பக்கங்கள்

புதன், 27 ஜனவரி, 2016

மணப்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையில் மீண்டும்...

சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ‘கவர்னர்’ சீனிவாசன் மணப்பாக்கம் அடையாறு ஆற்றங்கரையோர நடைப்பயிற்சியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அமுதனும், நானும் அங்கிருந்து சில செடிகளை எடுத்து வந்து வீட்டில் நட்டிருந்தோம். அவை இப்போது நன்றாக வந்துவிட்டன. 2 வருடங்களுக்கு முன் ஜெயமோகன் என் வீட்டில் வந்து தங்கியபோது ஒருநாள் காலை அங்கு நண்பர்களோடு நடை சென்றோம்.  அதன்பின் அங்கு செல்வது தடைபட்டு போய்விட்டது. ஆற்றங்கரையோரம் பொதுப்பணித்துறையால் மூங்கில், புங்கம், வேம்பு, நாவல் மரம் போன்றவை நடப்பட்டு இருசக்கர வாகனம் செல்ல ஏற்றமாதிரி கரைகள் செப்பனிடப்பட்டு அழகாக இருந்தது. இந்த வெள்ளம் வந்து சென்றபின் அப்பகுதியை பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன். நேற்றே அமுதனிடமும், ஆதிரனிடமும் சொல்லியிருந்தேன். பையன்கள் தினமும் காலை 6 மணிக்கே எழுந்து பள்ளி செல்ல ஆயத்தமாவதால் இன்று நன்றாகத் தூங்கட்டும் என்று விட்டுவிட்டோம்.  ஆதலால் காலை 11 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.









இப்பகுதிகளில் பலரும் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆற்றின் மேற்கு கரையோரம் மணப்பாக்கமும், கிழக்குக் கரையில் நந்தம்பாக்கமும் உள்ளன. இரண்டு பகுதிகளுமே டிசம்பர் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவை. அதன் அடையாளமாக நெகிழிக் குப்பைகள் மரங்களில் இன்னமும் சொருகிக் கிடந்தன. ஒரு இடத்தில் சற்றே பெரிய கொடுக்காய் புளி மரத்தின் உச்சிவரை நெகிழிகள் இருந்தன. குறைந்த பட்சம் கரையிலிருந்து 15 அடி உயரம் வரை தண்ணீர் சென்றிருந்திருக்கும். இவ்விடத்தில் ஆற்றின் அகலம் மிகவும் குறைவு. இங்கு கரைகளில் உடைப்பைத் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்திருக்கின்றனர். ஆனால் வெள்ளம் அதைவிட பலமடங்கு உயரத்தில் சென்றிருக்கிறது. இங்கு நடப்பட்டிருந்த மரங்கள் சில வேரோடு போய்விட்டன. ஆச்சரியமாக சில மரங்கள் முக்கியமாக மூங்கில் இன்னும் கரைகளிலேயே உள்ளன. கரையில் போடப்பட்டிருந்த செம்மண் கப்பி கப்பி சாலை மட்டும் அரிக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நிலப்பரப்பு கிட்டத்தட்ட சமதளமாக இருப்பதால் வெள்ளம் அவ்வளவு உயரம் சென்றிருந்தாலும் நில அரிப்பு அவ்வளவாக இல்லை. இன்னும் சற்று தள்ளி தெற்கே நடந்தால் ஆறு மிக விரிவாக இருக்கும். மதுரை வைகை ஆற்றைவிட அகலமாகவே இவ்விடத்தில் அடையாறை  பார்க்கலாம். இந்த இடம்  பரங்கிமலை ராணுவ அலுவலர் பயிற்சிக் கல்லூரியிலிருந்து ராணுவத்தினர் மணப்பாக்கம் திடலுக்கு வருவதற்காக போடப்பட்டிருந்த இரும்பு பாலத்தை தாண்டி உள்ளது. இந்த இரும்புப் பாலமும் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஆனால் இங்கு கரை மேல் போடப்பட்ட சாலை அப்படியே உள்ளது. வேப்பமரங்கள் நன்றாக வளர்ந்து சோலையாக உள்ளன. இன்னும் சற்று தள்ளிப்போனால் மீண்டும் ஆறு குறுகலாகும். இவ்விடத்தில் ஆற்றின் கிழக்குப் பகுதியில் விமான நிலைய சுற்றுச் சுவர் ஆரம்பமாகிறது. விமான நிலையம் நீரில் மூழ்கியதில் ஆச்சரியமேதுமில்லை.






ஆகவே, இப்பகுதியானது பரங்கிமலை, மணப்பாக்கம் ராணுவ அலுவலர் பயிற்சிக் கல்லூரிக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். ராணுவ திடலின் சுற்றுச் சுவர் முடியுமிடத்தில் இன்னும் சில குறுங்காடுகளும், புதர்க்காடுகளும் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதி அதன் இயல்பு மாறாமல் இன்னமும் நீடிக்கின்றது. சில தனியார் பண்ணை வீடுகளும் இடிந்த நிலையில் இப்பகுதியில் உள்ளது. அதில் ஒன்று நடிகர் ரவிச்சந்திரனுடையது என்று ஒருவர் சொன்னார். அவர் அநேகமாக நில புரோக்கராக இருக்கலாம். இங்கெல்லாம் எப்போ சார் ரோடு போடுவாங்க, ஒரு கிரவுண்டு நிலம் எவ்வளவு . இருக்கும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தார்.









இந்தக் கரையோரப் பாதை வழி சென்றால் சென்னை விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட (அடையாற்றின் குறுக்கே வரும்) இரண்டாவது ஓடுபாதை வரை செல்லலாம். இப்பகுதியானது பல பறவைகள், பூச்சிகள், போன்றவற்றின் இயற்கை வாழிடமாக உள்ளது. அரசாங்கம் இங்கு வேறு ஏதும் குடியிருப்புத் திட்டங்களை நிறைவேற்றாமல் இந்த குறுங்காடுகளை பாதுகாத்து வருமானால் நல்லது. நாங்கள் உச்சி வெயிலில் சென்றபோதும் பல பறவைகளைப் பார்த்தோம். குறிப்பாக கொக்கு வகைகளில் குளத்துக் கொக்கு (Indian Pond Heron), உண்ணிக் கொக்கு (Indian Cattle Egret), சின்னக் கொக்கு (Little Egret),  போன்றவைகளையும் தைலாங் குருவி (Barn Swallow), சிறிய நீர்க்காகம் (Little Cormorant), பஞ்சுருட்டான் ( Green Bee Eater), கறுப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied Kingfisher), வெண்மார்பு மீன்கொத்தி (White Thorated Kingfisher), வல்லூறு (Shikra),  தேன் சிட்டு (Sunbird), செண்பகம் ( Greater Coucal), கொண்டைக் குருவி (Bulbul),  கழுகு (Eagle), கரிச்சான் (Black Drongo),  உள்ளான் (Sandpiper), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) போன்றவற்றைப் பார்த்தோம். ஒருவேளை காலையிலோ, மாலையிலோ சென்றிருந்தால் இன்னும் நிறைய பார்த்திருக்கலாம்.










ஞாயிறு, 17 ஜனவரி, 2016

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்


பிற்காலச் சோழர்களின் மூன்று பெருங் கலைக்கோயில்களில் ஒன்றான தாராசுரம் கோயிலை நேற்று ஒருவழியாக பார்த்தேவிட்டேன். தஞ்சைப் பெரியகோவிலையும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலையும் ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. இது மட்டும் தட்டிப்போய்க்கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியில் காரைக்காலில் அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு கும்பகோணம் வரும்வழியில் என் புதிய திறன்பேசியை தொலைத்துவிட்டேன். அது தொலைந்ததைவிட அதில் ஏற்றப்பட்டிருந்த தகவல்களின் பாதுக்காப்பு என்னை நிம்மதி இழக்கச் செய்ததால் தாரசுரம் செல்லாமலேயே சென்னை வந்துவிட்டேன். இவ்வாண்டு நேற்று மீண்டும் காரைக்கால் சென்றிருந்தேன். அங்கிருந்து மதியம் பேருந்து ஏறி கும்பகோணம் வரும்போது அந்திசாயும் நேரமாகிவிட்டது. நான் ஏறிய பேருந்து 60 கி. மீட்டருக்கு இரண்டரை மணிநேரம் எடுத்துக்கொண்டது. சென்ற ஆண்டும் இவ்வாறே ஆனது. இதற்கு நான் மயிலாடுதுறை வழியாகவே கும்பகோணம் சென்றிருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் காரைக்கால் – கும்பகோணம் வழித்தடத்தில் பேருந்துகளும் குறைவு. புதுச்சேரி யூனியன், நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் இறுதியாக தஞ்சை மாவட்டம் என நான்கு அரச நிர்வாக பகுதிகளை கடந்து வரவேண்டியதாகிவிட்டது. அரசாலாறு, நாட்டாறு மேலும் அவற்றின் கால்வாய்களில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. பல இடங்களில் நெல் வயல்கள் செழிப்புற்றிருந்தன. பனங்காடை (Indian Roller), பஞ்சுருட்டான் (Green Bee eater), கழுகு என பறவைகள் பலவற்றை வழியில் பார்க்க நேர்ந்தது. ஆயினும் மனம் தாராசுரத்திலேயே லயித்திருந்ததாலும், தொடர்ந்த பயணங்களால் தூக்கம் தொலைந்த சோர்வாலும் மனம் இவற்றில் ஈடுபடவில்லை. ஒருவழியாக கும்பகோனத்தை மாலை 6 மணிக்கு பேருந்து அடைந்தது. ஓட்டமும் நடையுமாக  எதிரிலிருக்கும் நகரப் பேருந்து நிலையத்தை அடைந்து கிளம்பத் தயாரக இருந்த தாராசுரம் பேருந்தை பிடித்தேன். தாராசுரத்தை அடையும் போது மாலை 6.15. நடத்துனர் என்னை கோயிலினருகிலேயே இறக்கிவிட்டார். 






முதல்பார்வையில் கோயில் என்னை ஈர்க்கவில்லை. தஞ்சை, மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு நிகரான பிரம்மாண்ட விமானம் தாராசுர ஐராவதீஸ்வரருக்கு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பிரம்மாண்டம் நம்மை முதல் பார்வையிலேயே கட்டிப்போட்டுவிடும். எனது முதல் DSLR கேமராவில் நான் படம் எடுக்கும் முதல் பழங்கால கோயில் இதுவே. நமது வரலாற்றுத் தொண்மை வாய்ந்த கோயில்களை புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதும் நான் DSLR வாங்க முதன்மையான காரனங்களில் ஒன்று. கேமாராவை வெளியில் எடுக்கும்போது கிட்டத்தட்ட இரவாகிவிட்டது. மஞ்சள் ஒளி விளக்குகளால் கோயில் அதன் அழகின் வேறொரு பரிமாணத்தை காட்டியது. கோனார்க் சூரியன் கோயிலைவிட சிறிய அளவிலான தேர்ச்சக்கரங்கள் கொண்ட முகப்பு மண்டபம். தேரை கிழக்கு மேற்கு பகுதிகளில் யானைகளும், வடபுறம் குதிரைகளும் இழுக்கும்படியான சிற்ப வேலைப்பாடுகள். குதிரைகளின் முகங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. முகப்பு மண்டபத்தின் தூண்களின் அடிப்பகுதிகளில் யாளிகள் உள்ளன. ஒருவகையில் யாளிகளே தூண்களான மண்டபம். மற்ற கோயில்களில் யாளிகள் தூண்களின் மேற்புறத்தில் தனியாக நீட்டிக்கொண்டிருக்குமாறு செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு யாளிகளின் தலைப்படுதியே தூண்களாக மாற்றப்படிருக்கிறது. எந்த ஒரு குறிக்கோளுமில்லாமல் பார்க்கும் சிற்பங்களையெல்லாம் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எந்தச் சிற்பத்தையும் உற்று நோக்கி அறிய முற்படும் முன் புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற ஆசையே மேலோங்கி இருந்தது. இரவாகிவிட்டதும், கோயில் நடை சாத்திவிடுவார்களே என்ற அச்சமும், அவற்றை எல்லாம் விட இந்த சிற்பங்களை பற்றி பெரிதாக ஏதும் தெரியாது என்பதும் இதற்குக் காரணம். இந்த நுண்ணிய சிற்பங்களே இந்தக்கோயிலை தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரக் கோயில்களிலிருந்து வேறுபடுத்துகிண்றன. இவ்வாளவு நுண்ணிய சிற்பங்களைக் கொண்ட தூண்கள் மற்ற இரு புகழ்பெற்ற பிற்கால சோழர்களின் கலைப்படப்புகளில் இல்லை என்றே நினைக்கிறேன். 




கோயிலின் வெளிப்புறகாரத்தில் பாவப்பட்டுள்ள கருங்கற்களில் பல உடைந்த சிற்ப வேலைப்பாடு கொண்ட தூண்களின் பகுதிகளாக உள்ளன. இந்தக் கோயிலை சமீபகாலத்தில் சீரமைத்தபோது பொருத்தமுடியாத தூண்களை இவ்வாறு பாவுகற்களாக பயன்படுத்திக் கொண்டனர் போலும். கோயிலின் ஈசான மூலையில் பூட்டப்படிருந்தஒரு மண்டபம் உள்ளது. அருகிலிருந்த காவலாளி இதில் ஓவியங்கள் உள்ளன பார்க்கிறீர்களா என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டார். சரி என்றவுடன் திறந்து உள்ளே கூட்டிப்போனார். டார்ச் வெளிச்சத்தில் கோயிலின் சிதிலமைடைந்த சிற்பங்களை காட்டி கோயில் வரலாற்றை அவரது ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்கினார். தமிழிலேயே சொல்லுங்கள் என்றதும், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தாராசுரத்திலிருந்து டெல்லி என அதிகாரம் மாறியது என ஏதேதோ முன்னுக்குப் பின் முரணாக அவரது ஆங்கிலத்திலேயே பேசினார். அந்தக்கால தமிழர்கள் இவ்வாறு ஆங்கிலத்திலேயே பேசினார்கள் என்றார். இப்போது இந்த இடம் பவர் சோப்புக்காரகளுக்கு பட்டா போட்டுவிடப்பட்டுள்ளது, கோர்ட்டில் கேஸ் நடக்கிறது என்று உளற ஆரம்பித்துவிட்டார். அவரிடமிருந்து தப்பித்துவர பெரும்பாடாகிவிட்டது. பாவம் என்ன மனக்கோளாறோ அவருக்கு. பேச்சின் நடுவே லட்சுமணன் என்று அடிக்கடி சொன்னார். அவரது பெயரோ என்னமோ!











கோயிலின் அர்த்த மண்டபம்(?) மிகச்சாதாரணமாக இருக்கிறது. முகப்பு மண்டபதிலுள்ள தூண் சிற்பங்கள் இங்கு இல்லை. கேமாராவுடன் தயங்கி நின்ற என்னை உள்ளே வாங்க என்று குருக்கள் அழைத்தார். லிங்கத்தை கர்ப்பக்கிருகம் அருகில் சென்று பார்க்கலாம். லிங்கம் கங்கை கொண்ட சோழபுரத்தை விட சிறியதுதானே என்றதற்கு இது நான்காவது பெரிய ஆவுடை என்று குருக்கள் சொன்னார். முதலில் கங்கை கொண்ட சோழபுரம், இரண்டாவது தஞ்சை பெரியகோயில், மூன்றாவது ஏதோ ஒரு கோயில் பெயர் சொன்னார் மறந்துவிட்டேன். ஆவுடைக்கு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கினார். அவரது மன திருப்திக்காக நெற்றியில் இட்டுக்கொண்டேன். சென்னை போரூர் பகுதியிலிருந்து வருகிறேன் என்றதும் தன் சித்தப்பா மற்றும் பல உறவினர்கள் அங்கு இருப்பதாகச் சொன்னார். பெண் எடுத்தது மாங்காடு என்றார். 250 வருடங்களுக்கு முன்பு எங்களது பூர்வீகமும் மாங்காடுதான் என்றேன் அவரிடம். 30 களில் இருக்கும் அழகிய குருக்கள். வெளியே தெற்கு பார்த்தவாறு பெரிய நாயகி அம்மன் கருவறை. அங்கிருந்த குருக்களிடம் மூன்று பிற்கால சோழ்ர்கால கோயில்களிலும் அம்மன் பெயரும் பெரியநாயகிதானே என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கருவறை மூடியிருந்தாலும் கோயிலின் பிறபகுதிகளை நீங்கள் எப்போது வந்தாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றார். கோயிலை விட்டு வெளிவந்ததும் வடபுறம் மற்றொரு தனிக்கோயில் இருக்கக் கண்டு அங்குசென்றேன். அதற்குள் கோயில் குருக்களும், காவலாளியும் கதவைப் பூட்டிக்கொண்டிருந்தனர். இது அம்மன் கோயில் என்றும், அம்மன் பெயர் தெய்வநாயகி என்றும், இதுவே பிரதான அம்மன் என்றும் சொன்னார். 

வெள்ளி, 29 மே, 2015

தேக்கடியில் கல்லூரி நண்பர்களுடன்...

நாங்கள் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 25 வருடங்கள் ஆகிறது. வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் வகுப்புத்தோழர்களின் கூடுகை ஒன்றை தேக்கடியில் சென்றவாரம் நான் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தேன். கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இத்தகைய கூடுகை ஒன்றை நடத்தலாம் என எல்லாருக்கும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு காரணங்களால் அப்போது அதில் கலந்துகொள்ள விருப்பமில்லை. ஆனால், நானும் வேறு சில குறிப்பிட்ட நண்பர்களும் இதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தோம். மற்ற நண்பர்களோ இத்துறையிலேயே இருக்க, நான் மட்டும் மந்தையிலிருந்து விலகிய ஆடாக இருந்தபோதிலும் இதை நடத்துவதில் நான் முனைப்பாக இருப்பதின் காரணம் சற்று விசித்திரமானது. உண்மையில் எங்கள் கல்லூரி குறித்து எனக்கு மதிப்போ, முக்கியத்துவமோ இருந்ததில்லை. காரணம் எங்களுக்கு அமைந்த ஆசிரியர்கள் அப்படி, ஒரு சிலரைத்தவிர மற்றதெல்லாம் தண்டச்சோறுகள். ஆனால் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். எனது மிகச் சிறந்த நண்பர்கள் அனைவரும் என்னுடன் கல்லூரியில் படித்தவர்களே. கல்லூரிக் கட்டடங்களையும், மருத்துவமனையையும் நட்பின் அடையாளமாகவேதான் பார்க்கிறேனே தவிர, என்னைப் பொறுத்தவரை அவற்றிற்கு வேறு மதிப்பில்லை. சித்தமருத்துவம் குறித்து ஆசிரியர் பாடம் நடத்தி அறிந்து கொண்டதைவிட மூத்த நண்பர்கள் மூலம் கல்லூரிக்கு வெளியே அறிந்துகொண்டதுதான் அதிகம். சொல்லப்போனால், படிக்காமலேயே தேர்வுகளில் வெற்றிபெறுவதற்குரிய உத்தியை கைவரப் பெற்றிருந்தேன். சித்தமருத்துவம் குறித்து அத்துறைக்குள்ளேயே இருந்து ஆராய்ச்சி செய்வைதைவிட வெளியில் சென்று அப்பணியை ஆற்றுவதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தேன். ஆதலால், பெரும்பாலான என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரியிலியேயே முதுகலை சித்த மருத்துவம் பயின்றபோது நான் விலகிச் சென்றுவிட்டேன். மேலும் அரசுப்பணியில் சித்தமருத்துவராக வேண்டும் என்று விரும்பியதேயில்லை. அப்பாவுக்கு அதனால் என்மேல் கோபமிருந்தது. என் நண்பர்களுடன் ஒப்பிட்டு எப்போதும் என்னை குறை சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கையில், என்னைப் பொறுத்த அளவில், என் முடிவு மிகச் சரியானதென்றே படுகிறது. என் இயல்புக்கு அங்கு குப்பை கொட்டமுடியாது. ஆனால், நண்பர்களுடன் அப்படியில்லை. துறை மாறினாலும் தொடர்ந்து நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன்.




1990 ஆம் ஆண்டு ஒரு ஆனி-ஆடி சாரல் மழைநாளில் எங்களுக்கு கல்லூரி முதல்நாள். அநேகமாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் நண்பர்கள் சித்த மருத்துவம் பயில சேர்ந்திருந்தார்கள். எல்லா மாவட்டங்களிலிருந்தும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மன விரிவைக் கொடுத்தது. ஒவ்வொருவரின் ஊரையும், அவ்வூரின் சிறப்புகளையும் குறித்து பேசுவது எனது அப்போதைய பொழுதுபோக்குகளில் ஒன்று. அந்த ஊரைப் பார்ப்பதற்காகவே நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் விடுமுறைக் காலங்களில் டேரா போடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பெரும்பாலானவர்களின் வீட்டு முகவரிகளையும் சமீப காலம் வரை ஞாபகம் வைத்திருந்தேன். இன்னும் சிலரது பழைய வீட்டு முகவரிகளை என்னால் சொல்லமுடியும். முதலாண்டு முடியும்போது வகுப்பில் 86 பேர்கள் இருந்தோம். அதில் 60 பேர் பெண்கள். எங்களுக்கும், எங்களது இளவல்கள் மற்றும் மூத்த மாணவர்களுக்குமிடையே ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. மற்ற வகுப்புகளில் ஆண்-பெண் விகிதாச்சாரம் சரிபாதி. மேலும் அங்கெல்லாம் பல்வேறு கோஷ்டி பிரிவினைகள் உண்டு. ஊர் சார்ந்து, சாதி சார்ந்து என்று வகுப்பிலேயே பல்வேறு பிரிவினைகள் உண்டு. திருநெல்வேலியல்லவா, இதெல்லாம் இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஆனால் எங்கள் வகுப்பில் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. நாங்கள் சாதி சார்ந்தோ, ஊர் சார்ந்தோ குழுவாக பிரிந்து அடித்துக்கொள்ளவில்லை. சாதிப் பெயர்களை கிண்டல் மூலம் தாண்டிச்சென்றோம். இதற்கு ஆண்கள் மிகக் குறைவாக இருந்ததும் ஒரு காரணமாகயிருக்கலாம். ஆனால், 60 பெண்கள் இருந்தும், ஆச்சரியமாக பெரிதாக தனிப்பட்ட குழுக்கள் இல்லை. 1990 லிருந்து 95 வரை பகைமை-பொறாமை கொண்ட குழுக்கள் இல்லாமல் நாங்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்தோம். எங்களுக்கு ஒருவருடம் மூத்தவர்கள்  படிப்பாளிகள் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார்கள்; இளவல்களோ ரவுடி பிம்பமும் கொண்டிருந்தார்கள். நாங்கள் இதில் எதிலும் சேர்த்தியில்லை. ஒருவகையில் நாங்கள் அமைதியானவர்கள்; ஆனால் குசும்பர்கள் என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. ஆசிரியர்கள் கேள்விகேட்டால் பதில் தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிப்பது எங்கள் வகுப்பின் உத்தி. கேள்வி கேட்ட ஆசிரியர் பதில் கிடைக்காததால் நொந்துவிடுவார். கிட்டத்தட்ட முந்திரிக்கொட்டைகளே எங்கள் வகுப்பில் இருந்ததில்லை.






கல்லூரியில் படிப்பிற்கு செலவழித்ததைவிட வருடா வருடம் சுற்றுலா செல்வதற்கும், அங்கு எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போடுவதற்கும் என்று நாங்கள் அனைவரும் அதிகம் செலவழித்திருப்போம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதும் படிப்பை விட அதுதான் முக்கியமானதாகப் படுகிறது. இந்தக் கூடுகைக்கான திட்டமிடலை 6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். இதற்காக சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் என் வீட்டில் வைத்து கடந்த ஜனவரி மாதம் ஒரு சிறிய கூடுகையை நடத்தினோம். பின்னர் எல்லோரிடமும் இணையம் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் ஒட்டெடுப்பு நடத்தி கூடுகை நடத்த விரும்பும் இடத்தை தேர்வுசெய்ய முயன்றோம். 86 பேரில்  பல வருடங்களுக்கு முன்பே ஒருவர் ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார். ஆறு பேரை, இந்த செல்பேசி உலகிலும், கண்டுபிடிக்கவே முடியவில்லை. வெளிநாடுகளில் வாழும் மூன்று பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. மீதமிருக்கும் 76 பேரிடமும் பேசி தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டோம். இவர்களில் பலர் அரசு சித்தமருத்துவ அலுவலர்களாக இப்போது வேலை செய்கிறார்கள்; சிலர் தனியாக கிளினிக் வைத்திருக்கிறார்கள்; சிலர் வேறு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்; மேலும் சிலர், என்னைபோல், வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள். சிலருக்கு கல்லூரியில் படிக்கும் மகன், மகள் இருக்கிறார்கள்.




மதுரையிலுள்ள ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் தேக்கடியில் கடந்த 19-20 தேதிகளில் எங்களது கூடுகையை நடத்த திட்டமிட்டோம். முதலில் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக நடத்த நினைத்தோம். ஆனால், சிலர் எங்கள் குடும்பத்தோடுதான் வருவோம் என்று கூறியதால் அவரவர் விருப்பப்படி வரலாம் என தீர்மானித்தோம். சிலர் தங்களது வாகனங்களில் நேரடியாக தேக்கடி வந்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் மதுரை, திண்டுக்கல் வந்து அங்கிருந்து எங்களுக்காக அமர்த்தப்பட்ட பேருந்து மூலம் தேக்கடி அடைந்தோம். உடன்படித்த 76 பேரில், ஐம்பது நண்பர்களையாவது திரட்டிவிட வேண்டுமென முயன்றேன். எவ்வளவோ நான் முயன்றும் 34 நண்பர்கள் அவர்களது குடும்பங்கள் என்று 70 பேர்தான் வந்திருந்தனர். சிலரால் தவிர்க்கமுடியாத காரணங்களால் வர இயலவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து, முதன்முதலில் தொடர்புகொண்டபோது வருகிறேன் என்று சொன்ன பலர் அடுத்தடுத்த அழைப்புகளில் தயக்கம் காட்டினர். சிலர் நான் கூப்பிட்டால் செல்பேசியை எடுப்பதையே தவிர்த்துவிட்டனர். குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்பவில்லை. சிலர் கடைசிவரை டபாய்த்துக்கொண்டேயிருந்தனர். சில நண்பர்களின் இத்தகைய போக்கு கடைசி 20 நாட்களில்  ஒருவிதமான விரக்தியை எனக்குள் ஏற்படுத்தியது. ஆகையால் தேக்கடிக்கு ஒருவிதமான வெறுமையான மனநிலைலேயே சென்றேன். அவ்வாறு நடக்கவில்லையென்றிருந்தாலும் ஒருவேளை நான் அத்தகைய மன நிலையில்தான் சென்றிருப்பேனோ என்னவோ?! என் மன அமைப்பே அப்படித்தான்; எல்லா விசயத்திலும் கடைசித் தருவாயில் சற்று சொதப்புவது என் பாணி. வடிவேலுவின் பாணியில் ”ஓப்பனிங் எல்லாம் பலமாத்தான் இருக்கும், ஆனால் பினிஷிங்தான் சரியிருக்காது”.





 நிகழ்வு நாள்களிலும் ஒருவிதமான பதட்டத்துடனும், எரிச்சலிலும்தான் இருந்தேன். நண்பர்களை ’செல்லமாக’ கடிந்துகொண்டேன். சில வேலைகளை பிற நண்பர்களுக்கு பிரித்துக்கொடுத்திருக்கலாம்தான். எல்லாவற்றிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற கமல்ஹாசத்தனம் என்னிடம் உண்டு. சிலர் இதை அடுத்தவர் மேல் நம்பிக்கையின்மை எனச் சொல்வார்கள்; ஆனால் என்னைப் பொறுத்தவரை செய்யும் செயலில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்தல் என்றே பொருள்கொள்வேன். கமல்ஹாசன் என்னைப் போல் பதட்டப்படுவாரா எனத்தெரியாது. ஆனால், என் தந்தைக்கு நிகரான, என் நண்பர் சுகன்யாவின் தந்தை, மறைந்த இலக்கியவட்டம் நாராயணன் அவர்கள் காஞ்சிபுரத்தில் இலக்கியவட்ட நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதை பலமுறை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். கூட்டத்திற்காக மேசை, நாற்காலிகளை தனியொருவராக தூக்கி வைத்து போடுவதிலிருந்து, வந்திருப்பவர்களுக்கு டீ சப்ளை பண்ணுவது, கூட்டத்தை துவக்கி வைத்து பேசுவது என்று எல்லா வேலைகளையும் ஒரு கர்மயோகியாக பதட்டமின்றி செய்வார். என்னைப் பொறுத்தவரை அது ஒரு யோகச் செயல்பாடுதான்.









தேக்கடியில் முதல்நாளன்று மாலை ஹோட்டல் கருத்தரங்க அறையில் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. எவ்வாறு பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதற்கு நேர்மாறாக ஒரு எதிர்மறைத் தொனியுடன் ஆரம்பித்தேன். தொலைபேசினால் செல்பேசியை எடுக்காதது, குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பாதது இன்னபிற வழக்கங்கள் ஒரு பொறுப்பற்ற தன்மையைக் குறிப்பன; கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நாம் செய்ததை இப்போது எனக்கே திருப்பியளித்து விட்டீர்களே என நண்பர்களை கடிந்துகொண்டேன். நண்பர்கள் சிலர் பேசினர், சிலர் பாடினர். பின்னர் குழந்தைகளின் நிகழ்வு நடைபெற்றது. எங்கள் அனைவரையும் விட குழந்தைகளே இப்பயணத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். மறுநாள் புகழ்பெற்ற தேக்கடி படகுப் பயணத்திற்கு சென்றோம். 1992 ஆம் வருடம் கல்லூரியில் படிக்கும்போது இங்கு சுற்றுலா வந்திருக்கிறோம். அதன்பின் ஒருமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால் இந்தமுறைதான் படகுப்பயணத்தில் யானைக் கூட்டங்களையும், வரையாடுகளையும் பார்த்தேன். பொதுவாக நான் தனிமையானவன். நண்பர்களுடன் இருக்கும்போதே சற்றென்று தனிமையுணர்வு கொண்டுவிடுவேன். என் ஒன்றுவிட்ட மைத்துனனும், எனக்கு கல்லூரியில் ஒரு வகுப்பு மூத்தவனும், 40 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அறிந்தவனுமான மீனாட்சி சுந்தரம் முன்பொருமுறை சொன்னான் - நீ ஒன்னு கூட்டத்தில் முதலாவதா வர்ற அல்லது பின்னாடி கடைசியா வர்ற என்று. ஆம் நான் கும்பல் மனப்பான்மையிலிருந்து எப்போதுமே விலக்கம் கொள்கிறேன். அது எனக்கு பல வகைகளிலும் உதவியாக உள்ளது. தேக்கடியிலும் படகுச் சவாரியினை ரசிக்க படகின் முன்பக்கம் சென்று தனியாக அமர்ந்துகொண்டேன். அதனால், பின்பக்க இரைச்சல்களிலிருந்து தப்பித்து எனக்கான காட்டை என்னால் ரசிக்க முடிந்தது.










மறுநாள் சென்னை வந்து சேர்ந்தபின் எல்லோருக்கும் பத்திரமாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்களா என குறுஞ்செய்தி அனுப்பினேன். இது  ஜெயமோகனிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பழக்கம். தனது நண்பர்களுக்கு ஒவ்வொரு நிகழ்வு முடிந்ததும் அவரிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வரும். நான் ஆச்சரியப்படும் வகையில் எல்லா நண்பர்களும் உடனேயே பதில் குறுஞ்செய்தி அனுப்பினர். மகிழ்ச்சியாய் இருந்தது. இதை எல்லோரும் முதலிலேயே பின்பற்றியிருந்தால் இன்னும் நன்றாக நிகழ்வை நடத்தியிருக்கலாமே என மனதில் நினைத்துக் கொண்டேன்.