பக்கங்கள்

வெள்ளி, 26 ஜனவரி, 2007

தமிழக ஹோட்டல் பெயர்கள் ஒரு சிந்தனை

முன்பொருமுறை, எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பு, என்னுடன் வேலை பார்க்கும் மூத்த மருத்துவர் ஒருவருடன் நான் சாப்பிடும் ஹோட்டல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் அடிக்கடி ஹோட்டல்களை மாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அலுவலகம் ராயப்பேட்டையிலிருப்பதால் மதிய வேளைகளில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன். சில சமயங்களில் கீரீம்ஸ் ரோடு மற்றும் எழும்பூரிலுள்ள உலக பல்கலைக்கழக உணவகம் வரை சென்று கூட சாப்பிட்டதுண்டு. (அதெல்லாம் ஒரு பொற்காலம்!? - என்ன மழைக்காலங்களில் சற்று சிரமம்.) தொடர்ந்தாற்போல் மிக நீண்டகாலம் சாப்பிட்ட ஹோட்டல் ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சரவணபவன். அங்கு விரும்பிச் சாப்பிடுவது மினி மீல்ஸ் - அதில் பரிமாறப்படும் சர்க்கரைப் பொங்கலுக்காகவே அதை விரும்பிச் சாப்பிடுவதுண்டு.

மேற்குறிப்பிட்ட அந்த மருத்துவருடன் நான் ஏன் அடிக்கடி சாப்பிடுவதற்கு ஹோட்டல்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன் என விளக்கிக் கொண்டிருந்தபோது, (நான் அவருக்குக் குறிப்பிட்ட காரணங்களை பிறகு தனிப்பதிவாகப் போடுகிறேன் மகா ஜனங்களே!) அவர் கிண்டலாகச் சொன்னார், ‘தங்கவேலிற்கு பெண் பெயர் சூட்டியுள்ள ஹோட்டலில் சாப்பிடுவதுதான் மிகப் பிடிக்கும்’ என்று. ஏனெனில், நான் சாப்பிட்ட பெரும்பாலான ஹோட்டல் பெயர்கள் - சங்கீதா, கற்பகம், வசந்த பவன், ரத்னா கபே, ராஜேஸ்வரி பவன், அன்னபூர்ணா, அபிராமி, கல்பகா எனப் பெண்பாற் பெயர்களாகவேயிருந்தன; சரவண பவன் ஒரு விதிவிலக்கு. அவர் அவ்வாறு குறிப்பிட்டது எனக்கு ஒரு சிந்தனையத் தோற்றுவித்தது; பெரும்பாலான சைவ உணவகங்களின் பெயர்கள் ஏன் பெண்பாற் பெயர்களாகவும், அசைவ உணவகங்கள் ஆண்பாற் பெயர்களிலும் உள்ளன என்று.

சில உதாரணங்கள்; சைவ உணவகங்களின் பெயர்கள் மேற்குறிப்பிட்டவை தவிர, சுப்புலட்சுமி பவன், அலங்கார், அபூர்வா, பார்வதி பவன், வசந்தம், வசந்த விஹார், சந்திர விலாஸ், மீனாட்சி பவன், ஹோட்டல் மனோரமா, அம்பிகா எனப் பெண்பாற் பெயர்களாகவே உள்ளன. சரவண பவன், பாலாஜி பவன், ராஜ் பவன், அசோக் பவன் போன்றவை சில விதிவிலக்குகள். அதே சமயம் அசைவ உணவகங்கள் பெரும்பாலானவை ஆண்பாற் பெயர்களிலேயே உள்ளன. உ.தா. - பொன்னுச்சாமி ஹோட்டல், முனியாண்டி விலாஸ், அய்யனார், புஹாரி என்பன. விதிவிலக்காக அம்மா ரெஸ்ட்டாரெண்ட் போன்றவை. அதே சமயம் பால் வேறுபாடற்ற சைவ, அசைவ உணவகங்களும் சில உள்ளன; உ.தா. - உட்லேண்ட்ஸ், காளியாக்குடி, ஹாட் சிப்ஸ், காரைக்குடி, விருதுநகர் போன்றவை.

இப்பெயர்களை ஆராய்ந்ததில் எனக்கொரு விசயம் புலப்பட்டது. நம் சமூகத்தில் சைவ உணவு உண்பவர்கள் உயர்வாகவும், அசைவம் உண்பவர்கள் கீழாகவும் கருதும் வழக்கம் இருக்கிறது. மேலும் சைவம் மென்மையின், அதனால் பெண்மையின் குறியீடாகவும், அசைவம் வலிமையின், அதனால் ஆண்மையின் குறியீடாகவும் கருதப்படுகிறது. அதனால்தானோ என்னவோ சைவ உணவகங்கள் பெண்பாற் பெயரிலும், அசைவ உணவகங்கள் ஆண்பாற் பெயரிலும் உள்ளன. மற்றொரு முக்கியமான விசயம், பெரும்பாலான பெரிய சைவ உணவகங்கள், சரவண பவன் அண்ணாச்சி போன்றவர்கள் விதிவிலக்கு, உடுப்பி பிராமணர்களாலோ அல்லது திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி வட்டாரத்தைச் சார்ந்த மேல்சாதியினரான (மேல்சாதியென்பது இங்கு பிராமணீயத்தை தழுவியவர்கள் என்ற பொருளில் சுட்டப்படுகிறது) ரெட்டியார்களினாலோதான் நடத்தப்படுகிறது. அதனால்தானோ என்னவோ அதிகமும் சமஸ்கிருத மயமான பெயர்களே (ஆண், பெண்பாற் பெயர்கள்) பெரிதும் சைவ உணவகங்களுக்குச் சூட்டப்படுகிறது; உ.தா. மேற்குறிப்பிட்டவையே. இங்கு சரவண பவன் அண்ணாச்சியும் பிராமணியத்தைத் தழுவியவர் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஆனால், அசைவ உணவகங்கள் பெரும்பாலும் கீழ் சாதியினராகக் கருதப்படும் உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்ட சாதியினரால் நடத்தப்படுகிறது என நம்புகிறேன். (இவ்விசயத்தில் எனக்குச் சரியான தெளிவில்லை) எனவேதான் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களுக்கும் அவர்களது சாமியின் (சிறு தெய்வங்கள்) பெயர்களையோ (அய்யனார்), குடும்பப் பெயர்களையோ (பொன்னுச்சாமி) வைக்கின்றனர் என்பது என் யூகம்.இவ்விசயத்தில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களைப் பின்னூட்டமிடவும்.

குறிப்பு:
இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது ஸ்டார் ஹோட்டல்கள், சாலையோர ஹோட்டல்கள் அல்லாத பிற நடுத்தர ஹோட்டல்களே.

பிராமணீயம் என்ற வார்த்தையை சமூக அறிவியல் பின்புலத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன்; யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலல்ல. வேண்டுமெனில் பிராமணீயம் என்பதற்குப் பதில் பெருந்தெய்வ வழிபாடு என்ற பதத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.