புதன், 18 ஜனவரி, 2012

கூடங்குளம்: அவதூறும், உண்மையும்

பரப்புரையும் மனித மனங்களும் (Propaganda and the Public Mind) என்றொரு நோம் சோம்ஸ்கியின் புத்தகம் உண்டு. உலகெங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு தமது மக்களின் மீதான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன எனபதைக் குறித்து இப்புத்தகம் பேசும். உண்மையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே ஊடகங்களைத் தமது பிடியில் வைத்துக் கொண்டு மக்களை மூளைச் சலவை செய்வதின் மூலம் தமது அதிகார, லாப நோக்கங்களுக்கு ஏற்றவகையில் அவர்களின் சிந்த்னையைக் கட்டமைப்பது என்பதே நோம் சோம்ஸ்கியின் கருதுகோள். நமது நாட்டில் தற்போது நடந்துவரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டஙகளை நடுவணரசு எவ்வகையில் எதிர்கொள்கிறது என்பதைக் கவனித்தாலே சோம்ஸ்கியின் கருத்திலுள்ள உண்மை புலப்படும்.

இவ்வகையில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களியக்கம் மேல் தொடர்ச்சியாக அரசினால் கட்டமைக்கப்பட்டு ஊடகங்கள் மூலமாக நடத்தப்படும் பரப்புரை கவனிக்கப்படவேண்டியது. அண்மையில் தினமலர் மூலம் நடத்தப்பட்ட (நடத்தப்படுகின்ற) இவ்வியகத்திற்கெதிரான தாக்குதலுக்கு நண்பர் சிறில் அலெக்ஸ் தமிழ் பேப்பர் இதழில் பதில் அளித்துள்ளார். "அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்” என்ற தலைப்பிட்டு தினமலர் எழுதியுள்ள கட்டுரை அரசால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என்பதை சிறில் தனக்கு நன்கு தெரிந்த நேரடித் தகவல்கள் மூலம் விளக்கியுள்ளார். பொதுவாக நம் சூழலில் அதீத உணர்ச்சி வசப்பட்டு அக்கட்டுரையை வெளியிட்ட இதழை வாய்க்கு வந்தபடி அர்ச்சித்து பலரும் எழுதுவதுதான் வாடிக்கை. இம்மாதிரியான தகவல்களை அரசாஙகம் வேண்டுமென்றே கட்டமைக்கும்போது அதற்கு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றாமல் உண்மையைத் தெளிவாகவும், உரத்தும் கூறுவது மிகுந்த அவசியமாகும். அவ்வகையில் சிறிலின் இக்கட்டுரை தனித்து நிற்பதும், பாராட்டப்பட வேண்டியதுமாகும். சிறில் அலெக்ஸிற்கு நன்றி.


சிறில் அலெக்ஸ் கட்டுரை: தினமலரும் இடிந்தகரையும் – விலைபேசப்படும் மக்கள் போராட்டம்

தினமலர் கட்டுரை: அணு உலை எதிர்ப்பாளார்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்