பக்கங்கள்

வெள்ளி, 29 மே, 2015

தேக்கடியில் கல்லூரி நண்பர்களுடன்...

நாங்கள் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 25 வருடங்கள் ஆகிறது. வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் வகுப்புத்தோழர்களின் கூடுகை ஒன்றை தேக்கடியில் சென்றவாரம் நான் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தேன். கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இத்தகைய கூடுகை ஒன்றை நடத்தலாம் என எல்லாருக்கும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு காரணங்களால் அப்போது அதில் கலந்துகொள்ள விருப்பமில்லை. ஆனால், நானும் வேறு சில குறிப்பிட்ட நண்பர்களும் இதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தோம். மற்ற நண்பர்களோ இத்துறையிலேயே இருக்க, நான் மட்டும் மந்தையிலிருந்து விலகிய ஆடாக இருந்தபோதிலும் இதை நடத்துவதில் நான் முனைப்பாக இருப்பதின் காரணம் சற்று விசித்திரமானது. உண்மையில் எங்கள் கல்லூரி குறித்து எனக்கு மதிப்போ, முக்கியத்துவமோ இருந்ததில்லை. காரணம் எங்களுக்கு அமைந்த ஆசிரியர்கள் அப்படி, ஒரு சிலரைத்தவிர மற்றதெல்லாம் தண்டச்சோறுகள். ஆனால் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். எனது மிகச் சிறந்த நண்பர்கள் அனைவரும் என்னுடன் கல்லூரியில் படித்தவர்களே. கல்லூரிக் கட்டடங்களையும், மருத்துவமனையையும் நட்பின் அடையாளமாகவேதான் பார்க்கிறேனே தவிர, என்னைப் பொறுத்தவரை அவற்றிற்கு வேறு மதிப்பில்லை. சித்தமருத்துவம் குறித்து ஆசிரியர் பாடம் நடத்தி அறிந்து கொண்டதைவிட மூத்த நண்பர்கள் மூலம் கல்லூரிக்கு வெளியே அறிந்துகொண்டதுதான் அதிகம். சொல்லப்போனால், படிக்காமலேயே தேர்வுகளில் வெற்றிபெறுவதற்குரிய உத்தியை கைவரப் பெற்றிருந்தேன். சித்தமருத்துவம் குறித்து அத்துறைக்குள்ளேயே இருந்து ஆராய்ச்சி செய்வைதைவிட வெளியில் சென்று அப்பணியை ஆற்றுவதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தேன். ஆதலால், பெரும்பாலான என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரியிலியேயே முதுகலை சித்த மருத்துவம் பயின்றபோது நான் விலகிச் சென்றுவிட்டேன். மேலும் அரசுப்பணியில் சித்தமருத்துவராக வேண்டும் என்று விரும்பியதேயில்லை. அப்பாவுக்கு அதனால் என்மேல் கோபமிருந்தது. என் நண்பர்களுடன் ஒப்பிட்டு எப்போதும் என்னை குறை சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கையில், என்னைப் பொறுத்த அளவில், என் முடிவு மிகச் சரியானதென்றே படுகிறது. என் இயல்புக்கு அங்கு குப்பை கொட்டமுடியாது. ஆனால், நண்பர்களுடன் அப்படியில்லை. துறை மாறினாலும் தொடர்ந்து நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன்.




1990 ஆம் ஆண்டு ஒரு ஆனி-ஆடி சாரல் மழைநாளில் எங்களுக்கு கல்லூரி முதல்நாள். அநேகமாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் நண்பர்கள் சித்த மருத்துவம் பயில சேர்ந்திருந்தார்கள். எல்லா மாவட்டங்களிலிருந்தும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மன விரிவைக் கொடுத்தது. ஒவ்வொருவரின் ஊரையும், அவ்வூரின் சிறப்புகளையும் குறித்து பேசுவது எனது அப்போதைய பொழுதுபோக்குகளில் ஒன்று. அந்த ஊரைப் பார்ப்பதற்காகவே நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் விடுமுறைக் காலங்களில் டேரா போடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பெரும்பாலானவர்களின் வீட்டு முகவரிகளையும் சமீப காலம் வரை ஞாபகம் வைத்திருந்தேன். இன்னும் சிலரது பழைய வீட்டு முகவரிகளை என்னால் சொல்லமுடியும். முதலாண்டு முடியும்போது வகுப்பில் 86 பேர்கள் இருந்தோம். அதில் 60 பேர் பெண்கள். எங்களுக்கும், எங்களது இளவல்கள் மற்றும் மூத்த மாணவர்களுக்குமிடையே ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. மற்ற வகுப்புகளில் ஆண்-பெண் விகிதாச்சாரம் சரிபாதி. மேலும் அங்கெல்லாம் பல்வேறு கோஷ்டி பிரிவினைகள் உண்டு. ஊர் சார்ந்து, சாதி சார்ந்து என்று வகுப்பிலேயே பல்வேறு பிரிவினைகள் உண்டு. திருநெல்வேலியல்லவா, இதெல்லாம் இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஆனால் எங்கள் வகுப்பில் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. நாங்கள் சாதி சார்ந்தோ, ஊர் சார்ந்தோ குழுவாக பிரிந்து அடித்துக்கொள்ளவில்லை. சாதிப் பெயர்களை கிண்டல் மூலம் தாண்டிச்சென்றோம். இதற்கு ஆண்கள் மிகக் குறைவாக இருந்ததும் ஒரு காரணமாகயிருக்கலாம். ஆனால், 60 பெண்கள் இருந்தும், ஆச்சரியமாக பெரிதாக தனிப்பட்ட குழுக்கள் இல்லை. 1990 லிருந்து 95 வரை பகைமை-பொறாமை கொண்ட குழுக்கள் இல்லாமல் நாங்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்தோம். எங்களுக்கு ஒருவருடம் மூத்தவர்கள்  படிப்பாளிகள் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார்கள்; இளவல்களோ ரவுடி பிம்பமும் கொண்டிருந்தார்கள். நாங்கள் இதில் எதிலும் சேர்த்தியில்லை. ஒருவகையில் நாங்கள் அமைதியானவர்கள்; ஆனால் குசும்பர்கள் என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. ஆசிரியர்கள் கேள்விகேட்டால் பதில் தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிப்பது எங்கள் வகுப்பின் உத்தி. கேள்வி கேட்ட ஆசிரியர் பதில் கிடைக்காததால் நொந்துவிடுவார். கிட்டத்தட்ட முந்திரிக்கொட்டைகளே எங்கள் வகுப்பில் இருந்ததில்லை.






கல்லூரியில் படிப்பிற்கு செலவழித்ததைவிட வருடா வருடம் சுற்றுலா செல்வதற்கும், அங்கு எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போடுவதற்கும் என்று நாங்கள் அனைவரும் அதிகம் செலவழித்திருப்போம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதும் படிப்பை விட அதுதான் முக்கியமானதாகப் படுகிறது. இந்தக் கூடுகைக்கான திட்டமிடலை 6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். இதற்காக சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் என் வீட்டில் வைத்து கடந்த ஜனவரி மாதம் ஒரு சிறிய கூடுகையை நடத்தினோம். பின்னர் எல்லோரிடமும் இணையம் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் ஒட்டெடுப்பு நடத்தி கூடுகை நடத்த விரும்பும் இடத்தை தேர்வுசெய்ய முயன்றோம். 86 பேரில்  பல வருடங்களுக்கு முன்பே ஒருவர் ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார். ஆறு பேரை, இந்த செல்பேசி உலகிலும், கண்டுபிடிக்கவே முடியவில்லை. வெளிநாடுகளில் வாழும் மூன்று பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. மீதமிருக்கும் 76 பேரிடமும் பேசி தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டோம். இவர்களில் பலர் அரசு சித்தமருத்துவ அலுவலர்களாக இப்போது வேலை செய்கிறார்கள்; சிலர் தனியாக கிளினிக் வைத்திருக்கிறார்கள்; சிலர் வேறு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்; மேலும் சிலர், என்னைபோல், வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள். சிலருக்கு கல்லூரியில் படிக்கும் மகன், மகள் இருக்கிறார்கள்.




மதுரையிலுள்ள ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் தேக்கடியில் கடந்த 19-20 தேதிகளில் எங்களது கூடுகையை நடத்த திட்டமிட்டோம். முதலில் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக நடத்த நினைத்தோம். ஆனால், சிலர் எங்கள் குடும்பத்தோடுதான் வருவோம் என்று கூறியதால் அவரவர் விருப்பப்படி வரலாம் என தீர்மானித்தோம். சிலர் தங்களது வாகனங்களில் நேரடியாக தேக்கடி வந்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் மதுரை, திண்டுக்கல் வந்து அங்கிருந்து எங்களுக்காக அமர்த்தப்பட்ட பேருந்து மூலம் தேக்கடி அடைந்தோம். உடன்படித்த 76 பேரில், ஐம்பது நண்பர்களையாவது திரட்டிவிட வேண்டுமென முயன்றேன். எவ்வளவோ நான் முயன்றும் 34 நண்பர்கள் அவர்களது குடும்பங்கள் என்று 70 பேர்தான் வந்திருந்தனர். சிலரால் தவிர்க்கமுடியாத காரணங்களால் வர இயலவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து, முதன்முதலில் தொடர்புகொண்டபோது வருகிறேன் என்று சொன்ன பலர் அடுத்தடுத்த அழைப்புகளில் தயக்கம் காட்டினர். சிலர் நான் கூப்பிட்டால் செல்பேசியை எடுப்பதையே தவிர்த்துவிட்டனர். குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்பவில்லை. சிலர் கடைசிவரை டபாய்த்துக்கொண்டேயிருந்தனர். சில நண்பர்களின் இத்தகைய போக்கு கடைசி 20 நாட்களில்  ஒருவிதமான விரக்தியை எனக்குள் ஏற்படுத்தியது. ஆகையால் தேக்கடிக்கு ஒருவிதமான வெறுமையான மனநிலைலேயே சென்றேன். அவ்வாறு நடக்கவில்லையென்றிருந்தாலும் ஒருவேளை நான் அத்தகைய மன நிலையில்தான் சென்றிருப்பேனோ என்னவோ?! என் மன அமைப்பே அப்படித்தான்; எல்லா விசயத்திலும் கடைசித் தருவாயில் சற்று சொதப்புவது என் பாணி. வடிவேலுவின் பாணியில் ”ஓப்பனிங் எல்லாம் பலமாத்தான் இருக்கும், ஆனால் பினிஷிங்தான் சரியிருக்காது”.





 நிகழ்வு நாள்களிலும் ஒருவிதமான பதட்டத்துடனும், எரிச்சலிலும்தான் இருந்தேன். நண்பர்களை ’செல்லமாக’ கடிந்துகொண்டேன். சில வேலைகளை பிற நண்பர்களுக்கு பிரித்துக்கொடுத்திருக்கலாம்தான். எல்லாவற்றிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற கமல்ஹாசத்தனம் என்னிடம் உண்டு. சிலர் இதை அடுத்தவர் மேல் நம்பிக்கையின்மை எனச் சொல்வார்கள்; ஆனால் என்னைப் பொறுத்தவரை செய்யும் செயலில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்தல் என்றே பொருள்கொள்வேன். கமல்ஹாசன் என்னைப் போல் பதட்டப்படுவாரா எனத்தெரியாது. ஆனால், என் தந்தைக்கு நிகரான, என் நண்பர் சுகன்யாவின் தந்தை, மறைந்த இலக்கியவட்டம் நாராயணன் அவர்கள் காஞ்சிபுரத்தில் இலக்கியவட்ட நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதை பலமுறை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். கூட்டத்திற்காக மேசை, நாற்காலிகளை தனியொருவராக தூக்கி வைத்து போடுவதிலிருந்து, வந்திருப்பவர்களுக்கு டீ சப்ளை பண்ணுவது, கூட்டத்தை துவக்கி வைத்து பேசுவது என்று எல்லா வேலைகளையும் ஒரு கர்மயோகியாக பதட்டமின்றி செய்வார். என்னைப் பொறுத்தவரை அது ஒரு யோகச் செயல்பாடுதான்.









தேக்கடியில் முதல்நாளன்று மாலை ஹோட்டல் கருத்தரங்க அறையில் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. எவ்வாறு பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதற்கு நேர்மாறாக ஒரு எதிர்மறைத் தொனியுடன் ஆரம்பித்தேன். தொலைபேசினால் செல்பேசியை எடுக்காதது, குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பாதது இன்னபிற வழக்கங்கள் ஒரு பொறுப்பற்ற தன்மையைக் குறிப்பன; கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நாம் செய்ததை இப்போது எனக்கே திருப்பியளித்து விட்டீர்களே என நண்பர்களை கடிந்துகொண்டேன். நண்பர்கள் சிலர் பேசினர், சிலர் பாடினர். பின்னர் குழந்தைகளின் நிகழ்வு நடைபெற்றது. எங்கள் அனைவரையும் விட குழந்தைகளே இப்பயணத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். மறுநாள் புகழ்பெற்ற தேக்கடி படகுப் பயணத்திற்கு சென்றோம். 1992 ஆம் வருடம் கல்லூரியில் படிக்கும்போது இங்கு சுற்றுலா வந்திருக்கிறோம். அதன்பின் ஒருமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால் இந்தமுறைதான் படகுப்பயணத்தில் யானைக் கூட்டங்களையும், வரையாடுகளையும் பார்த்தேன். பொதுவாக நான் தனிமையானவன். நண்பர்களுடன் இருக்கும்போதே சற்றென்று தனிமையுணர்வு கொண்டுவிடுவேன். என் ஒன்றுவிட்ட மைத்துனனும், எனக்கு கல்லூரியில் ஒரு வகுப்பு மூத்தவனும், 40 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அறிந்தவனுமான மீனாட்சி சுந்தரம் முன்பொருமுறை சொன்னான் - நீ ஒன்னு கூட்டத்தில் முதலாவதா வர்ற அல்லது பின்னாடி கடைசியா வர்ற என்று. ஆம் நான் கும்பல் மனப்பான்மையிலிருந்து எப்போதுமே விலக்கம் கொள்கிறேன். அது எனக்கு பல வகைகளிலும் உதவியாக உள்ளது. தேக்கடியிலும் படகுச் சவாரியினை ரசிக்க படகின் முன்பக்கம் சென்று தனியாக அமர்ந்துகொண்டேன். அதனால், பின்பக்க இரைச்சல்களிலிருந்து தப்பித்து எனக்கான காட்டை என்னால் ரசிக்க முடிந்தது.










மறுநாள் சென்னை வந்து சேர்ந்தபின் எல்லோருக்கும் பத்திரமாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்களா என குறுஞ்செய்தி அனுப்பினேன். இது  ஜெயமோகனிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பழக்கம். தனது நண்பர்களுக்கு ஒவ்வொரு நிகழ்வு முடிந்ததும் அவரிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வரும். நான் ஆச்சரியப்படும் வகையில் எல்லா நண்பர்களும் உடனேயே பதில் குறுஞ்செய்தி அனுப்பினர். மகிழ்ச்சியாய் இருந்தது. இதை எல்லோரும் முதலிலேயே பின்பற்றியிருந்தால் இன்னும் நன்றாக நிகழ்வை நடத்தியிருக்கலாமே என மனதில் நினைத்துக் கொண்டேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக