பக்கங்கள்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மூன்று தமிழ்ச் சொற்கள்

நேற்றிரவு தூங்கப் போகும்போது தற்காலத் தமிழிலக்கியத்தின் மூன்று முக்கிய ஆளுமைகள் வெவேறு சந்தர்ப்பங்களில் பொருள் கூறிய மூன்று தமிழ்ச் சொற்கள் தீடிரென்று என் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒன்றாகக் கிளம்பி வந்தன.


காலமாகி விட்டார்:


சுந்தர ராமசாமி இறந்த போது சென்னையில் நடந்த இரங்கல் கூட்டமொன்றில் ஜெயகாந்தன் ”சுந்தர ராமசாமி காலமாகி விட்டார் என்று சொல்கிறோம்; காலமாகி விட்டார் என்றால் என்ன? - அவர் காலத்துடன் ஐக்கியமாகி விட்டார், நம்முடன் என்றும் இருப்பார் என்று தானே அர்த்தம். அதனால் நாம் வருத்தமுறக் கூடாது” என்றார். இங்கு காலமாகிவிட்டார் என்ற சொல், அது சுட்டும் பொருள் - காலத்துடன் கலந்து விட்டார் - என்பது எவ்வளவு பொருள் செறிந்த வார்த்தை! காலத்தை மனிதப் புலன்களால் அளந்துவிட முடியுமா என்ன?

தோற்றம் - மறைவு


ஒரு கட்டுரையில் ஜெயமோகன் பிறப்பையும் இறப்பையும் குறிக்க தமிழில் பயன்படுத்தப்படும் இச்சொற்கள் ஆழ்ந்த தத்துவம் செறிந்தது; ஆங்கிலத்திலுள்ள Born and Dead மாதிரி நேரடி அர்த்தம் தருவதல்ல என்றும், வேறு எம் மொழியிலும் இத்தகைய சொற்கள் இயல்பாகப் புழக்கத்திலில்லை என்று சொல்லியிருந்தார். தோன்றினார் என்றால் எங்கிருந்து வந்தார், மறைந்தார் என்றால் எங்கு சென்றார் என்று வினவினோமானால் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச்சொற்கள் நம்மை பதிலளிக்க முடியாத பிரம்மாண்டமான தத்துவக் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்.

பெற்றோர்:

மேலே சொல்லப்பட்ட சொற்களுக்கிணையாண மற்றொரு சொல் இது. இதுவும் அவற்றோடு தொடபுடையது. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தான் கலந்துகொண்ட விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் இச்சொல் சுட்டும் பொருள் குறித்துச் சொன்னார். அந்நிகழ்ச்சியில் தந்தை - மகனுக்கிடையான உறவு குறித்து அலசப்பட்டது. பெரும்பாலான தந்தையர்கள் தாம் பெற்ற மகன்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்றஞ்சுவதனால்தான் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் அளிக்கிறோம் என்றனர். விருந்தினரய் அமர்ந்திருந்த எஸ். ரா. அதற்கு பதிலிறுக்கையில் பேற்றோர் என்றால் என்ன? - நாம் பெற்றோம் என்றால் எங்கிருந்தோ பெற்றோம். நம் வழியாய் அவர்கள் வந்தார்கள் என்றார். இந்த உணர்வு எல்லாப் பெற்றொருக்கும் இருந்தால் தந்தை மகனுக்கிடையிலான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு வாய்ப்பே இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக