பக்கங்கள்

விமரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

கள்ளம்



என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனொருவன் தன் ஊரிலிருந்து பேருந்தில் வரும்போது முன்னால் இருந்த அழகான பெண்ணிடம் கை போட்டதாகவும், அவளும் அதற்கு இசைந்து கொடுத்தாள் என்று சொன்னான். அவை போன்ற பல ‘கதைகளை’ அவன் சொல்வதுண்டு. அவையாவும் அவனது கற்பனை என்றும் எந்தப் பெண்ணும் இப்படியெல்லாம் எளிதில் இசைந்துகொடுப்பவர் அல்ல என்பதையும் ஒரளவிற்கு யதார்த்தம் உணர்ந்தவர் புரிந்துகொள்வர்.  தன்னால் இயலாததை இப்படி சிலர் வெளிப்படையாக சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார்கள் என்பதை அப்போதே புரிந்துகொண்டேன். இது நடந்து 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்று கள்ளம் நாவலை படித்தபோது அவன் ஞாபகம் தான் வந்தது. தஞ்சை பிரகாஷ் தனது ஆற்றாமையை பரந்தாம ராஜு என்ற கதாபாத்திரத்தின் மூலம் நாவல் என்ற பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார் போல. 

நாவலை படித்துமுடித்தவுடன் என்னை அறியாமலேயே சே எனச் சற்று சத்தமாக சொல்லிவிட்டேன். எனது நேரத்தை வீணடித்துவிட்டேனே என்ற ஆதங்கத்தில். 100 பக்கங்களுக்கு பின் பிரகாஷ் என்னதான் சொல்ல வருகிறார் என்று அறிய பக்கங்களை புரட்டவேண்டியதாகிவிட்டது. காமமே பேசு பொருளாக இருந்தாலும் அதைத்தாண்டி அதில் ஒன்றுமே இல்லை. அதுவும் மூன்றாம் தரமாகத் தான் இருக்கிறது. 

தஞ்சை அரண்மனை பகுதிகள், தஞ்சாவூர் ஓவியங்களை வரையும் மரபு கொண்டவர்கள் என பிரகாஷ் குறிப்பிடும் ராஜூக்கள் பற்றிய சில விவரணைகள் முதலில் படிக்கத் தூண்டினாலும் பிற்பாடு மிகு செயற்கையாக அவர் சித்தரிக்கும் பாலியல் உறவுகள் அவர் அதை மீறி ஏதும் சொல்ல விழையவில்லை என்பதை எளிதில் உணர்த்திவிடுகிறது.  முன்பு எப்போதோ கமல் ஒரு பேட்டியில், எப்படி சார் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்வீர்கள் என தன்னிடம் ஒருவர் கேட்டதாகச் சொல்வார். பிரகாஷும் கிட்டத்தட்ட கமலிடம் அக்கேள்வியைக் கேட்ட மனிதரை நினைவூட்டுபவராகவே தெரிந்தார். கள்ளத்தில் அவர் சித்தரிக்கும் பாலியல் உறவுகளும் புளு பிலிம் படங்களின் செயற்கையான காட்சிகளையே நினைவூட்டின. சிறிதும் நம்பகத்தன்மையற்ற, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கோ அல்லது தனது ஆற்றாமையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்டதாகவே கள்ளம் உள்ளது. 

தன் தந்தை படைப்பது கலையே அல்ல, ஆனால் அசல் கலைஞனான தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று பல இடங்களில் பரந்தாம ராஜூ சொல்கிறான. ஆனால் அவன் கலைஞன் என்பதற்கான போதுமான தடயங்களை பிரகாஷ் கள்ளத்தில் வைக்கவில்லை. அவர் சொல்லும் கலை அவர் பாலியல் சித்தரிப்பை போல் விடலைத்தனமாகவேயுள்ளது. ரஜினி படங்களில் வருவது போல சற்றென வெள்ளைக்காரர்கள் புகழ்பவனாக சில காட்சிகளிலேயே பரந்தாம ராஜு மாறிவிடுகிறான். அவன் கலைஞன் என்பதால் அவனைப் பார்க்கும் எல்லாப் பெண்களும் அவனை கூடுகிறார்கள், அவன் அப்பாவின் ஆசை நாயகி உட்பட. அவ்வாறே இருப்பதில் தவறில்லை. ஆனால் அத்தகையவற்றை கலாபூர்வமாக்கும் ஏதோ ஒன்று பிரகாஷிடம் ஒரு மாற்று குறைவாகவேயுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. அல்லது அவர் நோக்கமே அதுவல்லாமலிருக்கலாம். நாவலின் தொடக்கத்தில் பரந்தாமராஜூ பாபியை முதலில் பார்த்தவுடன் வர்ணிப்பதிலேயே (இடுப்பே இல்லை...., இல்லாத இடுப்பிற்கு மேலான அந்தப் பகுதி அவனை அச்சுறுதியது ) பிரகாஷின் நோக்கம் வெறும் பாலியல் கவர்ச்சியை சொல்வது மட்டுமே என்பதை நாவல் உணர்த்திவிடுகிறது. 

தஞ்சை பிரகாஷ் கதைகள் குறித்து இணையத்தில் அவர் இறந்தபிறகு வரும் வியாக்கியானங்கள், அவரது பாலியல் சித்தரிப்புகள் குறித்த தத்துவங்கள் யாவும் போலிகள் என்பதே கள்ளம் படித்தபின் எனக்கேற்பட்ட மனப்பதிவு. கள்ளம் என் நாவல் பட்டியலில் இல்லவேயில்லை. ஜெயமோகன் பிரகாஷின் எழுத்தை (அவரது பிற மேதமைகளை உணர்த்தியபின்) முதிரா பாலியல் எழுத்து என்று வகைப்படுத்தியிருப்பார். ஆயினும் ஒரே ஒரு காரணத்திற்காகவே கள்ளம் வாங்கினேன். இலக்கியவட்டம் நாராயணன் அவர்கள் தான் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் ஆரம்பித்ததற்கு தஞ்சை பிரகாஷுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமென்று சொல்லியிருக்கிறார். அவர் தஞ்சையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வேலை மாறுதலால் வந்தவர். அதனால் இந்த வருடம் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நாவலை வாங்கினேன். பிரகாஷின் அதிர்ச்சி மதிப்பீடு தெரியும் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் கள்ளம் படிக்க ஆரம்பித்தேன். நல்லவேளை பிரகாஷ் என்னை ஏமாற்றவில்லை. ஜெயமோகனின் அறுவை சிகிச்சை கத்திக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

நவீன சித்தமருத்துவத்தின் முகங்கள்

சில நேரங்களில் நம்மை பின்னோக்கிப் பார்க்கவைத்து நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளக் கூடிய தருணங்கள் அமைந்துவிடுவதுண்டு. நேற்று அத்தகைய தருணம் எனக்கு வாய்த்தது. என் கல்லூரிக்கால நெருங்கிய நண்பர்கள் சிலர் முன்னின்று நடத்திக்கொண்டிருக்கும் துளிர் என்ற நிகழ்விற்கு சென்றிருந்தேன். இந்நிகழ்வு குறித்து முன்பொருமுறை புளியமரத்தில் எழுதியிருக்கிறேன். இந்நிகழ்வின் நோக்கம் கல்லூரியில் சித்தமருத்துவம் பயிலும் அல்லது படித்துவிட்டு சித்தமருத்துவம் புரியும் மருத்துவர்களுக்கு அத்துறையில் வெற்றிகரமாக இயங்கக்கூடிய முன்னோடி மருத்துவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும், இளம் மருத்துவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதுவுமாகும். நான் படிக்கும்போது சித்தமருத்துவக் கல்லூரிகளில் சித்தமருத்துவத்தை அறிந்துகொள்வதைவிட கல்லூரி மூத்த நண்பர்களிடம் அறிந்துகொள்வதே முதன்மையானதாக இருந்தது. உள்ளது. இப்போதும் அப்படித்தான் உள்ளது என்றே நினைக்கிறேன். இருபத்தியாறு வருடங்களுக்கு முன் நான் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, துளிர் மாதிரியான நிகழ்வுகள் ஏதும் இல்லை. என்னைப்போன்றே பெரும்பாலனவர்கள் அவர்களது பெற்றோர்களின் அரசு வேலைக் கனவுகளால் சித்தமருத்துவம் பயில கல்லூரியில் சேர்த்துவிடப்பட்டவர்கள். +2 வரை நம் மரபான அறிதல் முறைகள் மேல் எந்தவிதமான புரிதலோ, மதிப்போ இல்லாமல் சித்தமருத்துவக் கல்லூரிகளில் வந்துசேரும் மாணவர்களுக்கு கல்லூரிகள் மேலும் ஒரு சுமையாகிப் போவதே அக்காலங்களில் வாடிக்கையாக இருக்கும். ஒரு சில விதிவிலக்கான ஆசிரியர்களைத் தவிர்த்து பெரும்பாலும் சித்த மருத்துவம் மேல் பிடிப்போ, முனைப்போ இல்லாத ஆசிரியர்களே எங்களுக்கு வாய்த்தார்கள். அப்போதிருந்த எனது கல்லூரி மூத்தவர்கள் இல்லையெனில் சித்தமருத்துவம் மேல் எனக்கு இன்றளவும் நீடிக்கும் பிடிப்பு இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அவர்களனைவரும் இன்றும் துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்றைய துளிர் நிகழ்வு அவர்களைப் பற்றிய நினைவுகளைக் கிளர்த்தியது. இன்று அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது அக்காலங்களிலேயே அவர்களிடம் இருந்த அந்த உணர்வும், பொறியும், அப்போதைவிட இப்போது, என்னால் நன்றாக உணரமுடிகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் சித்தமருத்துவம் குறித்து தன்னளவில் வேறுபட்ட பார்வைகள் கொண்டவர்கள். ஆயினும், என் நினைவிலிருந்து அவர்களை இன்று மீட்டுருவாக்கம் செய்யும்போது அவர்களிடம் இன்று சில பொதுவான பண்புகள் இருப்பதை பார்க்கமுடிகிறது. இப்பதிவு அவர்களப் பற்றியதாகும்.  

மரு. தி. திருநாராயணன் – இவர் விதிவிலக்கான எனது ஆசிரியர்களில் ஒருவர். சித்தமருத்துவ வரலாறு, சைவ சித்தாந்தம், புராணங்கள் ஆகியவற்றை கலந்துகட்டிய பாடம் ஒன்று முதலாண்டு சித்தமருத்துவப் படிப்பில் உண்டு – தோற்றக்கிரம ஆராய்ச்சி என்று பெயர். அதனை இவர் பயிற்றுவித்த நல்லூழ் வாய்க்கப்பெற்றேன். பின்னர் இரண்டாமாண்டில் நரம்பியல் எங்களுக்கு நடத்தினார். இன்றும் தொடரும் அவரது ஆர்வமும், தன் முனைப்பும், நவீனத்துவ மனதோடு சித்தமருத்துவதை அணுகும் அவரது பார்வையும் அக்காலங்களில் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தன. நவீன அறிவியல் கண்ணோட்டத்தோடு, பெரும்பாலும் தம் பெற்றோர்களின் வற்புறுத்தலால், சித்த மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்த எங்களுக்கு நவீன அறிவியல், மரபான சித்தமருத்துவத்துடன் இணையும் புள்ளிகளை கோடிட்டு காட்டிய முன்னோடிகளுள் ஒருவர். அரசாங்க வேலையை உதறிவிட்டு, தான் தொடங்கிய அமைப்பின் மூலம், சித்தமருத்துவ மூலிகைகள், சுவடிகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.


மரு. மைக்கேல் ஜெயராஜ் – நான் கல்லூரியில் சேரும்பொழுது தனது படிப்பை முடித்திருந்தார். தமிழ் மருத்துவக் கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவுவதில் மிகுந்த முனைப்புடன் இருந்தார். அதன் தொடர்ச்சியாக கற்ப அவிழ்தம் என்ற இதழை பின்னர் தொடங்கினோம். இனிமேல் இக்கட்டுரையில் குறிப்பிடப்படப்போகும் அனைவரும் இவரது உந்துதலினால் அல்லது தொடர்பால் முனைப்புற்றவர்கள் என்றால் அது மிகையில்லை. சித்த மருத்துவம் குறித்த மரபான பார்வையுடையவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1991 மே மாதம் இவரின் வழிகாட்டலில் நாங்கள் மேற்கொண்ட ”அகத்தியர் பொதிகை” மூலிகைப் பயணம் எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இன்று முண்டந்துறை வனப்பகுதியில் சாகசம், ஆன்மீகம் என்ற பெயர்களில் நடத்தப்படும் விளம்பர பயணங்களோடு ஒப்பிடுகையில், எந்தவித முன் தயாரிப்புகளும் இல்லாமல் ஐந்து நாட்கள் நாங்கள் செய்த பயணம் உண்மையில் எங்கள் வாழ்நாளெல்லாம் நினைத்து பெருமைப்படவேண்டியதாகும். இன்றும் இவர் இத்தகைய முலிகை கண்டறியும் பயணங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். கற்ப அவிழ்தமும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்துகொண்டுவருகிறது.


மரு. கு. சிவராமன் – இவரைக் குறித்து நான் சொல்லி தெரிந்துகொள்ளும் நிலையில் இன்றைய இணைய தமிழர்கள் யாரும் இல்லை. அவிழ்தம் இதழின் முதல் ஆசிரியராய் இருந்தவர். ஒரு காலத்தில் கல்லூரியில் போராளியாய் இருந்தவர். இவர் முன்னின்று நடத்திய மாணவர் போராட்டம்தான் எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது. பிற்பாடு அவர் சென்னையில் தனியாக ஆரோக்கியா சித்தமருத்துவமனை ஆரம்பித்தபோது நான்தான் முதலில் அவருக்கு ’பதிலீடு’ மருத்துவராக இருந்தேன். பல்திறமை வாய்ந்தவர். அதில் ஒன்றுதான் அவரது சமையல் திறமையும். அதன் தொடர்ச்சியாகத்தான் அவரது சிறுதானிய உணவு ஆர்வங்களைப் புரிந்துகொள்ளமுடியும். எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பவர். மிகுந்த நகைச்சுவை நுண்ணுனர்ச்சி கொண்டவர். 


மரு. வெ. கணபதி – இன்று விவேகானந்தா கேந்திரத்தின் மூலம் வர்ம மருத்துவ முறையை பயிற்றுவிக்கும் ஆசான்களில் ஒருவராக உள்ளார். மரபான சித்தமருத்துவ பார்வையுடையவர். எனக்கு இரண்டுவருடங்கள் கல்லூரியில் மூத்தவர். சிலகாலம் அவிழ்தத்தின் ஆசிரியராய் இருந்தவர். எனக்கு, குழந்தை தசையிழிவு நோய் சிகிச்சை முறையை கடத்த முயன்று தோல்விகண்டவர்.



மரு. ஜெ. ஸ்ரீராம் – எனக்கு ஓராண்டு மூத்தவர். சித்தமருத்துவப் புத்தகங்களை தேடித்தேடி நகலாக்கம் செய்வதை ஒரு குடிசைத்தொழிலாகவே செய்துவந்தவர். நவீன பார்வையுடையவர். தற்போது அரசு சித்தமருத்துவராக பணியாற்றுகின்றார். குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் சித்த மருத்துவ நுணுக்கங்களை சித்த மருத்துவர்களுக்கு கடத்தி வருபவர்.




இன்னும் சிலர் உள்ளனர். ஆயினும் இவர்களே எனக்கு நெருக்கமானவர்கள் அல்லது என்னை செதுக்கியவர்கள். இன்றைய சித்தமருத்துவத்தின் முகங்களாக இவர்களை தவிர்த்துவிட்டு யாரும் பட்டியலிடமுடியாது. இவர்கள் அனைவரிடமும் பொதுவான ஒற்றுமைகள் பலவுண்டு. ஸ்ரீராம் தவிர வேறு யாரும் அரசு சித்தமருத்துவர்கள் இல்லை. திருநாராயணன் கூட அரசு வேலையை உதறிய பின்னரே மிகவும் படைப்பூக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். பெரும்பாலனவர்கள் சித்த மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கவில்லை. ஆயினும் தம் முனைப்பால் சித்தமருத்துவத்தின் வெவ்வேறு துறைகளில் இன்று பொருட்படுத்தக்கூடிய அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் அரசு வேலையை தேடிச் செல்லாததால் இவர்கள் இன்னும் படைப்பூக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் போலும் (ஸ்ரீராம் போன்றவர்கள் விதிவிலக்கு). ஆயினும், மாணவர்களோடும், இளம் சித்த மருத்துவர்களோடும் இன்றும் இவர்களைனைவரும் உரையாடலில் உள்ளனர். தொடர்ந்து சித்தமருத்துவமும் புரிந்துகொண்டுள்ளனர். 

சனி, 14 ஜனவரி, 2012

உதிரி எண்ணங்கள்

நேற்று புத்தகக் காட்சியிலிருந்து வெளிவரும் போது சுண்டல் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டேன். புற்றீசல்போல புத்தகக் காட்சி வாசலெங்கும் சுண்டல் விற்பவர் பலர் முளைத்திருந்தனர். கூடவே சோப்பு நுரையில் முட்டைவிடும் உபகரணங்கள்,  அமுதனின் மொழியில் பப்ளூஸ், விற்பவர்களும்.  சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இவர்களே கிராமியத் திருவிழாக்களுக்கான மனநிலையைக் கொண்டுவருகின்றனர். சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தீடிரென்று ஓரெண்ணம் - யாராவது என் துறையைச் சார்ந்த புண்ணியவான் இம்மாதிரி சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுண்டல்களினால், சுண்டெலிகளால் அல்ல, தான் சென்னையில் பலருக்கும் பேதி நோய் எற்பட்டது என்று ”ஆராய்ந்து” சொல்லிவிடுவோனோ என்று பயம் ஏற்பட்டது. இப்பொதெல்லாம் எனக்கு என் துறை சார்ந்த ஆராய்ச்சி மேல் வெறுப்புதான் வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் இயற்கையிலிலிருந்து நம்மை வெகுவாகப் பிரித்து வெறும் தொழில்நுட்பத்தையே மட்டும் நம்பி வாழும் அடிமைகளாக மாற்றுகிறதோ?!.

இன்று எங்கள் பகுதிக்கு யானை வந்தது. அமுதனை ஸ்கூட்டரில் வைத்து யானை பார்க்க அழைத்துப் போனேன். யானை பழக்க தோஷத்தில் தும்பிக்கை நீட்டியது. ஐந்து ரூபாய் கொடுத்து யானையிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டோம். அந்த கணப்பொழுதில் அடச் சே எவ்வளவு மகத்தான உயிரினம், நாமும் அதை பிச்சை எடுக்க வைக்க உறுதுணயாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பளிச்சிட்டது. ஆயினும் அமுதனின் சந்தோஷத்திற்காக இது தவறில்லெயென மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அமுதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இரண்டுநாள் முன்புதான் அவனுக்கு புத்தகக் காட்சியிலிருந்து யானை புத்தகம் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தோம்.

பின்னர் யானைக்கு பழம் வாங்கிக் கொடுக்கலாம் என அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றோம். எங்கும் பழம் கிடைக்கவில்லை. வாழைக் காய் தார்கள்தான் தொங்கின. வாழைகாய் கொடுத்தா யானை நம்மை அடிச்சிருமாப்பா எனக் கேட்டான், முன்பு சொல்லியிருந்த யானைக்கு தேங்காயில் ஊசி வைத்துக் கொடுத்த கதை ஞாபகம் வந்திருக்கும்போல. திரும்பி வரும்போது அப்பா யானை நமக்கு ஃபிரண்டாப் பா என்றான். ஆமா என்றேன்; அப்படின்னா அதுக்கு நம்ம ஆதவன்னு பேர் வைக்கலாம் என்றான். அப்பெயர் இரண்டு மாதங்களில் அடுத்து எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகயிருந்தால் நாங்கள் வைக்க உத்தேசித்திருக்கும் பெயர். 

திங்கள், 17 செப்டம்பர், 2007

ஞான ராசசேகரனின் பெரியார்...

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.

தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

வெள்ளி, 22 ஜூன், 2007

அப்துல் கலாமும், ரஜினிகாந்தும்

அறிவு, திறமை ஆகியவைகளைவிட வேறு சில தன்மைகளால் பலரும் பிரபலமடைந்துவிடுகிறார்கள். அத்தன்மைகளில் முக்கியமான ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ள பொதுப்புத்தி சார்ந்து ஒழுகுதல். புனிதம் என்று புனையப்பட்டு சடங்குகளாக இறுகிப் போய்விட்ட பொதுப்புத்தியை தானே வளர்த்துக்கொண்ட தன் தனித்தன்மையாலும், அனுபவத்தாலும் மீறுபவர்களை நம் குமுகாயம் என்றுமே மதிப்பதில்லை. இந்திய குமுகாயத்தின் பொதுப்புத்தியில் எளிமை, சிக்கனம், பிரம்மச்சரியம், ஆன்மீக நாட்டம் போன்ற சில விசயங்கள் புனிதங்களாகக் கட்டமைக்கப்பட்டவை.

எனவே இவைகளைக் கைக்கொள்வதாக நம்பப்படும் கலாமும், ரஜினியும் பிரபலமாகயிருப்பதில் வியப்பேதுமில்லை. பொதுவாக நம் குமுகாயம் இன்னமும் வளர் இளம்பருவ (Adolescent mentality) நிலையைத் தாண்டி சிந்திப்பதேயில்லை.

கலாம் ஒரு அறிவியலாளரா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். சரியாகச் சொன்னால் அவர் ஒரு தொழிற்நுட்பவியலாளர். அவர் அறிவியலில் எந்த கருதுகோளையும் (Hypothesis) முன்வைக்ககவில்லை; எதையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருப்பதையே போலச் செய்தார். ஆனால் அவரை ஏதோ இந்திய அறிவியல் வரலாற்றில் வராதுவந்த மாமணியைப் போல் நம் ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றன. அதற்கு அவரது தனிப்பட்ட குணநலன்களும், அவரை தனது சுயநலத்திற்காக அப்போது பயன்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதாவின் அரசியலும் முக்கியமான காரணம். ஆனால் உண்மையான அறிவியலாளரான பேரண்டவியலாளர் (Cosmologist) ஜெயந்த் நார்லிகர் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?

கலாமின் கனவுகள் திரைப்பட இயக்குனர் சங்கரின் கனவுலக (Fantacy) சினிமாவைப் போன்றவை. அவைகள் வளர் இளம்பருவ நிலையினருக்கான குதுகூலத்தைத் தருமேயன்றி நடைமுறைச் சாத்தியமற்றவை (காட்டாக - நதி நீரிணைப்பு).


இதே கருத்துக்கள் ரஜினிக்கும் பொருந்தும். ஒரே வித்தியாசம் கலாம், ரஜினியோடு ஒப்பிடும்போது, சமீபத்தில்தான் புகழடைந்ததால் அவர் மீது ரஜினி அளவிற்கு எதிர்மறை விமரிசனங்களில்லை. அறிவுமுதிர்ச்சியடையாத, சரியாகச் சொன்னால், அரசியல், அறிவியல், கலை போன்ற சகல துறைகளிலும் விழிப்புணர்ச்சியற்ற ஊடகங்களும், பெருவாரியான மக்களும் கொண்ட நம் குமுகாயத்தில் இதெல்லாம் சகஜமம்தானெனினும், இத்தகைய மனிதர்கள் உதிர்க்கும் மேலோட்டமான வார்த்தைகள் அதிக கவனம் பெறுவது சற்று கவலையளிக்கிறது.

வெள்ளி, 4 மே, 2007

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்?

கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழுவதுதான்; காரணம் நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால் சன் டிவி என்ற பூதம் மூலம் திமுக தற்போது செய்துவரும் அரசியல் கண்டிக்கப்படவேண்டியது. ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவின் தலைமையை ஏற்பவர் யார் என்று சன் தொலைக்காட்சி உலகப்புகழ்பெற்ற?! ஏ.சி. நீல்சன் நிறுவனம் மூலம் ஒரு கருத்துக்கணிப்பை (திணிப்பை) நடத்தி முடிவை வெளியிடப்போகிறதாம். இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன இப்போது?; சன் டிவி என்ற ஊடக மிருகத்தைக் கொண்டு திமுக வேண்டுமென்றே குட்டயைக் குழப்பிக் குளிர்காய நினைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சன் தொலைக்காட்சி ஒரு தனி நிறுவனம் அதற்கும் திமுகவிற்கும் தொடர்பு கிடையாது என யாரும் வாதிட வந்துவிட வேண்டாம். சன் தொலைக்காட்சியால் திமுகவிற்கும், திமுக வினால் சன் தொலைக்காட்சிக்கும் கண்டிப்பாக ஆதாயம் இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் வளர்ச்சி பின்னொரு காலத்தில் நம் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக விளங்குவதற்குவதற்கான அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. ஏனெனில் நாம் (பெரும்பாலும் அறம் குறைந்த) ஊடகங்களால் கட்டமைக்கப்படும் அவல உலகில் வாழுகிறோம்; அரசியலும் மதமும் போல் அரசியலுடன் இணைந்த ஊடகம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்விசயத்தில் (தற்போதைக்கு) ஜெயா தொலைகாட்சி குறித்துப் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் சன் தொலைக்காட்சியை விடவும் மோசமான கருத்துத் திணிப்புகளைச் செய்தாலும், அவர்களின் வீச்சு ஒரு சிறு கும்பலைத்தாண்டி வெளியே செல்லப்போவதில்லை என்பதால்.

சன் தொலைக்காட்சியோ அல்லது அதனால், தேவையில்லாமல், தலையில் வைத்துக் கொண்டாடப்படும் ஏசி நீல்சன் அமைப்போ, (ஏ.சி. நீல்சன் நிறுவனம், உலகப்புகழ்பெற்றது என்பதே சன் தொலைக்காட்சியால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு புனைவு!) ஒருபோதும் தன் கருத்துக் கணிப்புகள் குறித்த நெறிமுறைகளை (Methodology) வெளிப்படையாகச் சொன்னதில்லை. பொதுவாகப் பெரும்பாலான ஊடகங்களும் பூடகமாகவே இக்கருத்துக் கணிப்புகளைச்/திரிப்புகளைச் செய்தாலும், சன் தொலைக்காட்சியின் வீச்சு காரணமாக அதன் பாதிப்பு அதிகம் இருக்கும். இவ்வாறு வளார்ந்துவரும், முன்பு நினைத்துப் பார்த்திராத, பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு அரசு விரைவில் சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு ஒரு நிறுவனம் மட்டுமே, குறிப்பாக அரசியல் பிண்ணனி கொண்ட, அச்சு, மின்னணு ஊடகத் துறைகளில் ஏகபோக உரிமை கொண்டாட அனுமதிக்காதபடி அச்சட்டம் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்காக கலாநிதி மாறனின் திறமையை நான் குறைசொல்லவில்லை. ஆயினும் அரசாங்கத்திடம் எப்போதும் ஒரு கடிவாளம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.

குழலியின் பின்னூட்டத்திற்குப் பிறகான குறிப்பு: இது சற்றுக் கடினம்தான்; மத்திய மாநில உள்ளாட்சி என்ற மூன்றடுக்குகளிலும் அதிகாரம் செலுத்தும் கட்சியின் ஆதிக்கம் இச்சட்டமியற்றுவதில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால் முயன்றால் முடியாததில்லை. இதுகுறித்து அரசியல்வாதிகளிடமோ, சட்ட அறிஞர்களிடமோ ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்பதுதான் கவலையளிக்கக்கூடிய விடயம்.

பின்னிணைப்பு: தினகரன் நாளிதழை சன் தொ.கா வாங்கியபோது திமுக + சன் தொ.கா வின் ஊடக ஆதிக்கம் குறித்து காலச்சுவடு எழுதிய தலையங்கம். அதை ஆதரித்து எம். கே. குமாரும், மறுத்து ராம்கியும் 2005 ல் தங்களது வலைப்பதிவில் எழுதியவற்றை மேற்கண்ட இணைப்பில் சொடுக்கிப் பார்க்கவும். எம்.கே. குமாரின் பின்னூட்டத்தில் நடந்துள்ள விவாதம் கவனிக்கப்பட வேண்டியது. இவ்விசயத்தில் எம். கே. குமாரின் கருத்துக்கள் என் கருத்துக்களுடன் அப்படியே பொருந்திப்போகிறது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2007

இந்திராவின் வாரிசுகளும் ஏகபோக அரசுரிமையும்

நடந்துகொண்டிருக்கும் உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருவாளர். ராகுல்காந்தி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்னவோ அவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவை ஆளத் தகுதியானவர்கள் என்ற தொனியில் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்ன செய்ய!?, இந்திய அரசியல் சனநாயகத்தன்மை பெறுவதற்கு இன்னும் நீண்டதூரம் பயணிக்கவேண்டியதிருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு மேற்குறிப்பிட்ட சுட்டியைச் சொடுக்கவும். அவர் பேசியதின் முதன்மையான சில வரிகள் இங்கே.

"I belong to the family which has never moved backwards, which has never gone back on its words. You know that when any member of my family had decided to do anything, he does it. Be it the freedom struggle, the division of Pakistan or taking India to the 21st century,''

திங்கள், 5 மார்ச், 2007

தமிழக அரசியல் - ராஜீவ்காந்தி படுகொலையை முன்வைத்து

தமிழக அரசியல், 1972 ற்குப் பிறகு, தனிமனித வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அரசியல் தலைவரின் மீதான தனிப்பட்ட காழ்ப்பினை தனது அரசியல் ஆதாயத்திற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டவர் மறைந்த எம். ஜி. ராமச்சந்திரன். இது அவரின் திரைப்படங்களில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதாநாயகன் Vs. வில்லன் என்ற இரட்டை நிலையின் அரசியல் தளத்திலான விரிவாக்கம். திரைப்படங்களில் எம். ஜி. ஆருக்கு வெற்றியைக் கொடுத்த இக்கருத்தாக்கம், சரியாகச் சொன்னால் புனைவு, அரசியல் சூழலிலும் அவருக்குக் கைகொடுத்ததுதான் தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆகக் கொடுமையான ஒரு நிகழ்வு.

இப்புனைவை தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரை விடவும் பன்மடங்கு அதிகமாக தனது (அரசியல்) ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியை முன்வைத்து ஜெ செய்துவரும் அரசியல் ஆகக்கழிவானது. கடந்த சடமன்றத் தேர்தலின்போது 'கலைஞரின் கைமாறு' என்ற அபத்தமான கற்பனையைக்கொண்டு ஜெயா டிவி ஒளிபரப்பிய நிகழ்ச்சியைவிடவும், ஆகக் கேவலமான நிகழ்ச்சியொன்றை நேற்றிரவு 10 மணிக்கு ஜெயா டிவி ஒளிபரப்பியது.

'சென்னை சங்கமம்' என்ற நிகழ்ச்சியை நடத்தியதில் கனிமொழியும், தமிழ் மையம்- ஜெகத் கஸ்பரும் எவ்வாறு அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் என்ற வகையில் ஆரம்பித்த அந்திகழ்ச்சி ராஜீவ்காந்தி படுகொலையில் வந்து முடிந்தது. மொட்டைத் தலைக்கும், முழங்காலிற்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதான் போலும். கனிமொழியும், ஜெகத் கஸ்பரும் முன்னின்று நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு அரசு இயந்திரம் ஏதேனும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் (?) அதுகுறித்தான உண்மையான அக்கறையோடு ஜெயா டிவி இந்நிகழ்ச்சியை வழங்கியிருந்தால் ஒரு ஆக்கபூர்வமான பணியை அது செய்திருக்கும். அதுவல்ல ஜெயா டிவியின் (ஜெயலலிதாவின்) நோக்கம், ராஜீவ்காந்தி கொலையை மீண்டும் கிளறி அரசியல் குளிர்காய நினைப்பதே அவரின் உண்மையான நோக்கம். கருணாநிதியை ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாகக் (கனிமொழியை முன்னிறுத்துவது மற்றும் ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களுக்குக் கைமாறு!?) கூறிக்கொள்ளும் ஜெ, இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் சாதிக்க நினைப்பதுதான் அபத்தத்தின் உச்சகட்டம்.

தமிழக வரலாற்றில் களப்பிரரின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்ற ஒரு கருதுகோள் உண்டு; அது உண்மையோ இல்லையோ, ஆனால் நிகழ்கால தமிழக வரலாற்றில் ஜெயலலிதா ஒரு கரும்புள்ளி என்றால் அது மிகையல்ல.

புதன், 7 பிப்ரவரி, 2007

என் நவீனத்துவ மனம்

சென்றவாரம் என் ஒன்றுவிட்ட அண்ணன் திருமணத்திற்காகத் திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு, அதற்கடுத்த நாள் நடைபெறும் என் நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திருநெல்வேலி செல்ல திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அன்று திருமணநாள் என்பதால் பெருங்கூட்டமே வெவ்வேறு ஊர்களுக்கான பேருந்துகளை எதிர்நோக்கி காத்திருந்தது. அப்போது சிவகாசி மற்றும் இராசபாளையம் செல்லும் இரு பேருந்துகள் வந்தன.

அந்நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க இரு பெண்மணிகள் என்னிடம் வந்து கள்ளிக்குடி செல்ல எந்தப்பேருந்தில் ஏறனும்யா எனக்கேட்டார்கள். நான் ஒரு பஸ் சிவகாசிக்கும், இன்னொன்று ராசபாளையத்திற்கும் செல்கிறது, நீங்கள் எந்த ஊர் செல்லும் பஸ்ஸில் ஏறவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு அவர்கள் இதில் எந்த பஸ் விருதுநகர் வழியாகச் செல்லுதையா எனக்கேட்டார்கள். சிவகாசி பஸ் போகும், ஆனால் அது உங்க ஊரில் நிற்குமா என எனக்குத் தெரியாது எனக் கூறினேன். இதற்குள் இரண்டு பேருந்துமே கிளம்புவதற்கு தயாராகி விட்டிருந்தன. அப்போது என் அருகில் நின்றிருந்த 25 வயதுள்ள லுங்கியணிந்த வாலிபர் ஒருவர் பஸ்ஸில் இருந்த ஒரு பயணியிடம் அண்ணே இந்த பஸ் கள்ளிக்குடியில் நிக்குமாண்ணே எனக்கேட்டார். அவர் ஆமாண்ணு சொன்னதுதான் தாமதம், புறப்பட்டுக்கொண்டிருந்த பஸ்ஸின் பக்கவாட்டில் கையால் பலமாகத் தட்டி பேருந்தை நிறுத்தச் சொன்னார். பேருந்து நிற்கும் சமிஞ்சைகள் தெரிந்ததும் அப்பெண்களைப் பார்த்து நீ ஏறுத்தா எனச் சொல்லி ஏற்றிவிட்டார்.

எனக்கு இச்சம்பவம் சில சிந்தனைகளை விதைத்துவிட்டது. நானும் அந்த வாலிபர் செய்தமாதிரி செய்திருக்கலாம்தான் ஆனால் எனது இயல்பான சோம்பேறித்தனதையும் மீறி என்னை அதைச்செய்யவிடாமல் தடுத்தது எனது நவீனத்துவ மோஸ்தர் முகம்தான் என்று உணர்கிறேன். பொதுவாகவே நான் கத்திப்பேசும் இயல்பினன் அல்ல. மேலும் பொது இடத்தில் சத்தமாகப் பேசுவதை ஒரு அநாகரிகமாகக் கருதுபவன். அந்த இளைஞன் செய்ததுமாதிரி சற்று உரக்கப்பேசி எல்லோர் கவனமும் ஒரு மணித்துளி என்மீது விழுவதை தவிர்க்கும் முகமாகவே அப்பெண்களுக்கு உதவாமல் வாளா நின்றிருந்தேன். அந்நேரத்தில் எனது நவீன மோஸ்தர் முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு அப்பெண்களுக்கு உதவுவதுதான் மனிதநேயமாகயிருந்திருக்க முடியும். ஆனால் என் செய்வது, நவீனத்துவம் சில நேரங்களில் இவ்வாறு மனித நேயத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2007

அலட்சியம் + பொறுப்பின்மை + அராஜகம் = இருசக்கர வாகன ஓட்டிகள்

சென்னையில் (இந்தியா முழுதும் பரவலாக) தற்போது இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பன் மடங்கு அதிகமாகிவிட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதும்?!, உற்பத்தியாளர்களுக்கிடையிலான கடுமையான போட்டியும் அவர்கள் விளம்பரப்படுத்துவதில் காட்டும் தீவிரமும், வங்கிகள் கொடுக்கும் கடனும், இரு சக்கர வாகனங்களின் அதீதப் பெருக்கத்திற்குக் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.

அதனால் மற்றொரு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் இவ்விரு சக்கர வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையும், அலட்சியமும், அராஜகமும் மிகவும் அதிகமாகிக் கொண்டேவருகின்றன. சாலையில் வண்டியை ஓட்டும்போது மட்டுமல்ல, பார்க்கிங் பண்ணும்போதும் அவர்கள் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தானா பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.

என் புரிதலில் அவர்களே, ஆட்டோ, பேருந்து ஓட்டுனர்களைவிடவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல்லாதது, ஒரு வழிப்பாதையிலும் (ஓரமாக) செல்வது, ஒலிப்பானை தேவையில்லாமல் பயன்படுத்துவது, சிக்னல் விழுந்தபின்பும் கடப்பது, நிறுத்துக்கோட்டைத் தாண்டி நிறுத்துவது, சாலையின் வலது பக்கமாக வண்டியை ஓட்டிக்கொண்டு செல்வது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோன்றே கண்ட இடங்களிலும் பார்க்கிங் செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சகஜம். சிலர் கிட்டத்தட்ட சாலையின் நடுவிலேயே பார்க் செய்து நிறுத்துவர். நமக்கு முன்னால் நிறைய வண்டி இருக்கிறதே நாம் இப்படி நிறுத்தினால் பிறர் எப்படி வண்டியை எடுப்பார்கள் என்ற ஓர்மை இல்லாமலேயே தன் வண்டியை அடைத்துக்கொண்டு நிறுத்துவதும் பரவலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை பக்கவாட்டு ஸ்டாண்டு போடுவது அலட்சியம், சோம்பேறித்தனத்தின் மொத்தக் குறியீடு என்பேன். சில நேரங்களில் பக்கவாட்டு ஸ்டாண்டு ஏன் தான் வைக்கிறார்களோ என்று தோன்றுவதும் உண்டு.

நானும் சிலமுறை இவற்றில் சிலவற்றை இடையூறு என்று அறியாமலும் (சில சமயங்களில் அறிந்தும் - கும்பல் சைக்காலஜி) செய்திருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமென நடந்தால் பரவாயில்லை. இப்பிரச்சனைகள் ஒரு விதிவிலக்காக அன்றி விதியாகவே மாறிவரும் சூழல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அவலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் ஏற்படுத்துகின்றர் (ஏற்படுத்துகின்றோம்). ஆகவே மகா ஜனங்களே, (இதைப் படிக்கும் பெரும்பாலோர் இருசக்கர வாகனம் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும், கும்பல் சைக்காலஜியில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்திலும்,) இளைஞர்களாகிய நாம் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வோமாக

புதன், 6 டிசம்பர், 2006

சன் டிவியின் தங்கவேட்டை

சன் தொலைகாட்சியில் சனி, ஞாயிறு இரவுகளில் ஒளிபரப்பப்படும் தங்கவேட்டை நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பதுண்டு. ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பதிலடியாக ராதிகாவின் ராடான் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, முதலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பின்னர் இடையில் நடிகை ஊர்வசி தொகுத்து வழங்கினார். ஊர்வசியைப் பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. சுரத்தே இல்லாமல் அவர் நிகழ்ச்சியை நடத்தியவிதம் நன்றாக இல்லை. முன்பு, ராஜ் டிவியில் அவரே பல வேடங்களில் தோன்றி நடத்திய நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருக்கிறேன். அப்படியிருந்த அவரா இப்படி! எனும் அளவிற்கு ஊர்வசி நிகழ்ச்சியை நடத்தியவிதம் இருந்தது.

பின் சிறிது காலத்திற்குள்ளேயே ஊர்வசி மாற்றப்பட்டு நடிகை கனிகா (பைவ் ஸ்டார்) அமர்த்தப்பட்டார். கனிகாவின் வரவிற்குப் பிறகு தங்கவேட்டை புதுப்பொலிவு பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒரு தொழில்முறை தொகுப்பாளினியைவிட கனிகா நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்துகிறார். ரம்யா, குஷ்புவைப்போல் தேவையில்லாமல் கத்திப்பேசாமல் அதேசமயம், மற்ற பெரும்பாலான (ஆண், பெண்) தொழில்முறை தொகுப்பாளர்களைப் போலல்லாது தேவையற்ற உடல் அசைவுகளை விடுத்து, மிகுந்த யதார்த்தத்துடனும், உயிர்ப்புடனும் நிகழ்ச்சியை நடத்துகிறார். எனக்கு இத்தைகைய நிகழ்ச்சிகளில் பொதுவாக விருப்பம் இல்லாவிடினும், கனிகா நடத்தும் அழகிற்காக இந்நிகழ்ச்சியை சிலமுறைகள் முழுவதும் பார்த்திருக்கிறேன். அவரது தமிழும், சிறு குழந்தையைப்போல் அனைவருடனும் பேசும் பாங்கும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், அவர் பேசும்போது அவரது அழகு இன்னும் அதிகமாகப் பரிமளிக்கிறது.

வெள்ளி, 27 அக்டோபர், 2006

பெரியோர் என வியத்தலும் இலமே...

"பெரியோர் என வியத்தலும் இலமே, சிறியோர் என இகழ்தலும் இலமே" - என்ன அருமையான வரிகள். இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் எனக்கொரு சம்பவம் நடந்தது. என் துறை சார்ந்த ஒரு சிறிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நான் ஒழுங்கு செய்யவேண்டியிருந்தது. எம் துறை சார்ந்த பிற துறைகளில் வல்லுநர்களான சிலரை அதற்கு அழைத்திருந்தோம். 10 நாட்கள் இடைவெளியில் நடத்தவேண்டியிருந்ததால் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். மேலும், தொலைபேசி வழியாகவும் கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தை இரண்டு நாட்கள் முன்பே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், கூட்டத்திற்கு இருவரைத்தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். வராத இருவரும் சென்னையில் தத்தமது துறைகளில் பெரும் புகழுடன் விளங்குபவர்கள். அவர்களிருவரின் மேல் எனக்கு பயம் கலந்த மரியாதையுண்டு.
ஏன் வரவில்லையென அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் வரமுடியாது என்பதைத் தன்னுடய காரியதரிசி மூலம் எனக்குத் தெரியப்படுத்திவிட்டதாக ஒருவர் கதையளந்தார்; மற்றொருவரோ தன்னுடைய காரியதரிசி கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தைத் தனக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும், நாங்கள் அனுப்பிய கடிதம் அவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது எனவும் கூறினார். அவரது காரியதரிசியிடம் கேட்டபோது, இது உண்மையில்லை எனத் தெரியவந்தது. இவ்விருவர் வராததற்கும் வேறு உண்மையான காரணம் இருந்திருக்கலாம்; ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் அவ்வாறு பூசி மழுப்பியது எனக்கு மிகுந்த வருத்தத்தையளித்தது. இதில் இவர்களுக்கு தத்தமது துறைகளில் அறநெறியில் ஒழுகுபவர்கள் என்ற நற்பெயர்வேறு உண்டு. இந்நிகழ்ச்சி எனக்கு கணியன் பூங்குன்றனாரின் மேற்சொன்ன கவிதை வரிகளை ஞாபகப்படுத்திற்று.

வியாழன், 5 அக்டோபர், 2006

திருவாளர் கமல்ஹாசன் குறித்து எனது ஆதங்கம்

சர்ச்சைக்குரியவராக இருப்பது ஒன்றும் திருவாளர் கமல்ஹாசனுக்குப் புதிதல்ல. மூடத்தனங்களும், கட்டுப்பெட்டித்தனங்களும் நிறைந்த ஒரு சமூகத்தில், தன்னுடைய கருத்துக்களாலும், செயல்பாடுகளாலும் நல்ல சலனங்களை ஏற்படுத்தமுனையும் கலைஞனை சராசரி வெகுசன மனோபாவம் சர்ச்சைக்குரியவராகவே கருதும். ஆயினும், 'வேட்டையாடு விளையாடு' ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை அவ்வகைத்தானதல்ல. அப்படத்தில் கமல் ஏற்றிருக்கும் ராகவன் எனும் பாத்திரம் ஒரு காட்சியில் பேசும் வசனம், ஒருபாலின ஈர்ப்புடையோரை, இச்சமூகம் அவர்களைப்பற்றி ஏற்கனவே கொண்டிருக்கும் தவறான (அப்படித்தான் அறிவியல் சொல்கிறது) கருத்தாங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் வரும் வசனம் ராகவன் எனும் பாத்திரம் பேசும் வசனமாக எடுத்துக்கொள்ளப்படாமல் கமல்ஹாசனின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பேயதிகம். அக்குறிப்பிட்ட வசனத்திற்கு கிடைக்கும் கைதட்டலே இதற்குச் சான்று. ராகவன் பாத்திரத்தை வேறொரு நடிகர் ஏற்று நடித்திருந்தால் அவ்வசனம் இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்திருக்காது. ஏனெனில், மற்றைய நடிகர்களைப் போல் கமல் சமூகத்தை ஒற்றைபரிமாணக்கோணத்தில் பார்ப்பவரல்ல. அவரது திரைப்படங்களில், குறிப்பாக அவரது சொந்தத் தாயாரிப்பில் வெளிவருபவற்றில் இதனை அவதானிக்கலாம். சமூக ஓர்மையுள்ள கமல் எவ்வாறு இவ்வசனம் பேசி நடிக்க சம்மதித்தார் என்பது எனக்கு ஆச்சிரியமாகவேயுள்ளது. முன்பொருமுறை செவ்வியொன்றில், திரைப்படப் படப்பிடிப்புக் காட்சியொன்றில் நடிகைகளக் குறித்து அவதூறாகப் பேசிய பார்வையாளர் ஒருவரை தான் அடித்துவிட்டதால், தனக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்த மன உளைச்சலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதுபோன்றே, சில ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்த தென்மாவட்ட சாதிக்கலவரங்களுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தனது 'தேவர் மகன்' திரைப்படமும் ஒரு காரணம் என்பதையுணர்ந்து, தான் இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கமல், வே-வி படத்தில் அப்படியொரு வசனத்தை பேசி நடித்திருப்பது மிகுந்த துரதிர்ஷ்டவசமானது. திருவாளர் கமல்ஹாசனை எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் கொண்டிருந்தாலும், அவரது இச்செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையேயளிக்கிறது.

வியாழன், 6 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம் - 2

இந்தப் பதிவு நான் செல்வன் அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு எதிர்வினைகள் வந்தபோது, அவற்றிற்குப் பதிலாக இட்டது. பின்னூட்டம் நீண்டுவிட்டதால், தனிப் பதிவாகவும் இங்கு இடுகிறேன். திரு. செல்வனின் பதிவிற்குச் செல்ல இங்கு சொடுக்கவும்.

பெண்களின் மாத விலக்கு நாட்களைக் கருத்தில் கொண்டே அதாவது பெண்களின் நலனை முன்வைத்தே?!, அக்காலப் பெரியோர், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கு கடும் விரதமிருந்து, 18 படியேறி வருதல் இயலாது எனும் காரணாத்தாலேயே, மாதவிலக்கு நிற்காத பெண்கள் பின்வழியாகச் செல்லுதல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது ஒரு பம்மாத்து என்பது என் கருத்து.

ஐயா, பின்பக்கம் வழியாகச் சென்று தரிசிப்பது, என்பதே கடந்த சில வருடங்களில் (வலிந்து) ஏற்படுத்தப்பட்ட ஒரு வழக்கம் என நினைக்கிறேன். அதாவது, கோவில் நிர்வாகம் விதிகளைச் சற்று தளர்த்தியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். என் யூகம் தவறாகவுமிருக்கலாம்; அதாவது ஆதி காலம் முதற்கொண்டே, சபரி மலையில் பின்வழி தரிசனம் வழக்கத்திலிருந்து வந்திருக்கலாம்.

ஆனால், அதுவல்ல என் வாதம். உண்மையிலேயே, பெண்கள் மீது கரிசனமிருந்திருந்தால், மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கென்று, தனியாக அரை மண்டலம் (20 அ 24 நாட்கள்) விரதமிருக்க வைத்து, பெருவழிப் பாதைப் பயணம், 18 படியேற்றம் போன்றவற்றை அனுமதித்திருக்காலாமே. பெண்களை அனுமதித்தால் தீட்டுப் பட்டுவிடும் என்ற காலாவதியாகிப்போன நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களை இன்னும் பெருவழிப்பாதை, 18 படி ஆகியவற்றை பயன்படுத்தவிடாது தடுப்பது தவறானது என்பது என் வாதம்.

மாதவிலக்கு என்பது பெண்களுக்கு மட்டுமே, பிரத்யேகமாக நடைபெறும் ஒரு உடலியக்க நிகழ்ச்சி. எப்படி நாமெல்லாரும், மல, ஜலம் கழிக்கிறோமோ அதுபோன்றே பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை மாதவிலக்கு ஏற்படும். இது ஒரு இயற்கை நிகழ்வு. என்ன, பொதுவாக பெண்கள் மாதவிலக்கான நாட்களில் சற்று சோர்வாக இருப்பார்கள். அந்த நாட்களில் பெண்கள் சோர்வடைவார்கள் என அறிந்திருந்த பெரியோர்கள் அதற்கேற்றவாறு அரைமண்டல விரதமிருக்க பெண்களை அனுமதித்திருக்கலாமே. அதைவிடுத்து தீட்டு என்று, இன்று முட்டாள் தனமாகத் தெரியும், ஒரு கருத்தாக்கத்தைக்கொண்டு பெண்களைத் தள்ளி வைப்பது மிகவும் தவறான செயல். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடு. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள் அறிவியல் விளக்கங்களையளித்து வக்காலத்து வாங்குவதும் தவறு.

ஏதோ, அந்தக்காலத்தில் நிலவிய கலாச்சார சூழலில், அவர்களுக்கிருந்த அறிவு வளர்ச்சியைக் கொண்டு சில விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதை இன்னும் பிடித்துக்கொண்டு தொங்குவது தான் தவறானது என்பதே என் வாதம். (அப்படியாயின், மல, ஜலம் கழிப்பதும் ஒரு தீட்டுதானே, 40 நாட்களும் மல, ஜலம் கழிக்காதவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றிருந்தால் என்னவாகும்) அதைத்தான், என் முந்தைய பின்னூட்டத்திலும் 'மாற்றத்தால் ஆகியதே உலகம்' என்வே சபரி மையிலும் காலத்திற்கேற்ப மாற்றம் நிகழ வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியிருந்தேன்.
கடும் விரதம் அனுஷ்டித்துத்தான் ஐய்யப்பனை தரிசிக்கவேண்டும் என இருந்ததால் தான், அக்கோவில் மேல் பலருக்கும் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு, அக்கோவில் மிகவும் பிரபலமடைந்தது. (30 - 40 ஆண்டுகளுக்குள் தான் இது நடந்தது என நினைக்கிறேன்) மேலும் 'மகரஜோதி?!' போன்ற அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளும் கோவிலின் பிரபலத்திற்கு ஒரு காரணம். பல பழம்பெருங் கோவில்களைப் பின்னுக்குத்தள்ளி விட்டு ஐய்யப்பன் தனது 'மார்க்கெட்டிங் உத்தியால்' பிரபலமடைந்தது இங்ஙனமே. அதைத் தக்கவைத்துக் கொள்ளவே பின்வழி தரிசனமுறை போன்று விதிமுறைகளில் சில 'தள்ளுபடிகள்' செய்யப்பட்டிருக்கலாம். அது போன்றே மாதவிலக்கான பெண்களுக்கும் விதிமுறைகளில் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே என் அவா. மாற்றத்திற்குட்படாத எவையும் காலத்தால் அடித்துச் செல்லப்படும். இது மதம், ஆன்மீகம், அறிவியல், கலை, சினிமா, மருத்துவம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் பொருந்தும். மேலும் மக்களுக்குத்தான் கடவுளே தவிர, கடவுளுக்காக மக்களில்லை. ஒரு பொம்மலாட்டக்காரன் போல் மக்களை ஆட்டுவிக்கும் கடவுள் எனக்குத்தேவையில்லை என்பது என் கருத்து. அதற்கு எஸ். கே ஐயா போன்றவர்கள், காலத்திற்குதவாத வழிமுறைகளை தூக்கிப்பிடிப்பதற்காக, அறிவியல் முலாம் பூசிய புதிய விளக்கங்களையளிப்பது தவறு என்கிறேன்.

எஸ். கே அவர்கள், கட்டுப்பெட்டித்தனங்களை தான் அப்படியே நம்புகிறேன், அவற்றை இன்றைய அறிவு கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருப்பாராயின் அவருடன் வாதம் புரிய வேண்டிய அவசியமெனக்கில்லை. ஆனால், அவர் கடவுளர் மேலிருக்கும் தீவிரப் பற்றுதலினால், காலாவதியாக வேண்டிய கருத்தாக்கங்களை தூக்கிப்பிடிக்கிறார் என நான் நம்புவதால் இப்பின்னூட்டம். 'Old habits die hard' தானே. எனக்கும், நான் நம்பும் சில விடயங்களில், பகுத்தறிவிற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பான வழக்கங்களிருக்கலாம் (இருக்காது என நம்பினாலும்). சற்று கார சாராமாக இவ்விடயத்தை கையாண்டிருப்பதின் நோக்கம், சபரிமலையில் நடைபெறும் ஜனநாயகத் தன்மையற்ற போக்கைக் கண்டிக்கும் விததில்தானே தவிர, யாரையும் தனிப்பட்டமுறையில் புண்படுத்தும் நோக்கத்திலல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், நண்பர். திரு. வஜ்ரா சங்கர் அவர்கள் காரல் மார்க்ஸ் ஒரு Plagirist என போகிறபோக்கில் அவதூற்றை வீசிச் செல்கிறார். மாற்றமே உலகில் நிலையானது எனக் கீதையிலும் சொல்லியிருக்கலாம். மார்க்ஸ் கீதையையும் வாசித்திருந்திருக்கலாம், (எனக்குத் தெரியாது) அதனால் பாதிப்புமடைந்திருக்கலாம். அதற்காக அவர் காப்பியடித்தார் என்று அவதூறு சொல்லக்கூடாது. நான் கீதைக்கோ, மார்க்சுக்கோ காவடி தூக்கவில்லை. ஆயினும் திரு. சங்கர் அவர்கள் ஆதாரங்களைக் காட்டமுடியுமா? யாரும் இங்கு சுயம்பு இல்லை. இது கீதாசிரியருக்கும், மார்க்சுக்கும், ஏன் எனக்கும், உங்களுக்கும் பொருந்தும். நம்முடைய இன்றைய அறிவு, எண்ணங்கள் எல்லாம் நம்மூதாதையரிடமிருந்து வந்ததே. அதற்காக அவற்றையே பிடித்து தொங்கிக்கொண்டிராமல், அவற்றை மேம்படுத்த வேண்டுமெயன்றி, அவர்கள் சொன்னதே வேதம், (இங்கு வேதம் என்பதை கேள்வி கேட்காமல் நம்புவது என்ற பொருளில் கையாண்டுள்ளேன்) முக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை என நம்பக்கூடாது என்பதே என் கருத்து. அதுவே உண்மையான தத்துவ விசாரம். உண்மையான அறிவியலும், ஆன்மீகமும் போதிப்பது அதையே. நண்பர்கள் என்னைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கருத்தை வலியுறுத்தும் வேளையில், யார் மனத்தையவது நான் புண்படுத்தியிருந்தால் மன்னித்தருள வேண்டுகிறேன்.

Conflict of interest: எனக்கு கடவுள் நம்பிக்கையின் மேல் தற்போதைக்கு நம்பிக்கையில்லை.

குறிப்பு: அதற்காக யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம் என எச்சரிக்க வேண்டாம். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு போடும் எண்ணமுள்ளது.

சனி, 1 ஜூலை, 2006

சபரிமலை ஐய்யப்பன் கோவில் விவகாரம்

கடந்த சில நாட்களாக சபரிமலை ஐய்யப்பன் விக்கிரகத்தைத் தொட்டு நடிகை ஜெயமாலா வணங்கினார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. கோவிலில் 'பிரசன்னம்' பார்த்த பணிக்கர் (முழுப்பெயர் தெரியவில்லை), இதனால் ஐயப்பன் கோபமடைந்துள்ளதாகவும், விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஒருபோதும் நடக்கவில்லையெனவும், பணிக்கர்தான் நடிகையுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்கிறார் எனவும் கோவில் நிர்வாகம் சொல்கிறது. இல்லை, கோவில் பூசாரிகள் தான் என்னை கர்ப்பக்கிருகத்திற்குள் அழைத்துச் சென்று ஐயப்ப விக்கிரகத்தைத் தொட்டு வணங்குவதற்கு அனுமதியளித்தார்கள் என நடிகையும் தெரிவித்துள்ளார்கள்.
இச்சர்ச்சையிலுள்ள பெரிய கூத்து என்னவெனில், இந்நிகழ்ச்சி ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது என பணிக்கர் தனது 'பிரசன்னத்தின்'(!?) மூலம் தற்போது கண்டுபிடித்துள்ளார். 1987-ல், தான் கருவறைக்குள் நுழைந்ததாக ஜெயமாலாவும் தெரிவித்துள்ளார். அப்படியாயின், பணிக்கரின் 'பிரசன்னத்தின்' படி, கோபமடைந்துள்ள ஐய்யப்பன் கடந்த 15 வருடங்களாக ஏன் தனது கோபத்தை வெளிக்காட்டவில்லை என்ற கேள்வியெழுகிறது (ஒருவேளை தவணை முறையில் வெளிக்காட்டுகிறாரோ - என் மனைவியின் பதில்) இந்நிகழ்ச்சி உண்மையில் நடந்ததோ நடக்கவில்லயோ அதுவல்ல நமது ஆதங்கம்; இச்சர்ச்சையின் மூலம் நம் சமூகத்தில் சில விரும்பத்தகாத மற்றும் விரும்பத்தகுந்த விளைவுகள் ஏற்படலாம். முதலில் விரும்பத்தகாத விளைவுகள் என்னவென்று பார்க்கலாம்.
இச்சர்ச்சையை, பரபரபிற்காக ஊடகங்கள் வெளியிடுவதால் மக்களுக்கு சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளில் மேலும் நம்பிக்கை பெருக வாய்ப்புள்ளது. இதனால் சோதிடர்களுக்கு, குறிப்பாக மலையாள சோதிடர்களுக்கு, அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், அதிகாரிகள் மற்றும் சாமானியர்கள் மூலம் செல்வம் கொழிக்கும். (தமிழன் மூலம் மலையாளிகளுக்கு செல்வம் சேர்வதை ஒரு தமிழனாக இருந்துகொண்டு நாம் எதிர்க்காமல் இருப்பதா?)
மேலும், பெண்கள் ஐய்யப்பன் கோவிலுக்குள் நுழைவது குறித்து கடுமையான சட்டதிட்டங்களை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும் என்கின்ற ரீதியில் பொதுவுடைமையாளர்கள் ஆட்சி செய்யும் கேரள மாநில அமைச்சரொருவர் பேசியுள்ளதால், ஏற்கனவே கட்டுப்பெட்டித்தனங்கள் நிறைந்த சபரிமலையில், மேலும் பல, காலத்திற்கு ஒவ்வாத, பெண்களுக்கெதிரான வழிமுறைகள் பின்பற்றப்படவும் வாய்ப்புண்டு.
சாதகமான விளைவு என்னவாகயிருக்கலாம் எனில், கர்நாடக சட்டசபையில் (ஒரு கன்னடப் பெண்ணை முன்வைத்து) நடைபெற்றுள்ள விவாதத்தைச் சொல்லலாம். இதன் எதிரொலியாக (அரசியல் நெருக்கடிகளால்), திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களும் நுழையலாம் என்று விதிமுறைகளைத் தளர்த்தவும் வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, சபரிமலை ஐய்யப்பன் கோவில் குறித்து பல மர்மங்கள் மக்களால் தெரிந்தோ தெரியாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன. அவையே இக்கோவில் தொடர்ந்து பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் எனில் அது மிகையன்று. 'மகர ஜோதி' போன்ற புதிர்கள் அவிழ்க்கப்பட்டாலும், ஐய்யப்பன் தொடர்ந்து தனது பிரபலத்தைத் தக்கவைத்துக் கொண்டுதானிருக்கிறார். பெண்களும் தனது கோவிலுக்குள் நுழையலாம் எனத் தேவஸ்வம் போர்டு முடிவெடுத்தாலும், மணிகண்டன் கோபப்படமாட்டார். மாறாக, சமூகத்தில் சரிபாதியுள்ள ஒரு இனம் தன்னைத் தரிசிப்பது குறித்து மகிழ்ச்சியடைவார்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2005

தமிழகத்தை அலைக்கழிக்கும் ஊடகப் புயல்கள்

வங்கக் கடலில் தொடர்ச்சியாக ஏற்படும் புயல் சின்னங்களால், தமிழகம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இயற்கையின் இந்தப் பேரழிவை, எப்படியாவது தாங்கள் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதி, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளால் நடத்தப்படும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் பற்றி வெளியிடும் செய்திகள் சகிக்க முடியாத அளவிற்கு உள்ளன. இன்று அதிகாலை சென்னை எம்ஜியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் 42 உயிர்கள் பலியான சம்பவத்தை இவ்விரு ஊடகங்களும், அதன் பின்னணியிலுள்ள தலைவர்களும் பயன்படுத்திக்கொள்ளும் முறை அவைகளின் அசிங்கமான செயல்பாட்டிற்கு உச்சகட்ட உதாரணம்.






சென்ற திமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில், தாம் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற ஒரே காரண்த்திற்காகவே ஆரம்பிக்கப்பட்டது ஜெயா தொலைக்காட்சி. அதுபோன்றே தினபூமி என்ற நாளிதழும் அதிமுகவிற்கு ஆதரவாக அப்போது தொடர்ந்து செய்திகளை தயாரித்து வழங்கியது. அதுபோன்றதொரு வேலையையே, இப்போது சன் தொலைக்காட்சியும், தமிழ் முரசு மாலையிதழும் செய்துவருகின்றன. மத்திய அரசு வழங்கும் வெள்ள நிவாரண உதவித்தொகையை, அதிமுக அரசு வரப்போகும் அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் பெறுவதற்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என கருணாநிதி சன் தொலைக்காட்சியில் சொல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, இன்றைய அசம்பாவிதம் யாரோ சில விஷமிகளின் பொய்ப்பிரச்சாரத்தினால் தூண்டப்பட்டது என ஜெயா தொலைக்காட்சியில் கூறுகிறார். அதிகாரப் போட்டியிலுள்ளவர்கள் இவ்வாறு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு உலகம் தழுவியது என்றாலும், தமிழகத்தில் இன்று நடப்பது கடைந்தெடுத்த கேவலம். இவ்விரண்டு கட்சிகளும், அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும் செய்யும் சீரழிவிற்கு என்றுதான் சாவுமணி அடிக்கப்படுமோ?