செவ்வாய், 9 மார்ச், 2010

திருவாசகம்

நெல்லை சித்தமருத்துவக் கல்லூரியில் 1991 - ல் படித்துக் கொண்டிருந்தபோது, பாளையங்கோட்டை தெற்கு பஜாரிலுள்ள சைவ சபையில் சைவ சித்தாந்தம் பயின்றேன். அங்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலையில் வகுப்புகள் நடைபெறும். ஒரு வருடம் பயின்று இளம்புலவர் பட்டமும் வாங்கினேன். சித்த மருத்துவப் படிப்பில் முதல் வருடம் தோற்றக் கிராம ஆராய்ச்சி என்று ஒரு பாடத் திட்டம் உண்டு. அது சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக் கொண்டது. எனக்கு எப்போதும் தத்துவங்களில் சற்று ஈடுபாடுண்டு. அதன் பொருட்டே சைவ சபைக்குச் சென்றேன். எனது கல்லூரி மூத்தவர்கள் சிலரும் என்னை அழைத்தனர். மற்றொரு காரணம் இதைக்காரணம் காட்டி வார இறுதிகளில் ஊருக்குச் செல்லாமல் தப்பிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை மாலை ஊருக்குச் சென்றுவிட்டு சனி மதியமே நெல்லைக்குத் திரும்பி விடலாம் என்ற லோகாயுதக் காரணமும் உண்டு. அப்போது இக்காரணம் தான், தத்துவம் படிப்பதை விட பிரதானமாக இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். சைவ சித்தாந்தம் என்றால் அப்பாவும் மறுக்க மாட்டார் என்ற வலுவான காரணம் இருந்தது. நெல்லையிலிருந்து எங்கள் ஊரான பணகுடிக்கு ஒருமணி நேரப் பயணம் தான்.

அக்கல்லூரி தருமை ஆதீனத்தால் நடத்தப் பட்டு வந்தது. அதைக் கல்லூரி என்று சொல்லும்போது அப்போதெல்லாம் எனக்குச் சிரிப்பு வந்த ஞாபகம் இருக்கிறது. ஒரு சைவ சித்தாந்தப் புலவர் வந்து பாடம் நடத்துவார். நாங்கள் மொத்தம் அய்ந்து அல்லது ஆறு பேர்கள் கவனிப்போம். கண்ணதாசன் ஆன்மீகத்தில் ஒரு எல்லையிலேயே நின்று விட்டார், அதைத்தாண்டி அவரால் போக முடியவில்லை என்று சமகால நிகழ்வுகளைக் கொண்டு பாடம் நடத்தினார். பாடத்தை கவனிக்கும்போதே சைவ சபையின் சுவர்களில் எழுதப் பட்டிருக்கும் தேவாரப் பதிகங்களை மனப்பாடமும் செய்து வந்தேன். "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து" என்று தொடங்கும் பாடல் அப்படித்தான் எனக்கு மனப்பாடம் ஆனது. பின்னர் வகுப்புகள் முடியும் போது ஓதுவார் என்று நினைக்கிறேன், ஒருவர் வந்து இருகை கூப்பி, கண்மூடி சிவபுராணம் பாடுவார். பாடிமுடிக்கும்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியும். நம்மையும் அவரது குரல் உருகச் செய்துவிடும்.

சென்னையில் சமீபத்தில் இளையாராஜாவின் திருவாசகம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தபோது மியுசிக் அகாடமியில் நானும் இருந்தேன். திருவாசகம் ராஜாவின் இசையில் இன்னும் அழகு கூடியிருக்கும் என்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. காரணம், பல வருடங்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது எம். எஸ் பாடியிருந்த பாரதியார் பாடல்கள் கேசட்டை வாங்கினேன். அதை ஏன் வாங்கினோம் என்ற உணர்வை எனக்கு எம். எஸ் உண்டாக்கிவிட்டார். பின்னர் 'மோகமுள்' ஞான ராஜசேகரனின் பாரதியார் படத்தில் ராஜா இசைஅமைத்து வெளிவந்த பாரதியார் பாடல்களைக் கேட்டபோது அதன் கம்பீரத்தை உணர்ந்தேன். ஆனால், ராஜா இசைத்திருந்த திருவாசகம் எனக்கு முதலில் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. சிவபுராணத்தை அவர் இசைக்காகச் சிதைத்து விட்டாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. மீண்டும் பலமுறை கேட்டபோதுதான் பிடிக்க ஆரம்பித்தது. ராஜாவின் குரலிலும் உருக்கம் இருந்தாலும் எனக்கென்னவோ இன்னும் பாளையங்கோட்டை சைவ சபையில் பின்னணி இசையில்லாமல் உள்ளத்தை உருக்கிய அந்தக் குரலே முதன்மையாப் படுகிறது. மேலும் ராஜாவின் திருவாசகம் (இப்படிச் சொல்லலாமா எனத் தெரியவில்லை) வாங்கிய அதே காலகட்டத்தில்தான் உத்திரா என்ற சிறுமி பாடியிருந்த வள்ளலாரின் திருவருட்பா வாங்கினேன். சிலசமயங்களில் திருவாசகத்தையும், திருவருட்பாவையும் அடுத்தடுத்து கேட்டிருக்கிறேன். ராஜாவின் இசையையும் மீறி பெரிய மேதையாய் இல்லாத ஒரு சாதாரண இசையமைப்பாளரின் இசையில் அச்சிறுமியின் குரலில் திருவருட்பா லயிக்கச் செய்கிறது. திருவாசகம், திருவருட்பா போன்ற காலத்தை வென்ற படைப்புகளை இசைக் கருவிகளின் துணை இல்லாமலேயே ரசிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

ஆயினும் ராஜா இசையமைத்த திருவாசகத்தை நான் இன்றும் கேட்கிறேன், என் உறவினர்களுக்கு பரிசும் அளித்துள்ளேன்.