பக்கங்கள்

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

கள்ளம்



என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனொருவன் தன் ஊரிலிருந்து பேருந்தில் வரும்போது முன்னால் இருந்த அழகான பெண்ணிடம் கை போட்டதாகவும், அவளும் அதற்கு இசைந்து கொடுத்தாள் என்று சொன்னான். அவை போன்ற பல ‘கதைகளை’ அவன் சொல்வதுண்டு. அவையாவும் அவனது கற்பனை என்றும் எந்தப் பெண்ணும் இப்படியெல்லாம் எளிதில் இசைந்துகொடுப்பவர் அல்ல என்பதையும் ஒரளவிற்கு யதார்த்தம் உணர்ந்தவர் புரிந்துகொள்வர்.  தன்னால் இயலாததை இப்படி சிலர் வெளிப்படையாக சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார்கள் என்பதை அப்போதே புரிந்துகொண்டேன். இது நடந்து 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்று கள்ளம் நாவலை படித்தபோது அவன் ஞாபகம் தான் வந்தது. தஞ்சை பிரகாஷ் தனது ஆற்றாமையை பரந்தாம ராஜு என்ற கதாபாத்திரத்தின் மூலம் நாவல் என்ற பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார் போல. 

நாவலை படித்துமுடித்தவுடன் என்னை அறியாமலேயே சே எனச் சற்று சத்தமாக சொல்லிவிட்டேன். எனது நேரத்தை வீணடித்துவிட்டேனே என்ற ஆதங்கத்தில். 100 பக்கங்களுக்கு பின் பிரகாஷ் என்னதான் சொல்ல வருகிறார் என்று அறிய பக்கங்களை புரட்டவேண்டியதாகிவிட்டது. காமமே பேசு பொருளாக இருந்தாலும் அதைத்தாண்டி அதில் ஒன்றுமே இல்லை. அதுவும் மூன்றாம் தரமாகத் தான் இருக்கிறது. 

தஞ்சை அரண்மனை பகுதிகள், தஞ்சாவூர் ஓவியங்களை வரையும் மரபு கொண்டவர்கள் என பிரகாஷ் குறிப்பிடும் ராஜூக்கள் பற்றிய சில விவரணைகள் முதலில் படிக்கத் தூண்டினாலும் பிற்பாடு மிகு செயற்கையாக அவர் சித்தரிக்கும் பாலியல் உறவுகள் அவர் அதை மீறி ஏதும் சொல்ல விழையவில்லை என்பதை எளிதில் உணர்த்திவிடுகிறது.  முன்பு எப்போதோ கமல் ஒரு பேட்டியில், எப்படி சார் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்வீர்கள் என தன்னிடம் ஒருவர் கேட்டதாகச் சொல்வார். பிரகாஷும் கிட்டத்தட்ட கமலிடம் அக்கேள்வியைக் கேட்ட மனிதரை நினைவூட்டுபவராகவே தெரிந்தார். கள்ளத்தில் அவர் சித்தரிக்கும் பாலியல் உறவுகளும் புளு பிலிம் படங்களின் செயற்கையான காட்சிகளையே நினைவூட்டின. சிறிதும் நம்பகத்தன்மையற்ற, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கோ அல்லது தனது ஆற்றாமையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்டதாகவே கள்ளம் உள்ளது. 

தன் தந்தை படைப்பது கலையே அல்ல, ஆனால் அசல் கலைஞனான தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று பல இடங்களில் பரந்தாம ராஜூ சொல்கிறான. ஆனால் அவன் கலைஞன் என்பதற்கான போதுமான தடயங்களை பிரகாஷ் கள்ளத்தில் வைக்கவில்லை. அவர் சொல்லும் கலை அவர் பாலியல் சித்தரிப்பை போல் விடலைத்தனமாகவேயுள்ளது. ரஜினி படங்களில் வருவது போல சற்றென வெள்ளைக்காரர்கள் புகழ்பவனாக சில காட்சிகளிலேயே பரந்தாம ராஜு மாறிவிடுகிறான். அவன் கலைஞன் என்பதால் அவனைப் பார்க்கும் எல்லாப் பெண்களும் அவனை கூடுகிறார்கள், அவன் அப்பாவின் ஆசை நாயகி உட்பட. அவ்வாறே இருப்பதில் தவறில்லை. ஆனால் அத்தகையவற்றை கலாபூர்வமாக்கும் ஏதோ ஒன்று பிரகாஷிடம் ஒரு மாற்று குறைவாகவேயுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. அல்லது அவர் நோக்கமே அதுவல்லாமலிருக்கலாம். நாவலின் தொடக்கத்தில் பரந்தாமராஜூ பாபியை முதலில் பார்த்தவுடன் வர்ணிப்பதிலேயே (இடுப்பே இல்லை...., இல்லாத இடுப்பிற்கு மேலான அந்தப் பகுதி அவனை அச்சுறுதியது ) பிரகாஷின் நோக்கம் வெறும் பாலியல் கவர்ச்சியை சொல்வது மட்டுமே என்பதை நாவல் உணர்த்திவிடுகிறது. 

தஞ்சை பிரகாஷ் கதைகள் குறித்து இணையத்தில் அவர் இறந்தபிறகு வரும் வியாக்கியானங்கள், அவரது பாலியல் சித்தரிப்புகள் குறித்த தத்துவங்கள் யாவும் போலிகள் என்பதே கள்ளம் படித்தபின் எனக்கேற்பட்ட மனப்பதிவு. கள்ளம் என் நாவல் பட்டியலில் இல்லவேயில்லை. ஜெயமோகன் பிரகாஷின் எழுத்தை (அவரது பிற மேதமைகளை உணர்த்தியபின்) முதிரா பாலியல் எழுத்து என்று வகைப்படுத்தியிருப்பார். ஆயினும் ஒரே ஒரு காரணத்திற்காகவே கள்ளம் வாங்கினேன். இலக்கியவட்டம் நாராயணன் அவர்கள் தான் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் ஆரம்பித்ததற்கு தஞ்சை பிரகாஷுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமென்று சொல்லியிருக்கிறார். அவர் தஞ்சையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வேலை மாறுதலால் வந்தவர். அதனால் இந்த வருடம் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நாவலை வாங்கினேன். பிரகாஷின் அதிர்ச்சி மதிப்பீடு தெரியும் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் கள்ளம் படிக்க ஆரம்பித்தேன். நல்லவேளை பிரகாஷ் என்னை ஏமாற்றவில்லை. ஜெயமோகனின் அறுவை சிகிச்சை கத்திக்கு என் நன்றிகள் உரித்தாகுக.