பக்கங்கள்

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஏற்காடு இலக்கிய முகாம்

ஜெ-வின் வழிகாட்டுதலில் நடைபெறும் ஊட்டி இலக்கியச் சந்திப்புகளில் 2010 சந்திப்பிற்குப் பிறகு நான் கலந்துகொள்ளும் இரண்டாவது சந்திப்பு இது; இம்முறை ஏற்காட்டில். கடந்த இரண்டு சந்திப்புகளில் சில தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியாமல் விடுபட்டுப்போய்விட்டதால் இம்முறை சற்று கூடுதல் ஆர்வத்துடனிருந்தேன். மறைந்த காஞ்சிபுரம் வெ. நாராயணன்அவர்கள் நடத்திவந்த இலக்கியவட்டக்கூட்டங்களில் தொண்ணூறுகளில் இறுதிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டு சிறப்பான ஆளுமைகளால் முன்னெடுக்கப்படும் சந்திப்புகள் என்ற பொதுமையைத் தவிர அமைப்பு முறையிலும், நெறிமுறைகளிலும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இலக்கியச் சந்திப்புகள். ஆனால், இரண்டுமே எனக்கு ஆர்வமூட்டுபவை. இயல்பிலேயே கூச்ச உணர்வும், தயக்க சுபாவமும் கொண்டவனாதலால், நான் எப்போதுமே தீவிரப் பங்களிப்பானாக இருந்ததில்லை. ஆயினும், இத்தகைய சந்திப்புகளை கூடியமட்டும் தவிர்க்கமாட்டேன்.

கடந்த 27 இரவு சென்னையிலிருந்து ஏற்காடு விரைவுவண்டியில் நான், சங்கீதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாசன் - சுதா, ஜாஜா @ ராஜகோபாலன் ஆகிய ஐவரும் புறப்பட்டோம். பின்னர் வேறு சில நண்பர்களும் இணைந்துகொண்டனர். காலை 8மணியளவில் சந்திப்பு நடைபெற்ற செட்டியார் பங்களாவை வந்தடைந்தோம். 9.30க்கு முதல் அமர்வு- கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொடங்கியது. நாஞ்சில் கனடா பயண ஜெட் லாக்கிலிருந்து மீண்டிருக்கவில்லை. அதனால் நிகழ்வு சற்று தொய்வாக இருந்தது. ஆகையால், உணவு இடைவேளைக்குப் பிறகு நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உலகச் சிறுகதைகள் விமரிசிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப்பின் (அறம் வரிசைக் கதைகளுக்குப் பின்) இந்நிகழ்வுகளுக்காகவே சிறுகதைகளை வாசித்து வந்திருந்தேன். நண்பர்கள் மிக அருமையாக விமரிசனமும், விவாதமும் புரிந்தனர். நான் பொறாமையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாலையில் பகோடா பாயிண்ட் வரை ஒரு சிறு உலா போய்வந்தோம். அதன்பின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து நிகழ்வுகள் தொடங்கின. இரவில் இசைக்கச்சேரி; நண்பர்கள் சுரேஷும், சங்கீதாவும் அனைவரையும் மகிழ்வித்தனர்.

இரண்டாம் நாள் மீண்டும் கம்பராமாயணம். நாஞ்சில் புத்துணர்வுடன் தொடங்கினார்; பின்னர் ஜடாயு வழக்கமான உற்சாகத்துடன் பட்டாசாக வெடித்தார். மதியம் நண்பர்கள் தேர்ந்தெடுத்த இந்தியச் சிறுகதைகளும், கவிதைகளும் விவாதிக்கப்பட்டன. இரவில் தீப்பிழம்பின் ஒளியில் மீண்டும் இசைக்கச்சேரி. ராம் சேர்ந்துகொண்டதால் கூடுதல் உற்சாகம். தூக்க மிகுதியால் 12 மணியளவில் படுக்கச் சென்றுவிட்டேன். நண்பர்கள் காலை 4:00 மணிவரை கொண்டாடி மகிழ்ந்தனர். மூன்றாம் நாள் பேராசிரியர் ஞானசம்பந்தம் வில்லிபுத்தூராரின் பாரதம் குறித்து அவரது டிரேட் மார்க் ஜோக்குகளோடு உரையாற்றினார். மதிய உணவோடு சந்திப்பு முற்றுப்பெற்றது.



இந்தச் சந்திப்பிற்காக நண்பர்கள் மிகுந்த தயாரிப்புகளோடு வந்திருந்தனர். மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்குப் 10-12 மணி நேரங்கள் தீவிரமான விவாதங்கள் ஊடாக நிகழ்வுகள் நடந்தன. சோர்வோ, சலிப்போ இல்லாமல் எல்லோரும் தீவிர கவனத்துடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். மாணவனாக, கல்வியாளனாக கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல பெரும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அவைகளோடு ஜெ முன்னெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கமுடிவதில்லை. கடமைக்காகவும், லெளகீக பயன்களுக்காகவும் கல்வி, ஆராய்ச்சி புலங்களால் நல்கைகளைப் பெற்றுக்கொண்டு, பெரும் விளம்பரத்துடன் நடத்தப்பெறும் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் எனக்கு ஒவ்வாமையைத் தருவன. முடிந்தவரை அவைகளைத் தவிர்க்கவே முயல்வேன், எனக்கு அதனால் லெளகீகப் பயன்கள் இருந்தபோதிலும். ஆனால் இது அப்படியல்ல; சென்ற இரண்டு முறைகள் ஊட்டி கூட்டங்களைத் தவறவிட்டதே எனக்கு பெரும் சோகம் அளித்தது.

யோசித்துப் பார்த்தேன்; நான் எப்போதுமே தீவிரப் பங்களிப்பாளானாக இருந்ததில்லை, எனினும் எது என்னை இத்தைகய நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொள்ள வைக்கிறது- இதன் ஆத்மார்த்தந்தான். இதில் அமைப்பாளர்- பங்கேற்பாளர் என்ற மேல்-கீழ் நிலைகள் இல்லை. ஜெ உட்பட அனைவரும் ஒன்றாக உண்டு, உறங்கி விவாதித்து, ஒரு குடும்பமாக உணரும் அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது. ஆயினும் கறாரான விதிமுறைகளுண்டு. அதனால்தான் இத்தகைய நிகழ்வுகளை சிறப்பாக நடத்தமுடிகிறது. இல்லையெனின் இதுவும் ஒரு வெட்டி அரட்டைக் கூட்டமாகிவிடும்.

மூன்று நாட்களும் உணவு உபசரிப்பும் அருமை. விடையளிக்கும்போது இக்கூட்டத்தை அற்புதமாக ஒருங்கிணைத்து நடத்திய விஜயராகவன் தேம்பி அழுதேவிட்டார். மாலை தனாவின் காரில் சேலம் வந்தடைந்தோம். ரயிலில் சென்னை திரும்பும்போதுதான் நான் கடந்த மூன்றுநாட்களில் மொத்தமாகப் பேசியதைவிடவும் அதிகமாகப் பேசிக்கொண்டு வந்தேன். ஒரு இலக்கிய சந்திப்பில் முதன்முறையாக கலந்துகொண்ட சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில்சொல்லும்போதுதான் எனக்கும், ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் ஜெ என்ற ஆளுமைமேல் இருக்கும் பிரியமும், மரியாதையும் வெளிப்பட்டன. ஜெ அடிமையாகவே ஸ்ரீனிவாசன் மாறிவிட்டார் என சுதா குறிப்பிட்டார். வீட்டில் பவானியிடம் சந்திப்பு குறித்து விளக்கும்போது அடுத்தமுறை நானும் கலந்துகொள்ள முயல்கிறேன் என்றார். பெரிய மகன் அமுதனிடம் நேற்று நிகழ்வில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அவனையும் சென்ற மே மாதம் பாண்டிச்சேரியில் நடந்த சுனில் கிருஷ்ணனின் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தோம். அதனால் நண்பர்களை புகைப்படங்கள் வழி அடையாளம் கண்டுகொண்டிருந்தான். ஜெ படம் வந்தபோது, அப்பா இவரும் உன் பிரெண்ட் தானே எனக் கேட்டான். பிரெண்ட்தான், ஆனால் அதற்கும் மேலே - வழிகாட்டி... குரு என்றேன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக