பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

அடையாற்றின் கரையில்...மீண்டும்

சென்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மணப்பாக்கம் அடையாறு கரையோரம் நடை செல்லலாம் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். அமுதன் பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் வர இயலவில்லை. சீனிவாசனை தொடர்புகொள்ள செல்பேசியைத் தேடினால் காணவில்லை. அது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கிடப்பதை பின்னர்தான் கண்டுபிடித்தேன். சின்னவன், ஆதிரனின் கைவண்ணம். எல்லாப் பொருட்களையும் கீழேவீசி விளையாடும் பருவத்தில் இப்போது உள்ளான் அவன். சீனிவாசன் முடிந்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டார். செடிகளை எடுத்துக்கொண்டு வர பாலீதீன் கவரில் சிறிது மண், ஒரு கொத்தங்கரண்டியும் எடுத்துக்கொண்டேன். இதற்குள் மணி ஏழாகிவிட்டது. ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பி சிறிது தூரம் செல்லும்போதே மழைத்தூறல் போட்டது. இப்பகுதியில் இந்த வருடம் இதுவரையில் அளவுக்கதிகமாகவே மழை பெய்துள்ளது.  ஜுலை மாதம் பிறந்ததிலிருந்து 20 நாட்களாக தினமும் மழை பெய்துவருகிறது. வெயிலே இல்லை. எப்போது பார்த்தாலும் மேகமூட்டமாகவேயுள்ளது. எங்கள் வீட்டு கிணற்றில் ஒன்றரையடி அளவுக்கு தண்ணீர் மட்டம் ஏறியுள்ளது. பொதுவாக ஆடி மாதம் தண்ணீர்ப்பஞ்சம் உக்கிரம் அடையும். ஆனால் இந்தவருடம் நேர்மாறாக உள்ளது. காலைத் தூறலில் மணப்பாக்கம் - கெருகம்பாக்கம் சாலையை அடுத்த பகுதிகள் ரம்மியமாக இருந்தன. சென்னை மாநகராட்சிக்குள் இப்பகுதிகள் இரண்டாண்டுகளுக்கு முன்பே சேர்க்கப்பட்டுவிட்டாலும், இன்னும் சிலர் விடாப்பிடியாய்  முப்போகம் விளைவிக்கின்றனர். சில இடங்களில் திட்டுகளாக புதர்க்காடுகளும் உள்ளன. வண்டி ஓட்டும்போதே நாம் வீடுகட்டி வந்து இந்தச் சூழலைக் கெடுக்கிறோமே என்ற எண்ணம் தவிர்க்கமுடியாமல் வந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு சிறிது தூரம் கரையில் நடக்க ஆரம்பித்திருந்தேன். ஆற்றை ஒட்டிய கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீர் குட்டையிலிருந்து ஏதோ ஒன்று சட்டென்று அசைந்து அருகிலிருந்த புதருக்குள் சென்றது. அது ஒரு பறவை. செம்பொன் இறக்கைகளுடன் நீண்ட அலகுடன் இருந்தது. இன்று சற்று முன்பே வந்துவிட்டதால் போனவாரத்தை விட சற்றதிக ஆட்கள் தென்பட்டனர். மேலும் சிறிது தூரத்தில் நண்பர்கள் சுரேஷ் பாபுவும், சுவாமிநாதனும் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கொஞ்ச தூரத்தில் 20-30 மைனாக்கள் ஒரு இடத்தில் நிலத்தைக் கொத்தி எதையோ சாப்பிடுக்கொண்டிருந்தன. என் வருகையைப் பார்த்தும் அனைத்தும் ஒருசேர மேலெழும்பி பறந்தன. அப்போது பசுக்கூட்டம் ஒன்றும் கரையில் ஏற முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. அதில் தலைவி போலிருந்த பசு என்னை ஏறிட்டுப்பார்த்தது. பின்னர் என்ன நினைத்ததோ பின்னோக்கி வேகமாகத் திரும்பி ஓட்டமும் நடையுமாகச் சென்றது. அதைப் பின்தொடர்ந்து மற்ற பசுக்களும் திரும்பி வேகமாக நடந்தன. இந்த மைனாக்கள் ஏதும் சொல்லிவிட்டுச் சென்றனவோ என்னவோ?

எங்காவது சீந்தில் கொடி இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சிறிது தூரத்தில் வால்டர் தேவாரம் மாதிரி மீசை வைத்து தலைச் சாயம் பூசிய சற்றே வயதான மனிதரும் அவருடன் ஒரு நடுத்தர வயது மனிதர் மற்றும் 4 வயதுச் சிறுவன் ஒருவனும் எதிரில் வந்துகொண்டிருந்தனர். மீசைக்காரர் என்னையே உற்றுப் பார்த்தவண்ணம் வந்தார். அருகில் வந்ததும் "ஆர் யு கோயிங் ஃபார் வாக்கிங்? வாட் இஸ் இன்சைட் த பேக்?” என்றார். முதலில் நான், "எஸ், ஐ யம் கோயிங் ஃபார் வாக்கிங். ஐ வாண்ட் டு கலெக்ட் சம் பிளாண்ட்ஸ்” என்றேன். பின்னர் அனிச்சையாக பாலீதீன் கவரை விரித்து அவருக்குக் காண்பித்தேன். சட்டென்று ஏன் அவ்வாறு செய்தேன் என நினைத்து வெட்கப்பட்டேன். கேட்டவர் போலிஸ்காரராக இருக்கலாமோ என்ற அச்சம் என்னை அவ்வாறு செய்யவைத்திருக்கலாம். மேலும் நடக்கத்தொடங்கினேன். ஒரு கரிச்சான் பறவை ராக்கெட் மாதிரி செங்குத்தாக விர்ரென்று மேலெழும்பி சில அடிதூரம் சென்றுவிட்டு அதேமாதிரி மீண்டும் கீழே வந்தது. இவ்வாறே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தது. பின்னர் தான் கவனித்தேன், அருகிலிருந்த மரத்தில் வேறொரு கரிச்சான் உட்கார்ந்திருந்தது. ஒருவேளை அதன் இணையைக் கவர இது செய்யும் உத்தியோ என்னவோ! சில இளைஞர்கள் பைக்கில் சென்று யுவதிகள் முன்பு செய்யும் சாகசத்தை என் மனம் ஒப்பிட்டுக்கொண்டது.

தொடந்து நடந்து சென்றவாரம் சென்ற இடத்தைத் தாண்டினேன்.  சற்றுதூரத்தில் ஆற்றின் நடுவே தேங்கியிருந்த குட்டையில் வெண்ணிற அல்லி மலர்கள் பூத்திருந்ததன. மூன்று இளைஞர்கள் விலையுயர்ந்த புகைப்படக்கருவியை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அருகில் சென்றபோதுதான் பார்த்தேன் வித்தியாசமான பறவை ஒன்று அல்லிகளுக்கு நடுவே நின்றுகொண்டிருந்தது. வெண்மையான சிறகுகள், வால் நீண்டிருந்தது. சற்று நீண்ட கால்கள். பறவையின் பெயர் அவ்விளைஞர்களுக்கும் தெரியவில்லை. ஆற்றின் மறுகரையில் விமான நிலைய சுற்றுச்சுவரோடு அமைந்த வடிகால் வழியாக மழைத்தண்ணீர் அடையாற்றிற்கு வந்துகொண்டிருந்தது.
இப்போது மரங்கள் குறைந்து பொட்டல்வெளி ஆரம்பமாகிவிட்டது. பெரிய செங்கல் சூளை ஒன்று வந்தது. முன்பு இப்பகுதிகளில் நஞ்சை விவசாயம் செய்யப்பட்டிருக்கவேண்டும். அடையாற்றில் வரும் தண்ணீரை மடைமாற்றி கால்வாய்கள் மூலம் வயல்களுக்கு கொண்டுசெல்ல அமைப்புகள் இன்னும் உள்ளன. சிறிதுதூரம் நடந்தவுடன் விமானநிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஓடுதளம் அடையாற்றைத் தாண்டி மறுகரையில் கொளப்பாக்கம் கிராமம் வரை நீண்டிருந்தது.
இதற்குமேல் அடையாற்றின் கரையில் நடக்கமுடியாது. இப்பகுதியில் பலர் காலைகடன்களைக் கழித்துக்கொண்டிருந்தனர். கரையிலிருந்து மணப்பாக்கம் ஊருக்குள் செல்லும் வழித்தடத்தில் சிறிதுதூரம் சென்றேன். மழைபெய்து வழியெங்கும் நீர் தேங்கியிருந்தது. ஓடுதள பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட கான்கீரீட் மிச்சங்கள் அங்கங்கே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதனோடு ஊர்க்கழிவுகளும். மாதேஸ்வரன் கோபுரம் தெரிந்தது. சிறிது தூரம் இன்னும் நடந்தால் எங்கள் வீட்டை அடைந்துவிடலாம்.

திரும்பி நடந்தேன். கழுகு ஒன்று வானத்தில் வட்டமிட்டதை கவனித்தேன். நான் கடைசியாக கழுகைப் பார்த்தது எப்போது என்று ஞாபகமில்லை. கண்டிப்பாக பலவருடங்களிருக்கும். சிட்டுக்குருவியைப் போன்றே இப்போது கழுகுகளும் அரிதாகிவிட்டன. டைக்ளோபினாக் மருந்து  கொடுக்கப்பட்ட இறந்துபோன மாடுகளை உண்ணும் கழுகுகள் விஷமேறி இறந்துவிடுவதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து நடக்கையில் அருகிலுள்ள கால்வாயில் தேங்கியிருந்த தண்ணீரில் எதோ அசைவுதெரிந்தது. முதலில் பார்த்த பறவையை போன்ற மற்றொரு பறவை வேகமாக அருகிலுள்ள புதருக்குள் சென்று ஒளிந்துகொண்டது. இம்முறை அதனை நன்றாகப் பார்க்கமுடிந்தது. கழுத்தற்ற உடல், அலகிலிருந்து வால் வரை இருமுனையிலும் கூரான பகுதிகள். குட்டைக்கால்கள். புதருக்குள் சென்று மறைந்தாலும் அதன் கால்கள் இப்போது நன்றாகத்தெரிந்தன. இம்முறை அருகிலேயே பறவையைக் கண்ணுற்றதால் காத்திருந்து அதை என் புகைப்படக்கருவியில் பதிவுசெய்ய நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு; ஜெயமோகன் முன்பு ஒரு கட்டுரையில் குருகு என்ற பறவை குறித்து அஜிதனுடன் உரையாடியதைப் பற்றி எழுதியிருப்பார். கொக்கை குருகு எனப் பொருள் மாற்றி படிக்கும்போது சங்கப்பாடலொன்று தரும் புதிய அர்த்தத்தை மிக அழகாக விளக்கியிருப்பார். ஏனெனில், குருகு ஆபூர்வமாகக் காணக்கிடைக்கும் ஒருபறவை. ஒருவேளை நான் பார்த்ததும் அப்பறவைதானோ என்ற ஐயம். எனவே புதரின் எதிர்புறமே குத்துக்காலிட்டு அமர்ந்து காத்துக்கொண்டிருந்தேன். பலவிதமான பறவையொலிகள். கீச் கீச் என்ற ஒலி கேட்டு மேலே பார்த்தால் சில சிட்டுக்குருவிகள்  பறந்து கொண்டிருந்தன. நான்கைந்து மாதங்களுக்கு முன்பு மேட்டுபாளையமருகிலுள்ள என் தங்கை வீடிருக்கும் பகுதியில் சிட்டுக்குருவிகளைப் பார்த்தபின் இப்போதுதான் அவைகளைப் பார்க்கிறேன்.
பறவை வெளிவருவதாயில்லை. இப்போது அதன் கால்களும் தெரியவில்லை. புதருக்குள் நன்கு சென்றுவிட்டது. ஆகவே இடம் மாற்றி சற்றுதள்ளிச் சென்றமர்ந்தேன். மணி ஒன்பதாகி விட்டிருந்தது. ஒரு அரைமணி நேரம் அப்பறவைக்காக செலவிடலாமென மனதுக்குள் தீர்மானம் பண்ணிக்கொண்டேன். பல்வேறு பறவையொலிகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. கரிச்சான்கள், மைனாக்கள், கிளிகள், குருவிகள், காக்கைகள் இன்னும் பெயர்தெரியாத பலவிதமான பறவையொலிகள், பின்னர் தவளைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம் என இனம்பிரித்து அறிந்துகொண்டேயிருந்த என் மனம் சட்டென்று என் காலடியில் குர் குர் என கேட்கும் ஒரு நுண்ணிய ஒலியில் சென்று அவதானித்தது. எறும்புகள், குட்டி வண்டுகள் போன்ற உயிரினங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஆனால் அந்த சத்தம் எந்த உயிரினத்திலிருந்து வருகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பூமிக்குள்ளிருந்துதான் சத்தம் வந்தது. மிக நுண்ணிப்பாய் கவனித்தால் மட்டுமே அந்தச் சத்தம் கேட்கும். ஒருவகையில் அந்தக் கணம் தியானம் கைகூடுவது போலத்தான். மீன் பிடிப்பவர் ஒருவரும், மெல்லோட்டம் ஒடுபவர் ஒருவரும் என்னைக் கடந்து சென்றனர். இனி, அந்தப் பறவை புதரிலிருந்து வெளிவருவதற்கு வாய்ப்பில்லை.

நடக்க ஆரம்பித்தேன். இருபது கிலோமீட்டர் நீளமேயுடைய அடையாறு சில இடங்களில் மிக அகலமாக இருந்தது. தென் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் இதைவிட நீளமான ஆறுகள் பல கூட இவ்வளவு அகலமாக நான் பார்த்ததில்லை. மிக அதிகம் தண்ணீர் வந்தாலொழிய இவ்வளவு அகலமாக ஆறு மாறியிருக்காது.
சென்ற 2005 மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் நிறைந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. அப்போது செம்பரம்பாக்கம் கலங்கல் (மறுகால்) சென்று அந்த அரிய காட்சியை புகைப்படங்களாகப் பதிவுசெய்திருக்கிறேன். உண்மையில் சென்னையைச் சுற்றிய தொண்டை மண்டலத்தில் சராசரியாக வருடத்திற்கு 1400 மில்லி மீட்டர் மழைபெய்கிறது. இம்மழை நீரை நம் முன்னோர் ஏரி, தாங்கல், குளம், குட்டை எனப் பல்வேறு வடிவங்களில் சேர்த்து வைத்திருக்கின்றனர். முப்போகம் விளைவித்திருக்கின்றனர். பசுமைப்புரட்சி சாதித்ததைவிட மிக அதிக நெல் விளைச்சலை எடுத்திருக்கின்றனர். ஆனால், நம்மைப்போல் மிக மோசமாக நீர் மேலாண்மை செய்யும் சமூகம் இன்று  வேறில்லை.

எனக்கு அடையாற்றின் மேலுள்ள காதலுக்கு வரலாற்றுப் பின்புலம் உண்டு. என் முப்பாட்டனாரின் பாட்டனார் காலத்தில் (1780 - 90 களில்), கிழக்கிந்திய கம்பெனியின் வரிக்கொடுமைக்கு அஞ்சி விவசாய நிலங்களை விட்டுவிட்டு,  மாங்காட்டிலிருந்து கடலூர் மஞ்சக் குப்பம் சென்று அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து குடியேறியிருக்கிறார்கள் எம்முன்னோர்கள். எனவே ஸ்ரீவியில் அவர்கள் குடியேறிய தெரு மஞ்சக்குப்பம் தெரு என்றானது. அது இப்போது மஞ்சப்பூ தெருவாக மருவிவிட்டது. தாங்கள் மாங்காட்டிலிருந்து  கொண்டுவந்த தங்கத்தை விற்று ஸ்ரீவியில் நிலங்களை வாங்கி விவசாயத்தை தொடர்ந்திருக்கின்றனர். இந்தத் தொடர்பு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக எங்கள் தாத்தா எல்லாத் திருமணப் பத்திரிக்கைகளிலும் மாங்காடு வித்துக்கிளார் கோத்திரம் என்றே அவரது பெயருக்குப் பின் போட்டுகொள்வார். சமீப காலம் வரை எங்கள் குடும்பதை மாங்காட்டார் குடும்பம் என்றே ஸ்ரீவியிலும் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். சென்ற 2006-ல் முகலிவாக்கத்தில் வீட்டுமனை வாங்கும்போதே நம் முன்னோர் வாழ்ந்த இடத்திற்கே நாமும் வந்துவிட்டோம் என அப்பாவிடம் சொன்னேன். செம்பரம்பாக்க ஏரித்தண்ணீரில் இன்று விவசாயம் செய்யவில்லை எனினும் அந்த நீரையே நிலத்தடி நீர் மூலமாக நாங்கள் குடித்துக்கொண்டிருக்கிறோம்.

சில ரங்கூன் கொடிகளை எடுத்துக்கொண்டேன்.
வரும்வழியில் குயில்போன்ற சிறிய பறவை, ஆனால் சற்று பொன்னிறமும், சாம்பலும் கலந்த நிறத்தில், தலையில் ஒரு சிறிய கொண்டையுடன் என் குறுக்காக பறந்துசென்றது. வண்டியை அடையும்போது மணி பத்தாகி விட்டிருந்தது. பசிக்க ஆரம்பித்தது. ஐ ஏ எஸ் காலனிக்குச் சென்று சில பாதாம் மரக் கன்றுகளை எடுக்கலாம் என யோசிக்கும்போது செல்பேசி சிணுங்கியது. எதிர்பார்த்த மாதிரியே பவானியிடமிருந்து. சட்னிக்கு தேங்காய் வாங்கிவட்டு வராம இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க என சற்று எரிச்சலுடன் கேட்டார். பாதாமை விட்டுவிட்டு தேங்காய் வாங்க வீட்டிற்கு வண்டியை விட்டேன்.

குறிப்பு: நான் பார்த்தது குருகு தான். இந்த அபூர்வ பறவையை ஒரே நாளில் இரண்டுமுறை பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

வெள்ளி, 19 ஜூலை, 2013

நவ காந்தியர் - பி.வி. ராஜகோபாலலுடன் கலந்துரையாடல்

சென்ற செவ்வாயன்று ஏக்தா பரிஷத்தின் நிறுவனத் தலைவரான பி.வி ராஜகோபாலுடன் கலந்துரையாடல் ஒன்றை  நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவர் அண்ணா ஹசாரேயின் முதன்மைக் குழுவில் இருந்தவர். பின்னர் விலகிவிட்டார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த பல ஆண்டுகளாக ஆதிவாசிகள், தலித்துக்கள், நிலமற்ற ஏழைகள், கொத்தடிமைகள் போன்றவர்களின் உரிமைகளுக்காக அகிம்சை முறையில் போரட்டங்களை நடத்தி வருகிறார்.



குறைவான நபர்களே வந்திருந்ததனால் ஒருவரையொருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு உரையாடல் தொடங்கியது. ராஜகோபால் எழுபதுகளில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை காந்தியடிகளின் புகைப்படத்தின் முன் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து பொதுச் சமூகத்திற்கு திருப்பியதின் மூலம் தனது பொதுவாழ்க்கை ஆரம்பமானதாக சொன்னார். ஆதிவாசிகள், நிலமற்ற ஏழைகள், தலித்துக்கள்  வசிக்கும் நிலவளங்களின் பயன்பாடு அவர்களது கையிலேயே இருக்கவேண்டும்; வளர்ச்சி என்ற பெயரில் அவர்களை அரசு சுரண்ட அனுமதிக்கக் கூடாது. அப்படி நடக்கும் போது வன்முறைக்குப் பதில் அறவழி மூலமே போராடவேண்டும் என்ற இரண்டு அடிப்படைக் கொள்கைகளின் மேலேயே தனது இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் ஏக்தா பரிஷத் சென்ற ஆண்டு 50,000 நபர்களுடன் குவாலியரிலிருந்து டெல்லி நோக்கி  நடத்திய ஜன் சத்யாகிரகா  பற்றி சொன்னார். இத்தகைய பிரம்மாண்டமான சத்தியாகிரகப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திய அனுபவங்கள் சிலவற்றைக் குறித்துப் பேசினார். இப்போராட்டம் ஒருவகையில் வெற்றி. நடுவணரசு இறுதியில் இறங்கி வந்து தேசிய நிலச் சீர்திருத்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர சம்மத்திருக்கிறது. இதற்கு அவருக்கு 20 வருடங்கள் ஆகியிருக்கிறது. கடந்த 20 வருடங்களாக சிறிய அளவில் இதுபோன்ற போராட்டங்களை நடத்தி இன்று இவ்வெற்றியை ஈட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஆதிவாசிக் குடும்பமும் தினம் ஒருபடி அரிசி, ஒரு ரூபாய் சேமிப்பு என்று 3 வருடங்களாக இப்போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வந்துள்ளார்கள். ஏனெனில் குவாலியரிலிருந்து டெல்லி வரையிலான தூரத்தைக் கடக்க ஆகும் ஒரு மாத கால அளவிற்குத் தேவையான உணவு, கைச்செலவுக்கு இந்த சேமிப்பு தேவைப்படும். மேலும் பல இளைஞர்களை பயிற்றுவித்து கூட்டத்தை பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் பல பயிற்சிபெற்ற இளைஞர்கள் பொறுப்பாளர்களாக நியமித்து வழிநடத்தியுள்ளார். இல்லையெனில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் வன்முறையை எளிதாக தூண்டிவிடலாம் அல்லவா. (கருணாநிதி கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் அயோத்தியாகுப்பம் வீரமணி வகையாறா தூண்டிய வன்முறை நினைவிற்கு வருகிறது) வன்முறையை அரசு எளிதாகக் கையாண்டுவிடும், வன்முறையின்மையை அதனால் கையாளமுடியாது என்றார். ஆகவே கோபக்கார இளைஞர்களை பயிற்றுவித்து இம்மாதிரி ஆக்கபூர்வமான காரியங்களில் அவர்களை ஈடுபடுத்துவது தனக்குப் பிடிக்கும் என ராஜகோபால் சொன்னார்.

அவரது உரையாடலின் மையம் முழுவதுமே ஆதிவாசிகள், தலித்துக்கள், நிலமற்ற ஏழைகள், கொத்தடிமைகள் ஆகியவர்களை மையப்படுத்தியே இருந்தது. ஜன் சத்யாகிரகா பற்றி சொல்லும்போதே இத்தகைய போராட்டங்களை இம்மக்களால் மட்டுமே முன்னெடுக்கமுடியும் என்றார். நடுத்தரவர்க்க மக்கள் சாலையில் படுத்துறங்க முன்வரமாட்டார்கள்; இரவானதும் வீடு திரும்பிவிடுவார்கள். அதனால் அவர்களை வைத்துக்கொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்த முடியாது என்றார். ஆனால் அவர்கள் வேறுவகையில் உதவலாம்; கால்பந்தாட்ட அணியில் இறுதியில் கோலடிப்பவர் ஒருவரானாலும், பந்தை அத்தனை தூரம் கடத்தியதில் பலரது பங்களிப்பும் இருப்பதுபோல என்றார். ஆகவே நடுத்தரவர்க்க மக்கள் பிரதமருக்கு மின் அஞ்சல் அனுப்பலாம், இணையத்தில் இப்போராட்டம் குறித்து எழுதுவதன் மூலம் போராட்டத்திற்கு உதவலாம் எனச் சொன்னார்.

உரையாடலின் நடுவில் இன்றைய கல்வி குறித்து இயல்பாகவே அவரது கவனம் திரும்பியது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து நன்கு படித்துப் பட்டம் பெற்ற திடகாத்திரமான இளைஞர்களை மாதம் 20 ஆயிரம்,  ஒரு பைக், செல் பேசி என்று சம்பளம் பேசி இந்திய, சர்வதேசிய நிறுவனங்கள் வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். இவ்விளைஞர்களின் முதன்மையான பணி என்பது ஆதிவாசிகளை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து பகிரங்கமாக அப்புறப்படுத்த வேண்டுமென்பதே எனச் சொன்னார். இவ்விளைஞர்கள் எளியவர்களான ஆதிவாசிகளை அடிப்பது குறித்தோ, கொல்வது குறித்தோ குற்றவுணர்வு கொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை மாதமானால் கை நிறையச் சம்பளம். இன்றைய கல்விமுறையின் பயன் இது எனச் சொன்னார். இன்றைய கல்வி முறையின் பயனாக ஒருவருக்கு சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் தனது சொந்த கிராமத்தின் பொருளாதாரம் குறித்து கைப்பிடியளவு கூடத் தெரியாது என்றார். கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர் செலவிடுகிறது. நம்நாட்டில் இத்தகைய காட்டுத் தீ ஏற்படுவதில்லை. முதன்மையான காரணம் என்னவெனில் ஆதிவாசிகளுக்கு காட்டுத்தீயை எப்படிக் கையாள வேண்டும் எனத் தெரியும் என்றார். ஆனால் நம்முடைய அரசு அவர்களை வலுக்கட்டாயமாக காடுகளிலிருந்து விரட்டிவிட்டு முசெளரியில் படித்து பட்டம் பெற்ற காட்டிலாகா அதிகாரிகளை நியமிக்கிறது.

ஆதிவாசிகளுக்கு கல்வியளித்து பொதுச் சமூகத்திற்கு கொண்டுவருவது குறித்து அவரது கருத்து என்ன என நண்பர் ஒருவர் கேட்டார். சிலர் தற்போதைய கல்விமுறையை திறன்மிக்கதாக மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர்; இது திறன்மிக்கதாக இல்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்றார். அவர் கூறியது, உள்ளூருக்குப் பயனளிக்கக் கூடிய கல்விமுறை வேண்டும் என்பதே. உதாரணமாக வனவாசிகளுக்கு பயிற்சியளித்து அவர்களையே காட்டிலாகா அதிகாரிகளாக நியமித்தால் பிரச்சனைகளைக் குறைக்கலாம் என்பதே. மாற்றாக காட்டைப் பற்றி புத்தகத்தில் மட்டுமே படித்த ஒருவர் அதிகாரியாக வருவதால்தான் உண்மையான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக சொன்னதாக என் நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு கல்வி பெற்று ‘முன்னேறிவர்களும்’ பிற் நகரவாசிகளைப் போலவே செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள் என்றும் சொன்னார். உதாரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்திலிருந்து தமிழகக் கொத்தடிமைகள் சிலரை மீட்க அவர் முயன்றபோது, படித்து முன்னேறிய வட இந்திய தலித்தொருவர் அதை ஊதாசீனப்படுத்தினார் என்றார். மேற்கொண்டும் சில உரையாடலகள் நடந்தன. அவைகள் என் நினைவடுக்கிலிருந்து தப்பிவிட்டன. மதியம் நேரமாகிவிட்டபடியால் 12.45 மணிக்கு கலந்துரையாடலை முடித்துக்கொண்டோம். 

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அடையாற்றின் கரையில்...

சென்னையில் மணப்பாக்கம் பகுதி அடையாற்றின் கரையோரம் நடைப்பயணம் செல்ல வருமாறு நண்பர் சீனிவாசன் கூப்பிட்டார். இன்று காலை நானும், அமுதனும் சென்றோம். இங்கு புதிதாக குடியிருப்புகள் வந்துள்ளன. பெரும்பாலும் இந்திய ஆட்சிப்பணி, காவல் பணியில் பெரும்பொறுப்பில் உள்ளவர்கள் அதிகம் வசிக்கின்றனர். நாங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும்போது இங்குள்ள வீடுகளை பார்வையிட வந்துள்ளேன். காலை கிளம்ப தாமதாகிவிட்டது. கிட்டத்தட்ட 8 மணிக்கு அடையாற்றை அடைந்தோம். ஸ்கூட்டைரை நிப்பாட்டிய இடத்தில் ஒரு பெரிய நத்தை ஊர்ந்துகொண்டிருந்தது. அப்பா, அது ரோட்டிற்குச் செல்கிறது. பைக் வந்தா செத்திடும், அதை எடுத்து இந்தப் பக்கம் விடு என்று அமுதம் சொன்னான். பரவாயில்லைடா,  போனா போகட்டும் எவ்வளவோ நத்தை ஊர்ந்து செல்லும், ஒவ்வொன்றையும் நம்மால் காப்பாத்த முடியாது என்றேன்.



சற்று நேரத்தில் சீனிவாசன் வந்தார். நடக்க ஆரம்பித்தோம். கரையை பலப்படுத்தி செம்மண் சாலை போட்டிருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். அப்போது இருபுறமும் உடை மரங்கள் வளர்ந்து மோசமான நிலையிலிருந்தது. பொதுப்பணித்துறை இப்போது செப்பனிட்டு இருமருங்கும் மரங்களை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரே மாதிரி இல்லாமல் பல்வகையான் மரங்கள் நட்டிருக்கிறார்கள். மூங்கில் மரங்கள் கூட பல நடப்பட்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் இப்பகுதி பசுமையாக செழிப்பாய் மாறிவிடும். வழியில் துத்திப் பூ போன்ற பூக்கள் குத்துச் செடிகளில் பூத்துக் குலுங்கின. அப்பூக்களில் நிறைய வண்டுகள் தேன் குடித்துக் கொண்டிருந்தன. அமுதனுக்கு அவற்றின் அருகில் சென்றால் கொட்டிவிடுமோ என்ற பயம்.

தேன் குடிக்கும் வண்டு




ஆற்றில் கரிய வாத்து போன்ற நீண்ட கழுத்து கொண்ட சிறிய பறவைகள் நீந்திக்கொண்டிருந்தன. அமுதன் ஸ்வான் என்றான். ஸ்வான் இல்லடா ஏதோ வாத்து போன்ற பறவை என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவை சட்டென்று எழும்பி பறந்து அப்பால் சென்று மீண்டும் நீந்த ஆரம்பித்தன. ஏதோ பொம்மை பறவை பறப்பது போலிருப்பதாக சீனிவாசன் சொன்னார். சட்டென்று வானத்தில் கருமேகங்கள் போல் ஊஊ என்று சத்தத்துடன் வண்டுகள்/தேனீக்கள் அடையாற்றின் மறுகரையிலிருந்து எங்களைக் கடந்து பறந்து சென்றன. இவ்வளவு அடத்தியாக இப்பூச்சியினங்கள் பறப்பதை ஆச்சரியடத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். மம்மி ரிட்டன்ஸ் படத்தில் வரும் காட்சி போலிருந்தது.
கரிய வாத்து போன்ற பறவைகள்

கொத்தாகப் பறக்கும் தேனீக்கள்


சற்று தூரம் சென்றதும் மேலும் இரண்டு நண்பர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். வேழவனம் சுரேஷ் பாபுவும், சுவாமிநாதனும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களும் மதனந்தபுரத்தில்தான் இருக்கிறார்களாம். அடையாற்றின் இந்தப்பகுதி ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி இடத்தை ஊடறுத்துச் செல்கிறது. உண்மையில் அடையாற்றின் கரை மட்டுமே தமிழக பொத்துப்பணித்துறைக்குச் சொந்தம். ஆற்றின் இரு மருங்கும் ராணுவ அதிகார்களின் பயிற்சி மைதானமும், அலுவலகம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. ஆற்றைக் கடந்து செல்ல ஒரு இருப்புப் பாலம் அமைத்துள்ளார்கள். அமுதனுக்கு அதன் மேல் நடந்து செல்ல ஆசை. தயக்கத்துடனேயே சென்றோம். அதற்குள் இருவர் இங்கு சிவிலியன்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி எங்களைப் போகச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் ராணுவத்தின் கையிலிருப்பதால் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பல்லாவரம் பகுதிகளை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் இன்னும் காங்கீரீட் காடாக மாறாமல் உள்ளது. அடையாறு முகத்துவாரமும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்திருக்கும்.




சங்குப் பூ கொடி புடுங்குகிறார்கள்


மேலும் தொடர்ந்து நடந்தோம். இரும்புப் பாலத்தை அடுத்த அடையாற்றின் கரையில் இப்போது வேம்ப மரங்கள் மட்டுமே இருந்தன. இப்பகுதி சற்று முன்னரே செம்மைப்படுத்த பட்டிருக்கவேண்டும். மரங்கள் ஐந்தாறு வருட வயதானவையாக இருந்தன. முன்பகுதியில் உள்ள வெவ்வேறு வகையான மரங்கள் சென்ற இரண்டு மாதங்களில் நடப்பட்டவை. கரைகளில் ஊதா வண்ண சங்குப் பூக்கள் பூத்திருந்தன. விதைகள் இன்னும் முற்றியிருக்கவில்லை. ஆகையினால் அடுத்தமுறை வரும்போது விதகைளைச் சேகரிக்கலாம் என நினைத்தேன். சுரேஷ் ஒரு கொடியை வேரோடு புடுங்கிக் கொடுத்தார். சற்றுதூரம் நடந்ததும் விமான நிலையத்தின் சுற்றுச் சுவர் வந்துவிட்டது. நாங்கள் சென்ற பாதையிலேயே இன்னும் சென்றால் கொளப்பாக்கம் கிராமம் வந்துவிடும், உங்கள் ஸ்கூல் வந்துவிடும் என்று அமுதனிடம் சொன்னேன். போகலாம்பா என்றான். ஆனால் இப்போது அதுமுடியாது. ஏனெனில், இரண்டாவது ஓடுபாதையை நீட்டிப்பதற்காக அடையாற்றின் குறுக்கே பாலம் கட்டிவிட்டதால் இன்னும் சிறிது தூரத்தில் விமான நிலைய சுற்றுச்சுவர் தடுத்துவிடும். உண்மையில் எங்கள் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஓடுபாதை வந்துவிடும்.

வழியில் ஒரு பண்ணை வீட்டைப் பார்த்தோம். பாழடைந்து கிடந்தது. அப்பண்னையின் வேலிகளில் ரங்கூன் கொடிகள் படர்ந்து பூத்திருந்தன. நீண்ட நாட்களாக ஒரு ரங்கூன் கொடியை எங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். கொடிகளைப் பிடுங்க அவை முடிவிலா வேர்களைக் கொண்டு அப்பகுதியையே நிறைத்திருந்தன. சில கொடிகளைப் பிடுங்கிக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தோம். வழியில் மேலும் சங்குப் பூ கொடிகளை அமுதன் எடுத்துக்கொண்டான். 10 மணிக்கு ஸ்கூட்டர் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். நத்தையை ஏதோவாகனம் ஏற்றி கூழாக்கியிருந்தது. உங்கிட்ட அப்பவே சொன்னேன்ல, அதை நீதான் காப்பாத்தாம விட்டுட்ட என்று அமுதன் என்னைக் கடிந்தான். வீட்டிற்கு வந்து முதல் வேலையாக செடிகளை மண்ணில் ஊன்றி நீர்விட்டோம்.


ஆங்கில ஹிண்டு பத்திரிக்கையில் 2019-ல் வந்த கட்டுரை

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஏற்காடு இலக்கிய முகாம்

ஜெ-வின் வழிகாட்டுதலில் நடைபெறும் ஊட்டி இலக்கியச் சந்திப்புகளில் 2010 சந்திப்பிற்குப் பிறகு நான் கலந்துகொள்ளும் இரண்டாவது சந்திப்பு இது; இம்முறை ஏற்காட்டில். கடந்த இரண்டு சந்திப்புகளில் சில தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியாமல் விடுபட்டுப்போய்விட்டதால் இம்முறை சற்று கூடுதல் ஆர்வத்துடனிருந்தேன். மறைந்த காஞ்சிபுரம் வெ. நாராயணன்அவர்கள் நடத்திவந்த இலக்கியவட்டக்கூட்டங்களில் தொண்ணூறுகளில் இறுதிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டு சிறப்பான ஆளுமைகளால் முன்னெடுக்கப்படும் சந்திப்புகள் என்ற பொதுமையைத் தவிர அமைப்பு முறையிலும், நெறிமுறைகளிலும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இலக்கியச் சந்திப்புகள். ஆனால், இரண்டுமே எனக்கு ஆர்வமூட்டுபவை. இயல்பிலேயே கூச்ச உணர்வும், தயக்க சுபாவமும் கொண்டவனாதலால், நான் எப்போதுமே தீவிரப் பங்களிப்பானாக இருந்ததில்லை. ஆயினும், இத்தகைய சந்திப்புகளை கூடியமட்டும் தவிர்க்கமாட்டேன்.

கடந்த 27 இரவு சென்னையிலிருந்து ஏற்காடு விரைவுவண்டியில் நான், சங்கீதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாசன் - சுதா, ஜாஜா @ ராஜகோபாலன் ஆகிய ஐவரும் புறப்பட்டோம். பின்னர் வேறு சில நண்பர்களும் இணைந்துகொண்டனர். காலை 8மணியளவில் சந்திப்பு நடைபெற்ற செட்டியார் பங்களாவை வந்தடைந்தோம். 9.30க்கு முதல் அமர்வு- கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொடங்கியது. நாஞ்சில் கனடா பயண ஜெட் லாக்கிலிருந்து மீண்டிருக்கவில்லை. அதனால் நிகழ்வு சற்று தொய்வாக இருந்தது. ஆகையால், உணவு இடைவேளைக்குப் பிறகு நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உலகச் சிறுகதைகள் விமரிசிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப்பின் (அறம் வரிசைக் கதைகளுக்குப் பின்) இந்நிகழ்வுகளுக்காகவே சிறுகதைகளை வாசித்து வந்திருந்தேன். நண்பர்கள் மிக அருமையாக விமரிசனமும், விவாதமும் புரிந்தனர். நான் பொறாமையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாலையில் பகோடா பாயிண்ட் வரை ஒரு சிறு உலா போய்வந்தோம். அதன்பின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து நிகழ்வுகள் தொடங்கின. இரவில் இசைக்கச்சேரி; நண்பர்கள் சுரேஷும், சங்கீதாவும் அனைவரையும் மகிழ்வித்தனர்.

இரண்டாம் நாள் மீண்டும் கம்பராமாயணம். நாஞ்சில் புத்துணர்வுடன் தொடங்கினார்; பின்னர் ஜடாயு வழக்கமான உற்சாகத்துடன் பட்டாசாக வெடித்தார். மதியம் நண்பர்கள் தேர்ந்தெடுத்த இந்தியச் சிறுகதைகளும், கவிதைகளும் விவாதிக்கப்பட்டன. இரவில் தீப்பிழம்பின் ஒளியில் மீண்டும் இசைக்கச்சேரி. ராம் சேர்ந்துகொண்டதால் கூடுதல் உற்சாகம். தூக்க மிகுதியால் 12 மணியளவில் படுக்கச் சென்றுவிட்டேன். நண்பர்கள் காலை 4:00 மணிவரை கொண்டாடி மகிழ்ந்தனர். மூன்றாம் நாள் பேராசிரியர் ஞானசம்பந்தம் வில்லிபுத்தூராரின் பாரதம் குறித்து அவரது டிரேட் மார்க் ஜோக்குகளோடு உரையாற்றினார். மதிய உணவோடு சந்திப்பு முற்றுப்பெற்றது.



இந்தச் சந்திப்பிற்காக நண்பர்கள் மிகுந்த தயாரிப்புகளோடு வந்திருந்தனர். மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்குப் 10-12 மணி நேரங்கள் தீவிரமான விவாதங்கள் ஊடாக நிகழ்வுகள் நடந்தன. சோர்வோ, சலிப்போ இல்லாமல் எல்லோரும் தீவிர கவனத்துடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். மாணவனாக, கல்வியாளனாக கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல பெரும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அவைகளோடு ஜெ முன்னெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கமுடிவதில்லை. கடமைக்காகவும், லெளகீக பயன்களுக்காகவும் கல்வி, ஆராய்ச்சி புலங்களால் நல்கைகளைப் பெற்றுக்கொண்டு, பெரும் விளம்பரத்துடன் நடத்தப்பெறும் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் எனக்கு ஒவ்வாமையைத் தருவன. முடிந்தவரை அவைகளைத் தவிர்க்கவே முயல்வேன், எனக்கு அதனால் லெளகீகப் பயன்கள் இருந்தபோதிலும். ஆனால் இது அப்படியல்ல; சென்ற இரண்டு முறைகள் ஊட்டி கூட்டங்களைத் தவறவிட்டதே எனக்கு பெரும் சோகம் அளித்தது.

யோசித்துப் பார்த்தேன்; நான் எப்போதுமே தீவிரப் பங்களிப்பாளானாக இருந்ததில்லை, எனினும் எது என்னை இத்தைகய நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொள்ள வைக்கிறது- இதன் ஆத்மார்த்தந்தான். இதில் அமைப்பாளர்- பங்கேற்பாளர் என்ற மேல்-கீழ் நிலைகள் இல்லை. ஜெ உட்பட அனைவரும் ஒன்றாக உண்டு, உறங்கி விவாதித்து, ஒரு குடும்பமாக உணரும் அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது. ஆயினும் கறாரான விதிமுறைகளுண்டு. அதனால்தான் இத்தகைய நிகழ்வுகளை சிறப்பாக நடத்தமுடிகிறது. இல்லையெனின் இதுவும் ஒரு வெட்டி அரட்டைக் கூட்டமாகிவிடும்.

மூன்று நாட்களும் உணவு உபசரிப்பும் அருமை. விடையளிக்கும்போது இக்கூட்டத்தை அற்புதமாக ஒருங்கிணைத்து நடத்திய விஜயராகவன் தேம்பி அழுதேவிட்டார். மாலை தனாவின் காரில் சேலம் வந்தடைந்தோம். ரயிலில் சென்னை திரும்பும்போதுதான் நான் கடந்த மூன்றுநாட்களில் மொத்தமாகப் பேசியதைவிடவும் அதிகமாகப் பேசிக்கொண்டு வந்தேன். ஒரு இலக்கிய சந்திப்பில் முதன்முறையாக கலந்துகொண்ட சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில்சொல்லும்போதுதான் எனக்கும், ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் ஜெ என்ற ஆளுமைமேல் இருக்கும் பிரியமும், மரியாதையும் வெளிப்பட்டன. ஜெ அடிமையாகவே ஸ்ரீனிவாசன் மாறிவிட்டார் என சுதா குறிப்பிட்டார். வீட்டில் பவானியிடம் சந்திப்பு குறித்து விளக்கும்போது அடுத்தமுறை நானும் கலந்துகொள்ள முயல்கிறேன் என்றார். பெரிய மகன் அமுதனிடம் நேற்று நிகழ்வில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அவனையும் சென்ற மே மாதம் பாண்டிச்சேரியில் நடந்த சுனில் கிருஷ்ணனின் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தோம். அதனால் நண்பர்களை புகைப்படங்கள் வழி அடையாளம் கண்டுகொண்டிருந்தான். ஜெ படம் வந்தபோது, அப்பா இவரும் உன் பிரெண்ட் தானே எனக் கேட்டான். பிரெண்ட்தான், ஆனால் அதற்கும் மேலே - வழிகாட்டி... குரு என்றேன்