என் மூத்த சித்தமருத்துவ நண்பர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களால் தொடங்கப்பெற்று இன்றுவரை வெற்றிகரமாக நடத்தப்படும் கற்ப அவிழ்தம் இதழ் 1992 - ஆம் ஆண்டில் ஆஸ்த்துமா சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அதில் அப்போது சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நெஞ்சக நோய் துறைப் பேராசிரியராக இருந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் ஒரு நீண்ட நேர்காணல் அளித்திருந்தார். அப்போது நான் பாளை சித்தமருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். ஒரு ஆங்கில மருத்துவர், அதுவும் சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அவ்வாறு சித்த மருத்துவத்தின்பால் நம்பிக்கை கொண்டிருந்தது எங்கெளுக்கெல்லாம் மகிழ்ச்சியளித்தது. அதன்பின் 1995 இறுதியில் நான் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்காக வந்தபோது என் நண்பர் மருத்துவர் சிவராமன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆஸ்த்துமாவிற்கு சித்த மூலிகைகள் என்ற கருதுகோளை ஆராய்ந்துகொண்டிருந்தார். அவருக்கு மருத்துவர் தெய்வநாயகம் தான் வ்ழிகாட்டுநர். அவ்வாராய்ச்சி இழுத்துக்கொண்டே சென்றது. சிவராமன் தெய்வநாயகத்தைப் பார்ப்பதற்கே அஞ்சி நடுங்கிய காலமது. சிவராமன் மூலம் நான் தெய்வநாயகம் அவர்களின் குணநலன்களை அறிந்திருந்தேன்.
இதற்கிடையில் தெய்வநாயகம் அவர்கள் தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றத்தொடங்கினார். அங்கு காசநோய் கண்ட நோயாளிகள் மட்டுமல்லாது, தேய்வு நோய் (AIDS) கண்ட நோயாளிகளையும் அனுமதித்து சிகிழ்ச்சையளித்து வந்தார். அக்காலங்களில் உலகிலேயே தேய்வு நோய்க்கு மிக அதிகமானோர் உள் நோயாளிகளாக தங்கி சிகிழ்ச்சை பெற்று வரும் மையங்களில் ஒன்றாக தாம்பரம் சானடோரியம் திகழ்ந்தது. அங்கு தேய்வு நோய்க்கு பெரும்பாலும் சித்த மருந்துகளையே அவர் பரிந்துரைத்து வந்தார். தேய்வு நோய் கண்டவர்கள் சித்தமருத்துகள் சாப்பிட்டபின் நன்றாக தேறிவருவதாகவும், அந்நோயினைச் சித்த மருந்துகள் பெருமளவில் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தமிருந்தன. இப்போது டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் எப்படியோ, அப்போது தேய்வு நோய்க்கு ரசகந்தி மெழுகு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது நான் வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் நோய்ப்பரவியல் துறையில் முதுகலை பயின்று கொண்டிருந்தேன். வார இறுதிகளில் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், சிவராமனும் மற்ற நண்பர்களும் தெய்வநாயகம் அவர்களின் இம்முயற்சி குறித்து அவ்வப்போது பேசிக்கொள்வதுண்டு. சிவராமனும் அவருடன் ஓரளவு நெருக்கமாகிவிட்டார். தெய்வநாயகம் நோயாளிகளிடம் கனிவாகவும், தன் வேலையச் சரிவரச் செய்யாத மருத்துவமனை ஊழியர்களை மிகக் கண்டிப்பாகவும் நடத்தும் விதம் குறித்து சிவராமன் சொல்வதுண்டு. என்னுடைய இரண்டாமாண்டு முதுகலைப் படிப்பு பகுதிநேரமென்பதால் 1998-ல் ஆற்காடு அருகில் இசையனூர் கிராமத்தில் பாரதியம்மாள் வைத்திய சேவா கேந்திரத்தில் சித்த மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது இலவச மருத்துவமனை என்பதாலும், என் மேல் ஒரு நல்லபிப்பிராயம் ஏற்பட்டதாலும் பல ஊர்களிலிருந்தும் பெருமளவு நோயாளிகள் அங்கு வருவர். அவற்றுள் தாம்பரத்திற்குச் சென்று தெய்வநாயகத்திடம் சிகிழ்ச்சை பெற்று பின்னர் அங்கு தொடர்ச்சியாக செல்லமுடியாமல் இசையனூர் வரும் நோயாளிகள் சிலர் உண்டு. தெய்வநாயகத்தை அவர்கள் மிகவும் சிலாகித்துச் சொல்வதுண்டு. அதில் ஒருவர் ஒருமுறை நோயாளிக்கு சரிவர மருத்துவம் பார்க்காத மருத்துவரை தெய்வநாயகம் எங்கள் முன்பே அறைந்துவிட்டார் என்றார்.
பின்னர் 1999-ல் சவேரா ஹோட்டலில் நடைபெற்ற தேய்வுநோய்க் கருத்தரங்கு ஒன்றில் தெய்வநாயகம் சானடோரிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கட்டுரை வாசித்தார். எனக்கு அவர் அதில் இன்னும் சற்று சிறப்பாக அறிவியல் முறைமைகளை கையாண்டிருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. பின்னர் சிவராமன் மூலம் அவருக்கு புள்ளியியல் முறைமைகளில் அதிக ஆர்வமில்லை எனத்தெரிந்து கொண்டேன். ஓய்வு பெற்றபின் எழும்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் மருத்துவ சேவை செய்துவந்தார். அதற்கு அய்ந்து ரூபாய்கள் தான் கட்டணம். சிவராமன் மற்றும் எனது வேறு சில நண்பர்களும் அவருடன் இணைந்து பணியாற்றினர். சித்த மருத்துவ ஆராய்ச்சிகளும் செய்து வந்தனர். ஆங்கில, சித்த மருத்துவ முறைகளை இணைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் புரிந்தனர். நண்பர் சிவராமனின் மருத்துவத்தொழிலில் அது ஒரு திருப்புமுனையாகும். தெய்வநாயகம் அவர்களது நோய்க்கணிப்பு உத்திகளை சிவராமன் வியந்தோதாத நாட்களே அக்காலங்களில் இல்லை. தனது மருத்துவத் தொழிலுக்கு குருவாக தெய்வநாயகத்தை சிவராமன் ஏற்றுகொண்ட காலமது. எனது உறவினர்கள் சிலர் அக்காலங்களில் அவரிடம் சிகிழ்ச்சைக்குச் சென்றிருக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள். ஆயினும் அவரது சிகிழ்ச்சையால் அவர்கள் முழுமையாகக் குணம் அடைந்திருக்கிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் அவரது பேச்சுகளைக் கேட்டுவிட்டு என் அப்பா அவரது ரசிகராகவே ஆகிவிட்டார். அவரது அதிரடிப் பாணியும் அப்பாவிற்குப் புரிந்துகொண்டது.
என் பெரிய தங்கை மீனாட்சிக்கு காச நோய் தாக்கியபோது நாங்கள் அவரைத் தான் அணுகினோம். நான், அப்பா, அம்மா, மீனா நால்வரும் அவரது தி. நகர் வீட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். எங்கள் முறை வந்தபோது மீனா, அம்மாவுடன் அப்பாவும் செல்ல எத்தனித்தார். தெய்வநாயகம் நீங்கள் வெளியே போங்க என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார். பின்னர் மீனாவிடம் உனக்கு என்னம்மா செய்கிறது என்றிருக்கிறார். அம்மா, அவளுக்கு மூளை வளர்ச்சி பூரணமாக இல்லை, அவளால் சொல்லமுடியாது என்றிருக்கிறார்கள். நீங்க சும்மா இருங்கம்மா, அவள் சொல்லுவாள் என்ற அவர், நீ சொல்லு குழந்தை உனக்கு என்ன செய்கிறது என்று மிக அன்பாகக் கேட்டிருக்கிறார். இதுவரை அவளிடம் எந்த மருத்துவரும் அவ்வாறு கனிவுடன் பேசியதில்லை. மனநல மருத்துவர்கள் உட்பட. அம்மா குறுக்கிட்டபோதெல்லாம், நீங்க வெளியபோங்க என்று அதட்டி இருக்கிறார்.
நோய்க்கணிப்பில் மன்னர் அவர். நோயாளிகளிடம் முழுமையாகப் பேசி அவர்கள் சொல்லும் குறிப்புகளைக் கொண்டே நோய்க்கணிப்பு செய்பவர். தேவையற்ற பரிசோதனைளைச் செய்யமாட்டார். ஒருமுறை சிவராமனின் அம்மா மெலிந்துகொண்டே வந்தார்கள். பல்வேறு நிபுணர்கள், எம்.ஆர். ஐ போன்ற பலவிதமான சோதனைகளைச் செய்து அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருக்குமோ என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள். ஆனால் தெய்வநாயகம், அவரது குறிகுணங்களை வைத்தே அவருக்கு வயிற்றுத்தமனி சுருங்கிவிட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கணித்தார். பின்னர் அப்பகுதியில் எம். ஆ. ஐ ஸ்கேன் செய்ததில் அவரது கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
அவருக்கு தமிழ் மேலும், சித்த மருத்துவதின் மேலும் அளவுகடந்த பற்றுண்டு. இதன் காரணமாக பல நேரங்களில் அவர் எல்லை மீறிப் போய்விடுவதுமுண்டு. மிகுந்த பிடிவாதக்காரர். சட்டென்று பிறர் மனம் புண்படும்படி பேசிவிடுவார். ஒருமுறை சிவராமனின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் முனைவர் SP. தியாகராஜன் தலைமை விருந்தினாராகக் கலந்துகொண்டார். தெய்வநாயகமும் மேடையிலிருந்தார். SP. தியாகராஜன் தனது உரையில் எதையோ சொல்லும்போது குறுக்கிட்ட தெய்வநாயகம், தியாகராஜன் நீங்கள் சொல்வது தவறு. போய் உட்காருங்கள் என்று கூட்டத்தினர் முன்னிலையில் சொல்லிவிட்டார். என்னதான் சித்த மருத்துவத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், சித்தமருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடம் அவருக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. அதற்கு அவரது அதிரடி பாணி காரணமாயிருக்கலாம். ஒருமுறை எனக்கும் அவருக்கும் வாத, பித்த, கபம் குறித்து காரசாரமான ஒரு வாக்குவாதம் நடந்தது. அதன் முடிவில் நான் அவரிடம் இன்னும் உங்களிடம் நிறையச் சண்டையிட வேண்டும், சரிங்களா என்றேன். அவர் சிரித்துக்கொண்டே சரி என்றார்.
அவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்று சிவராமன் மூலம் எனக்கு ஏற்கனவே தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரைப் பற்றி சிவராமனிடம் கேட்கவேண்டும் என நினைத்தேன். அதற்குள் அவர் நேற்று மாலை இறந்துவிட்டார். அவரது மரணத்தை மிகுந்த தைரியத்துடன், ஆர்ப்பாட்டமில்லாமல் எதிர்கொண்டார் என்பதை அறிந்தேன். வணிகமயமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் அவரைப் போன்ற இன்னொருவரைப் பார்ப்பது அரிது. அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்.