மாருதி ஆம்னி திருச்சி-சென்னை புறவழிச் சாலையிலிருந்து மேற்கில் பிரியும்
சாலையில் காலை ஒன்பது மணியளவில் நுழைந்தது. அச்சாலை காவிரியின் தென்கரையை
தொட்டுக்கொண்டு சென்றது. சாலையின் ஓரத்தில் திருச்சி நகர குப்பைகள் மலை மலையாகக்
குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆம்னி வேன் மேலும் செல்ல செல்ல ஊதா
நிற மின்மயானக் கட்டடம் தெரிய ஆரம்பித்தது. எங்கள் வேன் மின்மாயானத்திற்கு
வடபுறமுள்ள தகரக் கூரை வேய்ந்த பழைய மயானத்தை அடைந்தது. ஓயாமாரி மயானம் என்பது
அதன் பெயர். ஓயாமல் மழை பெய்வதுபோல் அங்கு ஒருகாலத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டுக்
கொண்டிருந்ததால் அப்பெயர் வந்ததாக வெட்டியான் சின்னையா சொன்னார். தென்மேற்கில்
மலைக்கோட்டை கம்பீரமாக நின்றிருந்தது. வடக்கில் காவிரி இருகரைகளையும்
தொட்டுக்கொண்டு சுழித்துச் சென்றுகொண்டிருந்தது. மயான மரங்களிலிருந்து பறவைகளின்
ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது. இதமான மார்கழி மாத பனி. நாங்கள் வருவதற்கு முன்பே
வரட்டிகள் அடுக்கப்பட்டு மூன்றடி நீள சிதை தயாராக இருந்தது. பெரிய அத்தானின்
நண்பர் ரவீந்திரன் அதிகாலையிலேயே அங்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும்
செய்திருந்தார்.
சிதையில் கோமதி பாப்பாவின் சடலத்தை சிலர் கிடத்தினர். பாப்பாவின் முகத்தில்
அவள் கடந்த 5 வருடங்களாக அனுபவித்த வேதனையின் சுவடுகள் ஏதும் தெரியவில்லை.
அன்றலர்ந்த மலர் போலிருந்தாள். முகத்தில் ஒரு சிறிய புன்னகை காணப்பட்டது போல்
தோன்றியது. என்னிடம் செல்லையா ஒரு கருவேல முள்ளைக் கொடுத்து பாப்பாவின் காது
மடல்களில் துளையிடுவது போல் பாவனை செய்யச் சொன்னார். தாய்மாமனான என்மடியில் வைத்து
அவளுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என நாங்கள் நினைத்த போதெல்லாம்
அவளுக்கு உடம்பிற்கு முடியாமல் போய்விடும். கோமதி என்னுடன் எசலும் போதெல்லாம் என்
தங்கை, “ஏட்டி!, அவம் ஒந் தாய்மாமண்டி, ரொம்ப எசலுனேன்னா அப்புறம் ஒங் காதிற்கு
தங்கத்தோடு போடமாட்டான்”
எனச்
சொல்லுவாள். முள்ளால் காது மடல்களில் துளையிடுவதாக பாவனை செய்யும் இந்தச்
சம்பிரதாயத்தை நான் செய்தபோது மனதிற்குள் “”மானூத்து மந்தையிலே மான் குட்டி பெத்த மயிலே,
பொட்ட பிள்ள பிறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே... தாய்மாமன் சீர் சுமந்து
வாராறாண்டி, அவன் தங்கக் கொலுசுகொண்டு வராண்டி...” என்ற வைரமுத்துவின் பாடலை
நான் பாடிக்கொண்டிருந்தேன். இதை சட்டென்று பின்னர் உணர்ந்தேன். அதே கணத்தில் நீண்டநெடிய
தமிழ்ப் பண்பாட்டின் மேலும் ஒரு கண்ணிதான் நான் என்பதை இத்தகைய சடங்குகள் எனக்கு
உணர்த்துவதை உணரவும் செய்தேன். இந்த எண்ணங்கள் அந்த நேரத்திலும் என்னுள் ஒரு பரவச மனநிலையை
ஏற்படுத்தின.
பாப்பாவின் உடம்பை, முகம் தவிர்த்து, வரட்டிகளைக் கொண்டு
மூடிவிட்டிருந்தார்கள். சின்னையாவின் உதவியாளர் செல்லையா சிதையை மூடுவதற்கு
கொட்டகைக்கு அருகிலேயே களிமண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தார். வாய்க்கரிசி
போடுவதற்கு சின்னையா மீண்டும் என்னை முதலில் அழைத்தார். பின்னர் கோமதியின்
பெரியப்பாக்கள், தாய்வழித் தாத்தாவான என் அப்பா, மற்ற உறவினர்கள், அத்தானின்
நண்பர்கள் என வரிசையாக இட்டபின் கடைசியாக அத்தானை வாய்க்கரிசி இடச் சொன்னார்கள். ஏனைய
சடங்குகள் முடிந்தபின் கடைசியாக எல்லோரும் ஒருமுறை முகத்தைப் பார்த்துக்கொள்ளச்
சொன்னார்கள். நான் இறுதியாக ஒருமுறை பாப்பாவின் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டேன்.
பின்னர் முகம் மூடப்பட்டபின், ஒரு சிறிய எருத்துண்டில் நெருப்பைப் பற்றவைத்து
அத்தானை அவர் மகளுக்குக் கொள்ளியிடுமாறு சின்னையா பணித்தார். அந்த கணத்தில்
கிட்டத்தட்ட அனைவருமே விசும்பினார்கள். என்னுள் உயிருள்ள கோமதியின் நினைவுகள் அலைமோதின.
அந்த நினைவுகள் என்னை அழ வைத்தன. பிறருக்கும் அப்படித்தானிருந்திருக்கும். பின்னர்
எல்லோரும் காவிரியை நோக்கி நடக்கலானோம். உறவினர் ஒருவர் “கங்கையின் மேலான காவிரி
தீர்த்தம், மங்கல நீராட முன்வினை தீரும்” எனப் பாடிக்கொண்டுவந்தார். காவிரியில் கால் வைத்ததும் எனக்கு ஜெயமோகனின் நதி சிறுகதை மனதிற்குள் ஓடியது.
கோமதி என்ற சாய் ஜெய்ஸ்ரீ, என் மகன் அமுதன் பிறந்து கிட்டத்தட்ட இரண்டரை
மாதங்கள் கழித்து 2007 ஆம் வருடம் ஜனவரி 12 ஆம் நாள் பிறந்தாள். பிறப்பதற்கு
முன்பே அவளுக்குச் சில குறைபாடுகள், குறிப்பாக சிறுநீரக அமைப்பின்
கீழ்ப்பகுதிகளில், இருக்க வாய்ப்பிருப்பதாக அவளை உண்டாகியிருக்கும்போது என் தங்கைக்குச்
செய்யபட்ட மீயொலி பரிசோதனைகள் தெரியப்படுத்தின. ஆனால் பிறந்த உடன் அவள் சிறுநீர்
கழித்துவிட்டதால் அவ்வுறுப்புகளில் குறையிருப்பதற்கான வாய்ப்புகளில்லை என்பது
தெளிவானது. ஆயினும், அவள் சிறுநீர் கழிப்பதில் அவ்வப்போது சிக்கல்கள் இருந்தன. வளர
வளர அது சரியாகும் என குழந்தை சிறுநீரகத்துறை மருத்துவர் சொன்னார். இதற்கிடையில் ஐந்தாவது
மாதத்தில் கோமதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள். அப்போது அதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னர் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் அவளுக்கு
இதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் தமனியின் இரத்த அழுத்தம் இயல்பைவிட மிக
அதிகமாக இருப்பதாகவும், அதனால்தான் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டது.
ஆயினும் அக்குழு மருத்துவர்களுக்கிடையே அதற்கான தீர்வை அளிப்பதில் ஏற்பட்ட
முரண்பாடுகளால் சென்னையில் மருத்துவர் செரியன் நடத்தும் மருத்துவமனையை அணுகச்
சொன்னார்கள்.
பின்னர் அங்குதான் இந்நோய் சரிப்படுத்தமுடியாத முதன்மை நுரையீரல் தமனி உயர்
ரத்த அழுத்தம் (Primary
Pulmonary Artery Hypertension) எனக்கண்டறியப்பட்டது. இதற்கிடையில்
கோமதிக்கு சிலமுறைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோவையில் உள்ள கோவை மெடிக்கல் செண்டரிலும்,
பின்னர் பி. எஸ். ஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்கப்பட்டாள். இக்காலங்களில் அவளுக்கு வீட்டிலும் தினமும் பிராணவாயு
செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படது. அதனால் வீட்டிலேயே எப்பொதும் ஒரு பிராணவாயு
உருளை தயாராக இருக்கும். ஆனால், தேவைப்பட்ட காலங்களில் சட்டென்று அவ்வுருளையை
பெறுவதில் ஏற்படும் சிக்கல்களினால்
போனவருடம்தான் பிராணவாயுவை காற்றிலிருந்து பிரித்துக் கொடுக்கும் உபகரணம் ஒன்றை
வாங்கினோம். ஆயினும் அவளுக்கு லேசாக சளி பிடித்தாலும் தீவிர சிகிச்சைப்
பிரிவில்தான் அனுமதிக்கவேண்டும். இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு மிகவும்
குறைந்துவிடும், ஊதா நிறமாகிவிடுவாள். குறைந்தது 10 நாட்கள் ஜீவ மரணப்
போராட்டத்திற்குப் பிறகு அவள் பலமுறை அவ்வாறு தப்பிப் பிழைத்துள்ளாள். இந்த 5
வருடங்களில் கடந்த ஒருவருடம் மட்டும்தான் இம்மாதிரி அவளுக்கு ஏதும் ஏற்பட்டதில்லை.
ஆனால் இந்த வருடத்தில் மட்டும் மூன்றுமுறை கோவை பி.எஸ். ஜி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டாள். கடந்த செப்டம்பரிலேயே அவளுக்கு மிகக் கடுமையான மூச்சுத்திணறல்
ஏற்படது. அப்போதே இதயமும் மிகவும் பழுதடைந்துவிட்டது. சென்றவாரம் மீண்டும்
மூச்சுத்திணறலும், சிறுநீர் சரிவரப் பிரியாததால் உடல்வீக்கமும் ஏற்பட்டு பி.எஸ்.ஜி.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4 நாட்கள் கழித்து மருத்துவமனையிலேயே உயிரைவிட்டாள்.
பின்னர் அங்கிருந்து அத்தானின் சொந்த ஊரான திருச்சிக்குச் சென்று எல்லாச்
சடங்குகளையும் முடித்தோம்.
ஆனால் அவளது மூளை மிகுந்த துடிப்பானது. மற்ற அவயங்களில் இருந்த குறைகளை தனது மூளையின்
மூலம் அவள் சமனப்படுத்திக் கொண்டாள். உடல்நிலை நன்றாயிருக்கும் காலங்களில் மிகுந்த
கிண்டலும், கேலியுமாக இருப்பாள். வாயாடி வள்ளியம்மை, பரட்டை, தொப்புள் குடைஞ்சாள்
என பல பெயர்களை நான் அவளுக்குச் சூட்டியிருந்தேன். பல நேரங்களில் யாராவது அவளது
பெயரைக் கேட்டால் நான் சூட்டிய பெயர்களில் ஒன்றை வேண்டுமென்றே கிண்டலாகக்
கூறுவாள். கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியாது. சென்ற மேமாதம் சென்னையில் என்
வீட்டில் ஒருமாதம் வந்து இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக என்னுடன் கோபப்பட்டுக்கொண்டு
எனக்கு அத்தைதான் பிடிக்கும் எனச் சொன்னாள். என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்பதற்காக பிற்பாடு
நான் எப்போது கேட்டாலும் அவ்வாறே சொல்லுவாள். இறப்பதற்கு இரண்டுநாட்கள் முன்னர் தீவிர
சிகிழ்ச்சைப் பிரிவில் இருக்கும்போது கூட உனக்கு மாமாவைப் பிடிக்குமா, அத்தையைப்
பிடிக்குமா என நான் கேட்டதற்கு, எனக்கு பவானி அத்தையைத்தான் பிடிக்கும் என ஒரு
நக்கல் சிரிப்புடன் சொன்னாள்.
:((
பதிலளிநீக்குI am very sorry to hear this. Please convey my condolences to Sundari. May God give her strength to overcome this.
பதிலளிநீக்கு-Sathya.
dont know what to say, was quite moving to read ... had been postponing the comment - i could connect to the feeling of it immediately - because I was just thinking what do I want for 2012, and how 2011 was and the first thing that came to my mind was "thank god no hospitalization in 2011 and oh god please no hospitalization in 2012" and I couldnt wish for anything more! I wish your sister and you - all the optimism in the world for the coming year! - jeyanthy prakash
பதிலளிநீக்குThanks Sathya,
பதிலளிநீக்குIn fact I saw your comment today only. It was in my e-mail's spam folder. I will pass on your comments to Sundari.
Thanks Jeyanthi Prakash. I always tell myself that I should live free from illnesses which need hospitalization. I am not worried about the illness rather worried about the hospitalization. I mean it, being a health care professional and working in a institution which runs a hospital.
பதிலளிநீக்கு