பக்கங்கள்

வியாழன், 24 அக்டோபர், 2013

கங்கைகொண்ட சோழபுரம்

அண்மையில் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரது திருமணத்திற்காக பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்தவுடன் அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம், வடலூர், சிதம்பரம் சென்றுவிட்டு சென்னை திரும்புவதாகத் திட்டமிட்டிருந்தேன். கூகிள் வரைபடம் மூலம் வழிகளையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதன்படி ஒன்றரை மணிநேர பயணத்தில் கங்கைகொண்ட சோழபுரம். ஆனால், அக்கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்ல பேருந்து இல்லை. அரியலூர் சென்றுதான் போகவேண்டும் எனச்சொன்னார்கள். அதற்கும் அதிக பேருந்து வசதியில்லை. எனவே பெரம்பலூர்- அரியலூர்-ஜெயங்கொண்டம்-கங்கைகொண்ட சோழபுரம் என்பதாக என் திட்டம் மாறியது. காலை 10 மணிக்கு பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பேருந்தைப் பிடித்தேன்.

வழியெங்கும் சிறிய கிராமங்கள். புள்ளிவிபரங்களின்படி தமிழகம் இந்தியாவிலேயே நகரமயமாகிவிட்ட மாநிலம். பெரம்பலூர் - அரியலூர் மாவட்டப் பகுதிகள் தமிழகத்தின் 'பின்தங்கிய' பகுதிகளில் ஒன்று. சென்னையில் ஹோட்டல்களில் வேலைபார்க்கும் சிப்பந்திகளில் பலர் இங்கிருந்தே வருகின்றனர். அன்று திருமண நாள். வெயிலில் உழைத்து கறுத்து மெலிந்த கிராமத்து எளிய மனிதர்கள் பேருந்தில் அதிகமிருந்தனர். ஆண்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை; பெண்கள் அளவான ஒப்பனையுடன் பட்டுச் சேலைகளில்.

கிழக்கே செல்லச் செல்ல நிலக்காட்சி மாறிகொண்டே இருந்தது. மரங்களின் அடர்த்தி அதிகமாகியது, கூடவே பசுமையும். பல இடங்களில் மூங்கில் புதர்கள் இருந்தன. மூங்கில் எனக்குப் பிடித்த மர வகைகளில் ஒன்று. என் வீட்டிலும் ஒன்று வைத்துள்ளேன். வீடுகளில் வளர்க்கப்படும் மூங்கிலைவிட இயற்கையாக வளரும் மூங்கில் மரங்கள் மிக அழகு. இங்கு இவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுவதில்லையாதலால் புதர்களாக வளருகின்றன. ஏற்காடு சென்றிருந்தபோதும் நெடிதுயர்ந்த இவற்றின் அழகில் மயங்கியிருக்கிறேன். வழியெங்கும் தேக்கு மரங்களும் பயிரிட்டிருந்தார்கள். அண்மையில் மழை பெய்திருந்ததால் குட்டைகள், குளங்கள் பழுப்பு நிற தண்ணீரால் பெருகியிருந்தன. ஆலம் விழுதுகள் அதை அள்ளிப் பருகுவதுபோல் தொங்கிக்கொண்டிருந்தன. சில இடங்களில் களிமண் நிலம் மாறுபட்டு செம்மண் நிறைந்திருந்தது.

அரியலூர் பேருந்து நிலையத்தையடைய சிறிய சாலைகள் வழியே பேருந்து சுற்றி சுற்றி சென்றுகொண்டிருந்தது. நாங்குநேரி ஊருக்குள் நுழைந்த பிரமையை அது அளித்தது. நான் வந்த பேருந்து நடத்துனரிடம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வழிகேட்டேன். அவர் ஓட்டுநரிடம் கேட்டார். சிறிது யோசனைக்குப் பின்னர் ஓட்டுநர் மீன்சுருட்டி போய் போகலாம் என்றார். எனக்கு அது தவறாகத் தெரிந்தது. எங்கள் உரையாடலைக் கேட்டபடி இறங்கிகொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தானும் அங்குதான் செல்வதாகக் கூறினார். உடனே ஓட்டுநர் அந்த அம்மாவுடன் செல்லுங்கள் எனக் கைகாட்டினார்.

கங்கைகொண்ட சோழபுரம் அங்கிருந்து 40 கி.மீ தான். உலகப் புகழ்பெற்ற அவ்விடத்திற்கு பேருந்து ஊழியர்களுக்கே வழி சொல்லத் தெரியவில்லையே என அவர்களின் வரலாற்றுணர்வை மனதில் திட்டிகொண்டே அப்பெண்மணியுடன் நடந்தேன். அக்கிராமத்துப் பெண்மணிக்கு ஒரு அந்நிய ஆடவன் உடன் நடந்து வருவது அசெளகரியத்தைக் கொடுத்திருக்கும்போல. சற்று ஒதுங்கியே நடந்தார். சென்னைவாசியான  எனக்கு அது உரைக்க சற்றுநேரம் பிடித்தது. பின்னர் ஒதுங்கிக்கொண்டேன். அங்கிருந்து ஜெயங்கொண்டம் பேருந்தை பிடித்தேன். வழியில் உடையார் பாளையம் என்று சற்று பெரிய ஊர் வந்தது. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன் என் அருகில் அமர்ந்து பயணம் செய்த ஒரு கிராமத்து இளைஞர் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பேருந்தைக் கைகாட்டினார்.

பேருந்தில் நிற்கக்கூட இடமில்லாமல் கூட்டம். முழுதும் கிராமத்து எளிய மனிதர்கள். இந்த எளிய மனிதர்களின் முன்னோர்களே தென்கிழக்காசிய நாடுகளை வென்ற ராஜேந்திர சோழனின் படை வீரர்கள். பேருந்து கங்கைகொண்ட சோழபுரத்தை நெருங்க நெருங்க ஒருவிதமான பரவசம் தொற்றிக்கொண்டது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இறங்கியபோது நண்பகல் மணி ஒன்று. சிறிய ஊர்; சாலையின் மேல் நான்கைந்து பெட்டிக்கடைகள். எதிர்புறம் கோயில். பசித்தது, ஆனால் உணவகம் ஏதும் தென்படவில்லை. வாசலிலேயே இருந்த கடையில் மாசா வாங்கிக் குடித்தேன். காலிக் குப்பியை போட குப்பைத் தொட்டியைத் தேடியபோது, நெகிழி பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது என கோயில் வாசலில் இந்திய தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை கண்ணில்பட்டது. அக்கடையில் விற்கப்படும் எல்லாப் பொருட்களுமே நெகிழியால் பொதியப்பட்டவைதாம்!

கோயிலைப் பார்த்த கணம் தோன்றியது தஞ்சைப் பெரியகோவிலைப் போல் இது கம்பீரமாகத் தோன்றவில்லை என்பதே. ஆனால் அடுத்த மூன்று மணிநேரங்கள் இக்கோயிலின் அழகில் நான் ஒன்றியிருக்கப்போகிறேன் என அப்போது எனக்குத் தெரியாது! வாசலில் இரண்டு பெரிய கல்தூண்கள். பின்னர் ஒரு மொட்டைக் கோபுரம். அதன் பின் பெரிய நந்தி. பின்னர் மையக் கோயில், கருவறையின் மேல் தஞ்சைக் கோயிலைப் போன்றே உயர்ந்த விமானம்.

ஆனால் தஞ்சைப் பெரியகோவிலைப் போல் கலசத்தை நோக்கி ஒரே சீராக கூம்பிச் செல்லாமல் மிக உயரமான சதுரமான அடித்தளத்திலிருந்து நுனியை நோக்கிக் கூம்பிச் செல்லும் கோபுரம். அதனால் 160 அடி உயர கோபுரம் மாதிரியே தெரியவில்லை. தஞ்சைப் பெரியகோவில் கோபுரமே உயரத்திலும், அழகிலும் இதைவிடச் சிறந்தது.

புரட்டாசி வெயில் மண்டையைப் பிளந்தது. (புரட்டாசி பொன் உருக வெயில் காயும்; மண்ணுருக மழை பெய்யும்) வெறுங்காலில் கொதிக்கும் கிரானைட் கற்களில் கால் வைக்கமுடிவில்லை. தொல்பொருள் துறையினர் வளர்க்கும் புல்வெளி இவ்வகையில் மிக உதவிகரமாக இருந்தது. தெளிவான நீல வானத்தின் பிண்ணனியில் கோயில் பிரம்மாண்டமாக வீற்றிருந்தது. புகைப்படங்கள் எடுப்பதற்கு உகந்த காலநிலை என மனம் மகிழ்ந்தது. பிரம்மாண்டமான நந்தி சுதையினால் செய்யப்பட்டது. கோவிலின் உள் வாயிலுக்குச் செல்லும் உயரமான மண்டபத்தின் மேலேறி பார்க்கும்போது அதன் பிரம்மாண்ட முகத்தினருகில் இருப்போம்.

வாசலின் இருபுறமும் பெரிய வாயிற்காப்பாளர்கள். நடை சாத்தியிருந்ததால் ஆவுடையைப் பார்க்க முடியவில்லை. தென்புறத்தில் அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ள ஒரு கல் கட்டுமானம் உள்ளது. அதனையடுத்து தஞ்சைக் கோவிலைப் போன்றே திறந்தவெளியில் பல பரிவாரக் கோவில்கள். பிரகாரச் சுவற்றில் அருமையான சிற்பங்கள் - அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், ஆலமர்ச் செல்வன், லிங்கோத்பவர், துர்க்கை, விஷ்ணு எனத் தெரிந்த சிற்பங்களுடன் தெரியாத பல அழகான சிற்பங்கள்.
கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்கள் தஞ்சைச் சிற்பங்களைவிட அழகானவை என்கிறார்கள். ஆனால், 6 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சிற்பங்கள் குறித்த அறிவு அவ்வளவு இல்லையாதலால் தஞ்சைச் சிற்பங்களை உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆகவே என்னால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
தஞ்சை சிற்பங்கள் ஆண் கருங்கல்லிலும், கங்கைகொண்ட சோழபுர சிற்பங்கள் பெண் கருங்கல்லிலும் செதுக்கப்பட்டவையாதலால் இங்கு சிற்பங்கள் நளினமானவை என பிற்பாடு நண்பர் கடலூர் சீனு சொன்னார்.
கோவிலின் வடபுற சுவற்றில் சிவன் தன் காலடியிலுள்ள மனிதனின் கொண்டையைப் பிடித்திருப்பது போல் ஓர் சிற்பம் காணப்பட்டது. அது ராஜேந்திர சோழனாக இருக்கலாம்.
பெரியநாயகி அம்மனின் கோவில் வடபுறம் தனியாக உள்ளது. அதன் முன்னே மற்றொரு சிதலமடைந்த கோவில். அதில் சில சிற்பங்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதனருகில் சில பயணிகள் கோவிலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் வயதானவர் ஒருவர் சோழ ராஜாக்களுக்கு மண்டையில் மாசலாவேயில்லை, இருந்திருந்தா இப்படி கோயில்களைக் கட்டி பணத்தைச் சீரழித்திருப்பார்களா!? நல்லவேளை பிரிட்டிஷ்காரன் வந்து மேட்டூர் அணை கட்டியதால் இப்போது கும்பகோணம் பகுதியெல்லாம் விவசாயம் செய்யமுடிகிறது எனத் திருவாய் மலர்ந்தருளிக் கொண்டிருந்தார். அருகில் யாளி முகம் கொண்ட சிம்மக்கிணறு.
நம்மக்கள் அதனுள் நெகிழிக் குப்பிகளை வீசியெறிந்து தங்கள் வரலாற்றுணர்வை வெளிக்காட்டியுள்ளார்கள்.

இதற்கிடையில் நண்பர் கடலூர் சீனுவிடமிருந்து வடலூர் எப்போது வரப்போகிறேன் எனக் கேட்டு அழைப்பு. சோழர் சிற்பக்கலையின் உச்சமாக தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் என்ற வரிசையில் சொல்வார்கள். தாராசுரத்தைத் தான் இன்னும் பார்க்கவில்லை. தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அதிக தூரமில்லை. ஆயினும் முன்பே வடலூர், சிதம்பரம், சென்னை என பயணத்தைத் தீர்மானித்துவிட்டதால் தாராசுரம் செல்வதைத் தவிர்த்துவிட்டேன். கோவிலிலிருந்து வெளியேறும்போது மாலை நான்காகிவிட்டது. அடுத்த பயணம் வடலூரை நோக்கி.

மேலதிக புகைப்படங்களுக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக