பக்கங்கள்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

மேகமலை பயணம்- 1

ஜெயமோகனின் பயணக்கட்டுரைகளில் எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு. சமீபத்திய ஊட்டி இலக்கிய சந்திப்பில் அவருடனான நேரடிப் பரிச்சியம் சற்று அதிகமானதால் அவரது பயணங்களில் நானும் பங்குகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. ஆயினும் அவரது கோதாவரிப் பயணம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டதில் எனக்கு பலத்த வருத்தமுண்டு. அப்பயணத்தில் எடுக்கப்பட்ட படங்களை பார்த்து ஒரு பொறாமையில் சிறில் அலெக்சை கூப்பிட்டு செல்லமாகத் திட்டி இருக்கிறேன். எனவே சென்ற வாரம் திருவண்ணாமலையில் ஈரோடு கிருஷ்ணன் ஜெயமோகனுடன் சேர்ந்து மீண்டும் மேகமலை பயணம் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தை சொல்லியபோது இம்முறை தவறவிட்டுவிட எனக்கு மனமில்லை. உடனேயே ஒரு துண்டு போட்டுவிட்டேன். அவரோ தனசேகரிடம் கேட்டு சொல்கிறேன் இரண்டுநாள் பொறுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டார். இயல்பாகவே சந்தேகப் பேர்வழியான நான் அரங்கசாமியிடமும் சொல்லிவைத்துவிட்டேன். ஏற்கனவே வருவதாகச் சொல்லியிருந்த சிலர் வராததால் எனக்கு ஒப்புதல் கிட்டியது.

வெள்ளியன்று மாலை நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு என் நான்கு வயது மகன் அமுதன் எனக்கு சம்மதம் அளிக்கவில்லை. நானும் உன்னுடன் வருவேன் என அடம்பிடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மாதிரி மேகமலை என்ற ஊருக்குச் செல்கிறேன், நீ பெரியவனானதும் உன்னையும் அப்பா கூட்டிச்செல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். நான் கிளம்பும்போது முன்பு நான் சொல்லியது அவனுக்கு திடீரென்று ஞாபகம் வர ஒரே அழுகை. நானும் பெரியவனாயிட்டேன் என்னையும் கூட்டிக்கிட்டுப்போ என்றான். என் பையை தூக்கிவைத்துக்கொண்டு தரமாட்டேன் என்றான். அப்பா ஆபிஸ் வேலையா போறேன், அம்மா வீட்டில்தான் இருக்கிறார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றேன். ம்ஹும், பையன் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை. சனிக்கிழமை அவனது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே அதற்கு நீ கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்றேன். அதற்கும் அழுகை. அவன் பிறந்ததிலிருந்து எடுக்கப்பட்ட அவனுடைய புகைப்படங்களை ஸ்லைடு ஷோவாக டிவியில் போட்டவுடன் சற்று சமாதானமாகி ஒருவழியாக டாட்டா காட்டினான். பின்னர் தன்னுடைய அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த என்மனைவியை அப்படியே என்னை போரூர் சிக்னலில் வண்டியில் விட்டுவிடச் சொன்னேன். அவர் என்னை அங்கு விடும்போது மணி மாலை 7.15. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு 8.30 க்கு வந்துவிடுவேன் என்று நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆற்காடு சாலையின் டிராபிக்கினால் என்னால் அதற்குள் அங்கு சென்று சேர்ந்துவிடமுடியமா என்ற பயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு சேர் ஆட்டோக்களைப் பிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது மணி 8.20 தான் ஆகியிருந்தது. கைபேசியில் பிலடெல்பியா அரவிந்தை அழைத்தேன், ஆட்டோவில் வந்து கொண்டிருப்பதாகவும் 2 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொன்னார். கே.பி. வினோத்தும் அருகிலேயே இருப்பதாகவும் 2 நிமிடங்களில் வந்துவிடுவதாகவும் சொன்னார்.

நான், வினோத், அரவிந்தன் மூவரும் தனசேகரின் ஏற்பாட்டின்படி கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்றில் சின்னமனூருக்குப் புறப்பட்டோம். நானும் அரவிந்தனும் ஜெயமோகனின் வாசக/நண்பர்களான கதையை பகிர்ந்துகொண்டோம். கிட்டத்தட்ட இருவருக்குமே ஜெயமோகனை அணுகுவதில் ஆரம்பத்தில் இருந்த தயக்கம் ஒரேமாதிரியிருந்திருக்கிறது. இருவருமே ஒருவகையில் சுந்தர ராமசாமியின் மூலமே அவரை அடைந்தோம். வண்டியை ஒருவழியாக 10 மணிக்கு கிளப்பினார்கள். தனசேகருக்கு, கே.பி. வினோத் நாங்கள் கிளம்பிவிட்டிருந்த செய்தியை கைபேசியில் தெரிவித்தார். அவரும், ஜெயும் ரயிலில் வந்துகொண்டிருந்தார்கள். பேருந்தில் திரைப்படம் போடுவதற்கான முஸ்தீபுகள் தெரிந்தது. ஜெயமோகனின் ராசியில் ஏதாவது சிம்பு படத்தை போட்டுத்தொலைத்துவிடப் போகிறார்கள் என்று பயந்தோம். நல்லவேளை கடலோரக் கவிதை படத்தில் வரும் இளையராஜா பாடல் ஒன்று ஒளிபரப்பினார்கள். அப்பாடா என்று நினைக்கையில் திடீரென்று வேறு ஒரு படம் தோன்றத் தொடங்கியது. சத்யராஜ், சுந்தர் சி நடித்த குருசிஷ்யன் படம் ஆரம்பித்தது. இதற்கு சிம்பு படமே தேவலாம் போல. எப்படித்தான் இப்படி படம் எடுக்குராய்ங்கன்னு தெரியல.

வழக்கமான பேருந்துப் பயண தூக்கத்திற்குப் பின் காலையில் கண்விழித்தபோது வண்டி திண்டுக்கல்லை தாண்டிக்கொண்டிருந்தது. பின்னர் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி வழியாக காலை எட்டு மணிக்கு சின்னமனுரை அடைந்தது. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த பகுதிகள். 13 வருடங்கள் சிறுவயதில் மதுரையில் இருந்தபோதும் ஒருமுறை கூட அப்பகுதிகளுக்கு சென்றதில்லை. நெல்லையில் கல்லூரியில் படிக்கும்போது இரண்டுமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால் தங்கியதில்லை. சின்னமனூரின் கடைத்தெரு கட்டிடங்கள் 30 வருடங்களுக்கு முந்திய ஒரு வரலாற்றுணர்வை ஏற்படுத்தின. சற்று பரவசமாயிருந்தது. தமிழகத்தின் சிறு நகரங்கள் என்னை எப்போதுமே ஈர்த்து வந்திருக்கின்றன.

பஸ்ஸைவிட்டு இறங்கியதும் வினோத் ஒரு தேநீர் அருந்தலாம் என்றார். சேட்டன்களுக்கு சாயாவின் மேல் எப்பொழுதுமே பிரியம் அதிகம் போல. கைபேசியில் அழைத்த போது, லாட்ஜ் அருகிலேயே இருப்பதாக கிருஷ்ணன் சொன்னார். அறையை அடைந்தபோது எல்லோரும் வந்துவிட்டிருந்தார்கள். ஜெவும், ஜெர்மனி செந்திலும் தூங்கிக் கொண்டிர்ந்தார்கள். கிருஷ்ணனுடன் அவரது நண்பர் லண்டன் சங்கரும் வந்திருந்தார். ஒரு மினி அரட்டை கச்சேரி நடந்தேறியது. பின்னர் ஜெயும் அதில் கலந்துகொண்டார். தனசேகர் அவரது மச்சானுடன் வந்தார். காலைக் கடன்களை முடித்து லட்சுமி லஞ்சு ஹோம் சென்று டிபன் சாப்பிட்டோம். அங்கிருந்து குவாலிஸ் காரில் சின்ன சுருளி அருவிக்கு சென்றோம்.




அருவிக்கு செல்லும் பாதையின் ஏற்ற இறக்கங்களாலும், லட்சுமி லஞ்சு ஹோமின் உபயத்தாலும் பலருக்கும் குமட்டிக்கொண்டு வந்தது. ஒருவழியாக அருவியைச் சென்று சேர்ந்தோம். அங்கு சொற்ப நபர்களே இருந்ததால் நீண்ட நாட்களுக்குப் பின் அருமையான அருவிக் குளியல் கிடைத்தது. கிருஷ்ணன் சளி பிடிக்கும் என்று அருவியில் குளிக்கவில்லை. அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று சொன்னாலும் கேட்கவில்லை. வக்கீலை கன்வின்ஸ் செய்வது எளிதான காரியம் அல்லவே. அதுவும் கிருஷ்ணன் போன்றவர்களை கன்வின்ஸ் செய்வது நெம்பக் கஷ்டம். பின்னர் அங்கிருந்து தனசேகர் பங்காளிகளின் பண்ணைக்குச் சென்று விருந்து சாப்பிட்டோம். ஒரு குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு மீண்டும் சின்னமனூர்.
அறையைக் காலிசெய்துவிட்டு மாலை 6 மணிக்கு மேகமலை பயணம் தொடங்கினோம்.

தொடரும்...