கடந்த பல வருடங்களாக சென்னை புத்தகக் காட்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன். 1995- ஜூலையில் நான் சென்னையில் நிரந்தரமாக வாழும் எண்ணத்துடன் வந்தேன். அப்படியாயின் கிட்டத்தட்ட 17 வருடங்களாக இப்புத்தகக் காட்சிக்கு ஒரு சடங்கு மனநிலையுடன் வருகிறேன். இடையில் சில வருடஙகள் இந்த முறை புத்தகங்கள் ஏதும் வாங்கக் கூடாது, ஏற்கனவே வாங்கியவைகளை படிக்காததால், என்று சங்கல்பம் செய்து கொண்டு வருவேன். ஆயினும் குறைந்த அளவிலாவது புத்தகங்கள் வாங்காமல் திரும்பிப் போனதில்லை. இப் புத்தகக் காட்சி முன்பு காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்தபோதும், இப்போது புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும்போதும் பழைய புத்தகங்கள் நடைபாதைக் கடைகளில் வைத்து விற்கப்படும். சென்னையிலும், வேறு பல ஊர்களிலுமிருந்தும் பலர் வந்து இக்கடைகளை விரித்திருப்பர். நான் பழைய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்ற கொள்கை உடையவனில்லை. முன்பு சிற்சில பழைய புத்தகங்கள் வாங்கியுள்ளேன். ஆனால் புத்தகக் காட்சி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற கொள்கை வைத்திருந்தேன்.
என் கல்லூரிக்கால நண்பன் ஒல்லி பாலாஜிக்கு, குண்டு பாலாஜி என்று வேறொரு நண்பனும் உண்டு, நான் cheap and best என்று பெயர் வைத்திருந்தேன். காரணம், அவன் பற்பசை முதற்கொண்டு எந்தப் பொருள் வாங்கினாலும் உள்ளதிலேயெ குறைந்த விலையுள்ள பொருளைத்தான் வாங்குவான். ஒருமுறை பற்பசை ஒரு டஜன் வாங்கினால் அதிகத் தள்ளுபடி தருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு இரண்டு டஜன் வாங்கிக் கொண்டு வந்தான். எதுக்குடா இரண்டு டஜன் என்றால், ஒன்று சித்தி வீட்டுக்காம். இப்பேர்ப் பட்ட ஒல்லி பாலாஜி புத்தகங்களையுமா விட்டுவைப்பான்!? அவனும் புத்தகக் காட்சிக்குச் செல்வான். ஆனால் வெளியிலேயே நின்றுவிடுவான். அங்கு ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும் பழைய புத்தகங்களை பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதில் கில்லாடி அவன். அதுதான் அவனுக்கு புத்தகக் காட்சி. புத்தகக் காட்சி என்று மட்டுமில்லை, எங்கு பழைய புத்தகக் கடையைப் பார்த்தாலும் நுழைந்துவிடுவான். எனக்குத் தெரிந்து அவன் எந்தப் புத்தகத்தையும், பாடப் புத்தகங்கள் உட்பட, புத்தம் புதிதாக வாங்கியதில்லை. இதில் அவனுக்கு உள்ளூரப் பெருமையுண்டு. எனக்கு மற்ற விசயத்தில் எப்படியோ ஆனால் புத்தக விசயத்தில் அவனது கொள்கை சற்றும் ஏற்புடையதல்ல. அதுவும் புத்தகக் காட்சிக்கு வந்துவிட்டு பழைய புத்தகங்களை வாங்கிச் செல்வதென்பது ஏளனமான செயலாகவே எனக்கு இதுவரை இருந்து வந்துள்ளது.
அப்படிப்பட்ட நான் இப்போது என் விதிகளைச் சற்று தளர்த்திக்கொண்டேன். காரணம்: கடந்த ஒரு வருடத்தில் நான் மிக அதிகமான பணம் செலவழித்து புத்தகங்களை வாங்கிவிட்டேன். இரண்டாவது காரணம் நவீனத் தமிழிலக்கியப் புத்தகங்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளிலிருக்காது என்ற எண் எண்ணம். ஆனால் சமீபத்தில் நண்பர் உமாநாத் செல்வன் @ விழியன் அவரது முக நூலில் முதலில் பழைய புத்தகக் கடைகளுக்குச் சென்றுவிட்டு பின்னர் புத்தகக் காட்சிக்குச் செல்க என்று எழுதியிருந்தார். மேலும் பாலபாரதியும் நவீன இலக்கியப் புத்தகங்கள் எல்லாம் அங்கு கிடைக்கின்றன என்று என் கேள்விக்கு பதிலிறுத்திருந்தார். எனவே நேற்று அங்கு முதலில் செல்லலாம் என முன்பே தீர்மானித்திருந்தேன். ஆனால் என் ராசி தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு நடைபாதையோரக் கடைகளுக்குச் சென்றால் வியாபாரிகள் தார்பாலின் போட்டு கடைகளை மூட ஆரம்பித்துவிட்டனர். என்னருகில் நின்ற ஒருவர் அப்போதுதான் அசோகமித்திரன் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அங்கு வாங்கிமுடித்திருந்தார். கட்டுமானமும் குலையாமல் நன்றாகயிருந்தது. எனக்கு வயிற்றெரிச்சாலாகி விட்டது. மழை விடுவதாயில்லை, கைக்குட்டையை குடையாக்கிக் கொண்டு, குளிர் காலத்தில் பெய்யும் மழையை சபித்துக்கொண்டே, புத்தகக் காட்சி நோக்கி நடக்கலானேன்.
அவ்வளவு மழை பெய்தும் மேற்கூரை நன்றாக இருந்ததால் ஒன்றும் பெரிதாக ஒழுகவில்லை.காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் முன்பு புத்தகக் காட்சி நடந்தபோது இதுபோல் ஒரு பனிக்கால மழையில் கடைக்குள்ளும் பெய்த மழையில் புத்தகங்கள் நனைந்துவிடாமல் இருக்க பதிப்பாளர்கள் பட்ட சிரமங்களை நான் ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். நானே ஒரு கடையில் இதற்கு உதவியிருக்கிறேன். புத்தகக் காட்சி என்றால் இம்மாதிரி நினைவுகளே எனக்கு முதலில் மனதிற்குள் வரும். அக்காலங்களில் இவ்வளவு கூட்டமிராது. பொறுமையாக புத்தகங்களைப் படித்துப் பார்த்து வாங்கலாம். கடந்த சில வருடங்களாகத்தான் இவ்வளவு கூட்டம் அம்முகிறது. புத்தக விரும்பியான எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றம்தான். ஆனால் அதே சமயம் ஒரு பதிப்பாளருக்கு இது மகிழ்ச்சியான விசயம்.
இந்த வருடத்தில் நேற்று இரண்டாவது முறையாக புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். முதலில் பவானியுடனும், அமுதனுடனும் போனவாரம் சென்றிருந்தேன். அது இரண்டாவது நாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. இந்தமுறை நான் மட்டும் தனியாக பலத்த முன் தயாரிப்புகளோடு சென்றிருந்தேன். முதலில் ஸ்டால் லிஸ்டையும், லே அவுட்டையும் பபாஸி (BAPASI) இணைய தளத்திலிருந்து பெற்று செல்ல வேண்டிய பதிப்பகங்களை லே அவுட்டில் குறித்துக் கொண்டேன். வாங்க வேண்டிய புத்தகங்களையும் லிஸ்ட் போட்டுக்கொண்டேன். மேலும் பல்கலையிலிருந்து வரும் போதே அமைந்தகரை ஆறுமுக பவனில் பசித் தொல்லையால் புத்தகக் காட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறாமலிருக்கச் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டேன். பின்னே புத்தகக் காட்சி சிற்றுண்டிச் சாலையில் அநியாய விலை என பலரும் புகாரளித்துள்ளனரே!
முதலில் கண்ணில்பட்டது ஐந்திணைப் பதிப்பகம். ஜெயகாந்தன், ஜானகிராமன் புத்தகங்கள் அதிகமும் இருந்தன. ஏசியன் எஷுக்கேசனல் சொசைட்டியின் ’அபிதான சிந்தாமணி’ பதிப்பும் இருந்தது. அது எனது வாங்க வேண்டிய லிஸ்டில் இருந்ததால் புரட்டிப் பார்த்தேன். அட்டை பிரம்மாதமாக இருந்தது. ஆனால் உள்ளே தாளும், எழுத்துருவும் மிக மோசம். விலையும் 645 ரூபாயகள்; ஆனால் அவர்களது இணையதளத்தில் 400 என்று போட்டிருந்தார்கள். உடுமலை. காமில் சீதை பதிப்பக ’அபிதான சிந்தாமணி’ 700 ரூபாய் எனப் போட்டிருந்தது. எனவே அதையும் பார்த்துவிட்டுத் தீர்மானிக்கலாம் என நடையைக் கட்டினேன். வழியில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் நோட்டமிடலாமென நுழைந்தேன். அங்கு என்னுடன் முன்பு பணிபுரிந்த இரு நண்பர்களைப் பார்த்து சிறிது அளாவளாவி விட்டு ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தைத் தேடினேன், அப்போது சீதை பதிப்பகம் கண்ணில்பட்டது. அங்கு பல புத்தகங்கள் ஐம்பது சதவிகித தள்ளூபடியில் போட்டிருந்தார்கள். 700 மதிப்புள்ள ’அபிதான சிந்தாமணி’ ரூபாய். 400 க்கும், 1000 ரூபாய் மதிப்புள்ள ’போரும் அமைதியும்’ 500 ரூபாய்க்கும் இருந்தது. மூளை துருதுருத்தது. போரும் அமைதியும் டி. எஸ். சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்புதானே என பதிப்பகத்தாரிடம் உறுதி செய்து கொண்டேன். அபிதான சிந்தாமணி ஒரளவு நல்ல தாளில், நல்ல எழுத்துரு அளவில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் போரும் அமைதியும் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு டி. எஸ். சொக்கலிங்கம் என்றிருந்தாலும், அதையடுத்த tag line-ல் பதிப்பகத்தாரால் செம்மைப் படுத்தப்பட்டது என்று காணப்பட்ட சொற்கள் சற்று பீதியை வரவழைத்தது. ஆயினும் 500 ரூபாய் தானே பரவாயில்லை வாங்கிப் பார்க்கலாம் என என்னைத் தள்ளியது.
’போரும் அமைதியும்’ நான் பழைய புத்தகக் கடையில்தான் வாங்கவேண்டுமென நினைத்திருந்தேன். மழையினால் புதுப் புத்தகமே 500 ரூபாய்க்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியாகயிருந்தது. சீதை பதிப்பகத்தில் சதாசிவ ப் பண்டாரத்தார், மயிலை. வேங்கிடசாமி நாட்டார் புத்தகங்கள் பலவும் 50 சதவீத தள்ளூபடிக்கு வைக்கப்பட்டிருந்தன. வாங்கிய இரண்டு புத்தகங்களுமே அதிக பளுவாகிவிட்டபடியால் இன்னொரு நாள் வாங்கிக் கொள்ளலாமென நினைத்து இதே தள்ளூபடியை உங்கள் பதிப்பகத்திற்கே வந்து வாங்கினால் தருவீர்களா எனக் கேட்டேன். அவர் வருடத்தில் மூன்று நாட்கள், பொங்கல், கருணாநிதி பிறந்த நாள், அவரது அம்மாவின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆகிய தினங்களில், இத்தகைய தள்ளுபடி விலைக்கே புத்தகங்கள் கிடைக்குமெனக் கூறினார்.
பின்னர் அடையாளம் பதிப்பகத்தில் ’டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகம் பார்த்தேன். உடனேயே வாங்கிவிட்டேன். உண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் இப்புத்தகம் குறித்துத் தேடியதில் இப்போது இப்புத்தகம் கிடைப்பதில்லை என அறிந்து வருத்தமுற்றேன். ஆனால் இதன் மின்னூல் இலவசமாக
இவ்விணைய தளத்தில் கிடைக்கிறது. ஆயினும் இம்மாதிரிப் புத்தகங்கள் எப்போதும் கைவசமிருப்பது நன்று. இது இவ்வகையில் ஒரு சிறந்த செவ்வியல் புத்தகம். நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது எங்கள் துறை நூலகத்தில் இதன் பல பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். பொதுமக்கள் சுகாதாரத் துறையில் உள்ளோருக்கும், பொதுமக்களுக்கும் இது பைபிள் போன்றது. சென்ற வருடம் இப்புத்தகம் கிடைக்காமல் இதே அடையாளம் பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடான ’மோயோ கிளினிக் - உடல்நலக் கையேடு’ புத்தகம் வாங்கினேன். அதைவிட ’டாக்டர் இல்லாத இடத்தில்’ சிறந்த புத்தகம்.
அகரம் பதிப்பகத்தில் ’பொய்த்தேவு’ வாங்கிக்கொண்டேன். ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து விற்று தீர்ந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள். சாகித்ய அகாடமியில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ‘திரு.வி.க’ ’வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார்’ புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்து அமுதனிடமிருந்து அழைப்பு. என்னை ஏன் பெரிய லைப்ரரிக்குக் கூட்டிச் செல்லவில்லை என ஆதங்கப் பட்டான். வீட்டிற்கு வரும்போது Ben 10 புத்தகமும், Bubbles -ம் (சோப்பு நுரையில் முட்டைவிடும் விளையாட்டுச் சாமான்) வாங்கிவர வேண்டுமென ஆணையிட்டான். அவனிடம் சரி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி கிழக்கில் அரவிந்தன் நீலகண்டனின் ’பஞ்சம், படுகொலை, பேரழிவு - கம்யூனிசம்’ வாங்கிவிட்டு தமிழினியை அடைந்தேன். அங்கு வசந்தகுமாருடன், சு.வெங்கடேசனும், கரு. ஆறுமுகத் தமிழனும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனது புத்தக மூட்டையை அங்கு வைத்துவிட்டு அலைகள் பதிப்பகம் தேடிச் சென்றேன். அங்கு நா. வானமாமலையின் மார்க்சியம் குறித்த 5 புத்தகங்கள் மேலும் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ’தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’ புத்தகமும் வாங்கிக் கொண்டேன்.
நேரமாகிக் கொண்டேயிருந்தது, அமுதனுக்கு புத்தகம் வாங்க வேண்டுமே என மனது அடித்துக் கொண்டது. Ben 10 புத்தகம் Scholastic பதிப்பகத்தில் இருப்பதை போனவாரம் வந்தபோதே பார்த்திருந்தோம். ஆனால் என்னால் அதை அவசரத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. 15 நிமிடங்கள் அலைந்தபின் அது தமிழினிக்கு எதிரேலேயே இருப்பதைக் கவனித்தேன். Ben 10 புத்தகம் ஒன்றும், காட்டு யானை படங்கள் கொண்ட புத்தகம் ஒன்றும் வாங்கிக் கொண்டேன். மீண்டும் தமிழினிக்கு வந்தபோது இரவு 9 மணியாகிவிட்டதால் கடைகளை மூடுமாறு விசிலடித்துக் கொண்டேயிருந்தனர். எதிரிலிருந்த காலச் சுவடுவில் ’கலங்கிய நதி’ வாங்கிக் கொண்டேன். தரம்பாலின் ’காந்தியை அறிதல்’ புத்தகம் இருக்கிறதா எனத் தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையாதாலால் சிப்பந்தி ஒருவரிடம் விசாரித்ததில் தீர்ந்து விட்டது எனக் கூறினார்.
வீடு வந்து சேர்ந்தபோது மணி 10.15 ஆகிவிட்டிருந்தது. அமுதன் தூங்கிவிட்டிருந்தான். காலையில் அவன் எழுந்தபோது பவானி அப்பா உனக்காக வாங்கி வந்திருக்கிற புத்தகங்களை பார் எனச் சொல்லியிருக்கிறாள். அவன் வேறு ஒரு புத்தகமும் உன்னை வாங்கிவரச் சொன்னேனே ஏன் வாங்கவில்லை எனக் கேட்டான். எஙகளிருவருக்கும் அவன் சொன்ன அந்தப் புத்தகத்தின் பெயர் விளங்கவில்லை. அடுத்தமுறை வாங்கித் தருகிறோம் எனச் சமாளித்தோம். எனது புத்தகங்களை அமுதன் பார்த்துவிட்டு அப்பா மட்டும் எவ்வளவு புத்தகங்கள் பெரிசு பெரிசாக வாங்கியிருக்கிறான், எனக்கு ரண்டே ரெண்டுதானா?! என பவானியிடம் ஆதங்கப் பட்டுக்கொண்டான்.