பக்கங்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

நவீன சித்தமருத்துவத்தின் முகங்கள்

சில நேரங்களில் நம்மை பின்னோக்கிப் பார்க்கவைத்து நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளக் கூடிய தருணங்கள் அமைந்துவிடுவதுண்டு. நேற்று அத்தகைய தருணம் எனக்கு வாய்த்தது. என் கல்லூரிக்கால நெருங்கிய நண்பர்கள் சிலர் முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் துளிர் என்ற நிகழ்விற்கு சென்றிருந்தேன். இந்நிகழ்வு குறித்து முன்பொருமுறை புளியமரத்தில் எழுதியிருக்கிறேன். இந்நிகழ்வின் நோக்கம் கல்லூரியில் சித்தமருத்துவம் பயிலும் அல்லது படித்துவிட்டு சித்தமருத்துவம் புரியும் மருத்துவர்களுக்கு அத்துறையில் வெற்றிகரமாக இயங்கக்கூடிய முன்னோடி மருத்துவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும், இளம் மருத்துவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதுவுமாகும். நான் படிக்கும்போது சித்தமருத்துவக் கல்லூரிகளில் சித்தமருத்துவத்தை அறிந்துகொள்வதைவிட கல்லூரி மூத்த நண்பர்களிடம் அறிந்துகொள்வதே முதன்மையானதாக இருந்தது. உள்ளது. இப்போதும் அப்படித்தான் உள்ளது என்றே நினைக்கிறேன். இருபத்தியாறு வருடங்களுக்கு முன் நான் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, துளிர் மாதிரியான நிகழ்வுகள் ஏதும் இல்லை. என்னைப்போன்றே பெரும்பாலனவர்கள் அவர்களது பெற்றோர்களின் அரசு வேலைக் கனவுகளால் சித்தமருத்துவம் பயில கல்லூரியில் சேர்த்துவிடப்பட்டவர்கள். +2 வரை நம் மரபான அறிதல் முறைகள் மேல் எந்தவிதமான புரிதலோ, மதிப்போ இல்லாமல் சித்தமருத்துவக் கல்லூரிகளில் வந்துசேரும் மாணவர்களுக்கு கல்லூரிகள் மேலும் ஒரு சுமையாகிப் போவதே அக்காலங்களில் வாடிக்கையாக இருக்கும். ஒரு சில விதிவிலக்கான ஆசிரியர்களைத் தவிர்த்து பெரும்பாலும் சித்த மருத்துவம் மேல் பிடிப்போ, முனைப்போ இல்லாத ஆசிரியர்களே எங்களுக்கு வாய்த்தார்கள். அப்போதிருந்த எனது கல்லூரி மூத்தவர்கள் இல்லையெனில் சித்தமருத்துவம் மேல் எனக்கு இன்றளவும் நீடிக்கும் பிடிப்பு இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அவர்களனைவரும் இன்றும் துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய துளிர் நிகழ்வு அவர்களைப் பற்றிய நினைவுகளைக் கிளர்த்தியது. இன்று அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது அக்காலங்களிலேயே அவர்களிடம் இருந்த அந்த உணர்வும், பொறியும், அப்போதைவிட இப்போது, என்னால் நன்றாக உணரமுடிகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் சித்தமருத்துவம் குறித்து தன்னளவில் வேறுபட்ட பார்வைகள் கொண்டவர்கள். ஆயினும், என் நினைவிலிருந்து அவர்களை இன்று மீட்டுருவாக்கம் செய்யும்போது அவர்களிடம் இன்று சில பொதுவான பண்புகள் இருப்பதை பார்க்கமுடிகிறது. இப்பதிவு அவர்களப் பற்றியதாகும்.  

மரு. தி. திருநாராயணன் – இவர் விதிவிலக்கான எனது ஆசிரியர்களில் ஒருவர். சித்தமருத்துவ வரலாறு, சைவ சித்தாந்தம், புராணங்கள் ஆகியவற்றை கலந்துகட்டிய பாடம் ஒன்று முதலாண்டு சித்தமருத்துவப் படிப்பில் உண்டு – தோற்றக்கிரம ஆராய்ச்சி என்று பெயர். அதனை இவர் பயிற்றுவித்த நல்லூழ் வாய்க்கப்பெற்றேன். பின்னர் இரண்டாமாண்டில் நரம்பியல் எங்களுக்கு நடத்தினார். இன்றும் தொடரும் அவரது ஆர்வமும், தன் முனைப்பும், நவீனத்துவ மனதோடு சித்தமருத்துவதை அணுகும் அவரது பார்வையும் அக்காலங்களில் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. நவீன அறிவியல் கண்ணோட்டத்தோடு, பெரும்பாலும் தம் பெற்றோர்களின் வற்புறுத்தலால், சித்த மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்த எங்களுக்கு நவீன அறிவியல், மரபான சித்தமருத்துவத்துடன் இணையும் புள்ளிகளை கோடிட்டு காட்டிய முன்னோடிகளுள் ஒருவர். அரசாங்க வேலையை உதறிவிட்டு, தான் தொடங்கிய அமைப்பின் மூலம், சித்தமருத்துவ மூலிகைகள், சுவடிகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.


மரு. மைக்கேல் ஜெயராஜ் – நான் கல்லூரியில் சேரும்பொழுது தனது படிப்பை முடித்திருந்தார். தமிழ் மருத்துவக் கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவுவதில் மிகுந்த முனைப்புடன் இருந்தார். அதன் தொடர்ச்சியாக கற்ப அவிழ்தம் என்ற இதழை பின்னர் தொடங்கினோம். இனிமேல் இக்கட்டுரையில் குறிப்பிடப்படப்போகும் அனைவரும் இவரது உந்துதலினால் அல்லது தொடர்பால் முனைப்புற்றவர்கள் என்றால் அது மிகையில்லை. சித்த மருத்துவம் குறித்த மரபான பார்வையுடையவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1991 மே மாதம் இவரின் வழிகாட்டலில் நாங்கள் மேற்கொண்ட ”அகத்தியர் பொதிகை” மூலிகைப் பயணம் எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இன்று முண்டந்துறை வனப்பகுதியில் சாகசம், ஆன்மீகம் என்ற பெயர்களில் நடத்தப்படும் விளம்பர பயணங்களோடு ஒப்பிடுகையில், எந்தவித முன் தயாரிப்புகளும் இல்லாமல் ஐந்து நாட்கள் நாங்கள் செய்த பயணம் உண்மையில் எங்கள் வாழ்நாளெல்லாம் நினைத்து பெருமைப்படவேண்டியதாகும். இன்றும் இவர் இத்தகைய முலிகை கண்டறியும் பயணங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். கற்ப அவிழ்தமும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்துகொண்டுவருகிறது.


மரு. கு. சிவராமன் – இவரைக் குறித்து நான் சொல்லி தெரிந்துகொள்ளும் நிலையில் இன்றைய இணைய தமிழர்கள் யாரும் இல்லை. அவிழ்தம் இதழின் முதல் ஆசிரியராய் இருந்தவர். ஒரு காலத்தில் கல்லூரியில் போராளியாய் இருந்தவர். இவர் முன்னின்று நடத்திய மாணவர் போராட்டம்தான் எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது. பிற்பாடு அவர் சென்னையில் தனியாக ஆரோக்கியா சித்தமருத்துவமனை ஆரம்பித்தபோது நான்தான் முதலில் அவருக்கு ’பதிலீடு’ மருத்துவராக இருந்தேன். பல்திறமை வாய்ந்தவர். அதில் ஒன்றுதான் அவரது சமையல் திறமையும். அதன் தொடர்ச்சியாகத்தான் அவரது சிறுதானிய உணவு ஆர்வங்களைப் புரிந்துகொள்ளமுடியும். எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பவர். மிகுந்த நகைச்சுவை நுண்ணுனர்ச்சி கொண்டவர். 


மரு. வெ. கணபதி – இன்று விவேகானந்தா கேந்திரத்தின் மூலம் வர்ம மருத்துவ முறையை பயிற்றுவிக்கும் ஆசான்களில் ஒருவராக உள்ளார். மரபான சித்தமருத்துவ பார்வையுடையவர். எனக்கு இரண்டுவருடங்கள் கல்லூரியில் மூத்தவர். சிலகாலம் அவிழ்தத்தின் ஆசிரியராய் இருந்தவர். எனக்கு, குழந்தை தசையிழிவு நோய் சிகிச்சை முறையை கடத்த முயன்று தோல்விகண்டவர்.



மரு. ஜெ. ஸ்ரீராம் – எனக்கு ஓராண்டு மூத்தவர். சித்தமருத்துவப் புத்தகங்களை தேடித்தேடி நகலாக்கம் செய்வதை ஒரு குடிசைத்தொழிலாகவே செய்துவந்தவர். நவீன பார்வையுடையவர். தற்போது அரசு சித்தமருத்துவராக பணியாற்றுகின்றார். குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் சித்த மருத்துவ நுணுக்கங்களை சித்த மருத்துவர்களுக்கு கடத்தி வருபவர்.




இன்னும் சிலர் உள்ளனர். ஆயினும் இவர்களே எனக்கு நெருக்கமானவர்கள் அல்லது என்னை செதுக்கியவர்கள். இன்றைய சித்தமருத்துவத்தின் முகங்களாக இவர்களை தவிர்த்துவிட்டு யாரும் பட்டியலிடமுடியாது. இவர்கள் அனைவரிடமும் பொதுவான ஒற்றுமைகள் பலவுண்டு. ஸ்ரீராம் தவிர வேறு யாரும் அரசு சித்தமருத்துவர்கள் இல்லை. திருநாராயணன் கூட அரசு வேலையை உதறிய பின்னரே மிகவும் படைப்பூக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். பெரும்பாலனவர்கள் சித்த மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கவில்லை. ஆயினும் தம் முனைப்பால் சித்தமருத்துவத்தின் வெவ்வேறு துறைகளில் இன்று பொருட்படுத்தக்கூடிய அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் அரசு வேலையை தேடிச் செல்லாததால் இவர்கள் இன்னும் படைப்பூக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் போலும் (ஸ்ரீராம் போன்றவர்கள் விதிவிலக்கு). ஆயினும், மாணவர்களோடும், இளம் சித்த மருத்துவர்களோடும் இன்றும் இவர்களைனைவரும் உரையாடலில் உள்ளனர். தொடர்ந்து சித்தமருத்துவமும் புரிந்துகொண்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக