பக்கங்கள்

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டில்...

இன்று எனது இயல்புக்கு மாறான புத்தாண்டு. நான் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஏனெனில் நான் புத்தாண்டு கொண்டாடத்தை அருவெருப்பவன். ஆகையினால் புத்தாண்டு நாட்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு எதிர்வினையாக வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட ஒரு எதிர்மறை உணர்வில் இருப்பேன். அதனால் முந்தைய புத்தாண்டுகளில் இவ்வளவு உற்சாசமாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் புத்தாண்டை பலரும் கொண்டாடும் வழக்கமான பாணியில் கொண்டாடவில்லை. நேற்றிரவு 12 மணிக்கு முன்பே தூங்கப் போய்விட்டேன். ஆனால், நேற்று மாலை நானும் பவானியும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் செய்யவேண்டியன குறித்து பேசிக்கொண்டோம். இதில் எங்கள் இருவரின் தொழிலில் செய்யவேண்டியன குறித்த இலட்சியங்களும் அடங்கும். எங்களுக்கு டிசம்பர் 31 புத்தாண்டைவிட முக்கியமான நாளும் கூட. ஏனெனில், 13 ஆண்டுகளுக்கு முந்தைய டிசம்பர் 31 அன்றுதான் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது குறித்த முடிவை எடுத்தோம்.

இன்று காலை எழுந்தவுடன் நேற்று பேசியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். 41 வயதைக் கடந்துவிட்டேன். இன்னும் எனது இலட்சியங்களில் பெரும்பாலனவற்றை நான் அடையவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் நான் அவற்றை அடையவில்லையென்றால் மீதியிருக்கும் எனது வாழ்நாள் மிக துன்பகரமாக இருக்கும் என்றே உணருகிறேன். ஏனெனில் எனது கனவுகளை நான் அடையாதது குறித்த கவலைகள் என்னை அப்போது தினமும் வருத்தும். அவற்றை அடைவதற்கான உடல் வலுவோ, மனத்திடமோ அப்போது இராது. மேலும் 10 ஆண்டுகளில் இரண்டு மகன்களும் வளர்ந்துவிடுவார்கள். ஆகவே இந்த 10 ஆண்டுகளே எனக்கான இலட்சியங்களை அடைய தகுந்தவை. இந்த மனநிலை கடந்த சில மாதங்களாகவே இருந்தாலும் நேற்று பவானியுடன் பேசியபின் தான் திட்டவட்ட வடிவை அடைந்தன. ஆகவே எனது இலட்சியங்களை அடைய புத்தாண்டு என்பது ஒரு உத்தேச தொடக்கம் மட்டும்தான்.

உண்மையில் 1988 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் ஒரு மழைநாளில்தான் நான் எனது திறமைகளை உணர்ந்தநாள். அப்போது நான் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். முந்தைய 10 ஆம் வகுப்பு பரீட்சையில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். மாநிலத்தில் முதல் நாற்பது மாணவர்களில் ஒருவன். இதற்காக நான் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சொல்லப்போனால் பரீட்சை நாட்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நன்றாக ஞாபகமிருக்கிறது, அன்று பெருமழை பெய்து பணகுடி அனுமன் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்தை ஆற்றின் கரையில் நடந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தபோது நான் மட்டும் முயற்சி செய்திருந்தால் மாநிலத்தில் எளிதாக முதல் மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. பிளஸ் டூவில் அத்தகைய முயற்சியை எடுக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். செய்யவில்லை. ஆயினும் பள்ளியின் முதல் மாணவன். இதுபோல் எத்தனையோ முறைகள் இலட்சியங்களை வளர்த்து அவற்றை தெரிந்தே தவற விட்டிருக்கிறேன்.

இதற்கு எனது அவநம்பிக்கையும் அதனால் விளையும் தயக்கம், சோம்பேறித்தனம், செயல்களை ஒத்திப்போடும் மனப்பாங்கு போன்றவை தான் காரணம் என உணர்ந்தே இருக்கிறேன். இவை எனது குடும்பச் சொத்தாகும். எனவே இந்த உணர்வுகளை வென்றால்தான் என்னால் சாதிக்கமுடியும். இந்தமுறை வென்றுவிடுவேன் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகன். அவரது எழுத்துக்கள் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது நண்பர்களில் ஒருவனாகும் பாக்கியம் பெற்றதால் அவரை அருகிருந்து அறியும் பேறும் பெற்றிருக்கிறேன். அவரே இன்றிலிருந்து ஒரு பெரிய செயலில் இறங்கியிருக்கிறார். எனது நல்லூழ், அந்த செயலும் 10 ஆண்டுகள் தொடரப்போகிறது. எனது தேடல்கள், கேள்விகளுக்கு அவரது இந்த முயற்சியின் வழியாக பதில்களைக் கண்டடைவேன் என நம்புகிறேன். எனவே, எனது குருவைப் பற்றிக்கொண்டு இந்தப் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிடுவேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக