பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2007

சு.ரா. - சில குறிப்புகள்

2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம் என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன்.

அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)

விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம்.



வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.

தொடர்வேன்....

குறிப்பு: இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

அறிஞர் சோதிப்பிரகாசம்

நேற்று திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.

திங்கள், 17 செப்டம்பர், 2007

ஞான ராசசேகரனின் பெரியார்...

நேற்று, கலைஞர் தொலைக்காட்சியில் ஞான ராசசேகரன் இயக்கிய பெரியார் திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பொதுவாக எனக்கு ஞான ராசசேகரன் இயக்கத்தில் வந்த படங்கள், குறிப்பாக பாரதியார், அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஏனெனில, அவர் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்ற நுட்பத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றெனக்கொரு எண்ணம் உண்டு. ஆயினும், அவர் தமிழ் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் குறித்து திரைப்படங்களை எடுப்பது குறித்து எனக்கு மதிப்பும் உண்டு.

தொன்னூற்று ஒன்பது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரும் ஆளுமையை அவ்வளவு எளிதில் மூன்று மணிநேர திரைப்படத்தில் கொண்டுவந்துவிட முடியாதுதானெனினும், படம் ஒரே கோர்வையாக இல்லாமல், தனித்தனியே காட்சிகள், லம்பாடி லுங்கி போல், ஒட்டுச் சேர்க்கப்பட்டதுபோல் இருந்தது. ஞான ராசசேகரனின் படங்களின் பொதுவான அம்சமான காட்சி ஊடகத்தை நுட்பமாகக் கையாளாதது இப்படத்திலும் பெருமளவிலிருந்தது. மாதிரிக்கு ஒரு காட்சி; பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராசாசியிடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் செல்லும்போது, ராசாசி பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள வசனங்கள் (நானும் ராமசாமி நாயக்கரும் பால்ய சிநேகிதர்கள்... அவர் இபோதுவந்து வந்து என்னைப் பார்த்துச் செல்வது நாளைய தமிழகத்தில் ஒரு வரலாற்று நிகழ்வாக சித்தரிக்கப்படும் என்ற ரீதியில் அமைந்தவை) தேவையற்றது என்பது என் எண்ணம். அவ்வசனம் இல்லாமலே அக்காட்சி எல்லோருக்கும் புரியும். எங்கே இம்முக்கிய நிகழ்வை மக்கள் புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற இயக்குநரின் அதீத பயம் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்றே பல காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தில் சத்யராசின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. எப்பொதுமே பெருங்குரலெடுத்து சினிமாவில் வசனம் பேசும் அவர் இதில் முற்றிலும் வித்தியாசமான முறையில் நடித்திருக்கிறார். அவரது உயரமும் (பெரியாரும் நல்ல உயரமானவர் என்றே என எண்ணுகிறேன்) கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலமைந்திருந்தது. மொத்தத்தில் இப்படத்தைப் பார்த்தபின் பெரியாரின் வாழ்வு குறித்த நம்பத்தகுந்த ஆவணமாகக் கைக்கொள்ளப்படும் வே. ஆனைமுத்துவின் தொகுப்புகளை படிக்க வேண்டுமென்ற என் ஆர்வம் மேலும் அதிகமானது. அதுவே இப்படத்தின் வெற்றியென நினைக்கிறேன்.

ராமர் பாலமும், குமரிக் கண்டமும்...

ராமர் பால அரசியல் நாட்டையே அல்லோலகல்லோல படுத்திக் கொண்டிருக்கிறது. ராம சென்ம பூமி பிரச்சனையைக்கொண்டு வட இந்தியாவைக் கூறுபோட்ட பா. ச. க, ராமர் பால பிரச்சனையை வைத்து தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், ஆழக்காலூன்றவேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கோமாளி சுப்பிரமணிய சாமியும், சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலலிலாதாவும் இதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியும், எனக்குத் தெரிந்தவரை, சேது சமுத்திரத் திட்டத்தினால் ஏற்படப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து கவனம் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்படப்போகும் சுழலியல் பாதிப்புகள், இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் பொருளாதார ஆதாயங்களைவிட குறைவானதுதானா (பொருளாதார ஏற்றம் (Vs) சூழலியல் பாதிப்புகள் என்பதே கணக்கிட முடியாதுதான் என்றாலும்) என்ற ரீதியில் கூட தஙக்ளது கருத்துக்களை எடுத்துவைக்கவில்லை. முதலில் அ.இ.அ.தி.மு.க சூழலியல் காரணங்களுக்காக இத்திட்டதை எதிர்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்தாலும, அதன் தலைமையின் பண்புகளை அறிந்தவர்களுக்கு அது ஒரு பகல் வேசம் என்பது தெரிந்தே இருந்தது. இப்போது அதிமுகவின் அப்பன் குதிருக்குள்ளிருந்து வெளிப்பட்டுவிட்டான்.

அதேநேரத்தில், ராமர் பாலம் என்றழைக்கப்படுவது ராமரால் கட்டப்பட்டதல்ல எனப் பகுத்தறிவுபேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் குமரிக்கண்டம் என்றுவரும்போது மட்டும் தம் பகுத்தறிவுக்கண்ணை மூடிக்கொண்டுவிடுவர். இவ்விசயத்தில் இந்துத்துவவாதிகளுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல நமது தமிழ் தேசியவாதிகள். எப்படி ராமர் பாலம் என்பது ஒரு புராணமோ, அது போன்றே குமரிக் கண்டம் என்பதும். இரண்டுமே அறிவியலால் நிராகரிக்கப்பட்ட கருத்தாக்கங்கள். புராணத்தை வரலாறாகத் திரித்து அதற்குப் போலி அறிவியல் முலாம் பூசி, மக்கள்தம் உணர்ச்சிகளோடு விளையாடுவதற்கு ஒரு கூட்டம் எப்போதும் தயாராகவே உள்ளது. இதில் இந்துத்துவா என்ன, தமிழ்த் தேசியம் என்ன - இரண்டும் அடிப்படைவாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

சனி, 15 செப்டம்பர், 2007

அறிவியல் உண்மைகளும், வெகு மக்கள் உணர்ச்சிகளும்

ராமரோ அல்லது ராமாயணக் கதாபாத்திரங்களோ வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லையென இந்திய தொல்பொருள் துறையினர் உச்ச நீதிமன்றத்திற்கு முதலில் தாக்கல் செய்த அறிக்கைக்காக இரண்டு அறிவியலாளர்கள் இடைநீக்கம் செய்ய்ப்பட்டுள்ளர்கள். ராமாயணம் ஒரு புராணம். ஆனால், அது இந்திய மக்களின் உணர்ச்சி சம்பந்தப்பட ஒரு விசயம். இவ்விசயம் குறித்து அறிவியல் அறிக்கை அளிக்கும் பொழுது, ராமர் என்ற 'அவ்வளவு பெரிய ஆகிருதி' வாழ்ந்து மறைந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லாதபட்சத்திலும், தொல்பொருள் துறையினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருக்கவேண்டும்.

ராமர் பாலம் எனச் சொல்லப்படும் அந்தப்பகுதி ராமரால் கட்டப்பட்டது அல்ல மாறாக அது இயற்கையாய் அமைந்த ஒரு அமைப்பு என்று என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தால்கூட, இவ்வளவுதூரம் பிரச்சனையாகியிருக்காது. (இந்துத்துவவாதிகள் அதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது வேறுவிசயம்). ஆனால் ராமரே வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறும்போது, பெரும்பான்மையான இந்துக்களுக்களின் உணர்வு மற்றும் சிறுபான்மை இந்துத்துவவாதிகளின் பிழைப்பின் அடிமடியிலேயே கைவைப்பதாகும். இதை அரசு தவிர்த்திருக்கலாம்.

இந்த அறிக்கை, அறிவியல் என்னும் உச்சாணிக்கொம்பிலிருப்பதாக நினைத்துக்கொன்டு, வெகு மக்கள் நம்பிக்கைகளிலிருந்து - அது தவறாகவேயிருந்தாலும், வெகுதூரம் சென்றுவிட்ட சில அறிவியலாளர்களின் முந்திரிக்கொட்டைத்தனத்தால் ஏற்பட விளைவு என்பதே என் எண்ணம். அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தும்போது மிகுந்த பொறுப்புணர்ச்சி தேவை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இதைத்தான் சொந்தச் செலவில் அரசே தனக்கு சூனியம் வைத்துக்கொண்டது என்பதோ?! (சூனியம் வைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலுங்கூட)