங்கேயே நின்றுவிடுவதற்கு ஒப்பாகும்.
இரண்டுவிதமான போக்குகளும் அக்காலத் தமிழரிடையே இருந்ததா, அன்றி கருத்து முதல்வாதம் வெளியிலிருந்து வந்ததா என்பது போன்ற சிக்கலான விடயங்களுக்குள் நான் நுழையவிரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை முற்றிலும் புறவயமான பொருள் முதல்வாதக் கோட்பாட்டை புறக்கணித்துவிட்டு முற்றிலும் அகவயமான முக்குற்றம் என்ற கருத்துமுதல்வாதக் கோட்பட்டை நம் முன்னோர் கைக்கொள்ள ஆரம்பித்ததை ஒரு பெரும் தீயூழாகக் கருதுகிறேன். கருத்து முதல்வாதத்தின் ஈர்ப்பு அத்தகையதாக இருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கான புறக்காறணிகளை அக்காலத் தமிழ் பண்பாட்டுச் சூழலுடன் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மருத்துவ வரலாற்றாசிரியனின் வேலை. இன்று சித்த மருத்துவதின் அடிப்படையாக கருதப்படுவது கருத்து முதல்வாதக் கோட்பாடுகளே. ஐந்திணைக் கோட்பாடு முற்றிலும் அருகிவிட்டது. எனவே, இத்தொகுப்பில் இன்று சித்த மருத்துவமாகப் புரிந்துகொள்ளப்படும் முக்குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை என் புரிதலில் விளக்க முயல்கின்றேன்.
தொடர்வேன்...
என்ன சித்து விளையாட்டு? புரியவே மாட்டெங்குது. பிரிச்சு பிரிச்சு எழுதுங்க. நிறத்தையும் மாத்துங்கோ.
பதிலளிநீக்கு