புதன், 27 ஜனவரி, 2016

மணப்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையில் மீண்டும்...

சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ‘கவர்னர்’ சீனிவாசன் மணப்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர நடைப்பயிற்சியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அமுதனும், நானும் அங்கிருந்து சில செடிகளை எடுத்து வந்து வீட்டில் நட்டிருந்தோம். அவை இப்போது நன்றாக வந்துவிட்டன. 2 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் என் வீட்டில் வந்து தங்கியபோது ஒருநாள் காலை அங்கு நண்பர்களோடு நடை சென்றோம்.  அதன்பின் அங்கு செல்வது தடைபட்டு போய்விட்டது. ஆற்றங்கரையோரம் பொதுப்பணித்துறையால் மூங்கில், புங்கம், வேம்பு, நாவல் மரம் போன்றவை நடப்பட்டு இருசக்கர வாகனம் செல்ல ஏற்றமாதிரி கரைகள் செப்பனிடப்பட்டு அழகாக இருந்தது. இந்த வெள்ளம் வந்து சென்றபின் அப்பகுதியை பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன். நேற்றே அமுதனிடமும், ஆதிரனிடமும் சொல்லியிருந்தேன். பையன்கள் தினமும் காலை 6 மணிக்கே எழுந்து பள்ளி செல்ல ஆயத்தமாவதால் இன்று நன்றாகத் தூங்கட்டும் என்று விட்டுவிட்டோம்.  ஆதலால் காலை 11 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.

இப்பகுதிகளில் பலரும் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆற்றின் மேற்கு கரையோரம் மணப்பாக்கமும், கிழக்குக் கரையில் நந்தம்பாக்கமும் உள்ளன. இரண்டு பகுதிகளுமே டிசம்பர் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவை. அதன் அடையாளமாக நெகிழிக் குப்பைகள் மரங்களில் இன்னமும் சொருகிக் கிடந்தன. ஒரு இடத்தில் சற்றே பெரிய கொடுக்காய் புளி மரத்தின் உச்சிவரை நெகிழிகள் இருந்தன. குறைந்த பட்சம் கரையிலிருந்து 15 அடி உயரம் வரை தண்ணீர் சென்றிருந்திருக்கும். இவ்விடத்தில் ஆற்றின் அகலம் மிகவும் குறைவு. இங்கு கரைகளில் உடைப்பைத் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் வெள்ளம் அதைவிட பலமடங்கு உயரத்தில் சென்றிருக்கிறது. இங்கு நடப்பட்டிருந்த மரங்கள் சில வேரோடு போய்விட்டன. ஆச்சரியமாக சில மரங்கள் முக்கியமாக மூங்கில் இன்னும் கரைகளிலேயே உள்ளன. கரையில் போடப்பட்டிருந்த செம்மண் கப்பி கப்பி சாலை மட்டும் அரிக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நிலப்பரப்பு கிட்டத்தட்ட சமதளமாக இருப்பதால் வெள்ளம் அவ்வளவு உயரம் சென்றிருந்தாலும் நில அரிப்பு அவ்வளவாக இல்லை. இன்னும் சற்று தள்ளி தெற்கே நடந்தால் ஆறு மிக விரிவாக இருக்கும். மதுரை வைகை ஆற்றைவிட அகலமாகவே இவ்விடத்தில் அடையாறை  பார்க்கலாம். இந்த இடம்  பரங்கிமலை ராணுவ அலுவலர் பயிற்சிக் கல்லூரியிலிருந்து ராணுவத்தினர் மணப்பாக்கம் திடலுக்கு வருவதற்காக போடப்பட்டிருந்த இரும்பு பாலத்தை தாண்டி உள்ளது. இந்த இரும்புப் பாலமும் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஆனால் இங்கு கரை மேல் போடப்பட்ட சாலை அப்படியே உள்ளது. வேப்பமரங்கள் நன்றாக வளர்ந்து சோலையாக உள்ளன. இன்னும் சற்று தள்ளிப்போனால் மீண்டும் ஆறு குறுகலாகும். இவ்விடத்தில் ஆற்றின் கிழக்குப் பகுதியில் விமான நிலைய சுற்றுச் சுவர் ஆரம்பமாகிறது. விமான நிலையம் நீரில் மூழ்கியதில் ஆச்சரியமேதுமில்லை.


ஆகவே, இப்பகுதியானது பரங்கிமலை, மணப்பாக்கம் ராணுவ அலுவலர் பயிற்சிக் கல்லூரிக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். ராணுவ திடலின் சுற்றுச் சுவர் முடியுமிடத்தில் இன்னும் சில குறுங்காடுகளும், புதர்க்காடுகளும் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதி அதன் இயல்பு மாறாமல் இன்னமும் நீடிக்கின்றது. சில தனியார் பண்ணை வீடுகளும் இடிந்த நிலையில் இப்பகுதியில் உள்ளது. அதில் ஒன்று நடிகர் ரவிச்சந்திரனுடையது என்று ஒருவர் சொன்னார். அவர் அநேகமாக நில புரோக்கராக இருக்கலாம். இங்கெல்லாம் எப்போ சார் ரோடு போடுவாங்க, ஒரு கிரவுண்டு நிலம் எவ்வளவு . இருக்கும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்.

இந்தக் கரையோரப் பாதை வழி சென்றால் சென்னை விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட (அடையாற்றின் குறுக்கே வரும்) இரண்டாவது ஓடுபாதை வரை செல்லலாம். இப்பகுதியானது பல பறவைகள், பூச்சிகள், போன்றவற்றின் இயற்கை வாழிடமாக உள்ளது. அரசாங்கம் இங்கு வேறு ஏதும் குடியிருப்புத் திட்டங்களை நிறைவேற்றாமல் இந்த குறுங்காடுகளை பாதுகாத்து வருமானால் நல்லது. நாங்கள் உச்சி வெயிலில் சென்றபோதும் பல பறவைகளைப் பார்த்தோம். குறிப்பாக கொக்கு வகைகளில் குளத்துக் கொக்கு (Indian Pond Heron), உண்ணிக் கொக்கு (Indian Cattle Egret), சின்னக் கொக்கு (Little Egret),  போன்றவைகளையும் தைலாங் குருவி (Barn Swallow), சிறிய நீர்க்காகம் (Little Cormorant), பஞ்சுருட்டான் ( Green Bee Eater), கறுப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied Kingfisher), வெண்மார்பு மீன்கொத்தி (White Thorated Kingfisher), வல்லூறு (Shikra),  தேன் சிட்டு (Sunbird), செண்பகம் ( Greater Coucal), கொண்டைக் குருவி (Bulbul),  கழுகு (Eagle), கரிச்சான் (Black Drongo),  உள்ளான் (Sandpiper), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) போன்றவற்றைப் பார்த்தோம். ஒருவேளை காலையிலோ, மாலையிலோ சென்றிருந்தால் இன்னும் நிறைய பார்த்திருக்கலாம்.