பக்கங்கள்

வெள்ளி, 29 மே, 2015

தேக்கடியில் கல்லூரி நண்பர்களுடன்...

நாங்கள் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 25 வருடங்கள் ஆகிறது. வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் வகுப்புத்தோழர்களின் கூடுகை ஒன்றை தேக்கடியில் சென்றவாரம் நான் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தேன். கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இத்தகைய கூடுகை ஒன்றை நடத்தலாம் என எல்லாருக்கும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு காரணங்களால் அப்போது அதில் கலந்துகொள்ள விருப்பமில்லை. ஆனால், நானும் வேறு சில குறிப்பிட்ட நண்பர்களும் இதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தோம். மற்ற நண்பர்களோ இத்துறையிலேயே இருக்க, நான் மட்டும் மந்தையிலிருந்து விலகிய ஆடாக இருந்தபோதிலும் இதை நடத்துவதில் நான் முனைப்பாக இருப்பதின் காரணம் சற்று விசித்திரமானது. உண்மையில் எங்கள் கல்லூரி குறித்து எனக்கு மதிப்போ, முக்கியத்துவமோ இருந்ததில்லை. காரணம் எங்களுக்கு அமைந்த ஆசிரியர்கள் அப்படி, ஒரு சிலரைத்தவிர மற்றதெல்லாம் தண்டச்சோறுகள். ஆனால் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். எனது மிகச் சிறந்த நண்பர்கள் அனைவரும் என்னுடன் கல்லூரியில் படித்தவர்களே. கல்லூரிக் கட்டடங்களையும், மருத்துவமனையையும் நட்பின் அடையாளமாகவேதான் பார்க்கிறேனே தவிர, என்னைப் பொறுத்தவரை அவற்றிற்கு வேறு மதிப்பில்லை. சித்தமருத்துவம் குறித்து ஆசிரியர் பாடம் நடத்தி அறிந்து கொண்டதைவிட மூத்த நண்பர்கள் மூலம் கல்லூரிக்கு வெளியே அறிந்துகொண்டதுதான் அதிகம். சொல்லப்போனால், படிக்காமலேயே தேர்வுகளில் வெற்றிபெறுவதற்குரிய உத்தியை கைவரப் பெற்றிருந்தேன். சித்தமருத்துவம் குறித்து அத்துறைக்குள்ளேயே இருந்து ஆராய்ச்சி செய்வைதைவிட வெளியில் சென்று அப்பணியை ஆற்றுவதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தேன். ஆதலால், பெரும்பாலான என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரியிலியேயே முதுகலை சித்த மருத்துவம் பயின்றபோது நான் விலகிச் சென்றுவிட்டேன். மேலும் அரசுப்பணியில் சித்தமருத்துவராக வேண்டும் என்று விரும்பியதேயில்லை. அப்பாவுக்கு அதனால் என்மேல் கோபமிருந்தது. என் நண்பர்களுடன் ஒப்பிட்டு எப்போதும் என்னை குறை சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கையில், என்னைப் பொறுத்த அளவில், என் முடிவு மிகச் சரியானதென்றே படுகிறது. என் இயல்புக்கு அங்கு குப்பை கொட்டமுடியாது. ஆனால், நண்பர்களுடன் அப்படியில்லை. துறை மாறினாலும் தொடர்ந்து நெருங்கிய நண்பர்களுடன் தொடர்பிலேயே இருந்தேன்.




1990 ஆம் ஆண்டு ஒரு ஆனி-ஆடி சாரல் மழைநாளில் எங்களுக்கு கல்லூரி முதல்நாள். அநேகமாக தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் நண்பர்கள் சித்த மருத்துவம் பயில சேர்ந்திருந்தார்கள். எல்லா மாவட்டங்களிலிருந்தும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த மன விரிவைக் கொடுத்தது. ஒவ்வொருவரின் ஊரையும், அவ்வூரின் சிறப்புகளையும் குறித்து பேசுவது எனது அப்போதைய பொழுதுபோக்குகளில் ஒன்று. அந்த ஊரைப் பார்ப்பதற்காகவே நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் விடுமுறைக் காலங்களில் டேரா போடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். பெரும்பாலானவர்களின் வீட்டு முகவரிகளையும் சமீப காலம் வரை ஞாபகம் வைத்திருந்தேன். இன்னும் சிலரது பழைய வீட்டு முகவரிகளை என்னால் சொல்லமுடியும். முதலாண்டு முடியும்போது வகுப்பில் 86 பேர்கள் இருந்தோம். அதில் 60 பேர் பெண்கள். எங்களுக்கும், எங்களது இளவல்கள் மற்றும் மூத்த மாணவர்களுக்குமிடையே ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. மற்ற வகுப்புகளில் ஆண்-பெண் விகிதாச்சாரம் சரிபாதி. மேலும் அங்கெல்லாம் பல்வேறு கோஷ்டி பிரிவினைகள் உண்டு. ஊர் சார்ந்து, சாதி சார்ந்து என்று வகுப்பிலேயே பல்வேறு பிரிவினைகள் உண்டு. திருநெல்வேலியல்லவா, இதெல்லாம் இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஆனால் எங்கள் வகுப்பில் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. நாங்கள் சாதி சார்ந்தோ, ஊர் சார்ந்தோ குழுவாக பிரிந்து அடித்துக்கொள்ளவில்லை. சாதிப் பெயர்களை கிண்டல் மூலம் தாண்டிச்சென்றோம். இதற்கு ஆண்கள் மிகக் குறைவாக இருந்ததும் ஒரு காரணமாகயிருக்கலாம். ஆனால், 60 பெண்கள் இருந்தும், ஆச்சரியமாக பெரிதாக தனிப்பட்ட குழுக்கள் இல்லை. 1990 லிருந்து 95 வரை பகைமை-பொறாமை கொண்ட குழுக்கள் இல்லாமல் நாங்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்தோம். எங்களுக்கு ஒருவருடம் மூத்தவர்கள்  படிப்பாளிகள் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்தார்கள்; இளவல்களோ ரவுடி பிம்பமும் கொண்டிருந்தார்கள். நாங்கள் இதில் எதிலும் சேர்த்தியில்லை. ஒருவகையில் நாங்கள் அமைதியானவர்கள்; ஆனால் குசும்பர்கள் என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. ஆசிரியர்கள் கேள்விகேட்டால் பதில் தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிப்பது எங்கள் வகுப்பின் உத்தி. கேள்வி கேட்ட ஆசிரியர் பதில் கிடைக்காததால் நொந்துவிடுவார். கிட்டத்தட்ட முந்திரிக்கொட்டைகளே எங்கள் வகுப்பில் இருந்ததில்லை.






கல்லூரியில் படிப்பிற்கு செலவழித்ததைவிட வருடா வருடம் சுற்றுலா செல்வதற்கும், அங்கு எடுத்த புகைப்படங்களை பிரிண்ட் போடுவதற்கும் என்று நாங்கள் அனைவரும் அதிகம் செலவழித்திருப்போம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதும் படிப்பை விட அதுதான் முக்கியமானதாகப் படுகிறது. இந்தக் கூடுகைக்கான திட்டமிடலை 6 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். இதற்காக சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் என் வீட்டில் வைத்து கடந்த ஜனவரி மாதம் ஒரு சிறிய கூடுகையை நடத்தினோம். பின்னர் எல்லோரிடமும் இணையம் மூலமும், குறுஞ்செய்தி மூலமும் ஒட்டெடுப்பு நடத்தி கூடுகை நடத்த விரும்பும் இடத்தை தேர்வுசெய்ய முயன்றோம். 86 பேரில்  பல வருடங்களுக்கு முன்பே ஒருவர் ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார். ஆறு பேரை, இந்த செல்பேசி உலகிலும், கண்டுபிடிக்கவே முடியவில்லை. வெளிநாடுகளில் வாழும் மூன்று பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. மீதமிருக்கும் 76 பேரிடமும் பேசி தொடர்பை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டோம். இவர்களில் பலர் அரசு சித்தமருத்துவ அலுவலர்களாக இப்போது வேலை செய்கிறார்கள்; சிலர் தனியாக கிளினிக் வைத்திருக்கிறார்கள்; சிலர் வேறு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்; மேலும் சிலர், என்னைபோல், வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள். சிலருக்கு கல்லூரியில் படிக்கும் மகன், மகள் இருக்கிறார்கள்.




மதுரையிலுள்ள ஒரு பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் தேக்கடியில் கடந்த 19-20 தேதிகளில் எங்களது கூடுகையை நடத்த திட்டமிட்டோம். முதலில் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக நடத்த நினைத்தோம். ஆனால், சிலர் எங்கள் குடும்பத்தோடுதான் வருவோம் என்று கூறியதால் அவரவர் விருப்பப்படி வரலாம் என தீர்மானித்தோம். சிலர் தங்களது வாகனங்களில் நேரடியாக தேக்கடி வந்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் மதுரை, திண்டுக்கல் வந்து அங்கிருந்து எங்களுக்காக அமர்த்தப்பட்ட பேருந்து மூலம் தேக்கடி அடைந்தோம். உடன்படித்த 76 பேரில், ஐம்பது நண்பர்களையாவது திரட்டிவிட வேண்டுமென முயன்றேன். எவ்வளவோ நான் முயன்றும் 34 நண்பர்கள் அவர்களது குடும்பங்கள் என்று 70 பேர்தான் வந்திருந்தனர். சிலரால் தவிர்க்கமுடியாத காரணங்களால் வர இயலவில்லை. நீண்ட வருடங்கள் கழித்து, முதன்முதலில் தொடர்புகொண்டபோது வருகிறேன் என்று சொன்ன பலர் அடுத்தடுத்த அழைப்புகளில் தயக்கம் காட்டினர். சிலர் நான் கூப்பிட்டால் செல்பேசியை எடுப்பதையே தவிர்த்துவிட்டனர். குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்பவில்லை. சிலர் கடைசிவரை டபாய்த்துக்கொண்டேயிருந்தனர். சில நண்பர்களின் இத்தகைய போக்கு கடைசி 20 நாட்களில்  ஒருவிதமான விரக்தியை எனக்குள் ஏற்படுத்தியது. ஆகையால் தேக்கடிக்கு ஒருவிதமான வெறுமையான மனநிலைலேயே சென்றேன். அவ்வாறு நடக்கவில்லையென்றிருந்தாலும் ஒருவேளை நான் அத்தகைய மன நிலையில்தான் சென்றிருப்பேனோ என்னவோ?! என் மன அமைப்பே அப்படித்தான்; எல்லா விசயத்திலும் கடைசித் தருவாயில் சற்று சொதப்புவது என் பாணி. வடிவேலுவின் பாணியில் ”ஓப்பனிங் எல்லாம் பலமாத்தான் இருக்கும், ஆனால் பினிஷிங்தான் சரியிருக்காது”.





 நிகழ்வு நாள்களிலும் ஒருவிதமான பதட்டத்துடனும், எரிச்சலிலும்தான் இருந்தேன். நண்பர்களை ’செல்லமாக’ கடிந்துகொண்டேன். சில வேலைகளை பிற நண்பர்களுக்கு பிரித்துக்கொடுத்திருக்கலாம்தான். எல்லாவற்றிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற கமல்ஹாசத்தனம் என்னிடம் உண்டு. சிலர் இதை அடுத்தவர் மேல் நம்பிக்கையின்மை எனச் சொல்வார்கள்; ஆனால் என்னைப் பொறுத்தவரை செய்யும் செயலில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்தல் என்றே பொருள்கொள்வேன். கமல்ஹாசன் என்னைப் போல் பதட்டப்படுவாரா எனத்தெரியாது. ஆனால், என் தந்தைக்கு நிகரான, என் நண்பர் சுகன்யாவின் தந்தை, மறைந்த இலக்கியவட்டம் நாராயணன் அவர்கள் காஞ்சிபுரத்தில் இலக்கியவட்ட நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதை பலமுறை அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். கூட்டத்திற்காக மேசை, நாற்காலிகளை தனியொருவராக தூக்கி வைத்து போடுவதிலிருந்து, வந்திருப்பவர்களுக்கு டீ சப்ளை பண்ணுவது, கூட்டத்தை துவக்கி வைத்து பேசுவது என்று எல்லா வேலைகளையும் ஒரு கர்மயோகியாக பதட்டமின்றி செய்வார். என்னைப் பொறுத்தவரை அது ஒரு யோகச் செயல்பாடுதான்.









தேக்கடியில் முதல்நாளன்று மாலை ஹோட்டல் கருத்தரங்க அறையில் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. எவ்வாறு பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதற்கு நேர்மாறாக ஒரு எதிர்மறைத் தொனியுடன் ஆரம்பித்தேன். தொலைபேசினால் செல்பேசியை எடுக்காதது, குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்பாதது இன்னபிற வழக்கங்கள் ஒரு பொறுப்பற்ற தன்மையைக் குறிப்பன; கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நாம் செய்ததை இப்போது எனக்கே திருப்பியளித்து விட்டீர்களே என நண்பர்களை கடிந்துகொண்டேன். நண்பர்கள் சிலர் பேசினர், சிலர் பாடினர். பின்னர் குழந்தைகளின் நிகழ்வு நடைபெற்றது. எங்கள் அனைவரையும் விட குழந்தைகளே இப்பயணத்தை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். மறுநாள் புகழ்பெற்ற தேக்கடி படகுப் பயணத்திற்கு சென்றோம். 1992 ஆம் வருடம் கல்லூரியில் படிக்கும்போது இங்கு சுற்றுலா வந்திருக்கிறோம். அதன்பின் ஒருமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால் இந்தமுறைதான் படகுப்பயணத்தில் யானைக் கூட்டங்களையும், வரையாடுகளையும் பார்த்தேன். பொதுவாக நான் தனிமையானவன். நண்பர்களுடன் இருக்கும்போதே சற்றென்று தனிமையுணர்வு கொண்டுவிடுவேன். என் ஒன்றுவிட்ட மைத்துனனும், எனக்கு கல்லூரியில் ஒரு வகுப்பு மூத்தவனும், 40 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அறிந்தவனுமான மீனாட்சி சுந்தரம் முன்பொருமுறை சொன்னான் - நீ ஒன்னு கூட்டத்தில் முதலாவதா வர்ற அல்லது பின்னாடி கடைசியா வர்ற என்று. ஆம் நான் கும்பல் மனப்பான்மையிலிருந்து எப்போதுமே விலக்கம் கொள்கிறேன். அது எனக்கு பல வகைகளிலும் உதவியாக உள்ளது. தேக்கடியிலும் படகுச் சவாரியினை ரசிக்க படகின் முன்பக்கம் சென்று தனியாக அமர்ந்துகொண்டேன். அதனால், பின்பக்க இரைச்சல்களிலிருந்து தப்பித்து எனக்கான காட்டை என்னால் ரசிக்க முடிந்தது.










மறுநாள் சென்னை வந்து சேர்ந்தபின் எல்லோருக்கும் பத்திரமாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்களா என குறுஞ்செய்தி அனுப்பினேன். இது  ஜெயமோகனிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பழக்கம். தனது நண்பர்களுக்கு ஒவ்வொரு நிகழ்வு முடிந்ததும் அவரிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வரும். நான் ஆச்சரியப்படும் வகையில் எல்லா நண்பர்களும் உடனேயே பதில் குறுஞ்செய்தி அனுப்பினர். மகிழ்ச்சியாய் இருந்தது. இதை எல்லோரும் முதலிலேயே பின்பற்றியிருந்தால் இன்னும் நன்றாக நிகழ்வை நடத்தியிருக்கலாமே என மனதில் நினைத்துக் கொண்டேன்.



புதன், 5 பிப்ரவரி, 2014

ஜோ டி குரூஸூக்கு பாராட்டுவிழா

சென்ற சனிக்கிழமை நெய்தல் படைப்பாளிகள் சார்பாக நண்பர் சிறில் அலெக்ஸ் முன்னின்று சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸுக்கு பாராட்டுவிழாவை சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். தமிழக முன்னாள் டி.ஜி.பி அலெக்ஸாண்டர், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், வறீதையா கான்ஸ்டாண்டின், ஜஸ்டின் திவாகர், டாக்டர் ரெக்ஸ் ஆகியோருடன் ஜோ டி குரூஸும் விழாவில் பேசுவார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பெயர் குறிப்பிட்டவர்களோடு வேறு பலரும் அன்று பேசினர்.

முதலில் அலெக்சாண்டர் தலைமையுரை ஆற்றினார். பணியிலிருந்த காலங்களில் தனக்கு இலக்கிய புத்தகங்களைப் படிக்க நேரமிருந்ததில்லையெனினும் மீனவர்களை பற்றி எழுதப்பட்டிருப்பதால் ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகியவற்றை வாங்கியதாகவும் கூறினார்.  மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவன் ஆயினும் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் பிறந்து வளர்ந்தவன் ஆதலால் கடலைப் பற்றியோ, அதைச் சாரந்திருப்பவர்கள்  பற்றியோ தனக்கு அதிகம் தெரியாது என்றார். கொற்கையில் பனிமயமாதா தேவாலயத்தில் கூடியிருக்கும்  மனிதர்களில் ஒருவராக வரும் ராஜரத்தினம்  என்பவர் தனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்றும் அதற்காகவே அதை சிலாகித்து படித்ததாகவும் பேசினார்.  அலைந்து திரிந்து சேகரித்த தகவல்களை ஒருமைப்படுத்தி இத்தகைய நாவல் ஒன்றை எழுதிய ஜோவின் மேதமையை வாழ்த்தி  அமர்ந்தார். 

டாக்டர் ரெக்ஸ், ஒரு காலத்தில் மாலைநேர தேநீருடன் உண்பதற்காக கொழும்பிலிருந்து பிஸ்கெட் வரவழைப்போம் என அவரது அம்மா சொல்வதுண்டு என்றும் அவ்வாறு செல்வச் செழிப்பில் திகழ்ந்த மீனவ சமுதாயம் இப்போது வறிய நிலையை அடைந்துவிட்டதாக கூறினார். ஜஸ்டின் திவாகர், நெய்தல் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அவரும் வறிதையாவும் நாகர்கோவிலில் நடத்திவரும் அமைப்பு குறித்து கூறினார். பின்னர் வறிதையா கான்ஸ்டாண்டின் அரசியல் கோணத்தில் உணர்சிகரமான உரை நிகழ்த்தினார் - வலம்புரி ஜான் மீனவர் என்றாலும் அந்த அடையாளத்தை மறைத்துக்கொண்டு தான் எழுதினார் என்றார். ராஜம் கிருஷ்ணன் மீனவர்களோடு தங்கியிருந்து நாவல் எழுதினாலும் அது முழுமையாக மீனவர்கள் வாழ்க்கையை சொல்லிவிடவில்லை என்றும், கடல்புரத்தில் எழுதிய வண்ணநிலவன் மீன் பரவர்களை மீன் பறையர்கள் என வேண்டுமென்றே எழுதியதாகக் கூறினார். இதைச் சொல்லும்போது அந்த சாதியை (பறையர்) தான் குறைத்து சொல்லவில்லை என்பதையும் தெளிவாக்கினார். ஆயினும் சாதியை வேண்டுமென்றே வண்ணநிலவன் மாற்றி எழுதியிருப்பதை, அவர்மேல் மதிப்பு இருந்தாலும், கண்டிப்பதாகக் கூறினார். தாம் ஆண்ட பரம்பரை என்பது போன்ற மேட்டிமைத் தனங்களை விட்டுவிட்டு பரதவ சமுதாயங்கள், (பரவர், முக்குவர் இன்னபிற), அனைத்தும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய காலமிது எனக்குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் கொற்கைக்கு கிடைத்த விருது நம் சமுதாயத்திற்குக் கிடைத்த விருது என்ற கண்ணோட்டத்திலேயே பேசினர்.

பின்னர் ஜோவுக்கு ஒருவர் வந்து பட்டம் (தலைப்பாக) கட்டினார். அதன் தாத்பர்யம் என்ன என விளக்குமாறு அவரிடம் சொல்லப்பட்டது. மைக்கைப் பிடித்த அவர் நமது தாழ்ச்சிக்கு கத்தோலிக்கம் தான்  காரணம் என ஒரே போடாய்ப்போட்டார்.  நெற்றிக் குங்குமம் விபச்சாரிகள் தான் வைப்பார்கள் என பாதிரியார்கள் சொன்னதால்தான் நம் பெண்டிர் அதை தவிர்த்தனர். இவ்வாறு நாம் நம் மரபிலிலிருந்து துண்டிக்கப் பட்டோம் என அதிரடியாக கருத்து சொல்ல ஆரம்பித்தார். அலெக்சாண்டர், பட்டம் கட்டுவது குறித்து உம்மை கருத்து சொல்ல சொன்னால் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேரே என்றார். அதற்கு அவர், பட்டம் ஏன் கட்டுகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்ச் சொன்னார். அப்படின்னா, முதலில் ஓடிப்போய் உக்காரும் என முன்னாள் டி.ஜி.பி. சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த மீனவ தலைவர்கள் ஜோவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். இடிந்தகரையிலிருந்து வந்திருந்த ஒருவர் முன்னர் பேசியவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசினார். கத்தோலிக்க மதத்தால் நமக்கு விளைந்த நன்மைகளும் உள்ளன எனச்சொன்னார். பொது இடத்தில் இவ்வாறு தடாலடியாக பேசக்கூடாது என அவரை கண்டித்தார். 


பின்னர் ஜெயமோகன் தெளிவான கச்சிதமான உரையாற்றினார். கடல் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு அது தமிழ்ச் சமூகத்துடன் ஒட்டாத கலாச்சாரத்தை பிரதிபலித்ததே காரணம் என தமிழின் முண்ணனி பத்திரிக்கைகள் சில எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான காரணத்தையும் சொன்னார். வரலாறு என்பது நடப்பதல்ல; நடந்ததாக எழுதிவைக்கப்பட்டதுதான் வரலாறாக முடியும், தமிழ்ப்பண்பாடு என்று நம்மை உணரவைப்பது பல காலகட்டங்களில் எழுதப்பட்டவைகளின் தொகுப்பே என்றார். எனவே மீனவ சமுதாயங்களின் பண்பாடு என்பதை நீங்கள்தான் எழுதவேண்டும் என்றார். அவ்வாறு எழுதி வரலாறாக்கப்ட்ட பின் அது தமிழ்பபண்பாட்டோடு ஐக்கியமாகிவிடும் என்றார். உதாரணமாக ஜெயகாந்தன் கடலூர்க்காரராக இருந்திருந்தாலும் அவர் அவ்வூரைப் பற்றி எழுதவில்லை. ஆகவே நடுநாட்டின் பண்பாட்டை அறிய நாம் கண்மணி குணசேகரன் வரும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது என்றார். முன்பு கொல்லங்கோடு கடற்கரையில் மீனவர்கள் மீன்படிக்க செல்லும்போது செம்மீன் படத்தில் சலீல் சவுத்திரி இசையமைத்த பாட்டை பாடிக்கொண்டு செல்வதை தான் பார்த்திருக்கிறேன் என்றார். கோழிக்கோட்டிலிருந்து தூத்துக்குடி வரை மீனவர்களின் பாடலாக ஒரு பெங்காலி இசையமைத்த பாடலே கோலோச்சியது. காரணம் அம்மீனவர்களிலிருந்து அவர்களின் பண்பாட்டைப் பற்றிய பிரபலமான பாடலாசிரியரோ, இசையமைப்பாளரோ இல்லாமல் வெற்றிடமாய் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சங்க இலக்கியத்திலேயே நெய்தல் திணை பற்றிய வர்ணனைகள் சிறப்பாக இல்லை. ஏனென்றால் அப்பாடல்களை இயற்றியவர்களில் பெரும்போலோர் மருத நிலத்தைச் சார்ந்த கிழார்கள் என்றார். இத்தகைய இரண்டாயிர வருட பின்புலத்தில் ஜோ டீ குரூஸின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் தமிழிலக்கியத்திற்கு முற்றிலும் புதிய அத்தியாயத்தை எழுதிச் சேர்த்து நெய்தலை அதன் உண்மையான வகையில் பிரதிநிதப்படுத்துவதாக கூறினார். ஜோவின் தொடக்கமே மிகச் சிறப்பாக அமைந்தது என்றும், கவிதை எழுத வந்த அவரை ஆழி சூழ் உலகு எழுத வைத்த ‘தமிழினி’ வசந்த குமாரின் பங்கை குறிப்பிடத்தக்கது என்றும் சொன்னார். ஒரு மீனவன் மட்டுமே எழுதியிருக்கக் கூடிய கடலைப் பற்றியும், மீனகளைப் பற்றியுமான அபாரமான வர்ணனைகள் ஜோ வின் நூற்களில் உள்ளதாகக் குறிப்பிட்டார். உதாரணமாக, ஆழி சூழ் உலகில் உள்ள சுறா வேட்டை வர்ணனை, ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலில் வரும் சுறா வேட்டையை விட மிகச் சிறப்பான ஒன்று எனக் குறிப்பிட்டார். அதேபோல் மகாபாரத்தில் மீன்களைப் பற்றிய வர்ணனைகள் நல்ல கவித்துவத்தோடு உள்ளது. அவைகளைத் தொகுத்தால் அது மட்டுமே 400 பக்கங்களுக்கு வரும், ஏனெனில், வியாசர் சத்தியவதி என்ற மீனவப் பெண்ணிற்கு மகனாக யமுனை நதித் தீவில் பிறந்தவர் என்றார்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்தவுடன் முதல் பாராட்டு விழா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலம் நடத்தலாம் என ஜோவைத் தொடர்புகொண்டபோது முதலில் தயக்கத்துடனேயே ஒத்துக்கொண்ட அவர் பின்னர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் - பல சீனியர்கள் இருக்கும்போது தனக்கு கிடைத்த இவ்விருதை தனக்கான தனிப்பட்ட அங்கீகாரமாகக் கருதாமல் தனது சமூகத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாகவும், எனவே தனக்கு விழா எதுவும் எடுக்கவேண்டாம் என ஜோ கூறியதாக ஜெயமோகன் சொன்னார். ஆயினும் ஆழி சூழ் உலகோ, கொற்கையோ மீனவ ச்முதாயத்தை மட்டுமே முன்னிறுத்தவில்லை. அவை தமிழ்ப்பண்பாட்டையே முன்னிறுத்துகின்றன. அவைகள் தமிழ்ப்பண்பாடு என்ற நூலில் ஒரு அத்தியாயம் மட்டுமே என்றார். இதுபோன்ற பல அத்தியாயங்கள் சேர்ந்தே தமிழ்ப்பண்பாடு என்ற நூல் உருவாக்கப்படுகிறது என்ற இலக்கிய, பண்பாட்டு வரலாற்றுணர்வை தான் முன்னிறுத்துவதாக்க் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய அருள் எழிலன் பரதவர்கள் ஆண்ட குலம் என்ற மேட்டிமைத்தனங்களை விட்டுவிட்டு நமது தற்போதைய நிலை குறித்து கவனம் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் இந்திரா பார்த்தசாரதி தான் அகடாமி விருதுக் குழுவில் ஜூரியாக இருந்ததால் தனக்கு இவ்விழாவில் கலந்துகொள்ள முதலில் தயக்கம் இருந்தது என்றார். பொதுவாக அகாடமி விருதுகளை ஒரு சமூகமே கொண்டாடி தான் பார்த்ததில்லை என்றும், இவ்விழா தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். கொற்கை ஒரு வகையில் தால்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலை தனக்கு ஞாபகப்படுத்துவதாகக் கூறினார். போரும் அமைதியும் ஒரு நாவலோ, வரலாறோ அல்ல என்றும் அது ஒரு ஆவணம் என்றும் தால்ஸ்தாய் சொன்னது கொற்கைக்கும் பொருந்தும் எனவும் சொன்னார். கடைசியாக ஜோ ஏற்புரை வழங்கினார். அதிகம் அவர் பேசவில்லை. தனக்கு இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என மிரட்டல்கள் வந்ததாகக் குறிப்பிட்ட அவர் ‘என்ன பாவம் செய்தேன், என் ஜனமே, நான் என்ன பாவம் செய்தேன்’ என்று தொடங்கும் பாடலை அவரது கணீர்க்குரலில் பாடிவிட்டு அமர்ந்தார். இறுதியில் சிறிலின் நன்றியுறையுடன் விழா இனிதே முடிவுற்றது.

மேலும் படங்கள்

திங்கள், 13 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழாவில்...

இன்று மதியம் (12/01/2014) சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். நண்பர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே வந்திருந்தார்கள். பாஸ்டனிலிருந்து வந்திருக்கும் அர்விந்தை நான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். சீர்மை குறுநாவலின் புகழால் இப்போது ’சீர்மை அரவிந்த்’என அழைக்கப்படுகின்றார். சீனிவாசன் தம்பதியினர் தன்னுடய மகன்களோடு வந்திருந்தனர். அவர்களுடன் செந்தில், சுரேஷ்பாபு, சுனில்கிருஷ்ணன், வினோத் மற்றும் நான் இன்று புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். பின்னர் ஜாஜா, சாம்ராஜ், ஜடாயு, மணிகண்டன், எழுத்து பிரசுரம் அலெக்ஸ், அசோக்குமார், கவிஞர் இசை, விழியன் என ஏதேச்சையான பல சந்திப்புகள் அரங்கேறின. இதற்கிடையில் எனக்கு மட்டுமே தெரிந்த வேறு சில நண்பர்களையும் தற்செயலாக சந்தித்தேன். அவர்களுள் நிழல் திருநாவுக்கரசு அவர்களை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். இயல்பாகவே இலக்கியவட்டம் நாராயணன் குறித்தும் அதன் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டோம். பின்னர் வெளியேறும் போது இலக்கியவட்டம் மூலம் அறிமுகமான கவிஞர் வெண்ணிலாவையும்  பார்த்தேன். தனது புத்தக வெளியீடு இன்று நடைபெறுவதால் அந்நிகழ்விற்கு வருமாறு அழைத்தார். நேரமாகிவிட்டதால் கலந்துகொள்ள இயலாது என மறுத்துவிட்டேன்.


படம் உதவி: ஜடாயு  

இந்தமுறை எனது தேர்வு பெரும்பாலும் தன் வரலாற்று நூல்கள். உ.வே.சா, நெ.து. சுந்தரவடிவேலு, பம்மல் சம்பந்த முதலியார், தி.சே.செள.ராஜன் போன்றவர்களின் சுயசரிதகளை வாங்கினேன். இவைகள் அனைத்துமே ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் சுந்தர ராமசாமி பரிந்துரைத்த நூல்களாக தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறேன். கு. அழகிரிசாமி கதைகள் சாகித்திய அகாடமியில் சகாய விலைக்குக் கிடைத்தது. வெண்முரசின் பாதிப்பினால் பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், ராஜாஜியின் வியாசர் விருந்து போன்றவற்றை வாங்கினேன். ஜடாயுவின் பரிந்துரையின் பேரில் சுவாமி விவேகானந்தரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் நூல் ஒன்றை ராமகிருஷ்ண மடம் புத்தக ஸ்டாலில் வாங்கிக்கொண்டேன். கிழக்கு பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னாவை பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வாங்கிய ஜெயமோகனின் இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் நூலில் பக்கங்கள் விடுபட்டிருந்ததால் அதற்குப் பதிலாக வேறு புது புத்தகம் கொடுத்தார்.

கே.பி. வினோத்தின் 9 வயது பெண் சைதன்யாவிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர். நாங்கள் சைதன்யாவின் ’மேனேஜர்’ வினோத்தை கிண்டலடித்துக்கொண்டோம். நண்பர்கள் அனைவரின் பேச்சும் சுற்றி சுற்றி ஜெயமோகனின் வெண்முரசைப் பற்றியே இருந்தது. எங்கள் எல்லோரையும் அது நேர்மறையாக அழுத்தமாக பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மணி ஆறு தாண்டியவுடன் அங்கிருந்து கிளம்பினேன். பவானிக்கு வாக்களித்தபடி 7 மணிக்குள் வீடு வந்தடைந்தேன். அமுதன் எனக்கு அமர்சித்திர கதாவின் மகாபாரதம் வாங்கினாயா என வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கேட்டான். அதற்கு தனியாக இன்னொருநாள் போகலாம்டா என்றேன். உன்மையில் இன்னும் குறைந்தது இரண்டுமுறையாவது புத்தகத் திருவிழாவிற்கு செல்லவேண்டும். இன்னும் தமிழினி, காலச்சுவடு, நற்றிணை போன்ற பிரபலமான ஸ்டால்களுக்குள் போகவேயில்லை. ஆதிரன் எல்லா புத்தகத்தையும் எடுத்து விரித்து வைத்துக்கொண்டு ‘படித்துப் பார்த்தான்’. பின்னர் அவனது போக்கில் கடாசினான்.

புத்தக அலமாரியில் புதிய புத்தகங்களை அடுக்கும்போது என்னிடம் புனைவுகளைவிட அபுனைவு நூல்களே அதிகமிருப்பதை கண்டேன். ஒரு இலக்கிய வாசகனாக நான் இன்னும் ஆரம்பப் படிகளையே தாண்டவில்லை என்ற யதார்த்தம் உரைக்கிறது. 

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டில்...

இன்று எனது இயல்புக்கு மாறான புத்தாண்டு. நான் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஏனெனில் நான் புத்தாண்டு கொண்டாடத்தை அருவெருப்பவன். ஆகையினால் புத்தாண்டு நாட்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு எதிர்வினையாக வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட ஒரு எதிர்மறை உணர்வில் இருப்பேன். அதனால் முந்தைய புத்தாண்டுகளில் இவ்வளவு உற்சாசமாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் புத்தாண்டை பலரும் கொண்டாடும் வழக்கமான பாணியில் கொண்டாடவில்லை. நேற்றிரவு 12 மணிக்கு முன்பே தூங்கப் போய்விட்டேன். ஆனால், நேற்று மாலை நானும் பவானியும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் செய்யவேண்டியன குறித்து பேசிக்கொண்டோம். இதில் எங்கள் இருவரின் தொழிலில் செய்யவேண்டியன குறித்த இலட்சியங்களும் அடங்கும். எங்களுக்கு டிசம்பர் 31 புத்தாண்டைவிட முக்கியமான நாளும் கூட. ஏனெனில், 13 ஆண்டுகளுக்கு முந்தைய டிசம்பர் 31 அன்றுதான் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது குறித்த முடிவை எடுத்தோம்.

இன்று காலை எழுந்தவுடன் நேற்று பேசியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். 41 வயதைக் கடந்துவிட்டேன். இன்னும் எனது இலட்சியங்களில் பெரும்பாலனவற்றை நான் அடையவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் நான் அவற்றை அடையவில்லையென்றால் மீதியிருக்கும் எனது வாழ்நாள் மிக துன்பகரமாக இருக்கும் என்றே உணருகிறேன். ஏனெனில் எனது கனவுகளை நான் அடையாதது குறித்த கவலைகள் என்னை அப்போது தினமும் வருத்தும். அவற்றை அடைவதற்கான உடல் வலுவோ, மனத்திடமோ அப்போது இராது. மேலும் 10 ஆண்டுகளில் இரண்டு மகன்களும் வளர்ந்துவிடுவார்கள். ஆகவே இந்த 10 ஆண்டுகளே எனக்கான இலட்சியங்களை அடைய தகுந்தவை. இந்த மனநிலை கடந்த சில மாதங்களாகவே இருந்தாலும் நேற்று பவானியுடன் பேசியபின் தான் திட்டவட்ட வடிவை அடைந்தன. ஆகவே எனது இலட்சியங்களை அடைய புத்தாண்டு என்பது ஒரு உத்தேச தொடக்கம் மட்டும்தான்.

உண்மையில் 1988 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் ஒரு மழைநாளில்தான் நான் எனது திறமைகளை உணர்ந்தநாள். அப்போது நான் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். முந்தைய 10 ஆம் வகுப்பு பரீட்சையில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். மாநிலத்தில் முதல் நாற்பது மாணவர்களில் ஒருவன். இதற்காக நான் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சொல்லப்போனால் பரீட்சை நாட்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நன்றாக ஞாபகமிருக்கிறது, அன்று பெருமழை பெய்து பணகுடி அனுமன் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்தை ஆற்றின் கரையில் நடந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தபோது நான் மட்டும் முயற்சி செய்திருந்தால் மாநிலத்தில் எளிதாக முதல் மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. பிளஸ் டூவில் அத்தகைய முயற்சியை எடுக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். செய்யவில்லை. ஆயினும் பள்ளியின் முதல் மாணவன். இதுபோல் எத்தனையோ முறைகள் இலட்சியங்களை வளர்த்து அவற்றை தெரிந்தே தவற விட்டிருக்கிறேன்.

இதற்கு எனது அவநம்பிக்கையும் அதனால் விளையும் தயக்கம், சோம்பேறித்தனம், செயல்களை ஒத்திப்போடும் மனப்பாங்கு போன்றவை தான் காரணம் என உணர்ந்தே இருக்கிறேன். இவை எனது குடும்பச் சொத்தாகும். எனவே இந்த உணர்வுகளை வென்றால்தான் என்னால் சாதிக்கமுடியும். இந்தமுறை வென்றுவிடுவேன் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகன். அவரது எழுத்துக்கள் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது நண்பர்களில் ஒருவனாகும் பாக்கியம் பெற்றதால் அவரை அருகிருந்து அறியும் பேறும் பெற்றிருக்கிறேன். அவரே இன்றிலிருந்து ஒரு பெரிய செயலில் இறங்கியிருக்கிறார். எனது நல்லூழ், அந்த செயலும் 10 ஆண்டுகள் தொடரப்போகிறது. எனது தேடல்கள், கேள்விகளுக்கு அவரது இந்த முயற்சியின் வழியாக பதில்களைக் கண்டடைவேன் என நம்புகிறேன். எனவே, எனது குருவைப் பற்றிக்கொண்டு இந்தப் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிடுவேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

வியாழன், 24 அக்டோபர், 2013

கங்கைகொண்ட சோழபுரம்

அண்மையில் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவரது திருமணத்திற்காக பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்தவுடன் அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம், வடலூர், சிதம்பரம் சென்றுவிட்டு சென்னை திரும்புவதாகத் திட்டமிட்டிருந்தேன். கூகிள் வரைபடம் மூலம் வழிகளையும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதன்படி ஒன்றரை மணிநேர பயணத்தில் கங்கைகொண்ட சோழபுரம். ஆனால், அக்கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்ல பேருந்து இல்லை. அரியலூர் சென்றுதான் போகவேண்டும் எனச்சொன்னார்கள். அதற்கும் அதிக பேருந்து வசதியில்லை. எனவே பெரம்பலூர்- அரியலூர்-ஜெயங்கொண்டம்-கங்கைகொண்ட சோழபுரம் என்பதாக என் திட்டம் மாறியது. காலை 10 மணிக்கு பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பேருந்தைப் பிடித்தேன்.

வழியெங்கும் சிறிய கிராமங்கள். புள்ளிவிபரங்களின்படி தமிழகம் இந்தியாவிலேயே நகரமயமாகிவிட்ட மாநிலம். பெரம்பலூர் - அரியலூர் மாவட்டப் பகுதிகள் தமிழகத்தின் 'பின்தங்கிய' பகுதிகளில் ஒன்று. சென்னையில் ஹோட்டல்களில் வேலைபார்க்கும் சிப்பந்திகளில் பலர் இங்கிருந்தே வருகின்றனர். அன்று திருமண நாள். வெயிலில் உழைத்து கறுத்து மெலிந்த கிராமத்து எளிய மனிதர்கள் பேருந்தில் அதிகமிருந்தனர். ஆண்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை; பெண்கள் அளவான ஒப்பனையுடன் பட்டுச் சேலைகளில்.

கிழக்கே செல்லச் செல்ல நிலக்காட்சி மாறிகொண்டே இருந்தது. மரங்களின் அடர்த்தி அதிகமாகியது, கூடவே பசுமையும். பல இடங்களில் மூங்கில் புதர்கள் இருந்தன. மூங்கில் எனக்குப் பிடித்த மர வகைகளில் ஒன்று. என் வீட்டிலும் ஒன்று வைத்துள்ளேன். வீடுகளில் வளர்க்கப்படும் மூங்கிலைவிட இயற்கையாக வளரும் மூங்கில் மரங்கள் மிக அழகு. இங்கு இவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுவதில்லையாதலால் புதர்களாக வளருகின்றன. ஏற்காடு சென்றிருந்தபோதும் நெடிதுயர்ந்த இவற்றின் அழகில் மயங்கியிருக்கிறேன். வழியெங்கும் தேக்கு மரங்களும் பயிரிட்டிருந்தார்கள். அண்மையில் மழை பெய்திருந்ததால் குட்டைகள், குளங்கள் பழுப்பு நிற தண்ணீரால் பெருகியிருந்தன. ஆலம் விழுதுகள் அதை அள்ளிப் பருகுவதுபோல் தொங்கிக்கொண்டிருந்தன. சில இடங்களில் களிமண் நிலம் மாறுபட்டு செம்மண் நிறைந்திருந்தது.

அரியலூர் பேருந்து நிலையத்தையடைய சிறிய சாலைகள் வழியே பேருந்து சுற்றி சுற்றி சென்றுகொண்டிருந்தது. நாங்குநேரி ஊருக்குள் நுழைந்த பிரமையை அது அளித்தது. நான் வந்த பேருந்து நடத்துனரிடம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வழிகேட்டேன். அவர் ஓட்டுநரிடம் கேட்டார். சிறிது யோசனைக்குப் பின்னர் ஓட்டுநர் மீன்சுருட்டி போய் போகலாம் என்றார். எனக்கு அது தவறாகத் தெரிந்தது. எங்கள் உரையாடலைக் கேட்டபடி இறங்கிகொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தானும் அங்குதான் செல்வதாகக் கூறினார். உடனே ஓட்டுநர் அந்த அம்மாவுடன் செல்லுங்கள் எனக் கைகாட்டினார்.

கங்கைகொண்ட சோழபுரம் அங்கிருந்து 40 கி.மீ தான். உலகப் புகழ்பெற்ற அவ்விடத்திற்கு பேருந்து ஊழியர்களுக்கே வழி சொல்லத் தெரியவில்லையே என அவர்களின் வரலாற்றுணர்வை மனதில் திட்டிகொண்டே அப்பெண்மணியுடன் நடந்தேன். அக்கிராமத்துப் பெண்மணிக்கு ஒரு அந்நிய ஆடவன் உடன் நடந்து வருவது அசெளகரியத்தைக் கொடுத்திருக்கும்போல. சற்று ஒதுங்கியே நடந்தார். சென்னைவாசியான  எனக்கு அது உரைக்க சற்றுநேரம் பிடித்தது. பின்னர் ஒதுங்கிக்கொண்டேன். அங்கிருந்து ஜெயங்கொண்டம் பேருந்தை பிடித்தேன். வழியில் உடையார் பாளையம் என்று சற்று பெரிய ஊர் வந்தது. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன் என் அருகில் அமர்ந்து பயணம் செய்த ஒரு கிராமத்து இளைஞர் கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பேருந்தைக் கைகாட்டினார்.

பேருந்தில் நிற்கக்கூட இடமில்லாமல் கூட்டம். முழுதும் கிராமத்து எளிய மனிதர்கள். இந்த எளிய மனிதர்களின் முன்னோர்களே தென்கிழக்காசிய நாடுகளை வென்ற ராஜேந்திர சோழனின் படை வீரர்கள். பேருந்து கங்கைகொண்ட சோழபுரத்தை நெருங்க நெருங்க ஒருவிதமான பரவசம் தொற்றிக்கொண்டது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இறங்கியபோது நண்பகல் மணி ஒன்று. சிறிய ஊர்; சாலையின் மேல் நான்கைந்து பெட்டிக்கடைகள். எதிர்புறம் கோயில். பசித்தது, ஆனால் உணவகம் ஏதும் தென்படவில்லை. வாசலிலேயே இருந்த கடையில் மாசா வாங்கிக் குடித்தேன். காலிக் குப்பியை போட குப்பைத் தொட்டியைத் தேடியபோது, நெகிழி பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது என கோயில் வாசலில் இந்திய தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை கண்ணில்பட்டது. அக்கடையில் விற்கப்படும் எல்லாப் பொருட்களுமே நெகிழியால் பொதியப்பட்டவைதாம்!

கோயிலைப் பார்த்த கணம் தோன்றியது தஞ்சைப் பெரியகோவிலைப் போல் இது கம்பீரமாகத் தோன்றவில்லை என்பதே. ஆனால் அடுத்த மூன்று மணிநேரங்கள் இக்கோயிலின் அழகில் நான் ஒன்றியிருக்கப்போகிறேன் என அப்போது எனக்குத் தெரியாது! வாசலில் இரண்டு பெரிய கல்தூண்கள். பின்னர் ஒரு மொட்டைக் கோபுரம். அதன் பின் பெரிய நந்தி. பின்னர் மையக் கோயில், கருவறையின் மேல் தஞ்சைக் கோயிலைப் போன்றே உயர்ந்த விமானம்.

ஆனால் தஞ்சைப் பெரியகோவிலைப் போல் கலசத்தை நோக்கி ஒரே சீராக கூம்பிச் செல்லாமல் மிக உயரமான சதுரமான அடித்தளத்திலிருந்து நுனியை நோக்கிக் கூம்பிச் செல்லும் கோபுரம். அதனால் 160 அடி உயர கோபுரம் மாதிரியே தெரியவில்லை. தஞ்சைப் பெரியகோவில் கோபுரமே உயரத்திலும், அழகிலும் இதைவிடச் சிறந்தது.

புரட்டாசி வெயில் மண்டையைப் பிளந்தது. (புரட்டாசி பொன் உருக வெயில் காயும்; மண்ணுருக மழை பெய்யும்) வெறுங்காலில் கொதிக்கும் கிரானைட் கற்களில் கால் வைக்கமுடிவில்லை. தொல்பொருள் துறையினர் வளர்க்கும் புல்வெளி இவ்வகையில் மிக உதவிகரமாக இருந்தது. தெளிவான நீல வானத்தின் பிண்ணனியில் கோயில் பிரம்மாண்டமாக வீற்றிருந்தது. புகைப்படங்கள் எடுப்பதற்கு உகந்த காலநிலை என மனம் மகிழ்ந்தது. பிரம்மாண்டமான நந்தி சுதையினால் செய்யப்பட்டது. கோவிலின் உள் வாயிலுக்குச் செல்லும் உயரமான மண்டபத்தின் மேலேறி பார்க்கும்போது அதன் பிரம்மாண்ட முகத்தினருகில் இருப்போம்.

வாசலின் இருபுறமும் பெரிய வாயிற்காப்பாளர்கள். நடை சாத்தியிருந்ததால் ஆவுடையைப் பார்க்க முடியவில்லை. தென்புறத்தில் அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ள ஒரு கல் கட்டுமானம் உள்ளது. அதனையடுத்து தஞ்சைக் கோவிலைப் போன்றே திறந்தவெளியில் பல பரிவாரக் கோவில்கள். பிரகாரச் சுவற்றில் அருமையான சிற்பங்கள் - அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், ஆலமர்ச் செல்வன், லிங்கோத்பவர், துர்க்கை, விஷ்ணு எனத் தெரிந்த சிற்பங்களுடன் தெரியாத பல அழகான சிற்பங்கள்.
கங்கைகொண்ட சோழபுரச் சிற்பங்கள் தஞ்சைச் சிற்பங்களைவிட அழகானவை என்கிறார்கள். ஆனால், 6 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சிற்பங்கள் குறித்த அறிவு அவ்வளவு இல்லையாதலால் தஞ்சைச் சிற்பங்களை உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆகவே என்னால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
தஞ்சை சிற்பங்கள் ஆண் கருங்கல்லிலும், கங்கைகொண்ட சோழபுர சிற்பங்கள் பெண் கருங்கல்லிலும் செதுக்கப்பட்டவையாதலால் இங்கு சிற்பங்கள் நளினமானவை என பிற்பாடு நண்பர் கடலூர் சீனு சொன்னார்.
கோவிலின் வடபுற சுவற்றில் சிவன் தன் காலடியிலுள்ள மனிதனின் கொண்டையைப் பிடித்திருப்பது போல் ஓர் சிற்பம் காணப்பட்டது. அது ராஜேந்திர சோழனாக இருக்கலாம்.
பெரியநாயகி அம்மனின் கோவில் வடபுறம் தனியாக உள்ளது. அதன் முன்னே மற்றொரு சிதலமடைந்த கோவில். அதில் சில சிற்பங்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்கள். அதனருகில் சில பயணிகள் கோவிலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அதில் வயதானவர் ஒருவர் சோழ ராஜாக்களுக்கு மண்டையில் மாசலாவேயில்லை, இருந்திருந்தா இப்படி கோயில்களைக் கட்டி பணத்தைச் சீரழித்திருப்பார்களா!? நல்லவேளை பிரிட்டிஷ்காரன் வந்து மேட்டூர் அணை கட்டியதால் இப்போது கும்பகோணம் பகுதியெல்லாம் விவசாயம் செய்யமுடிகிறது எனத் திருவாய் மலர்ந்தருளிக் கொண்டிருந்தார். அருகில் யாளி முகம் கொண்ட சிம்மக்கிணறு.
நம்மக்கள் அதனுள் நெகிழிக் குப்பிகளை வீசியெறிந்து தங்கள் வரலாற்றுணர்வை வெளிக்காட்டியுள்ளார்கள்.

இதற்கிடையில் நண்பர் கடலூர் சீனுவிடமிருந்து வடலூர் எப்போது வரப்போகிறேன் எனக் கேட்டு அழைப்பு. சோழர் சிற்பக்கலையின் உச்சமாக தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் என்ற வரிசையில் சொல்வார்கள். தாராசுரத்தைத் தான் இன்னும் பார்க்கவில்லை. தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அதிக தூரமில்லை. ஆயினும் முன்பே வடலூர், சிதம்பரம், சென்னை என பயணத்தைத் தீர்மானித்துவிட்டதால் தாராசுரம் செல்வதைத் தவிர்த்துவிட்டேன். கோவிலிலிருந்து வெளியேறும்போது மாலை நான்காகிவிட்டது. அடுத்த பயணம் வடலூரை நோக்கி.

மேலதிக புகைப்படங்களுக்கு...