ஞாயிறு, 18 டிசம்பர், 2005

தமிழகத்தை அலைக்கழிக்கும் ஊடகப் புயல்கள்

வங்கக் கடலில் தொடர்ச்சியாக ஏற்படும் புயல் சின்னங்களால், தமிழகம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இயற்கையின் இந்தப் பேரழிவை, எப்படியாவது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதி, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளால் நடத்தப்படும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் பற்றி வெளியிடும் செய்திகள் சகிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இன்று அதிகாலை சென்னை எம்ஜியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் 42 உயிர்கள் பலியான சம்பவத்தை இவ்விரு ஊடகங்களும், அதன் பின்னணியிலுள்ள தலைவர்களும் பயன்படுத்திக்கொள்ளும் முறை அவைகளின் அசிங்கமான செயல்பாட்டிற்கு உச்சகட்ட உதாரணம்.


சென்ற திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில், தாம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற ஒரே காரண்த்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டது ஜெயா தொலைக்காட்சி. அதுபோன்றே தினபூமி என்ற நாளிதழும் அதிமுகவிற்கு ஆதரவாக அப்போது தொடர்ந்து செய்திகளை தயாரித்து வழங்கியது. அதுபோன்றதொரு வேலையையே, இப்போது சன் தொலைக்காட்சியும், தமிழ் முரசு மாலையிதழும் செய்துவருகின்றன. மத்திய அரசு வழங்கும் வெள்ள நிவாரண உதவித்தொகையை, அதிமுக அரசு வரப்போகும் அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் பெறுவதற்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என கருணாநிதி சன் தொலைக்காட்சியில் சொல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, இன்றைய அசம்பாவிதம் யாரோ சில விஷமிகளின் பொய்ப்பிரச்சாரத்தினால் தூண்டப்பட்டது என ஜெயா தொலைக்காட்சியில் கூறுகிறார். அதிகாரப் போட்டியிலுள்ளவர்கள் இவ்வாறு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு உலகம் தழுவியது என்றாலும், தமிழகத்தில் இன்று நடப்பது கடைந்தெடுத்த கேவலம். இவ்விரண்டு கட்சிகளும், அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் செய்யும் சீரழிவிற்கு என்றுதான் சாவுமணி அடிக்கப்படுமோ?